Sunday, March 26, 2023

கொல்லைப்புறம்

கொல்லைப்புறம் - சிறுகதை

Published:

Representational Image


“என்ன தாத்தா, இவ்ளோ பெரிய வீட்டுலே ரெண்டு பாத்ரூம் தான் கட்டியிருக்க.. ரெண்டும் ஆக்குபைட். எனக்கு அவசரமா டூ பாத்ரூம் வருது.” என்று அழுதபடி நின்ற என் ஐந்து வயது பேரன் கிரீஷ் குரல் கேட்டு ஈசிசேர் அரைத் தூக்கத்திலிருந்து எழுந்தேன். “கொஞ்சம் பொறுடா. அவசரத்துக்கு கொல்லப்பக்கமாவா போக முடியும்” என்று அவனைத் திட்டினாள் மருமகள் புனிதா. 

‘கொல்லைப்பக்கம்’ என்ற வார்த்தை டைம் மிஷின் போல சடாரென்று என்னை நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஜூலை வெய்யில் நாள் ஒன்றின் நினைவலைகளில் தள்ளியது.

அன்றைய தினம் நான் பணி புரியும் அடையாரில் உள்ள வங்கிக் கிளைக்குள் நுழையும் போதே சேமிப்புக் கணக்குப் பிரிவில் புதிதாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை கவனித்தேன். அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்திடும் சமயம் அக்கவுண்டன்ட் மகாதேவன் சொன்னார். “புதுசா டிரான்ஸ்ஃபர்ல வந்த பொண்ண சேவிங்ஸ் கவுண்டர்ல போட்டிருக்கேன். ஆபீஸ் ஆர்டர் டைப் பண்ணிடுப்பா.”

Representational Image


மணி எட்டு. வங்கி எட்டரைக்குத் தான் செயல்படத் துவங்கும். மீண்டும் அந்த பெண்ணை அங்கிருந்தே கவனித்தேன். ஒடிசலான உருவம். கருப்புக்கும் மாநிறத்துக்கும் இடையிலான நிறம். கொஞ்சம் பழையது தான் என்றாலும் பளிச்சென்ற அரக்கு நிறப்புடவை அணிந்திருந்தாள். நெற்றியில் சின்னதாக குங்குமப் பொட்டு. லேசாக விபூதி கீறல். கிளையில் சேரும் முதல் நாள் என்பதால் கோயிலுக்குப் போய் வந்திருக்கக் கூடும். பார்த்ததுமே அந்தப் பெண் வறுமையின் பிடியிலிருந்து தப்பித்து முன்னேற முயலும் ஒரு ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவள் என்று கணித்து விடலாம். 

கவுண்டரில் வரிசையாக அடுக்கியிருந்த லெட்ஜர்களில் ஒன்றை எடுத்து வெளியே பிதுங்கி நிற்கும் தாள்களை லெட்ஜர் கீ மூலம் சரி செய்து கொண்டிருந்தாள். எண்பதுகளில் வங்கிகளில் கம்ப்யூட்டர் கிடையாது. வெறும் பேனாவும் லெட்ஜரூம் தான்.  மொபல் ஃபோன் இல்லை. அவ்வளவு ஏன்?  எஸ்டிடி கூட இல்லை. ட்ரங்கால் மட்டும் தான். அருகில் சென்று “குட் மார்னிங்” என்றதும் கொஞ்சம் விழித்து பின் சுதாரித்து “வணக்கம் சார்” என்று கை கூப்பினாள்.

“நான் கோபிநாத். இந்தக் கிளையின் ஊழியர் சங்கப் பிரதிநிதி என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். “இந்த லெட்ஜர் சரி பண்ற வேலையெல்லாம் சப்ஸ்டாப் மாரிமுத்து கிட்ட சொன்னா செஞ்சிடுவான்” என்றேன்.

“பரவாயில்ல சார், நான் ஃப்ரீயா தானே இருக்கேன்” என்று புன்முறுவல் செய்தாள். 

“அப்புறம், அங்கயற்கண்ணி, நீங்க மதுரைப் பக்கமா?” 

Representational Image


“ஓ, பேர வெச்சி கெஸ் பண்ணீங்களா..நான் பக்கா மெட்ராஸ்.. வண்ணாரப்பேட்டை” என்று சொல்லி சிரித்தாள். 

“நீங்க மதியம் லஞ்சுக்கு மாடிக்கு வந்திடுங்க. நான், மாலா, ராமசுப்பு, கதிரவன் எல்லோரும் அங்க இருப்போம்” என்று சொல்ல “சரிங்க சார்” என்றாள்.

