Saturday, July 25, 2026

காலக்கலம்

காலக்கலம்- சசி

சிறுகதை | வாசகசாலை - 6th July 2026












முத்து மகிழ்நன் தன் முன் அமைந்திருந்த திரையில் விசைகளை

முடுக்கி விண்கலத்தின் பயணப்பாதையை உறுதி செய்தான். 2178

வருடங்களுக்கு முந்தைய குறிப்பிட்ட நாள் ஒன்று பயண இலக்காக

நீலநிற நியானில் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. காலக்கலம்

விண்கலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியூட்ரான்

நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு நிலையான சுற்றுப்பாதையில்

நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இளந்திரையன் வன்பொருள்

இணைப்புகளை மீண்டும் ஒருமுறை பரிசோதித்தான். மகிழ்நன்

மென்பொருள் உத்தரவுகளை கணினித் திரையில் ஓடவிட்டு பிழைகள்

ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். இருவரும்

தங்கள் இருக்கைகளுடன் தங்களை பட்டைகளால் இறுக்கி பயணம்

தொடங்க ஆயத்தமானார்கள்.

தமிழில் கடமுடாவென்ற வன்பொருள் விண்வெளி அறிவியல்

வேண்டாம் என்பவர்கள் அடுத்த மூன்று பத்திகளை தயக்கமின்றி

கடந்து போகலாம்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மற்றும் கருந்துளை விதிகள் 200

ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இன்றளவும் காலப்பயணம்

நடத்த தேவையாகிறது. இவர்களது விண்கலம் குவாண்டம்

க்ரோனோ-ஸ்டேபிலைசர் இணைக்கப்பட்டதால் முன்காலப்பயண

முரண்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க உதவுகிறது.

கால முரண்பாடுகள் ஏதேனும் தோன்றினால், அவற்றைச் செயற்கை

நுண்ணறிவு மென்பொருள் இணைந்த ‘குவாண்டம் குரோனோ


நிலைநிறுத்தி’, விண்கலன் பயணப்பாதையில் புழுத்துளையை (வார்ம்

ஹோல் தான்) தேவைப்பட்ட கோணத்தில் துல்லியமாக சரித்து

சரிக்கட்டும். இது மிகைநிறை துகள்களைப் பயன்படுத்தி, கிளைக்கும்

காலவரிசைகளை ஊடுருவி முரண்பாடற்ற பயணப்பாதைகளைத்

தேர்ந்தெடுக்கிறது.

விண்கலத்தின் உட்புற அமைப்பு கால நேரம் நிர்ணயம் அற்றது.

எனவே வேறு எந்த செயலற்ற சக்திகளும் குழுவினரின் மீது

செயல்படாமல், சார்பியல் மற்றும் பொதுவான இயற்பியல்

போன்றவை இயல்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

பயணத் திட்ட வரைமுறைப்படி, பயணர்கள் இருவரும் சந்திக்கும் நபர்

யார், அவரிடம் கேட்கப்படவேண்டிய மூன்று கேள்விகள் யாவை

போன்ற தகவல்கள் விண்கலம் இலக்கை அடைந்ததும் திரையில் 70

நொடிகள் ஒளிரும். ஏற்கனவே மகிழ்நனும் இளந்திரையனும் யாரை

சந்திக்கப்போகிறோம் என்ற ரகசியத்தை கிட்டத்தட்ட

ஊகித்துவிட்டார்கள். ஆனாலும் கேள்விகள் என்னவாயிருக்கும் என்ற

ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது.

இந்த ‘காலம் முந்திய சந்திப்பு’ ஒளிப்பட பதிவு வரையறைக்குள் வர

முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட மூன்று

கேள்விகள், அதற்கான பதில் அடங்கிய உரையாடல் மட்டுமே

ஒலிப்பதிவு செய்ய அனுமதி. பயணர்கள் இந்த கேள்விகளுக்கு

சம்பந்தமான துணைக்கேள்விகளையும் கேட்கலாம். இவை

இளந்திரையன் இடுப்பில் பொருத்தப்பட்ட ஒலிப்பதிவு கருவியில்

தன்னிச்சையாகப் பதிவாகும். பின்னர் இந்த ஒலிப்பதிவு அடங்கிய

கருவியை பத்திரமாக விண்கலத்திலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில்

சேர்க்கவேண்டும்.

பல நூற்றாண்டுகளாய் தமிழ்சமூகத்திலும் இலக்கிய உலகிலும்

புரையோடி விவாதிக்கப்பட்டு சச்சரவை உண்டாக்கிய இந்த

கேள்விகளும் அதற்கான ஒவ்வொரு மதம் இனம் சார்ந்த தர்க்க


விவரணைகளும் இந்த உரையாடல் பதிவின் மூலமாக முடிவுக்கு

வரும்.

பயணத்திற்கு ஆயத்தமாகும் சமயத்தில் இளந்திரையன் மகிழ்நனிடம்

கேட்டான். “இதற்காக ஐந்து பில்லியன் டாலர் செலவில் இந்த பயணம்

அவசியமா?”

“திருக்குறள் இப்போது உலகம் முழுவதுக்குமான ஒரு மதம் மொழி

கடந்த வேதமாக மாறிவிட்டது. கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்கள்

குறள்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து சல்லித்து அதில் ஆயிரம்

குறள்களை தேர்ந்தெடுத்து வாழ்வியல் ஆயிரம் என்ற தொகுப்பாக்கிய

நிகழ்வு உனக்கும் தெரியுமே. ஆனாலும் இன்றளவும் இதற்கு மத இன

சாயம் பூசும் வேலையும் நின்றபாடில்லை. இந்த

கேள்விகளுக்கெல்லாம் விடை காண கண்டிப்பாக இந்த பயணம்

அவசியமே.”

