காலையில் எழுந்ததிலிருந்து கொஞ்சம் தலைவலி. வெறும் பிரெட் டோஸ்ட் செய்து ஆம்லெட் என்று காலை டிபன் சட்டென்று முடிந்தது. கொஞ்சம் மூக்கடைத்தாற்போல இருந்தது. லேசாக உள் ஜுரம். கொஞ்ச நேரம் ஆவி பிடித்துவிட்டு ஜண்டு பாம் மிதமாகத் தடவி அக்கடாவென்று வாட்ஸ்அப் மேய்ந்தால் அதில் புதிதாக ஒரு பார்வேர்டு... கொரோனா வராமல் இருக்க மேலும் ஒரு கஷாயம். கொஞ்சம் இஞ்சி, பூண்டு, அப்புறம் மிளகு, கிராம்பு, சோம்பு, இத்துடன் பட்டை மற்றும் எலுமிச்சை சேர்த்து…
அட... இதெல்லாம் போட்டுச் செய்வதுதானே பிரியாணி, மதியச் சாப்பாட்டுக்கு அதையே ஸ்விக்கியில் ஆர்டர் செய்வோம் என்று எல்லா ஞாயிற்றுக்கிழமை போல இன்றும் முடிவெடுத்தேன். டெலிவரி பாய் கொண்டு வந்த பார்சல் பாக்கெட்டை பத்திரமாக ஆள்காட்டி விரல் மட்டும் உபயோகித்து, செத்துப்போன எலியை வாலைப் பிடித்து வெளியே கொண்டுபோய்ப் போடுவதுபோல் வீட்டுக்குள் கொண்டு வந்து இரு பாத்திரங்களில் மாற்றி பத்திரமாகக் கையை சோப்பு போட்டுக் கழுவி...(‘ஏங்க, ஸ்விக்கில ஆர்டர் செய்யும்போது பத்திரம், யாருக்கோ பீட்ஸா டெலிவரி பாய் மூலமா கொரோனா வந்துச்சாம்...’ மைதிலி வாய்ஸ்)
நன்றாக பிரியாணியை மைக்ரோ ஓவனில் சூடு செய்துவிட்டு, தட்டில் பரிமாறிய பின் முதல் வாய் ருசியில் ஏதோ வித்தியாசம் தெரிய, உடன் செல்போனில் கோபமாக இடது கையால் ஸ்விக்கியில் பிரியாணிக்கு சிங்கிள் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தேன். அடுத்த வாய் காரமான கத்திரிக்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டதும் விஷயம் தெளிவானது. என் நாக்குதான் ருசி இழந்துவிட்டது. பதற்றம் அதிகமாகி, உடன் எங்கள் சக தோழர், எம்.பி.பி.எஸ் படிக்காமலே இலவச அலுவலக ஆஸ்தான மருத்துவராகச் செயல்படும் ஆல் இன் ஆல் சுப்புவைத் தொடர்பு கொண்டேன்.
சுப்பு போன் செய்து மதியம் ஒரு மணிக்கு எனக்காக அப்போலோ டாக்டருடன் ஜூமில் காணொலி ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் பெயர் ஷ்யாம் சுந்தர். இருப்புக் கொள்ளாமல் லிங்கை அரை மணி நேரம் முன்னதாக கிளிக் செய்ய, ஏற்கெனவே அந்தப் பக்கம் ஆன் ஆகியிருந்தது.
“சார், தெரியுதா?”ன்னு அங்கிருந்து சத்தம் கேட்க,
“தெரியுது, ஒரு கட்டில், அதுக்கு மேல முண்டா பனியன் ஒண்ணு, அப்புறம் ரெண்டு பூமர் ஜட்டிகள், ஒரு டீ ஷர்ட். சார், ஃபிரன்ட் கேமராவை ஆன் பண்ணுங்க.”
“இப்ப?”
“மூக்கு மட்டும்தான் தெரியுது. கொஞ்சம் போன கீழ தள்ளி வைங்க. ஆங்... இப்ப தெரியுது. யார் அது, தம்பி... கொஞ்சம் போய் டாக்டரைக் கூப்பிடுங்க.”
“சார் நான்தான் டாக்டர் ஷ்யாம் சுந்தர்...”
“வேற சீனியர் டாக்டர் யாரும் இல்லையா?”
டாக்டர் ஷ்யாம் சுந்தர் முறைத்தான். “சார், நான் இப்பதான் எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டு இங்க இன்டெர்ன் ஜாயின் பண்ணி இருக்கேன். உங்க பேக்கேஜ் பட்ஜெட்டுக்கு நான்தான் அவைலபிள். சரி சொல்லுங்க, உங்களுக்கு உடம்புக்கு என்ன பண்ணுது?”