அங்கயற்கண்ணிக்கு முதல் போஸ்டிங் திருவண்ணாமலை தாண்டி ஒரு சிறிய குக்கிராமக் கிளை ஒன்றில். அங்கு கிளை நிர்வாகி மற்றும் பியூன் உட்பட மொத்தமே நான்கு பேர் தான். அங்கயற்கண்ணி குறித்து சங்கத்திலிருந்து ஏற்கனவே எனக்கு சில செய்திகள் சொல்லபட்டிருந்தது. அந்தக் கிளையில் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே அங்கயற்கண்ணி ஊழியர் சங்கத்திலிருந்து ஏதோ பிரச்னையால் விலகி விட்டதாகவும் எப்படியாவது மீண்டும் அவரை சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டிருந்தது. 

லஞ்ச் ரூமில் எங்களுக்கு முன்னே அங்கயற்கண்ணி வந்து அமர்ந்திருந்தாள். அவள் கொண்டு வந்திருந்த கீரை மசியலையும் காலிஃப்ளவர் ரோஸ்டையும் எங்களோடு ஷேர் செய்தாள். அது மட்டுமல்லாமல் நாங்கள் கொண்டு வந்திருந்த பதார்த்தங்களையம் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டாள். மெதுவாய் நான் பேச்சை ஆரம்பித்தேன். “நீங்க ஏன் இன்னும் யூனியன்ல மெம்பர் ஆகல”

“எதுக்காக?” திடமாக எதிர் கேள்வி வந்தது.

இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் சமாளித்தபடி “என்ன இப்படி சொல்லிட்டீங்க. ஒரு அவசரம் உதவின்னா நமக்காக குரல் கொடுக்க ஒரு அமைப்பு வேண்டாமா?”

“உதாரணத்துக்கு…”

“உதாரணத்துக்கா.. சரி, நம்ம கிளையிலே இருக்கிற பாத்ரூமுக்கு போனீங்களா. அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கு”

“போனேன். ஏதும் குறை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலயே”

“அப்ப நீங்க சரியாப் பாக்கல. அங்க முகம் பார்க்கிற கண்ணாடி உடைஞ்சிருக்கு. அப்புறம் கை கழுவ சோப்பு கிடையாது. தரையில ஒரு டைல்ஸ் உடைஞ்சு கிடக்குது..”

“அப்படியா.. இதைப் பற்றி மேனேஜர் கிட்ட பேசிப் பார்க்கலாமே”

“எதுக்கு, அவருக்குத் தெரியாதா என்ன. அவரும் தான் தினம் பாத்ரூம் போறாரு. அவர் கிட்ட சொல்லிப் பயன் இல்லை. இதுவே சங்கத்துல சொன்னா உடனே நடவடிக்கை வரும்.”

“இந்த சங்க நடவடிக்கை எல்லா இடத்திலேயும் பாரபட்சம் இல்லாம நடக்குமா?” 

இப்போது எனக்கு புரிந்து விட்டது. ஊழியர் சங்கத்துடன் அங்கயற்கண்ணிக்கான பிரச்சனை பழைய வங்கிக் கிளையில் தான் தொடங்கி இருக்கும் என்று. 

“உங்களுக்கும் யூனியனுக்கும் என்ன பிரச்னை” ஆர்வத்துடன் கேட்டாள் மாலா.

“கதை கொஞ்சம் பெருசா இருக்கும். பரவாயில்லையா”

“அவசரமே இல்ல. போஸ்ட் லஞ்ச் செஷனுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு”. வலிமையான ஊழியர் சங்கத்துடன் சண்டையிடும் அளவுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ராமசுப்புவுக்கும் ஆர்வம். 

Representational Image

ஒரு இளம் டைரக்டர் தன் முதல் படத்துக்கு தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் நேர்த்தியுடன் சொல்ல ஆரம்பித்தாள் அங்கயற்கண்ணி. 

வங்கியில் வேலை கிடைத்துவிட்டது என்றதும் அங்கயற்கண்ணி, அம்மா, தம்பி எல்லோருக்கும் சந்தோஷம் தலைகால் புரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் திருவண்ணாமலைக்கு போய் அந்த கிராமப்புற வங்கிக் கிளையில் பணிக்குச் சேர வேண்டும். திருவண்ணாமலை டவுனில் தங்கிக் கொண்டு அங்கிருந்து பஸ் பிடித்து ஒரு மணி நேரத்தில் கிளைக்குச் சென்று விடலாம் என்று ராமு மாமா சொல்லி இருந்தார். அப்பா இல்லாத குடும்பத்தை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்ற நினைப்பில் அதைப் பற்றியெல்லாம் அங்கயற்கண்ணி கவலைப்படவில்லை. சுளையாக ஆயிரம் ரூபாய் சம்பளம் வங்கியைத் தவிர வேறுயார் தருவார்கள். 

