அன்றைய சென்னை தியேட்டர்கள்! - ஒரு ஜில் ப்ளாஷ்பேக்
Published:
அண்ணாசாலையில் சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் பொதுவாக எப்போதுமே நடிகர் திலகம் படங்கள் மட்டுமே வெளியாகும். அதற்கு பிறகு அங்கு பிரபுவின் படங்கள் வெளியானது. ..
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் தியேட்டர்கள் இல்லாத ஊரில்? டெலிவிஷன், கேபிள் டிவி மற்றும் யூ ட்யூப், அமேசான், நெட்பிளிக்ஸ், ஓடிடி, செல்போன், வாட்ஸ் அப் வகையறாக்கள் இல்லாத காலகட்டத்தில் நமக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் சினிமா பார்ப்பது மட்டும்தான். எம்ஜிஆர் சிவாஜி எம்எஸ்வி கண்ணதாசன் இவர்களெல்லாம் நம் அன்றாட வாழ்வில் ஒன்றர கலந்திருந்தார்கள்.
இரண்டாவது தர வரிசை பட்டியலில் இருந்த ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்கள் படங்களே அக்காலத்தில் சர்வ சாதாரணமாக நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காரணம் மக்கள் தியேட்டர்களில் படம் பார்ப்பதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள். எனவே தியேட்டர் இல்லாத ஊரில் வாழவே முடியாது என்பதுதான் அன்றைய உண்மை நிலவரம்.
எங்களுடைய பள்ளிக்காலங்களில் பெரும்பான்மையாக நாங்கள் வசித்தது பார்டர் தோட்டம் (இந்த ஏரியாவில் பார்டரும் இல்லை, தோட்டமும் இல்லை, ஏன் இந்த பெயர் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை) என்று சொல்லப்படும் திருவல்லிக்கேணிக்கும் அண்ணா சாலைக்கும் இடையே இருபதுக்கும் மேற்பட்ட தியேட்டர்களால் புடைசூழப்பட்ட ஒரு ஏரியா. கடிகார சுற்று வரிசைப்படி எங்கள் வீட்டை சுற்றி இருந்த திரையரங்குகள் வரிசைக்கிரமமாக மிட்லண்ட் தியேட்டர் பிற்காலத்தில் இது தியேட்டர் ஜெயப்பிரதா என மாறி பின்னர் மிஸ்ஸிங். இன்னும் கொஞ்ச தூரத்தில் ஓடியன் தியேட்டர் (பின்னாளில் மெலோடி) உள்பக்கமாக ராயப்பேட்டையில் பைலட், சத்யம் காம்ப்ளக்ஸ் மீண்டும் அண்ணா சாலையில் (முன்னர் மவுண்ட் ரோடு) வெலிங்டன், எதிர்ப்பக்கம் குளோப் தியேட்டர் (பிற்காலத்தில் இது அலங்கார்) அப்படியே நேர்கோட்டில் சென்றால் ஆனந்த் அதே வரிசையில் சபையர் தியேட்டர்.
மீண்டும் அண்ணா சாலை எதிர்ப்பக்கமாக கேசினோ, கெய்ட்டி அப்புறம் சித்ரா, ஜிம்கானா கிளப் அருகில் பிளாசா தியேட்டர் அதன் எதிரில் நியூ எல்பின்ஸ்டோன். எதிர்ப்பக்கம் தேவி திரை வளாகம் பக்கத்தில் சாந்தி மற்றும் அண்ணா தியேட்டர். வாலாஜா தெருவில் நுழைந்தால் அங்கு சில்ட்ரன்ஸ் தியேட்டர் (இது இப்போதைய கலைவாணர் அரங்கம்) எதிர்ப்பக்கம் பாரகன் அப்படியே பின்னாடி வந்து திருவல்லிக்கேணியில் நுழையும்போது ஸ்டார் தியேட்டர்.. கொஞ்சம் இருங்கள் மூச்சை விட்டுக் கொள்கிறேன்.
இவ்வளவு தியேட்டர்கள் இருந்தாலும் அந்த காலங்களில் தியேட்டர்களில் டிக்கெட் கிடைப்பது என்பது மிகக் கடினமான ஒரு விஷயம். சத்யம் தியேடடரில் 'ஷோலே' படம் பார்க்க சென்று மதிய காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் சட்டை, தலைமுடி எல்லாம் கசங்கிபோன நிலையிலும் வெளியேறாமல், அடுத்த காட்சிக்கு மறுபடி மூன்று மணி நேரம் கியுவில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த மறவர் படை நாங்கள்.
