Wednesday, February 21, 2018

தொழில் நுட்பம்

 
 
 
 


 
சென்னையில் எம்.ஜி டிரைன் சர்விசை நிறுத்த போவதாக செய்திகள் பத்திரிக்கைகளில் வந்த போது (ஏறக்குறைய 2004 ஆம் வருடம் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்டது .
 ----------------------------------------------------------------------------------------------------------------------------
 இத்தனை காலம் இந்த எம்.ஜி.டிரைனில் பயணம் செய்த பல்லாயிரக்கணக்கான எம்.ஜி ரசிகர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்றாவது நீங்கள் சென்னையில் பி ஜி அல்லது எம்.ஜி டிரைனில் பயணம் செய்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உங்களுக்கு இந்த கதையின் ஆரம்ப விஷயங்கள் கொஞசம் புரியாமலோ அல்லது போராகவோ இருக்கலாம். அதில் தான் அடிக்கடி பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்த விஷயங்கள் தானே என்று ரொம்பவே போராக கூட இருக்கலாம்.

ஏன் என்றால் எனக்கு இந்த டிரைனில் பயணம் செய்வது இது தான் இரண்டாவது முறை. சென்னையில் இருந்த ஆரம்ப கால கட்டங்களிலும் கல்லூரி வாழ்விலும் பேருந்துகளிலேயே பயணித்திருந்த எனக்கு முதல் முறை பயணம் செய்த போதே மிகவும் வினோதமாக இருந்தது. அத்தனை கூட்டத்திலும் பிச்சை எடுப்பவர்கள், பல தரப்பட்ட வியாபாரிகள் மற்றும் சண்டை சச்சரவுகள். இது ஒரு தனி உலகமாகத் தான் பட்டது. இந்த ட்ரைனிலேயே பாதி வாழ்க்கையை கழித்தவன் என் கசின் குரு. நிறைய விஷயங்கள் எனக்கு ஈ-மெயில் கடிதம் மூலம் எற்கனவே சொல்லியிருந்தான்.

பிச்சை எடுப்பவர்கள் பல தரம். அதில் ஒரு வகை கண் தெரியாதவர்கள். பாட்டு பாடிக்கொண்டு..

"கண்ணண் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்.. ஏழை கண்ணீரை கண்டதும்.. "இது தான் அதிகமாக கேட்கும் ஒரு பாட்டு என்று என் கசின் கூறுவான். நான் முதல் முறை பயணம் செய்த போது கேட்ட பாடல் "காகித ஓடம் கடலலை மீது போவது போலே..
(நாம எல்லாருமே அத விட ஸ்லோவா தான் போறோம் இந்த டிரைன்ல.. என்று ஒருவரின் கமென்ட்)

பொதுவாக கண் பார்வை இல்லாதவர்கள் விற்பதற்கு கொண்டு வரும் பொருள்கள் ரேஷன் கார்ட் கவர், டிரைன் பாஸ் கவர், கத்திரி, நகம் வெட்டி, அஞ்சு செல் பத்து ரூபா.. இங்கு நடக்கும் வியாபாரம் அதை விட அதிசயமாம்... ஒரு ரூபாய்க்கு பல விஷயங்கள் கிடைப்பதாக தெரிகிறது. வேர்க்கடலை, பேனா,பென்சில்,பாப் கார்ன், மசாலா பொரி, கர்சீப், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, இந்த லிஸ்ட் மிக நீளமானது. இதை தவிர.. தலை சுற்றல், ஜலதோஷம், பித்தம், கபம், வாந்தி, மயக்கம், அஜீரணம், தொண்டை கரகரப்பு, தலை வலி என்று அனைத்து வியாதிகளுக்கும் அதிசய நிவாரணி... ஒரே ரூபாய்க்கு.. இஞ்சி மொரப்பா.. மேலும் பத்து ரூபாய்க்கு ஆயிரம் கேள்வி பதில்கள் கொண்ட புத்தகம்.