இளந்திரையன் கைப்பட்டையில் கட்டியிருந்த குறுங்காலக் கருவியின்

பொத்தானை அழுத்த விண்கலத்திலிருந்து மீண்ட இருவரும் துல்லிய

நுண்நொடியில் இலக்கை அடைந்தார்கள்.

கூரை வேய்ந்த மண்குடிசை வாசலுக்கு முன் சாணம் மொழுகிய

முற்றத்தில் ஒரு வேப்பமரத்தின் கிளைக்கும் பத்தடி தொலைவில்

நடப்பட்டிருந்த கழியையும் சணல் கயிறு ஒன்று இணைத்திருந்தது.

அதில் பச்சை, காவி, வெண்மை மற்றும் நீலம் என பல நிறங்களில்

வேட்டி போன்ற தோற்றம் கொண்ட ஆடைகள் தொங்கின. முற்றிலும்

எதிர்பாராத உருவமும் சிகையும் கொண்ட ஒருவர், இவர்களை

எதிர்கொண்டார்.

“நீங்கள் தான் திருவள்ளுவர் பெருந்தகையோ?” என்று தயக்கத்துடன்

மகிழ்நன் வினவினான்.

“திரு என்று அடைமொழி ஏனோ? வள்ளுவன் என்பார் எம்மை. சிலர்

வள்ளுவனார் என்றும் சொல்வர்.” என்றார் அவர்.

சிறிது தயக்கத்துடன் அவர் அணிந்திருந்த வெளிர் நீல நிற ஆடையை

பார்த்தபடி, முதல் கேள்வியைக் கேட்டான் மகிழ்நன். “நீங்கள்


வழக்கில் விரும்பி அணிவது எந்த நிற ஆடையை? காவியா..

வெண்மையா..”

“விருப்பம் கருதியன்று, மாறாக மானம் காக்கவன்றோ உடுக்கை, அது

எந்த நிறமானால் என்ன? எல்லாம் உடுக்கவே. இவையனைத்தும்

கனியமுதன் அன்புடன் நெய்து எனக்களித்தது.” என்று கயிற்றில்

தொங்கிக்கொண்டிருந்த பல வண்ண ஆடைகளை சுட்டிக்காட்டினார்

வள்ளுவனார்.

அவர்களை அவர் குடிசைக்குள்ளே அழைத்துச் சென்றார். தரையில்

கோரைப்புல்லில் வேய்ந்த பாய் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. ஒரு நீர்

நிரம்பிய மண்குடுவை. ஒரு மூலையில் துணியில் பொதிந்த

ஓலைச்சுவடிக் கட்டுகள். மண் கலயங்கள். செப்புப் பாத்திரங்கள் சில.

“அய்யா, தங்கள் குலம் குடி குறித்து சொல்ல முனைவீரோ?” இந்தக்

கடினமான வினாவைக் கேட்டது இளந்திரையன்.

“நல்லோர்க்கேது குடி? புலவனார்க்கேது குலம். செய்யும் தொழில்

குடியோ குலமோ குறிப்பதன்றே! தொழில் வெவ்வேறாயினும்.

அவையனைத்தும் ஈடே. ஆயினும் இவற்றுள் உழுதுண்டு வாழ்வோரே

தலை என்றே என் எண்ணம்.” என்றார் வள்ளுவர்.

“அய்யா, நீங்கள் செய்யும் தொழில் யாது?” துணைக்கேள்வியைக்

கேட்டான் மகிழ்நன்

“செய்யுள் செய்யுங்கால் நான் புலவன். நாற்றங்கால் நட்டு பயிர்

இடும்பொழுதில் உழவன். ஆடை நெய்தால் நெசவாளி. கலம் செய்தால்

குயவன்”

“இவை அனைத்தும் நீங்கள் செய்வதுண்டா?” என்று மகிழ்நன் கேட்க

உரக்கச் சிரித்தபடி “இவற்றுள் கலம் செய்ய இயலேன்.”என்றார்

வள்ளுவனார்.


“அய்யா, நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவரோ?” தயங்கியபடி

மூன்றாவது கேள்வியைக் கேட்டான் மகிழ்நன்.

சில நொடிகள் அமைதிக்குப்பின் பதில் சொன்னார் வள்ளுவனார்.

“அன்பிலே கண்டேன் இறை. அஃதிலார் வாழ்க்கை பிழை”

“அற்புதம் அய்யா. சுருங்கச் சொல்லி பெருவிளக்கம் தந்தீர்” உள்ளபடி

மகிழ்ந்தான் மகிழ்நன்.

சற்றே குழப்பமுற்றார் வள்ளுவனார். “அற்புதம்? என்ன பொருள்? இது

தமிழ்ச் சொல் அல்லவே. குறுகச் சொல்லுதல் நலமே என்பது உங்கள்

கூற்றோ? நன்று. நீவிர் வடக்கிலிருந்து வருபவரோ. உங்கள் உடுக்கை

கண்டதும் உள்ளினேன். பெண்டிர் அணிவது போன்றல்லவோ

இடையில் கச்சை..”

இதைக்கேட்டதும் மகிழ்நன் கூச்சமுற்று சட்டென்று எழுந்திட முற்பட

அவனது இடைக்கச்சை தளர்ந்து நழுவியது. சட்டென்று இடதுகையால்

அதைப்பற்றிக்கொண்டு தன் மெல்லிய சிந்தெடிக் வலையில் பின்னிய

ஃசூமர் ஜட்டி தெரியாதபடி மானம் காத்தான். அந்த நிகழ்வை

வள்ளுவனார் சற்று கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியது.