டவுன் பஸ் பிடித்து கிராமத்தில் இறங்கியபின் வங்கியைக் கண்டுபிடிக்க அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை.

“அதோ.. தூரத்துல பொட்டல் வெளியில நடுவால பனமரம் பக்கத்துல இருக்குதே, அதான்” என்று வழி காட்டினார் பெட்டிக்கடைக்காரர்.

“மொத்தமே பத்துக்கு பதினைந்து சதுர அடியில் ப்ராஞ்ச். மானேஜர், கேஷியர், பியூன் அப்புறம் நான்..அவ்வளவு தான்.” விவரித்தாள் அங்கயற்கண்ணி.

கொல்லைப்புறம் - சிறுகதை | My Vikatan

“கஸ்டமர் கூட்டம் எப்படியிருக்கும்?” மாலா கேட்டாள். 

“கூட்டமா.. ஒரே சமயத்துல மொத்தம் நாலு பேரு இருந்தா அதிகம். வேர்க்கடலை சாகுபடி சீசன்ல கூட்டம் அலை மோதும். கக்கத்திலே, சுருக்குப் பையில வச்சிருக்கிற சில்லறக்காசையும் பணத்தையும் கவுண்டர்ல அள்ளிக் கொட்டுவாங்க. எண்ணிப் பார்த்தா மொத்தம் அம்பது ரூபா கூட தேறாது. அதுல சிலசமயம் வேர்க்கடலை தோல் எல்லாம் கூட இருக்கும்”.

“அடக்கஷ்டமே!” அங்கலாய்த்தாள் மாலா. 

“ஆனா பாவம், வெள்ளந்தியான மனுஷங்க. நம்ம மேல அவ்வளவு மரியாதை நம்பிக்கை வச்சிருப்பாங்க.” கதையைத் தொடர்ந்தாள் அங்கயற்கண்ணி.

முதல் நாள் பணியில் இரண்டு மணி நேரம் முடிந்ததும் கேஷியரிடம் “பாத்ரூம் போகணும். டாய்லெட் எங்க இருக்கு” என்று கேட்க அவர் பியூன் சந்திரனிடம் “சந்திரா.. இவங்கள கொல்லப்பக்கம் கூட்டிட்டு போ” என்றார்.

“ஒன் பாத்ரூமா.. டூவா” தலையைக் கூட உயர்த்தாமல் வவுச்சர்களில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்தபடி சந்திரன் கேட்டான்.

இதெல்லாம் எதுக்கு என்ற கூச்சத்துடன் ‘ஒன் பாத்ரூம் தான்’ என்று பதில் சொன்னாள் அங்கயற்கண்ணி.

வங்கிக்குப் பின்புறமாக அங்கயற்கண்ணியை வெளியே அழைத்துச் சென்ற சந்திரன் “அதோ அங்கிட்டு தூர ரெட்டப் பனமரம் தெரியுது இல்லையா. அதுக்கு பக்கத்துல கொஞ்சம் புதர் மண்டிக் கிடக்குதில்ல, அதுக்கு பின்னாடி இருந்திட்டு வாங்க. நான் இங்கன தான் இருப்பேன். அங்கிட்டு யாரும் வராம பாத்துக்கிறேன். பயப்படாம போங்க” என்றான். 

கதை கேட்டுக் கொண்டிருந்த மாலா “அய்யய்யோ” என்றாள்.

“இதே வார்த்தையைத் தான் நானும் அன்றைக்கு சொன்னேன்” அதிர்ச்சியில் உறைந்திருந்த எங்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் கதைக்குத் திரும்பினாள் அங்கயற்கண்ணி. 