டிரைனுக்கு உள்ளே கூட போஸ்டர்கள்.. 'மனிதன் காணவில்லை..' என்ற போஸ்டரை பார்த்து அசந்து விட்டேன். ஏதோ அற்புதமான கவிதை என்று நினத்து படித்து பார்த்தால் நிஜமாகவே யாரோ காணாமல் போன செய்தி தான். மேலும் சில போஸ்டர்கள்-
மூலம், பௌத்திரம்..விரை வீக்கம் போன்ற சில வியாதிகளுக்கு உத்திரவாதமான நிரந்தர தீர்வு காணும் மருத்துவம் பற்றி.. பொதுவாக அந்த டாக்டர்கள் எல்லாருமே வட இந்தியர்களாக ரயில்வே ஸ்டேஷன் அருகில் கிளினிக் வைத்தவர்களாக இருந்தார்கள். மற்றும் நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன மருந்து என்று விளக்கும் மருத்துவ போஸ்டர்கள்.

என் கசின் குருவின் நீண்ட நாள் அனுபவம் மற்றும் ஆராய்ச்சிப்படி இங்கு நடக்கும் சண்டை சச்சரவுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான்.. இறங்க போகிறவர்கள் ஒரு அணி.. வழியில் நிற்பவர்கள் ஒரு அணி.. 'இறங்காதவங்க எறங்கி ஏறுங்க..' வழியில் நிற்பவர்கள் அவரவர் இறங்கும் இடம் வரும் போது எதிர் அணிக்கு போய் விடுவார்கள். அதிகமாக நம் காதில் விழும் வார்த்தை " எறங்க போறிங்களா?" அதிகம் சண்டை சச்சரவுகளுக்கு காரணமும் இந்த வார்த்தைகள் தான். உடனே" நான் என்ன எறங்கமால் டிரைனிலே இருக்க போறேனா?" என்ற பதில் வரும். "அப்ப உள்ள போயிடுங்க." இவ்வளவு நேரமா நீங்க இங்கயே தானே நின்னுட்டு இருந்திங்க. நீங்க எறங்க போகும் போது எல்லாரும் உள்ள போயிடனமா?" சண்டை ஆரம்பமாகும்.. அதிசயம் என்னவென்றால் இந்த கூட்டத்திலும் சண்டையிலும் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பவர் போல மடித்துப்  பிடித்த படி தினமலர் படிக்கும் சூட்கேஸ் ஆசாமி..

என்னுடைய இரண்டாவது பயணம் நிகழ்ந்தது சமீபத்தில் நான் சென்னைக்கு வந்த போதுதான். சட்டென்று கிண்டியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் செல்ல வேண்டியிருந்தது அதற்கு மிகவும் சுலபமான வழி பி ஜி டிரைன் தான். ஒரு ஆட்டோ அல்லது கால் டாக்ஸி பிடிப்பதை விட துரிதமாக செல்வது இதில் சாத்தியம். ஒரு முக்கியமான கிளையண்டை சந்திக்க வேண்டியிருந்தது. ரெயில்வே மினிஸ்டரியில் டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட்டுக்கு பிராஜக்ட் கன்சல்டண்ட் ராஜாராம்.. மிக முக்கிய புள்ளி. இன்று மங்களூர் வெஸ்ட் கோஸ்ட்டில் போகிறார். அதற்குள் அவரை சந்திக்க வேண்டும். என் கசின் குரு தான் பி.ஜி டிரைனை பிடிக்கும் ஐடியாவை கூறியது மட்டும் அல்லாமல் கிண்டி வரை என்னை ட்ராப் செய்து விட்டு போனான். அது மட்டுமன்றி என் தொழில் ரீதியாகவும் இந்த பயணம் மிகவும் அவசியப்பட்டது.

மணி பத்துக்கு மேல் ஆகி விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. உட்கார இடம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரளவுக்கு வசதியாக நிற்க முடிந்தது. என் அருகில் நின்றிருந்த நபர் அழுக்கு உடையணி¢ந்த கைப்பை வைத்திருந்த இன்னொருவருடன் பேசத் தொடங்கினார்.