“நீவிர் இருவரும் அருக்கரோ?”

“அருக்கரா? என்ன பொருள் அய்யா?”

“உமக்குள் நட்பு பாராட்டுபவர்”

“ஓ, ஆம், நண்பர்கள்”.

“இடுக்கண் வருங்கால் உதவும் பாங்குடை உற்றோர்.” புன்னகை

செய்து முறுவலித்தார்.

“அஃதே அய்யா!” என்றான் இளந்திரையன்.

“நன்று.. நன்று..” என்று முணுமுணுத்தபடி இடுப்புக் கச்சையிலிருந்த

ஒரு ஓலைச் சுவடியில் அவசரமாக எழுத்தாணியால் ஏதோ குறித்துக்

கொண்டார்.


இந்தக் கட்டத்தில் மகிழ்நன் “பயணத்திட்டம் வெற்றி” என்று

மேலுடுப்பில் பொருத்தியிருந்த நானோ ஒலிவாங்கியில் பதிவு

செய்தபின் கைப்பையில் வைத்திருந்த குறுங்கால இணைப்புக்

கருவியை எடுத்து நேரத்தை சரிசெய்து பொத்தானை அழுத்த

இருவரும் மீண்டும் விண்கலத்திற்குள்ளே.

இளந்திரையன் முகக்கவசம் இணைத்தபின் ஒலிப்பானில் பேசினான்.

“திருவள்ளுவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நாம் இருவரும்

மாயமாக மறைந்திருப்போம் அல்லவா? என்ன நினைத்திருப்பார்

நம்மைப் பற்றி.”

“‘மாயமாய் மறைந்த அருக்கர் இருவர் காயம் மறைக்கத் தெரிந்த

அரக்கரோ ‘ என்று எண்ணியிருப்பார்” என்றான் மகிழ்நன். “நல்ல

முயற்சி. ஆனாலும் இந்தக் குறளில் தகவல் இருக்கிறது. கருத்து

ஏதுமில்லை” என்று கூறிச் சிரித்தான் இளந்திரையன்.

“”நாம் திருக்குறள் முழுமையும் படித்திருக்கிறோம். ஆனால் அதை

எழுதிய திருவள்ளுவர் நம் முன் அமர்ந்திருந்தார். ஆனாலும் அவர்

காலக் கணிதப்படி இன்னும் திருக்குறளை எழுதத்

தொடங்கவேயில்லை. இப்போது தான் அதுபற்றி சிந்திக்கிறார் என்று

நினைக்கிறேன்.”என்று மகிழ்நன் சொல்ல

வியப்புடன் இளந்திரையான் கேட்டான். “இப்போதுதான் திருக்குறள்

எழுத நினைக்கிறார் என்று எப்படிச் சொல்கிறாய்?”

“பேசிக்கொண்டேயிருக்கும்போது தன் கச்சையில் இருக்கும் சுவடியை

எடுத்து அவ்வப்போது குறிப்பெழுதிக் கொள்கிறார்.”

“நானும் கவனித்தேன்.”

“இப்போது அவரிடம் அவர் எழுதிய ஏதேனும் ஒரு குறளைச்

சொன்னால் அவரது எதிர்வினை எப்படி இருக்கும்? “

“இதுபற்றி ஏற்கனவே நமக்களித்த எச்சரிக்கைக் குறிப்புகளில் விரிவாய்

உள்ளது. அது பட்டாம்பூச்சி விளைவுக்கான சாத்தியக்கூறுகளை

ஏற்படுத்தக்கூடும். மேலும் பயணத்தின் அதிகபட்ச விதிமீறலுக்கு


நம்மை உட்படுத்தி நம்முடைய இருப்பைக் கேள்விக்குரியதாக்கி

விடும். அதுமட்டுமல்ல, திருவள்ளுவரின் படைப்பின் மீதும்

விளைவுகளை உண்டாக்கி திருக்குறளில் எதிர்பாரா மாற்றமுறச்

செய்யலாம்.”

“புரிகிறது”

“கேள்விகளுக்கான பதில்களை இவ்வாறு நீ எதிர்பார்த்தாயா?”

இளந்திரையன் வினவினான்.

“நிச்சயமாக இல்லை. அன்னார் எதற்கும் பிடிகொடுக்கவில்லை,

கவனித்தாயா? இறைநம்பிக்கை குறித்த அவரது பதில் நான் சிறிதும்

எதிர்பாராதது. மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வள்ளுவரும் குறளும்

யாருக்கும் தனிச்சொத்தில்லை. எந்த இனத்துக்கும் மதத்திகும்

உரிமையல்ல. திருக்குறள் உலகப்பொதுமறை என்ற கூற்று

நிரூபணமானது.” என்று விவரித்தான் மகிழ்நன்.

“அது சரி! உன் கச்சை அவிழ்ந்த போது அதைப் பார்த்ததும்

திருவள்ளுவர் உடனே சுவடியில் எழுத்தாணியால் கீறினார்.

கவனித்தாயா? “ என்று கேட்டான் இளந்திரையன்.

“ஆமாம். அதனால் என்ன?”

“எனக்கென்னவோ அவர் மனதில் அப்போது ஒரு குறள்

உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது.”

“என்னது?”

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே..”

“இடுக்கண் களைவதாம் நட்பு” அட, நம்மால் ஒரு குறள் உருவானதா?”