டாக்டர்னா எப்பவும் மொதல்ல இதைத்தான் கேட்கணும்னு படிக்கும்போதே சொல்லிக் கொடுத்துடுவாங்களோ என்று முணுமுணுத்தபடி, “உடம்புக்குப் பண்ணுவதைவிட மனசுதான் என்னவோ பண்ணுது டாக்டர்” என்றேன்.
“சார், அதுக்கு நீங்க ஒரு மனோதத்துவ டாக்டரைத்தான் பாக்கணும்.”
‘அட, முளைச்சு ரெண்டு இலை விடல, (நோட், மூணு இலைகூட இல்லை) கிண்டலா? நல்லா வருவடா நீ’ என்று கருவியபடி (மனசுக்குள் தான்),
“லேசா ஜுரமா இருக்கு, தலை பாரமா இருக்கு.”
“மூச்சு விட கஷ்டமா இருக்கா?”
“இதுவர தெரியல... இப்ப நீங்க சொன்ன பிறகு மூச்சு விடுவதைப் பத்தி நினைச்சுப் பார்த்துட்டே மூச்சு விடும்போது கொஞ்சம் மூச்சு விடுவது சிரமமா இருக்குற மாதிரி தான் இருக்கு.”
“ஏன் திடீர்னு கமல் மாதிரி பேசுறீங்க. ஒண்ணும் புரியல. சரி, அப்புறம்?”
“அப்புறம் ருசியே தெரியல.”
“ருசி தெரியலயா, கஷ்டம்தான், மதியம் என்ன சாப்பிட்டீங்க?”
தயங்கியபடி, ``பிரியாணி’’ என்றேன்.
“என்னது, பிரியாணியா. என்ன பிரியாணி... சிக்கனா, மட்டனா?”
“சிக்கன்.”
“பாய் தம் பிரியாணியா, ஹைதராபாத்தா, செட்டிநாடு பிரியாணியா?”
“இல்ல சார், திண்டுக்கல் தலப்பாக்கட்டி”
“தொட்டுக்க என்ன இருந்தது?”
“கத்தரிக்கா சட்னி, வெங்காய பச்சடி.”
“எதுல ஆர்டர் பண்ணீங்க... ஸொமோட்டாவா, ஸ்விக்கியா?”
“ஸ்விக்கி சார்.”
“என்ன ஆபர் இருந்துது... டிஸ்கவுன்ட் எவ்வளவு?”
“சார், என்ன நடக்குது இங்க... நீங்க நிஜமாவே டாக்டர்தானா?”
“ஓ... ஓகே! சாரி. பிரியாணி என்றதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். தலப்பாக்கட்டி பிரியாணி ஸ்பைசியா நல்லா காரசாரமாதான் இருக்கும், அதுவே உங்களுக்கு டேஸ்ட் தெரியலன்னா, ஐ டவுட் கண்டிப்பா இட் இஸ் கோவிட் பாசிட்டிவ் கேஸ்.”
இவன் என்னைப்போல் ஒருவன். பிரியாணி ஆர்வலன். வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் இந்தப் பையன் எனக்கு ரொம்பவும் திக் பிரெண்ட் ஆகியிருப்பான்.
ஆனால், இப்போது என்னுடைய நிலைமை வேறு. அவன் சொன்னதைக் கேட்ட பின் எனக்குக் கண்கள் இருண்டுகொண்டு வந்தன.
“டாக்டர், அப்ப அவ்வளவுதானா! என்ன காப்பாத்த முடியாதா... எதுவும் செய்ய முடியாதா... நான் போய்ச் சேர வேண்டியதுதானா?”
“சுரேஷ் சார், அவசரப்படாதீங்க, இன்னும் கொரோனான்னு உறுதியாகல.ஒரு ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுப்போம், உங்க வீட்டுக்கே வந்து எடுக்க ஏற்பாடு பண்ணிடலாம். உங்க அட்ரஸ் சொல்லுங்க.”