"எவ்வளோ மெதுவா போது பாருங்க.. இதே எம்.ஜி டிரைன்னா பறக்கும்.. பத்து பதினைந்து நிமிஷத்தில் எக்மோர் போயிடும்." அதற்கு கைப்பை நபர் பதில் கூறினார். "அது என்னா விஷயம் தெரியுமா?" சட்டென்று பதிலை என்னைப் பார்த்து கூற தொடங்கி விட்டார். இந்த டிரைனுக்கு உடம்பு பெரிசு.. ஆனா கால் பாருங்க..ரொம்ப சின்னது..அதனால செரியா பாலன்ஸ் செய்ய முடியாது.. அதான் விஷயம். அடுத்த நபர் அதை ஆமோதித்தாலும் கைப்பை நபருக்கு என்ன தோன்றியதோ என்னையே பார்த்த படி மேலும் பேச தொடங்கினார். நான் ஒன்றும் புரியாமல் விழித்த படி அவரையே பார்த்தபடி இருந்தேன். "அதாவது இந்த வாத்து இல்ல.. அத பாருங்க.. எப்படி நடக்குது.. காரணம் என்ன?" என்னை பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார் என்று தோன்றியது. ஆனால் என் பதிலை பற்றி கவலைப்படாமல் இப்போது என் பக்கமாக திரும்பிக்கொண்டு பேச தொடங்கி விட்டார். விவாதத்தை ஆரம்பித்த நபர் அடுத்த ஸ்டேஷனில் நுங்கம்பாக்கத்தில் இறங்கி போய் விட்டார்.

"காரணம் அதுக்கு கால் கீழே தட்டையா பெருசா இருக்கு.. அதே எலிய பாருங்க..கால் சின்னது..ஒடம்பு குறுகலா இருக்கு..அதனால
ஸ்பீடா போவும்.." அதிக நேரமாக அவர் கூறுவதையே கேட்டுக்கொண்டு இருந்தது கஷ்டமாக இருந்ததால் நான் ஒற்றை வார்த்தைகளில் கொஞ்சம் பேசத் தொடங்கினேன். " ம்.. அதனால.."

அதான்... கொஞசம் டிரைனோட பாடிய கொறச்சு கால சிறுசாக்கனா...

டிரைனோட காலா?

அதான் சார்.. சக்கரம்.. அப்புறம் ஸ்பீடு வந்துடும்.. இந்த டெக்னிக்க தான் எம்.ஜி.டிரைன்ல பண்ணி இருக்கான்.. அதெல்லாம் வெள்ளக்காரன் பண்ணது.. நம்ம ஆளுங்களுக்கு அவ்ளோ விஷயம் கெடையாது... ஸ்தம்பித்தபடி அவரையே பார்த்து நின்ற எனக்கு அப்போது தான் எக்மூர் ஸ்டேஷன் வந்தது தெரிந்தது..

கைப்பை நபர் "சரி சார்..என் ஸ்டாப்பிங் வந்துச்சு.. நான் வரேன். ஏற்கனவே லேட்.. மேஸ்திரி திட்டுவான்.." என்ற படி விரைந்தார். இறஙக போன அவரை லேசா வழி மறித்து எங்க சார் வேலை? என்று கேட்டு வைத்தேன்.. அவசரமாக இறங்கியபடி" கொளுத்து வேலை சார்.."

புரியாமல் நான் விழிக்கவே "கொத்தனார் வேலை..கட்டடம் கட்றது.."என்று கூறி கூட்டத்தில் மறைந்தார்.

சொல்லி வைத்த படி சென்ட்ரல் ஸ்டேஷனில் பர்ஸ்ட் கிளாஸ் வைட்டிங் ஹாலில் சங்கர் காத்திருந்தான்.. உடன் ராஜாராம்..

இருவரும் என்னை கண்டதும் எழுந்து கை குலுக்கினர்.. சங்கர் என்னை ராஜாராமுக்கு அறிமுகம் செய்து வைத்தான்..

"இவர் தான் மணிசேகர்.."