அப்பொதெல்லாம் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் கூரை வேய்ந்த கொட்டாய் திரையரங்குகளில் சேர் போடாத தரை டிக்கெட் கட்டணம் மிகவும் மலிவாக இருக்கும். அதை வாங்கிக் கொண்டு ஹாயாக தரையில் உட்கார்ந்து கொண்டு படம் பார்க்க வேண்டியதுதான். போரடித்தால், கூட்டம் இல்லை என்றால் அப்படியே காலை நீட்டிப் படுத்தும் கொள்ளலாம்.
குடும்பத்தோடு வருபவர்கள் சிலர் ஜமுக்காளம் தலையணை, தண்ணீர் கூஜா, பலகாரம் எல்லாம் கூட கொண்டு வருவார்கள். இந்த தரை டிக்கெட்காரர்கள் பெரும்பாலும் அந்தந்த ஏரியாவின் மண்ணின் மைந்தர்கள். தனுஷ் வசனங்களில் 'நாங்கல்லாம் தரை லோக்கல்' என்று சொல்வார் அல்லவா, அதே தான்.
சாதாரண தியேட்டர்களில் லோ கிளாஸ் எனப்படும் குறைந்த கட்டண டிக்கெட் 60லிருந்து 90 பைசா வரை தான் இருந்தது. இங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலிகள் அவ்வளவாக வசதியாக இருக்காது. மூட்டைப் பூச்சிகளின் கூடாரமாக இருக்கும். இந்த கிளாஸ் டிக்கெட் வாங்கினால் மிக வேகமாக உசைன் போல்ட் போல ஓடினால் தான் பின்வரிசை இருக்கை கிடைக்கும். அதுவே ஸ்கிரீன்ல் இருந்து அதிக பட்சமாக இரண்டாவது வரிசையாகத்தான் இருக்கும். கொஞ்சம் தாமதித்தாலும் முதல் வரிசை தான். இங்கு அமர்ந்து படம் பார்ப்பது ஒரு வினோதமான அனுபவம்.
ஒருவேளை இந்த வரிசையிலும் நடுவில் இடம் கிடைக்காமல் ஓரமாக ஏதாவது இருக்கையில் அமர்ந்துவிட்டால் மிக கொடுமை. எம்ஜிஆர் கொஞ்சம் கோணலாகத் தெரிவார். அவர் நம்பியாரை அடிக்கும்போது ஒவ்வொரு குத்தும் நம்மீது படுவது போல் இருக்கும்.
சிலசமயங்களில் வெள்ளித்திரை வெளிச்சத்தில் ஈர்க்கப்பட்டு வரும் விட்டில் பூச்சிகள் மற்றும் கொசுக்களை உண்டு வளர்ந்த பெரிய ராட்சத பல்லி ஒன்று 'நான் பார்க்காத ஸ்டாரா' என்றபடி அங்குமிங்கும் திரையில் கே ஆர் விஜயா மீது ஓடிக்கொண்டிருக்கும். அவரோ அதைப் பற்றி கவலைப்படாமல் தோளை சரித்து சிணுங்கியபடி வசனம் பேசிக் கொண்டிருப்பார். நமக்கோ அந்த பல்லி எப்போது நம்மீது விழும் என்று பயமாக இருக்கும்.
இத்தகைய தியேட்டர்களில் இடைவேளை விட்டவுடன் காட்சிகள் பெரும் பரபரப்பாக மாறிவிடும். இடைவேளைக்கு சற்று முன்னர் தான் கதாநாயகி வீட்டை விட்டு துரத்தப்பட்டு கதறி அழுது எல்லார் கண்களையும் குளமாக்கி இருப்பார். ஆனால் மக்கள் இப்போது இடைவேளையின்போது அதைப் பற்றிய கவலை இல்லாமல் தின்பண்டங்கள் வாங்கித் தின்பது மற்றும் வெளியே சென்று பீடி, சிகரெட் புகைப்பது என்று பிசியாக இருப்பார்கள்.