அதெப்படி? அந்தக் குறள் நாம் இங்கு வருவதற்கு முன்னேரே

இருந்ததே. “

“ஆனால் நாம் பார்க்கும்போது அவர் இன்னும் திருக்குறளை

எழுதவில்லையே.”


“அதுவும் சரியே. இந்தக் காலமுரணைப் புரிந்துகொள்ளும் முயற்சியில்

மண்டை காய்ந்துவிடுகிறது. இதெல்லாம் கதைகளில் படீத்தபோதும்

திரைப்படங்களில் பார்த்தபோதும் எளிதாக இருந்தது.”

“எதுவானாலும் திருவள்ளுவர் குறளில் சொன்ன அந்த ‘உடுக்கை

இழந்தவன் நீதான்’ என்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.”

“இந்த காலமுரண் அனுபவம், திருவள்ளுவருக்குப் புரியாத ஒரு

வார்த்தையில் சொல்வதானால் ‘அற்புதம்’ என்று சொல்லியபடி

விசைகளை முடுக்கி ‘காலக்கலம்’ விண்கலனை மீள்

பயணப்பாதையில் செலுத்தினான் மகிழ்நன


காலக்கலம்

Tuesday, May 26, 2026

பரகாயம்


பரகாயம்-   சசி



சற்குருநாதன் வீரராகவுலு பத்மாசனத்தில் இடதுகாலை மடக்கி வலது தொடைக்கு மேல் வைக்க எத்தனித்துக் கொண்டிருந்தபோது உள் அறையிலிருந்து பாக்கியலட்சுமி குரல் கொடுத்தாள். “என்னங்க, இங்கே வாங்களேன், கொஞ்சம் சீக்கிரமா வந்து பாருங்க”. 

பதறியபடி வந்த அவரிடம், புடவைகள் அடுக்கி வைக்கப்பட்ட பீரோ கதவைத் திறந்து காட்டி  “இங்க பாருங்க. அரை அடி இருக்கு, காலியா!” என்ற சரவணா ஸ்டோர்ஸ் ஆடித்தள்ளுபடி விளம்பர டயலாக்கை அவிழ்த்து விட்டாள். வாழ்க்கையில் அவளது எல்லா உரையாடல்களும் எப்போதும் டிவி சீரியல்கள் மற்றும் அதற்கு இடையே வரும் விளம்பரங்கள், இதில் வரும் டயலாக்ஸ் தான்.

கடுப்பேறிய சற்குருநாதன் சோபா மேல் காயப்போட்டிருந்த அவரது ஜட்டி பனியன் இவற்றையெல்லாம் கொஞ்சம் அள்ளிக்கொண்டு அவள் முன் வந்து நின்று “இதெல்லாம் வைக்க இடம் இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த அரையடி எனக்கு தாராளமா போதும்” என்றார். “வேறென்ன செய்ய, நாம என்ன ஜெயம் ரவியா, கடைக்குக் கூட்டிட்டுப் போய் வேணும்ன்றத அள்ளிக்கோன்னு சொல்ல..” என்று தனக்குள் முணுமுணுத்தார்.

திரும்பி ஹாலுக்கு வந்து பத்மாசன போஸில் அமர்ந்து  வலதுகையில் பாபா முத்திரையுடன் சிறுவயதில் பாட்டி சொல்லித் தந்த சித்தர் மந்திர உச்சாடனையை முணுமுணுத்தபடி இடதுகையில் இரண்டு மாத்திரை, மூன்று மாத்திரை என்று அளந்து மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் மீண்டும் நடந்தது. இதற்குமுன் பலமுறை இப்படி நடந்திருக்கிறது.

 “பாக்கி, இங்க வாயேன்” என்று முக்கி முனகலாகக் குரலெழுப்பினார். பத்மாசன இருப்பில் இருந்த அவரது உடம்பு தரையிலிருந்து கொஞ்சமாக ஒரு அரையடி அளவுக்கு  மேலெழும்பியிருப்பதை அவரால் உணர முடிந்தது. முழி பிதுங்கிய நிலையில் மூச்சு முற்றிலும் ஸ்தம்பித்து வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி நாக்குழறியது. வாய் ஒருபக்கம் இழுத்தபடி கோணியது. பாக்கியலட்சுமியை உரக்கக் கூப்பிட நினைத்தார். ஆனால் செயல்படுத்த இயலவில்லை. அதற்குள் பொத்தென்று விழுந்து தரைதட்டினார். எதேச்சையாக ஹாலுக்குள் வந்த பாக்கியலட்சுமி “என்ன? “என்றாள் கோபமான குரலில். ஏற்கனவே இப்படி போனமுறை நிகழ்ந்தபோது, அன்று அவளிடம் தவறுதலாக ‘லேசா பறக்க முடிஞ்சுது’ என்று சொல்லப்போய் குலுங்கிச் சிரித்தபடி ”முதல்ல நடக்கிற வேலையப் பாருங்க. பறக்குறாராம். காப்பித் தூள் தீர்ந்து போச்சு. அப்படியே டவுனுக்கு பறந்துபோய் பட்டுனு வாங்கியாருவிங்களாம்.” என்றாள். 