"நல்லா தெரியும்.. ஜப்பான்ல பாஸ்டஸ்ட் டிரைன் டிசைன் செய்த பத்து டெக்னிக்கல் எக்ஸ்பர்ட்ஸ்ல ஒருத்தர்.. இன் பாக்ட் உலகத்திலேயே பாஸ்டஸ்ட் டிரைன் டிசைன் செய்யும் ஜப்பானின் டெக்னிக்கல் கமிட்டில ஒரு முக்கியமான மெம்பர்."

நான் ஒன்றும் பதில் சொல்லும் முன் ராஜாராம் கேட்டார். " சார்.. இங்க நம்ம ஊர்ல டிரைன் ஸ்பீட் இன்னும் கொஞசம் கூட்ட என்ன செய்யலாம்னு சிம்பிளா ஒரு சஜ்ஜஷன் சொல்லுங்களேன்?"

" ஒன்னும் இல்லை. ஒடம்ப கொஞ்சம் குறுகலாக்கி கால சின்னதாக்கினா போதும்... " கூறி விட்டு கபகப என்று சிரித்த என்னை ஒன்றும் புரியாமல் விழித்தபடி ஏதோ பைத்தியக்காரனை போல பார்த்தார்கள் இருவரும்.

--------------------------------------------------------------

Monday, July 20, 2015

துக்கம் – சிறுகதை





சுகமான தூக்கத்திலிருந்து என்னை அலறியடித்தபடி எழுந்திட வைத்தது அலாரம் மணி என்று நினைத்தேன். எழுந்த பின் தான் தெரிந்தது அது டெலிபோன் மணி என்று.  முன்பெல்லாம் தந்தி தரும் பயத்தை இப்போதெல்லாம் அகால நேரத்தில் அடிக்கும் டெலிபோன் அல்லது செல் போன் மணி தருகிறது.  நினைத்ததை போலவே கெட்ட செய்தி தான். செய்தியை சொன்னவர் மணிபிரகாசம். கதிரேசன் மாரடைப்பால் இறந்து  விட்டார். செய்தியை கேட்டு உறைந்து விட்டதால் அந்த செய்திக்கு பதில் கூற தெரியாமல் ‘அடப்பாவமே.. அடக்கஷ்டமே’ என்று தோராயமாக  டெலிபோனில் மணியிடம் புலம்பினேன். கதிரேசன் என்னுடைய பால்ய நண்பர். ஏ. ஜி. எஸ்ஸில் அக்கவுண்டன்டாக பணி புரிந்தார். 55 வயது. ஒரு மகன். ஒரு மகள். மகன் பிளானியில் இன்ஜினியரிங் படிக்கிறான். மகள் பிளஸ் டூ படிக்கிறாள். கதிரேசன் இறந்த சோகத்தில் இருந்து சரியாக மீள்வதற்குள் அடுத்த சோகம் வந்து பற்றிக் கொண்டது.

ஆபிஸுக்கு லீவு போட வேண்டி வருமே! அட்லீஸ்ட் இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட வேண்டியிருக்கும்.  கடைசியாக கதிரேசனை பார்த்தது ஒரு வருடத்திர்க்கு முன் அவர் வீட்டு கிரகபிரவேசத்தில் தான்.  நங்கநல்லூரில் வீடு. அதை கண்டுபிடிக்கப்பட்ட பாட்டை நினைவு கூர்ந்த போது சோகம் மேலும் அதிகமானது. டெலிபோன் மணி கேட்டு சோம்பல் முறித்தபடியே வந்த என் மனைவி விவரத்தை கேட்டதும் வருத்ததுடன் “அய்யய்யோ..அப்படின்னா நீங்க லீவு தான் போட வேண்டியிருக்கும்.  பர்மிஷன் போட்டா நங்கநல்லூருக்கு போயிட்டு திரும்ப வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, சாப்பிட்டு ஆபிஸுக்கு போக மணி ஒண்ணாயிடும்” என்றாள். அவள் கூறியது சரி தான். லீவு தான் போட வேண்டியிருக்கும். அவளிடமே பத்து மணிக்கு மேல் ஆபிஸுக்கு போன் செய்யச் சொல்லி மேனேஜர் சீத்தாராமனிடம் சொல்லச் சொல்ல வேண்டும்.  நாளை சீத்தாரமனை பார்க்கும் போது வாங்கப்போகும் டோசை நினைத்து பயத்தில் தொண்டை அடைத்தது. லேசாக சின்னச்சின்ன கவலைகள் வந்து சேர்ந்து கதிரேசனின் மரணம் தந்த கவலையை மூழ்கடிப்பது போல தோன்றியது