Representational Image


“இங்க அப்படித்தாம்மா. பாத்ரூம் வசதி எல்லாம் கிடையாது. ரெண்டுக்குன்னா கையில ஒரு சொம்புல தண்ணி எடுத்துக்க வேண்டியது தான். அதுக்கு, அதா, அந்தப் பக்கத்துல கருவேல மரம் கூட்டமா இருக்குல்ல. அங்கிட்டு போக வேண்டியது தான்” 

அந்த நரக நிமிடங்களில் இருந்து மீண்டு கிளைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக ஒரு ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பிப் போய் விடலாம் என்று முடிவெடுத்தாள். வெள்ளைத்தாளை எடுத்து எழுதத் தொடங்கும் போது அங்கயற்கண்ணிக்கு அதில் சினிமாவில் வருவது போல் அவளுடைய அம்மா தம்பி இருவர் முகமும் தெரிந்தது. வேறுவழியின்றி அதைக் கிழித்துப் போட்டுவிட்டு எதிரில் நின்றிருந்த பாட்டியின் பாஸ்புக்கில் பதிவு செய்யத் தொடங்கினாள். 

“அதுக்கப்புறம் எப்படி இதை மேனேஜ் செஞ்சீங்க” இப்போது அதிர்ந்து போய் கேட்டது நான்.

“ஒண்ணும் செய்யல. எல்லா கஷ்டமும் அனுபவிக்குற வரைக்கும் தான். அது கொஞ்ச நாள்ல பழக்கமாயிடுச்சு. அங்க இருக்கிற சனங்க எல்லாம் இத ஒரு கஷ்டமாகவே நினைக்காம சாதாரணமாகத்தானே எடுத்துக்கிறாங்க. அது பழகினதும் நம் மனசும் அங்க இருக்கிறதுலயே சுத்தமான, வசதியான இடத்தை தேடுறதப் பற்றி மட்டுமே கவலைப்படும்.”

என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை இந்த பெண்ணுக்கு. ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“மேனேஜருக்கும் இதே நிலைமை தானா?”

‘மேனேஜரா, அவர் பாடு இன்னும் திண்டாட்டம்” என்று சொல்லிச் சிரித்தாள் அங்கயற்கண்ணி. “மானேஜர் சொம்பு எடுத்துட்டு கொல்லப்பக்கம் போனாலே சுத்துவட்டாரத்துல எட்டுபட்டிக்கும் விஷயம் தெரிஞ்சிடும். எவனுக்கெல்லாம் லோன் சாங்ஷன் ஆகலயோ அவனெல்லாம் சொம்பு எடுத்துகிட்டு ஸ்பாட்டுல வந்து அவர சுத்தி உக்காந்துடுவாங்க. கிட்டத்தட்ட ஒரு லோன் மேளா கஸ்டமர் மீட்டிங் அங்கேயே நடந்து முடிஞ்சிடும்”

ராமசுப்பு அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார். 

“என்ன ஆச்சு சுப்பு சார்” என்று மாலா கேட்க

“ஒண்ணும் இல்ல.. நம்ம மானேஜரை அந்த இடத்துல நினைச்சுப் பாத்துக்கிட்டேன்” என்றார்.

“நீங்க இந்த விஷயத்த யூனியன், ஹெட் ஆஃபீஸ் இங்கெல்லாம் எடுத்துட்டு போகலயா” கேட்டது நான். 

கொல்லைப்புறம் - சிறுகதை | My Vikatan

“கோபி நாத் சார். பாய்ண்ட்டுக்கு வந்துட்டீங்க. இத்தனை காலமா இது அவங்களுக்கெல்லாம் தெரியாதுன்னா சொல்றீங்க.. இது எப்படின்னா சில கிராமத்துல கரண்ட் வசதி, ஆஸ்பிட்டல். ரோடு வசதி இதெல்லாம் இருக்காது. 

ஏன்னு பாத்தா அங்க மொத்தமே நூறு பேர் கூட இருக்க மாட்டாங்க. அரசியல்வாதிகளைப் பொறுத்த மட்டும் அது நூறு உயிர் இல்ல. நூறு வோட்டு. இதுக்காக வேண்டி இவ்வளவு செலவு அங்க தேவையான்னு யோசிப்பாங்க. அதைப் போலத் தான் எங்க கிளையும். பெருசா லாபம் வராத இடம். கஸ்டமர்ஸ் எல்லாம் சாதாரண சனங்க. கூடுதலா செலவு செய்வதை நிர்வாகம் தவிர்க்கும். ரெண்டே உறுப்பினர்களுக்காக குரல் கொடுக்க சங்கமும் தயங்கும். இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் யாருக்கு போஸ்டிங் போடுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? என்னைப் போல புதுசா வேலைக்கு சேர்றவங்க. அப்புறம் பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பர்.” 

எனக்கு இப்போது விவரம் புரிந்ததால் அங்கயற்கண்ணி முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. 