இந்தமுறை சுத்தம். ஆடி விளம்பர டயலாக்கை அவர் எதிர் கிண்டலடித்த காயம் இன்னும் ஆறாததால்  “என்னது, உக்காரச்சே கொஞ்சம் கேப் இருக்கா.. புட்டத்துக்கு கீழ ஒரு தலக்காணி வச்சுக்கோங்க. சரியாப் போகும்” என்று பதிலடி கொடுத்துப் பழி வாங்கினாள். “எனக்கு பொழுதன்னைக்கும் அந்த சனியன் பிடிச்ச எலியோடப் போராடுறதே பெரும்பாடாப் போச்சு. இந்த எலிப்பொட்டியெல்லாம் அதுக்கு சரிப்படாது. நான் உங்கள மாதிரி ஜீவ காருண்யம் பார்க்கிற வள்ளலார் பரம்பரை கிடையாது. எலியப் பிடிச்சு டொங்குனு போட்டுத் தள்ளுற இரும்புப் பொறி ஒண்ணு உடனடியா வாங்கனும்” என்று புலம்பினாள் சற்குருநாதன் சகதர்மினி. 

தேவையில்லாமல் உளறிக்கொட்டிவிட்டு அடி வாங்குகிறோமோ என்று சற்குருநாதனுக்குத் தோன்றியது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக நம்மால் தரையிலிருந்து கொஞ்சம் மேலாக சில நொடிகள் எழ முடிகிறதே, இது அதிசயமில்லையா? பாக்கி இதை அலட்சியமாகக் கடந்து செல்கிறாளே? என்று சற்குருநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஒருவேளை இது  நடப்பது போல நமக்குப் பிரமையோ என்று அவர் நினைத்த மாத்திரத்தில் மேல் எழும்பிய நிலையில் இருந்து பொத்தென்று விழ பின்பக்கம் வலிப்பது எப்படி பொய்யாக இருக்கமுடியும் என்று யோசித்தார். ஒவ்வொருமுறையும் இந்த நிகழ்வின் சில வினாடிகளில் ஏதோ உயிர் போய் மீண்டு வருவது போன்ற அனுபவமாகத் தான் அவருக்குத் தோன்றியது.

எதற்கும் விஷயம் தெரிந்த தகுதி வாய்ந்த ஒரு மூன்றாம் நபரிடம் காட்டி உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் சற்குருநாதன். 

கேட்டைத் திறந்து ஸ்கூட்டியை உள்ளே நுழைத்து எப்போதும் போல காம்பௌண்ட் சுவர் ஓரமாக நிறுத்தினேன். “பேரு தான் பெத்த பேரு, ஆனா பவிசு.. இந்த ஊர்ல இதுக்கெல்லாம் அரையணாவுக்கு பிரயோசனம் உண்டா?”  புலம்பியபடி மாடிப் படிக்கட்டுக்கு ஏறுவதற்கு முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த மரத்திலான பெயர்ப் பலகையை கைக்குட்டையால் துடைத்தேன்.  ‘டாக்டர் பரந்தாமன், சைக்கியாட்ரிஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தப் பெயர்ப்பலகையைப் படித்துவிட்டு இந்த திருநெல்வேலி டவுனில் என்னை வந்து பார்த்தவர்கள் எவ்வளவு பேர் என்று கைவிரல்களை மடக்கி எண்ணி விடலாம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் குறைதீர நெல்லையப்பர் கோவிலுக்குப் போய் வேண்டிக்கொண்டு வாசலில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக வீடு திரும்புகிறார்கள் போல. 

நேற்று காலை பதினோரு மணி இருக்கும். கதவு லேசாகத் தட்டும் சத்தம் கேட்டு ஆர்வத்துடன் “யெஸ், கமின்” என்ற அடுத்த நொடியில் உள்ளே நுழைந்தது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது.  “யார் நீ? என்ன வேணும்” என்று கேட்டதும் ஒரு கசங்கிய வெள்ளைத் தாளை நீட்டினான். “அக்கா உங்க கிட்ட தரச் சொன்னாங்க”.

“இது என்னடா வில்லங்கம்” என்று திக்திக் இதயத்துடன் பிரித்துப் பார்த்தேன். என் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை வேண்டி விண்ணப்பம். ‘உயர்திரு டாக்டர் அவர்களுக்கு’ என்று தொடங்கியது எனக்கே பெருமையாக இருந்தது. ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்தும் என்னிடம் வேலை கேட்கும் அந்தப் பெண்ணை நினைத்துச் சிரிப்பு வந்தது. இப்போது நினைவுக்கு வந்தது. கீழ் போர்ஷனில் வசிக்கும் குடும்பம்.  நான் அந்தக் கடிதத்தைப் படிக்கும்வரைக் காத்திருந்து பிறகு பதில் எதுவும் எதிர்பார்க்காமல் “நான் வரேன் தாத்தா” என்று நகர்ந்தான் பொடியன். 

அடப்பாவி…தாத்தாவா? இன்னும் நான் ஐம்பது வயதை நெருங்கவில்லை. என் பெண் ப்ளஸ் ஒன் படிக்கிறாள். தலையில் கொஞ்சம் வழுக்கை விழுந்தாலே இந்த பொடியன்களும் பெண்களும் நம்மை அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். அவனது அக்கா என்னிடம் டைப்பிஸ்டாக வேலைக்கு சேர்ந்து “நீங்க தந்த லெட்டரை டைப் பண்ணிட்டேன். போய்ட்டு வரேன் தாத்தா” என்று சொல்வது போன்ற காட்சி மண்டைக்குள் ஓடியது. சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்து தலைமுடியை கைகளால் பரபரவென்று தேய்த்து பரவலாக்கிக் கொண்டேன். ம்ம்., முன்பக்க வழுக்கையில் ஒரு பத்து சதவிகிதம் மறைந்தது. 