ஒரு வழியாக பஸ் பிடித்து நங்கநல்லூர் வந்து அந்த குடியிருப்பில் ஆறாவது தெருவை கண்டு பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. தெருவிற்குள் நுழைந்ததும் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தினால் வீட்டை சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது. வீட்டை நெருங்க நெருங்க துக்கத்தை விட பயம் தான் ஏற்பட்டது. கதிரேசனின் வீட்டை நெருங்க எடுத்துக் கொண்ட ஐந்து நிமிசத்திற்குள் கதிரேசனை பற்றிய பல நினைவுகளை கஷ்ட்டபட்டு நினைத்துக்கொள்ள கொஞ்சம் கவலை முகத்திலும் லேசான ஈரம் கண்களிலும் துளிர்த்தது. உள்ளே சில கவலை தோய்ந்த முகங்களும் வெளியே சில மணி நேரத்திற்கு முன்பாகவே வந்ததால் செட்டில் ஆனவர்களின் குசுகுசுப்பேச்சுக்களும் முரண்பாடாக தோன்றியது. பிரீசர் பாக்ஸுக்குள் வைக்கபட்டிருந்த கதிரேசனின் உடல் மிகவும் அன்னியமாகப்பட்டது. பிரீசர் பாக்ஸுக்கு மேலே சில பூ மாலைகள். அதை பார்த்ததும் அடடே! நாமும் ஒரு மாலை வாங்கி வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

சுற்றிலும் கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்த பெண்களை பார்த்தபோது மிகவும் சங்கடமாக இருந்தது.  சற்று நேரம் அங்கிருந்த போது ஏனோ போன வருஷம் இறந்து  போன பாட்டி ஞாபகம் வரவே கண்களில் கொஞ்சம் நீர் துளிர்த்தது உடனே யாரிடமாவது துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சட்டென்று அங்கிருந்து வெளியில் வருவது எப்படி என்று தயங்கிய போது வேறு இருவர் உள்ளே நுழையவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவசரமாக  வெளியேறினேன். 

வெளியே கதிரேசனின் தம்பியிடம் இது எப்படி நிகழ்ந்தது என்று சிலர் விசாரித்து கொண்டிருந்தனர்.  காலையிலிருந்து இதை அவர் பலரிடம் விவரித்திருப்பார் போலிருந்தது.  இப்போது விவரிக்கும் போது சற்று அலுப்பு தெரிந்தது அவரிடம்.  சுற்றும் பலர் கதிரேசனை கடைசியாக அவரவர் பார்த்தது எப்போது என்று விவாதித்து கொண்டிருந்தனர். போன மாசம் தான் தி நகர் ரங்கநாதன் தெருவில் அவரைப் பார்த்ததாக ஒருவரும் போன வாரம் வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாப்பில் பார்த்ததாக இன்னொருவரும், ஏதோ கடைசியாக அவரைப் பார்த்து பேசியது யார் என்று அங்கே ஒரு போட்டி நடப்பது போல் இருந்தது.  இதற்கிடையில் நேற்று ராத்திரி அவருடன் பேசிக்கொண்டிருந்ததை பக்கத்து வீட்டுக்காரர் விவரிக்கவே அவருக்கே வெற்றி கோப்பை வழங்கப்பட்டது போல ஒரு பெருமிதம் அவர் முகத்தில்  நிலவியது. வந்த போது இருந்த சோகம் இப்போது குறைந்து சுத்தமாக நழுவியதாக உணர்ந்தேன். 

சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் தெரிகிறதா என்று தேட கண்ணில் பட்டான் தங்கராஜ். எத்தனை வருடங்களாயிற்று அவனை பார்த்து. என்னை பார்த்து சிரிப்பதா வேண்டாமா என்று அவன் தயங்குவது தெரிந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த இடத்தில் ஒருவரை பார்த்து சிரிக்கலாமா என்ற தயக்கம் இருவருக்கும் ஏற்படவே முகத்தை இறுக்கமாக வைத்தபடி ஒருவரை ஒருவர் நெருங்கினோம். பொதுவாக ‘இப்படி ஆயிடுச்சே’ என்று நான் சொல்ல அவனும் ஆமோதித்தான். சில நிமிடஙகள் மௌனத்திற்க்கு பிறகு தங்கராஜூ கதிரேசனை கடைசியாக பார்த்த சம்பவத்தை நினைவு கூற நான் அவரை கிரகபிரவேசத்தில் பார்த்ததை சொன்னேன். பின்னர் அவரவர் குடும்ப மற்றும் அலுவலக விஷயங்களை பற்றி பேசத் தொடங்கினோம். ஒரு மணியளவில் “இப்போதைக்கு பையன் பிளானியில் இருந்து வந்து சேர சாயந்திரம் ஆகுமாம். அப்புறம் தான் பாடியை எடுப்பாங்களாம்’”என்று தங்கராஜ் எச்சரிக்கைப்படுத்தினான். “இல்லை தங்கராஜ் எப்படியும் கடைசி வரை இருந்து போகலாம்னு முடிவு செய்துட்டேன்” என்று கூறவே தங்கராஜும் அதற்கு சம்மதித்தான். “எப்படியும் சாயந்திரம் ஐந்து ஆறு மணியாகி விடும். வேண்டுமானால் ஏதாவது லைட்டாக சாப்பிட்டு வரலாம்” என்று தங்கராஜ் கூற அது எனக்கும் சரியாகப்பட்டது. ஏற்கனவே எனக்கு லேசாக அல்சர் ப்ராப்ளம் வேற. 

சாப்பிட்டு திரும்பி வந்து இருவரும் வெளியே வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபோது ரிலாக்ஸாக இருந்தது.  வந்தபோது இருந்த துக்கம், பயம், படபடப்பு, கவலையெல்லாம் சுத்தமாக சரியாகி இருந்தது எல்லோருக்குமே அப்படித்தானோ என்று பட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு தண்ணீர் பிரச்னையை பற்றி தாவியது .தங்கராஜுக்கு கொஞ்சம் கூட தண்ணீர் பிரச்னை இல்லையாம். அண்ணாநகரில் அவனது  பிளாட்டில் இருபத்து நான்கு மணி நேரமும் தண்ணீர் கொட்டுமாம். ஆச்சர்யமாக இருந்தது. அந்த அதிசயத்தை அவன் விவரிக்க சுற்றியிருந்தவர்கள் எல்லாம் வாய் பிளக்க பார்த்துக் கொண்டிருந்தனர். இதனிடையில் வீட்டைச்சுற்றி நெடுகிலும் போர் எடுத்து, போர் எடுத்து நொந்து போன என் கதையை இடையிடையே எடுத்து விட்டேன். அங்கே இருந்த அத்தனை பேரும் இந்த தண்ணீர் பிரச்னை, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட், ஆதார் கார்ட் மற்றும் தேர்தல் கூட்டணி போன்ற டாபிக்கைத்தான் அலசி கொண்டிருந்தனர். 

யாருக்கும் கதிரேசன் நினைவு இருந்ததாகவே தெரியவில்லை, ஒரு சிலரை தவிர. அவர்கள் கதிரேசனின் மிக நெருங்கிய உறவினர்கள். ஈமக்கிரியைக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக பல சிரமங்களுக்கு நடுவே கதிரேசனின் மகன் பிளைட்டை பிடித்து வந்து சேரவே ஈமக்கிரியையின் கடைசி கட்ட ஆயத்தங்கள் ஆரம்பமாயின.  கதிரேசனின் உடலை வெளியே கொண்டு வரவே பெண்கள் பிள்ளைகளின் கதறல்கள் அந்த சூழ்நிலையை இப்போது மிகவும் சோகமாக்கியது. 