ஆர்.டி.பி.சி.ஆர் என்றால் வி.சி.ஆர் போல ஏதோ பெரிய எக்யூப்மென்ட் கொண்டு வருவார்கள். எப்படி தேவசகாயம் கண்ணில் படாமல் டெஸ்ட் செய்வது என்று யோசித்து, டெஸ்ட் எடுக்க வரும் பையனுக்கு முன்கூட்டியே போன் செய்து கார் பார்க்கிங் அருகில் வரச் சொல்லியிருந்தேன். ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலாக வந்தவன் என்னை ஒரு கார் மீது சாய்வாக நிற்க வைத்தான் பிறகு பேக் பாக்கிலிருந்து ஒரு பெட்டியைத் திறந்து நீள பஞ்சு பொதிந்த பிளாஸ்டிக் குச்சிகள் இரண்டு எடுத்து “இப்ப ஆ சொல்லுங்க” என்றான். ``ஆ’’ என்றதும்,
“என்ன சார் சாப்பிட்டீங்க, பிரியாணி வாசனை வருது?”
கேட்டுக்கொண்டே ஓரு குச்சியை வாய்க்குள் நுழைத்து மேலும் கீழும் அசைத்து எடுத்தான். அதை ஒரு பிளாஸ்டிக் குப்பியில் பத்திரப்படுத்தினான்.
“இப்போ மூக்கைக் காட்டுங்க.”
மூக்கையும் ‘ஆ’ காட்ட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று இப்போது தோன்றியது. கண்ணில் விரலை விட்டு ஆட்டுவது என்று சொல்வார்கள். அதைவிடப் பெரிய கொடுமை இது.
‘தம்பி, இதுக்கு மேல நீ என் மூக்குல இந்தக் குச்சியைச் செருகினா தொண்டை வழியா வெளியே வந்திடும்’னு சொல்ல நினைத்தேன். முடியவில்லை.
“ரிசல்ட் எப்போ வரும்?”
“நெகட்டிவ்னா லேட்டா வரும். பாசிட்டிவ் சீக்கிரமே வரும். அப்போலோ ஸ்பெஷல் லாப் மூலம் டெஸ்ட் செய்யறோம். அதனால ஆறு மணிக்குள்ள வந்திரும்.”
“லேட்டாவே வரட்டும். அவசரமில்லே. ரிசல்ட் எப்படித் தெரியும்?”
“எஸ்.எம்.எஸ்ல வரும் சார். எப்படியும் அதுக்கு முன்னாடியே கார்ப்பரேஷன் ஆளுங்க தட்டி அடிக்க, நோட்டீஸ் ஒட்ட வருவாங்க. அப்ப தெரிஞ்சிடும்.”
ஏனோ ‘நாடகம் விடும் நேரம்தான்... உச்சக்காட்சி நடக்குதம்மா’ என்ற வாழ்வே மாயம் கமல் பாட்டு திடீரென்று ஞாபகம் வந்தது.
சரியாக ஐந்து மணிக்கு ‘டொங்’ என்றது செல்போன் மெசேஜ் ஒற்றைச் சத்தம். இதயத் துடிப்பு சற்றே நிற்க, ‘பாசிட்டிவ்’ என்ற வார்த்தை செல்போன் திரையில் மங்கலாகத் தெரிந்தது.
மைதிலிக்கு உடனே போன் செய்து என் வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம் பாஸ்வேர்டு போன்ற விவரங்கள் தெரிவிக்க, அவள் மெர்சலானாள்.
“என்னங்க சொல்றீங்க. உங்களுக்கு கொரோனாவா. அப்பவே சொன்னேன், நான்வெஜ் சாப்பிடறத குறைங்கன்னு... கேட்டீங்களா?”
“என்னடி சொல்ற? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“கமலா மாமி சொன்னாங்க. அசைவம் சாப்பிட்டா கொரோனா வருமாம். நான் அம்மனுக்கு வேண்டிக்கறேன். சரியானா முப்பாத்தம்மன் கோயிலுக்கு நீங்க நாலு வெள்ளிக்கிழமை தொடர்ச்சியா வருவீங்கன்னு, அடுத்த ஆடி மாசம் வரைக்கும் நான்வெஜ் சாப்பிட மாட்டீங்கன்னும் வேண்டிக்கிறேன்.”
“ஏண்டி, சுத்தி சுத்தி அதே டாபிக் வந்துடுவியே. சரி இனிமே நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிடுறேன். போதுமா?”
“திருந்த மாட்டீங்களே... உங்க ஹெல்த்துக்காகத்தானே சொல்றேன். சரி, அப்பப்போ போன் பண்ணுங்க. உடம்ப பாத்துக்கோங்க. நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், இப்படி ஒரு வியாதி உங்களுக்கு வர. கடவுளே!”