அன்று காலையிலிருந்து இதுவரை பேஷன்ட்ஸ் யாரும் தென்படாததால் ஏதாவது மர்மக் கதை எழுத முயற்சிக்கலாமா என்று யோசித்தபடி கம்ப்யூட்டரை ஆன் செய்தபோது, கதவைத் தட்டாமல் லேசாகத் திறந்து எட்டிப்பார்த்துப் பின் அவசரமாக உள்ளே நுழைந்தவர் என் எதிரே அமர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 

“சார், என் பேரு சற்குருநாதன், மூணாவது தெருமுக்குல பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்குமே, அந்த வீட்டில வசிக்கிறேன். இன்சூரன்ஸ் ஏஜெண்ட்.”

“சொல்லுங்க சார், என்ன பிரச்னை?”

“கொஞ்ச நாளா நான் பத்மாசன போஸ்ல உக்காந்திட்டு யோகாசனம் செய்யுற போது உடம்பு லேசா எழும்பி மேலப் பறக்கிற மாதிரி..”

அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் நான் பேசத் தொடங்கினேன். “இது எவ்வளவு நாளா இருக்கு. இந்தக் கனவு தூங்கின உடனே வருதா.. இல்ல விடியக் காலைல வருதா?” 

“சார் ஒரு நிமிஷம்”

“இதோ பாருங்க, இதப்பத்தி, இந்த புஸ்தகத்தில இருக்கிறதப் படிக்கிறேன், கேளுங்க. பலருக்கு பறப்பதுபோல் கனவு வருவது மிகவும் இயல்பானது. கவிஞர் கண்ணதாசனுக்கு அடிக்கடி வானில் பறப்பது போன்ற கனவு வருமாம். இதுகுறித்து பலவிதமான உளவியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் தளைகளில் இருந்து விடுபட நினைப்பது முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது.”

“சார், படிச்சி முடிச்சாச்சா?” சொல்லிக்கொண்டிருந்த என்னை அவர் இப்போது இடைமறித்தார். “நான் சொல்றது கனவில்ல. நிசமாலுமே.”

“அப்படியா? பறக்குறதுன்னா பறந்து எவ்வளவு தூரம் போக முடியுது?” கிண்டலாகக் கேட்டேன். 

“நக்கலடிக்கிறீங்கன்னு புரியுது. அந்த மாதிரிப் பறக்கிறதில்ல சார். லேசா ஒரு அரை அடி தரையில் இருந்து எழும்ப முடியுது”. 

“அதுகூட கண்டிப்பா சாத்தியமில்ல. இதுவரை புவியீர்ப்பு விசைக்கு எதிராக யாரும் விஞ்ஞான பூர்வமா எதையும் செய்து காட்டியதா உலக சரித்திரத்திலேயே ஆதாரம் இல்ல.”

“உங்களால நம்ப முடியாதுன்னு தெரியும். எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க. இங்கேயே இப்பவே செய்து காட்டுறேன்.”

சொல்லிக்கொண்டே என் அனுமதி எதுவும் எதிர்பாராமல் பட்டென்று வேட்டியை மடித்துக் கட்டி உள்ளே போட்டிருந்த பட்டாப்பட்டி டிராயர் தெரியும்படி பத்மாசன போஸில் தரையில் அமர்ந்து கொண்டார். என் கவனம் முழுவதும் திறந்திருந்த வாசல் கதவை பார்த்தபடி தான் இருந்தது. சட்டென்று யாராவது வந்துவிட்டால் இங்கே என்ன நடக்கிறது என்று சொல்லிப் புரியவைக்க முடியாதே என்ற ஆதங்கம் தான் தலை தூக்கியது. 

ஒரு உளவியல் மருத்துவராக என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் என் கண்கள் பார்த்து மூளை உணர்ந்து பதிவு செய்த அந்த ஒரு நொடிக் காட்சி உண்மை நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அவரை இன்னொரு முறை செய்து காட்டச் சொன்னேன். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தேன். மீண்டும் பத்மாசனம். பாபா முத்திரை. ஏதோ புரியாத தமிழில் மந்திர முணுமுணுப்பு. வலிப்பு வந்தது போன்ற முகக் கோணல். இப்போது ஓரளவு தெளிவானது. தரையிலிருந்து அரையடிக்கும் குறைவான உயரம். இரண்டு நொடி நேரம். அவ்வளவே. அந்த காட்சியை புலன் உணர்வு உள்வாங்கிக் கொள்ளும் முன்னரே லேசான தட் என்ற சத்தத்துடன் தரையை தொட்டு விடுகிறார். குழப்பத்தில் இருந்த நான் பெருமூச்சு விட்டபடி நான் என் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவரை எதிரில் உட்கார வைத்து அவரிடம் இது நிஜமாக இருக்கும் பட்சத்தில் இதனால் அவருக்கு நேரவிருக்கும் சாதக பாதகங்களை விளக்கினேன்.

“முதலில் இது வெளி உலகுக்கு தெரிந்தால் மூன்று விஷயங்கள் நடை பெறலாம். ஒன்று ஜனங்களுக்கு தெரிஞ்சு போய் உங்களுக்கு அந்தர சாமியார் இல்லைன்னா தொங்கு சாமியார்னு பேர் வெச்சு கற்பூர ஆரத்தி எடுத்துக் கும்பிடலாம். நீங்களும் அதுக்கு ஓக்கேன்னா சில்லறை தேத்தி கல்லா கட்டலாம். அடுத்தது ஏதாவது மாஜிக் ஷோல ஜாயின் பண்ணிக்கிடடு பிரபலமாகலாம். மூனாவதா அரசாங்கம் உங்களை அள்ளிட்டுப்போய் உடம்பெல்லாம் ஊசி குத்தி ஃபிளக் பண்ணி ஆராய்ச்சி பண்ணுவாங்க. நீங்க கிட்டத்தட்ட லேப்ல ஆராய்ச்சி எலி மாதிரி ஆயிடுவீங்க. எனக்குத் தெரிந்து மூன்றாவது விஷயம் நடக்கறதுக்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.”