மணியைப் பார்த்தபோது ஆறே கால்.. சாவு வீட்டுக்கு வந்தால் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பவேண்டும் என்ற  சம்பிரதாயம் பலருக்கு மிகவும் வசதியாக இருந்தது போலும். பாதி பேருக்கு மேல் நழுவி இருந்தனர், தங்கராஜ் உட்பட. நாம் வீட்டுக்குப் போய் சேரும்போது மணி எட்டு அல்லது ஒன்பது ஆகி விடும். இந்த நினைப்பு மீண்டும் வரவே கதிரேசனின் உடலை எடுத்துக் கொண்டு போகும் காட்சி அத்தனை துயரத்தை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இந்த ஊர்வலத்திற்கு பின்னாலேயே சிறிது தூரம் போய் அப்படியே சட்டென்று விலகி மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பிற்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டபடி வாசலில் விட்டிருந்த செருப்பை தேடினேன். இல்லவே இல்லை. போன மாதம் பாட்டாவில் வாங்கியது. முன்னூற்று தொண்ணூற்றி ஒன்பது ரூபா தொன்னூற்று ஐந்து பைசா. கிடைத்து விடும் என்ற நம்பிக்கயில் மீண்டும் மீண்டும் தேட கிடைக்கவேயில்லை. அதற்குள் இறுதி ஊர்வலம் தெரு முனைக்கு சென்று விட்டது. செருப்பை தேடும் முயற்சியை கை விட்டு வெறுங்காலுடன் சிறிது ஓட்டமும் நடையுமாக ஊர்வலத்தை நெருங்கினேன். 

இப்போது தான் முதல் முறையாக தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டு துக்கம் பீரிட்டு வெளியே வருவதை உணர்ந்தேன்.

மழைக் கவிதைகள்









முதல் மழைத் துளி பட்டதுமே
முகம் சுளித்தீர்கள்

தூறல் தொடங்கியதும்
அசச்சச்சோ என்று சொன்னீர்கள்

சாரல் அடித்ததும் சனியன் பிடித்த
மழை என்றீர்.
சிறு மழை கொடுமை, பெரு மழை பேரழிவு
என்றெல்லாம் விமர்சித்தீர்கள்

சடசட என பெய்த மழைக்கு
படபடவென குடை விரித்தீர்கள்..

உமக்காகவே வெய்யில் தொடங்கியதும்
நீங்கள் புலம்பியதோ

“த்சூ.. சூ, எப்ப தான் மழை வருமோ?

***************************************
கொட்டும் மழையில்
சொட்டசொட்ட
நனைந்து பாருங்கள்.

ஒன்றும் உருகி விட மாட்டீர்கள்..

ஜலதோஷம் ஒருவேளை வரலாம்!
வராமலும் போகலாம்!
ஆனால் கண்டிப்பாக வரும் சந்தோஷம்....

Sunday, July 19, 2015

பொறமை கொள்ள - கணையாழி ஏப்ரல் 2013


காத்திருப்பு - கணையாழி அக்டோபர் 2013



  

சிதறல்கள்








விபத்து நேர்ந்த இடத்தில் சிதறிக்கிடந்தது 
நசுங்கிய டிஃபன் பாக்ஸும் 
அதனுள் அவனுக்கு பிடித்தமான
கருணை கிழங்கு மசியல்.. 
வெண்டைக்காய் மோர் குழம்பு விட்டு பிசைந்த சாதம்

மற்றும் கடந்து போன நினைவுகள்  
நிறைவேறாத சில கனவுகள்...   
                                      
காற்றில் கரைந்தது 
‘டிஃபன் பாக்ஸை சுத்தமா காலி பண்ணிடனும்’ 
என்று அவன் அம்மா சொன்ன வார்தைகளும் 
அவனது கடைசி உயிர் மூச்சும