ஒருபக்கம் தலைக்குமேலே அலுமினிய டிரேக்களை தூக்கியபடி விற்பனையாளர்கள் தியேட்டருக்குள் வலம் வருவார்கள். அந்த குட்டி ட்ரேயில் பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், கமர்கட், பாப்பின்ஸ் ரோல், ஆரஞ்சு மிட்டாய் போன்ற பலரக தின்பண்டங்கள் இருக்கும். இது தவிர கலர், சோடா விற்பனை களை கட்டும். குட்டி சம்சா விற்கும் பையன்கள் கூடையோடு சுற்றுவார்கள். இது சாதாரண பெரிய சமோசா அல்ல. வதக்கிய வெங்காயம் ஸ்டப் செய்த குட்டி மலிவு விலை சம்சா. இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரைப்படம் ஆரம்பித்து பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகும் இந்த களேபரங்கள் அடங்க. இந்த சமயத்தில் வெளியே செல்லும் கதவுகளை திறந்து விட்டு விடுவாரகள்.
பேன் காற்றையும் மீறி வியர்வை நெடி மற்றும் பீடி சிகரெட் குடித்த புகை மண்டலக் காற்று, வெளியே திறந்தவெளி கழிப்பிடத்தின் நாற்றம் இவையெல்லாம் சேர்ந்த கலவையாக, இப்போதும் மனதில் உறைந்திருக்கும் அந்தக்கால தியேட்டர் வாசனை என்பதே இது தானோ…
சிறு வயதில் தியேட்டருக்குள் நுழைந்து, சீட்டில் அமர்ந்த பின் அடுத்த கவலை, நமக்கு முன்னேயுள்ள இருக்கையில் யார் வந்து அமரப்போகிறார்கள் என்பது தான்? சமதளமான தரை கொண்ட அரங்கில் முன்னே அமர்பவர் கொஞ்சம் உயரமானவராக இருந்து விட்டால் கதை கந்தல். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் வரணும் என்று எதிர்பார்க்கும் மனசு.
ஆனாலும் மர்பி விதிப்படி எப்போதும் எனக்கு முன் சீட்டில் அமரும் நபர், தமிழ் நாட்டிலேயே மிக உயரமானவராக, 'என்ன மீறி நீ படத்த பாத்துடுவியா?' என்று கேட்பது போல் இருக்கும். ஒரு வேளை உயரம் குறைந்த நபர் என்று சந்தோஷப் பட்டால், அவர் ஏதோ மிலிடரியில் இருந்து லீவில் வந்து அட்டென்ஷன் சொன்னது போல் விறைப்பாக அமர்ந்திருப்பார். மொத்தத்தில், இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள இடுக்கு வழியாக தான் கழுத்து வலிக்க முழு படமும் பார்க்க வேண்டியிருக்கும்.
சென்னைவாசிகளான பலர் அந்த காலத்தில் லாரல் ஹார்டி, சார்லி சாப்ளின், ஜெர்ரி லூயிஸ், டார்ஜான், ஃபாண்டம் போன்ற படங்களை கண்டிப்பாக தங்கள் சிறுவயதில் சில்ட்ரன்ஸ் தியேட்டர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய கலைவாணர் அரங்கில் தான் பார்த்திருப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மிகக் குறைவான கட்டணத்தில் சிறுவர்களுக்கென்று இங்கு படங்கள் திரையிடப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினமன்று வெளியிடப்படும் படங்களுக்கு இலவச அனுமதி. அந்த நாளில் ‘குழந்தைகள் கும்பமேளா’ போல, வாலாஜா சாலையில் எங்கு பார்த்தாலும் சிறுவர்கள் கூட்டம் அலை மோதும்.
நியூ எல்பின்ஸ்டோன் தியேட்டரில் எப்போதுமே மலையாளத் திரைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படும். அதன் வாசலில் உள்ள பேனரில் ஸ்டாண்டர்டாக சத்யன், பிரேம் நசீர் அல்லது மது, இந்த மூன்று பேரில் யாரேனும் ஒருவர் மடித்த வேட்டியும் முண்டா பனியனும் அணிந்துகொண்டு கையில் ஒரு பீடியுடன் காட்சியளிப்பார். கேசினோ தியேட்டரில் ஆங்கிலப்படம் ரிலீஸ் மட்டும் தான். ஹட்டாரி, டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற வசூலைக் குவித்த படங்கள் இங்கு தான் வெளியானது. விதிவிலக்காக வெளியாகி வசூலை அள்ளிய சில தமிழ் படங்களில் ஒன்று எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை. இன்னொன்று கமல் நடித்த வாழ்வே மாயம்.