“ஐயையோ!” என்றார் சற்குருநாதன்.

“நான் சொல்லப் போற மூன்று விஷயங்களில் ஏதாவது ஒண்ணுல முன்னேற்றம் ஏற்பட்டால் சொல்லுங்க. இந்த சிக்கலைத் தவிர்த்து நாம ரகசியமாக விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம். ஒன்று உயரம். இப்போதைய நான்கு அங்குலம், புவியீர்ப்பு எதிர்விசையை நிரூபணம் செய்ய போதுமான உயரம் இல்லை. இரண்டாவது நேரம். ஓரிரண்டு நொடிகளில் இந்நிலையிலிருந்து பொத்தென்று விழுந்து தரை தொடுவதும் நம்பகத் தன்மைக்கு சிக்கல். மூன்றாவது நகர்வு. புவியீர்ப்பு எதிர்நிலையில் ஒரு சில அடிகளாவது நகர முடிந்தால் உத்தமம்.” 

இதை விளக்கியதும் “இந்த மூன்றும் செய்ய முடிஞ்சா?” வினவினார் சற்குருநாதன்.

“அப்ப நீங்க மனிதகுல சரித்திரத்திலேயே பறக்க முடிந்த மூன்றாவது கதாபாத்திரமா இருப்பீங்க. அதுலயும் முதலாவது மனுஷன் நீங்களா தான் இருப்பீங்க.” 

“சூப்பர் மேன் தெரியும். இன்னொன்னு யார்?”

“அனுமார்.”

கன்சல்டேஷன் ஃபீஸ் எவ்வளவு என்று அவராகவே கேட்டுத் தந்துவிட்டு மேற்கொணடு எதுவும் பேசாமல் திக்பிரமை பிடித்ததுபோல் வெளியேறினார் சற்குருநாதன். 

அதற்குப்பிறகு சில நாட்கள் அந்தக் காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும் எனக்கு நொடிப்பொழுது நேர்ந்த மருட்சியின் வெளிப்பாடே அது என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். கல்லூரி நாட்களில் பேரா-சைக்காலஜி என்று சொல்லப்படும் அமானுஷ்ய  உளவியலில் ஆர்வம் இருந்ததால் ஏராளமான சித்தர்கள் குறித்த ஆராய்ச்சி நூல்கள் தமிழில் வாங்கிக் குவித்திருந்தேன். சட்டென்று நினைவு வந்து பரணிலிருந்து முனைவர் திருஞானபண்டிதன் எழுதிய ‘அஷ்டமா சித்து’ என்ற புத்தகத்தை எடுத்து தூசி தட்டிப் புரட்டினேன். அஷ்டமா சித்துக்களில் ஒன்று பரகாயப் பிரவேசம். கூடுவிட்டு கூடு பாய்வது.  அதாவது தன் உடலில் இருந்து உயிரை வெளியேற்றி அருகில் இருக்கும் இறந்து கிடக்கும் உடலிலோ அல்லது உயிரோடு இருப்பவர்கள் முழுமனதுடன் சம்மதித்து அவர்கள் உடலில் பிரவேசம் செய்வது. சரியான மந்திர உச்சாடனம், சீரான மூச்சளவு, குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்வு இதெல்லாம் இந்த சித்து நிகழ்வைத் தீர்மானிக்கும். இது மிகவும் ஆபத்தான ஒரு சித்து வேலை என்பதால் இதனைச் செய்ய பிரசித்தி பெற்ற சித்தர்களும் அஞ்சுவார்கள்.

‘முழி பிதுங்கி வாய் கோணி நாக்குழறி இலகுவாகி மேலெழும்பும் உடல் உயிர் பிரியும் தன்னுடல் நீங்கி பரகாயம் சேருமுன்’ என்ற பெயர் தெரியா சித்தரின் பாடல் ஒன்றும் குறிப்பில் இருந்தது. இப்போது பொறி தட்டியது. ஒருவேளை பறப்பதாக நினைத்துக்கொண்டு பரகாயப் பிரவேசப் பயிற்சியை அவரே அறியாமல் தற்செயலாகச் செய்து வருகிறாரோ. அதனால் லேசாக உடல் மேலெழுவதைப் பறப்பதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆபத்தை உணராமல் செய்யும் அவரது நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். 

அதற்கு அடுத்த வாரம் ஒருநாள் திருநெல்வேலி டவுன் கடைத் தெருவில் நூறடி தூரத்தில் சற்குருநாதன் தள்ளு வண்டிக் கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன் அவர் அருகே நான் செல்லும்போது அவரும் என்னை கவனித்தது போல் இருந்தது. அவரை நெருங்குவதற்குள் சட்டென்று நழுவி எதிர் பக்கம் இருந்த ஒரு குறுக்கு சந்தில் நுழைந்து மாயமானார். மனுஷன் என்னைச் சந்திப்பதை தவிர்க்க முயல்கிறாரோ என்று தோன்றியது