சென்னை மாநகராட்சி ஆட்கள் வந்து அப்பார்ட்மென்ட் கேட் அருகே நோட்டீஸ் ஒட்டி, தட்டி கட்டத் தொடங்கியதும் தேவசகாயத்தின் குரல் கீழே உச்சஸ்தாதியில் கேட்டது.
“அவரைத்தான் ஹாஸ்பிடல் கொண்டு போறீங்களே. அப்புறம் எதுக்கு இதெல்லாம்..?”
“சார், இதெல்லாம் கவர்மென்ட் ரூல்ஸ். சட்டப்படிதான் நாங்க செய்றோம்.”
என்னை சந்திக்கவோ என் பிளாட் அருகே வரவோ யாருக்கும் துணிவில்லை. கார்ப்பரேஷன் நபர் ஒருவர் மட்டும் வந்து “சார், ஒரு பத்து நாளுக்குத் தேவையான துணிமணி எடுத்துக்கோங்க” என்றார்.
“துணி சரி, மணி என்னது, காசா?’’
“இப்பகூட உங்களுக்கு எளக்காரம்தான் சார். மாஸ்க்க கொஞ்சம் இறுக்கமா போடுங்க, மொபைல் மறக்காம எடுத்துக்கோங்க.”
மொபைல் கையில் எடுத்ததும் ரிங் அடித்தது. தேவசகாயம்.
“என்ன சார், காலைல பேசிட்டிருக்கும் போதுகூட ஒரு வார்த்தை சொல்லலையே.”
“என்ன செய்ய சார். எனக்கே இப்ப அப்பார்ட்மென்ட் வாசல்ல தட்டி அடிக்கும் போதுதான் ரிசல்ட் வந்தது.”
“என்னவோ சுரேஷ் சார், உங்களுக்காக கடவுள்கிட்டே வேண்டிக்கிறோம். நல்லா சரியானப்புறம் பொறுமையா டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வாங்க. அவசரப்படாதீங்க.”
அவர் கவலை அவருக்கு. வெளியே யாரிடமோ ஈவினிங் மீட்டிங்கை அர்ஜென்ட் எக்ஸ்ட்ராடினரி மீட்டிங்காக மாற்றி உடனடியாக அப்பார்ட்மென்ட் முழுக்க பியூமிகேஷன் செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கிக்கொண்டிருந்தார்.
அப்பார்ட்மென்ட் வாசலில் கேட்டை மறித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. என்னை வழியனுப்ப யாரும் வரவில்லை. நான் சொல்லிவிட்டுக் கிளம்பவும் யாரும் இல்லை.
அலுவலகம் செல்லும்போது பலமுறை நான் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறேன். ஆனால் அதற்கு உள்ளே எப்படி இருக்கும் என்றுகூட இதுவரை நேரில் பார்த்ததில்லை. நினைத்தது போல் இல்லாமல் மிகச் சாதாரணமாக இருந்தது. படுத்துக்கொள்ள ஒரு சிறிய ரெக்ஸின் படுக்கை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்ணில் தெரியாதபடி பிளாஸ்டிக் திரை இருந்தது. துணிமணி கொண்ட பையுடன் மிகுந்த கூச்சத்துடன் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறி படுக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.
அப்பார்ட்மென்ட் முழுக்க லேசாக ஜன்னல் திறந்து வைத்து பீதியுடன் வேடிக்கை பார்த்தது. தெருநாய்கள் ஆம்புலன்ஸைச் சுற்றி வந்து பயங்கரமாகக் குரைக்கத் தொடங்கின. இருப்புக் கொள்ளாமல் ஆம்புலன்ஸ் டிரைவர், “சார், என் பேர் மணி. கிளம்பலாமா?” என்று கேட்டான்.
“மணி, இதுக்கெல்லாம் ராகு காலம் எமகண்டம் பாக்க அவசியம் இல்ல. சட்டுனு கிளம்புப்பா.”
“வாட்டமா படுத்துக்கோ சார்.”
“இல்லப்பா, பிரச்னையில்லை. உட்கார்ந்தபடியே இருக்கிறேன்.”
“அதுக்கு இல்ல சார், அப்பதான் நான் சைரன் போட முடியும்.”
“பரவால்லப்பா. அவசரம் இல்ல. சைரன் இல்லாம மெதுவாவே ஒட்டு.’’
“சார், புரிஞ்சிக்கோ. எனக்கு சைரன் போட்டாதான் வண்டி ஓட்ட வரும்.”
ஆம்புலன்ஸ் படுக்கையில் படுத்ததும் மூச்சை அடைப்பது போலவும், நெஞ்சு வலி வருவது போலவும் இருந்தது.
No comments:
Post a Comment