அண்ணாசாலையில் சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரில் பொதுவாக எப்போதுமே நடிகர் திலகம் படங்கள் மட்டுமே வெளியாகும். அதற்கு பிறகு அங்கு பிரபுவின் படங்கள் வெளியானது. வெலிங்டன் தியேட்டர் பக்தி படங்கள் ரிலீஸுக்கு பெயர் போனது. பாரகன், சித்ரா, கெயிட்டி மற்றும் பிளாசா தியேட்டர்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலவையாக தமிழ் திரைப்படங்கள் வெளியாகும்.
அலங்கார் தியேட்டரில்(பழைய குளோப்) ஆரம்ப காலத்தில் வெளியான 'தி ப்ரொட்டக்டர்' என்ற ஜாக்கிசான் படம் வசூலில் சக்கை போடு போட்டது. அதேபோல் ஆனந்த் தியேட்டரில் பலமுறை வெளியாகி வசூலை அள்ளிக் கொடுத்த புரூஸ்லீயின் 'என்டர் த டிராகன்' திரைப்படம் சென்னைவாசிகள் யாராலும் மறக்க முடியாத நிகழ்வு. சபையர் தியேட்டரில் பாலச்சந்தர் இயக்கி கமல் நடித்த தெலுங்கு படம் மரோ சரித்ரா; பின்னர் அதன் ஹிந்தி ரீமேக் ஏக் துஜே கேலியே வெளியாகி ஓடிக் கொண்டிருந்த கால கட்டங்களில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்து இந்த தியேட்டர் நிரம்பியது என்பதே உண்மை.
கணினிவழி முன்பதிவு வசதி, சொகுசான இருக்கைகள், குளுகுளு ஏசி, அகன்ற 70 mm வெள்ளித்திரை, ஸ்டீரியோ ஒலி அமைப்பு, நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் இடைவேளையில் மேற்கத்திய பாணியிலான கேன்டீன் வசதி கொண்ட இந்த தேவி திரைக் குழுமத்தின் வருகை தமிழகத்தில் தியேட்டர்களின் வடிவம் முற்றிலுமாக மாறுபட முக்கிய காரணமாக இருந்தது. தேவி பாரடைஸில் தொடர்ந்த ஹவுஸ்புல் காட்சிகளில் முதலில் சாதனை செய்தது எம்ஜிஆர் நடித்த ரிக்க்ஷாக்காரன், பிறகு அதை முறியடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த இரண்டு சாதனைகளையும் முறியடித்தது கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், கிட்டத்தட்ட 300 அரங்கு நிறைந்த காட்சிகள்.
மேற்குறிப்பிட்டவற்றில் பெரும்பாலான திரையரங்குகள் இப்போது கல்யாண மண்டபங்களாக, ஷாப்பிங் மால்களாக அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறி விட்டன.
'சார்பட்டா பரம்பரை' படத்தை வீட்டில் அமர்ந்தபடி அமேஸான் ஓடிடியில் பார்க்கும் போது, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி நம் இஷ்டப்படி இடைவேளை விடலாம். கபிலன் வேம்புலி கிளைமாக்ஸ் பதினோறு ரவுண்டு குத்துசண்டையை வீட்டில் நொறுக்குத் தீனியை கொரித்தபடி அவ்வப்போது பாஸ் செய்து முப்பது ரவுண்டுகளாக கூட மாற்றலாம்,
ஆனாலும் கைகளில் ரிமோட் ஏதும் இல்லாமல், முன் வரிசையில் வியர்வை நெடியுடன், இடைவேளையில் குட்டி சம்சா சாப்பிட்டபடி அடுத்து என்ன நடக்கும் என்று பிரமிப்பாக சித்ரா தியேட்டரில் பார்த்த தென்னக ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கரின் 'துணிவே துணை' தான் இன்றளவும் என் மனதில் நிற்கிறது.
-சசி
No comments:
Post a Comment