மறுநாள் சனிக்கிழமை. காலையில் எப்போதும் போல சீக்கிரமாகவே கிளினிக் வந்துவிட்டேன். எங்கிருந்தோ சங்கு ஊதும் சத்தமும் சாவுக்கு அடிக்கும் மணியோசையும் விட்டுவிட்டுக் கேட்டது. கீழ் வீட்டுப் பையன் தான் கதவைத் தட்டி எனக்குத் தகவல் தந்தான்.  “அன்னைக்குக் கூட உங்களப் பாக்க வந்தாரே, அந்த தாத்தா தான்”. மூணாவது தெருமுக்கு பச்சை பெயிண்ட் என்று அன்றைக்கு சற்குருநாதன் சொன்னது நினைவிருந்தது. அவரது வீட்டுக் காம்பௌண்டுக்குள் ப்ரீசர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் பலவிதமான சைஸில் ரோஜா மாலைகள். நாமும் ஒரு மாலை வாங்கி வந்திருக்கலாமோ எனறு தோன்றியது. கை கூப்பியபடி மெல்ல அருகில் சென்று எட்டிப் பார்த்தேன். ப்ரீசர் பெட்டிக்குள் சற்குருநாதன் கண் மூடி சலனமற்றிருந்தாலும் ஏதோ கலவரம் அவர் முகத்தில் லேசாகப் படிந்திருந்தது. வாய் வலதுபக்கம் சற்று வலிப்பு வந்தது போல் கோணியிருந்தது.

“ஹார்ட் அட்டாக்காம். நேற்று கூட சாயங்காலம் அவர் கிட்ட பேசினேன். நல்லாத்தான் இருந்தார். ஒரே பையன். நியூடெல்லி விஞ்ஞான் பவன்ல வேலை செய்றான். அவன் வந்து சேர்ந்ததும் ஈமக்கிரியை ஆரம்பிக்க வேண்டியது தான்” என்று ஒருவர் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

வீட்டு ஹாலில் மூண்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, நடுவில் புடவைத் தலைப்பால் அடிக்கடி முகத்தைப்  பொத்தியவாறு அழுதபடி இருந்தார் சற்குருநாதனின் மனைவி. என்னை அழைத்து வந்த நபர் அவர் அருகே போய் ஏதோ சொல்லத் தடுமாறியபடி எழுந்து கொண்டார். “நீங்க தான் டாக்டருங்களா? உங்களத்தான் வந்து பார்க்கனும்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏதோ யோகாசனம் பத்தி பேசனும்னு.”. 

“எப்படி ஆச்சு இது” என்று பொத்தாம் பொதுவாக நான் அவரிடம் கேட்டு வைக்க “எப்பவும் போல காலைல ஹால்ல யோகாசனம் பண்ணிட்டு இருந்தார். நான் சமையல் ரூம்ல எலிப்பொறியில் மாட்டி செத்துப்போன எலியோட வாலை துணியில சுத்திப் பிடிச்சிக்கிட்டு ‘இதப்பாருங்க! கடைசியா சிக்கிடுச்சின்னு’ சொல்ல,  யோகாசனத்துல உக்காந்திருந்தவரு தலைய மட்டும் திருப்பிப் பார்த்து ஒருமாதிரி முழிச்சி மூச்சுத் திணறி படார்னு சரிஞ்சிட்டாரு. நானும் மயக்கமாயிட்டேன்.”

“செத்துப் போன அந்த எலி எங்கே?”

“இதோ இங்க தான் போட்டேன்” என்று சொல்லி விசும்பியபடி அவர் அமர்ந்து கொள்ள மீண்டும் பெண்கள் ஒப்பாரி தொடர்ந்தது.

 “என்ன சார் பேசுறீங்க. எலியெல்லாம் ஒரு மேட்டரா. அத்த கர்மத்தை யாராவது தூக்கிப் போட்டுட்டு அங்க சுத்தம் பண்ணி இருப்பாங்க. செத்துப் போன எலி என்ன உயிர் வந்து ஓடியா போயிருக்கும்?” என்று கூட வந்தவர் என்னைக் கோபித்துக் கொண்டார்.

இந்தக் கதையின் கடைசி வாக்கியம் ஒரு திடுக்கிடும் திருப்பம் வேண்டி இட்டுக் கட்டப் பட்டதல்ல. எந்த ஒரு உள்ளர்த்தமும் இல்லாமல் நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே காட்சிப்படுத்திய விவரணை மட்டுமே. அதேசமயம், படித்த மருத்துவக் கோட்பாடுகள் மற்றும் அறிவியல் விதிகளின் மீதான அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ள நான் பகுத்தறிவுக்கு ஒப்பாத எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று இப்போதே திட்டவட்டமாக கூறிவிடுகிறேன். 

ஈமச்சடங்குகள் முடிய எப்படியும் நேரமாகும். சாவு வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்பது சட்டென்று நழுவ எப்போதும் ஒரு வசதியான விதியாகவே படுகிறது. செருப்பை மாட்டிக்கொண்டு காம்பௌண்டை நான் நெருங்கியபோது புழக்கடைப் பக்கம் வைத்திருந்த தட்டுமுட்டு சாமான்களிடையே இருந்து ஒரு பெருத்த எலி குறுகுறுவென்று வெளியே வந்தது. அதன் மூக்குப் பகுதியில் லேசான ரத்தக்கசிவு. கண நேரம் தாமதித்துத் தலையை உயர்த்திய அதன் குட்டிக் கருவிழிகள் ஒருமுறை என்னை உற்றுப் பார்த்தது பிரமையா நிஜமா என்று நான் யோசித்த நொடியில் அது தெருவின் வெளிப்பக்கமாக வேகமாக ஓடி மறைந்தது.

பரகாயம்