ஐன்ஸ்டீனும் என் காதலியும்



 
 
 
 
 
 
 
********************************************************************************

ஒரு நேர்க்கோடு வான்வெளிக்கப்பால் வளையக்கூடும் என்ற
ஐன்ஸ்டீன் விதி  புரியவில்லை
அவளது நேர் கொண்ட பார்வை என் கண்களை சந்தித்து
பின் தாழும் வரை..
---------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் விதி தெரிந்தது
பால் வீதி சூட்சுமம் புரிந்தது
ஆனால் அவள் உதட்டு சுழிப்புக்கு மட்டும் அர்த்தம் தெரியவில்லை.....
-----------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் விதித்த ‘சார்பு கொள்கை’– விளக்கம் எளிமையாக-      
ஒரு நொடிக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும்
அவள் பார்வை என் மீது பட்டு விலகிய நேரம்...
நாள் முழுக்க நினைவில் தேங்கியது
முனை ஒடிந்த முள்ளாக....
-----------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் கூட சிலசமயம் உளறியிருக்க கூடும்
 –என்னைப்போல் -
தன் காதலியை பற்றி பேசும் போதெல்லாம்...
********************************************



பற்று ?!?!


          
 
 
கற்றதும் பெற்றதும்
பற்றினைப் பற்றி
பற்றற்றிருப்பதைப்
பற்றென்று
உரைத்ததும்

பற்றும் வரவும்
பற்றி பிணைந்த
மாயப்புற்றில் உறைந்தயென்
வெற்று கூட்டின் ஆவி
அகன்ற சற்றை முன்
ஒற்று நொடியில்
பற்றினை அகற்றி
ஈசனடி பற்றத் துடிப்பதும்
பற்றென்றுணர்ந்தேன் திருச்
சிற்றம்பலம்


 போராட்டம்    

        
 
 
 

 

முற்றம் தெளித்து கோலமிட்டு
வீடு கூட்டி தரை அலம்பி
தண்ணீர் நிரப்பி பாத்திரம் துலக்கி
துணி துவைத்து
காலையில் தொடங்கும் போராட்டம்- படிக்கட்டில்

கும்முட்டி அடுப்பு எறியாத விறகு
கரி படிந்த பாத்திரங்கள்
வெறுமையான அஞ்சறைப்பெட்டி
வேகாத அரிசி தீய்ந்து போன முழங்கைகள்-
மதிய நேர போராட்டம்- சமையற்கட்டில்

கண்கள் சொருகும் தூக்கம் அசதி ஆயாசம்
வியர்வை பிசுபிசுப்பு அழும் குழந்தை
சிகரெட் நெடி சாராய வாடை
இறுக்கும் கணவனின் முரட்டு கைகள்
இரவு நேர போராட்டம் – கயிற்றுக்கட்டில்

Saturday, July 18, 2015

நான் அவள் மழை








அவள்
கொஞ்சம் ஹைக்கூ
கொஞ்சும் மரபுக்கவிதை
கெஞ்சும் புதுக்கவிதை
சேர்ந்த கலவை தேவதை.

மழைத் துளிகள்
அக்கினி பூமியில்
தகிக்கும் அனல் காற்றில்
சிறுசிறு மொட்டுகளாய்
விழத்தொடங்கின!!!!

சடசடவென கொட்டிய மழைக்கு
படபடவென விரிந்தன
குடைகள் தெருவெங்கும்
மழையை பகிஷ்கரிக்கும்
கருப்பு கொடிகளாய் !

அந்த சிற்றுண்டி கூடத்தின் முகப்பில்
முட்டி நிற்கும் கூட்டம்
வெளியே பெய்யும் மழைக்கு
பயந்து ஒதுங்கியபடி...
வெளியே வந்து மழையில் நனைந்தபடி
அவளிடம் நான் சொன்னதோ,
“வா.. மழை நிற்பதற்குள்
கிளம்புவோம்”