சாப்பிடும் போது கேட்க முடியாத ரசாபாசமான கதையென்றாலும் அந்த உணர்வு எங்களுக்கு உறைக்காமல் அதிர்ச்சியும் பச்சாதாபமும் தான் மேலோங்கி நின்றது. எல்லோரும் கதை சுவாரசியத்தில் சாப்பிட்ட கை கழுவுவதைக் கூட மறந்து விட்டோம். எல்லோரும் எழுந்தபோது மாலா அந்தக் கேள்வியைக் கேட்டாள் “அப்புறம் உங்க ப்ராஞ்ச்ல கடைசி வரை டாய்லெட் வசதியே வரலயா?”

“வந்ததே.. அது வேற ஒரு கதை..” என்று புன்முறுவல் பூத்தாள் அங்கயற்கண்ணி. 

“உன் கைவசம் நிறைய கதை இருக்கும் போல. இங்கேயே இரு. அதையும் கேட்டுடலாம். சட்டுனு கையக் கழுவிட்டு ஓடியாறோம்” என்று கிளம்பினார்கள் மாலாவும் ராமசுப்புவும். கதிரவன் அங்கிருந்த தினசரி பேப்பரிலேயே கையைத் துடைத்துக் கொண்டான்.

இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கயற்கண்ணியிடம் “உங்களுக்கு யூனியன் கிட்ட இருக்கிற கோபம் புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும்.” .என்று ஆரம்பிக்க

“பரவாயில்ல கோபிநாத் சார். நான் யூனியன்ல ஜாயின் பண்ணக் கையெழுத்து போட்டுத்தரேன். அது எனக்கு ஒரு பிரச்னையே இல்லை. அப்ப இருந்த கோபத்தில வெளியேறினேன். அவ்வளவு தான்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் அங்கயற்கண்ணி. அவள் திரும்பி வருவதற்குள் லஞ்ச் ரூமில் எல்லோரும் ஆஜர். 

இடைவேளைக்கு பிறகு வரும் சினிமாக் கதையின் தோரணையுடன் அங்கயற்கண்ணி தொடர்ந்தாள்.

கொல்லைப்புறம் - சிறுகதை | My Vikatan

இப்படியே நாளொரு புதரும் பொழுதொரு கருவேல மரமென்று எங்கள் வாழ்க்கைப் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் வங்கிக் கிளைக்கு உயர் அதிகாரி ஒருவர் ரீஜினல் ஆபிஸிலிருந்து ஆய்வுக்கு வருவதாகச் செய்தி வந்தது. அங்கயற்கண்ணியும் மானேஜரும் சேர்ந்து டாய்லெட் வசதி வேண்டி ஒரு விண்ணப்பம் தயார் செய்தார்கள். அவர் திரும்பிச் செல்லும் சமயம் அவரிடம் கொடுக்கலாம் என்று முடிவானது. 

அதிகாரியின் டிரைவர், சந்திரனின் உறவுக்காரப் பையன் என்பதால் முன்கூட்டியே விவரங்கள் கிடைத்தது. கடைசியில் ஒன்பது மணிக்கு வரவேண்டியவர் கார் கோளாறு ஏற்படவே தாமதமாக வந்து சேர்ந்தார். காரை டிரைவர் பழுது பார்த்துவிட்டுத் திரும்ப இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிடலாம் என்பதால் அதிகாரிக்கு மதிய உணவு கிளையிலேயே ஏற்பாடு செய்யுமாறு எங்களைக் கேட்டுக்கொண்டான்.

அதிகாரி நல்ல அசைவப் பிரியர் என்பதால் சந்திரனிடம் மானேஜர் சொல்லி பலமான காரசாரமான சாப்பாடு தயாரானது. “நான் பாத்துக்கறேன் சார். எல்லாம் பிளான் படியே நடக்கும்” என்றான் பியூன் சந்திரன்.

சரியாக மாலை ஆறு மணிக்கு ஆய்வை முடித்த அதிகாரி வயிறைத் தடவியபடி “ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு” என்று கேட்க கேஷியர், “சந்திரா.. சாரை கொல்லப்பக்கம் கூட்டிட்டு போ” என்றார். சந்திரன் சொம்புடன் “வாங்க சார்” என்று வெளியே அவருக்கு ஸ்பாட்டைக் காட்ட ‘வாட் நான்சென்ஸ்’ என்று அதிர்ந்தாராம். 

சந்திரனுக்கு உயர் அதிகாரி பயமெல்லாம் தெரியவில்லை. “சார், இங்க பக்கமா டாய்லெட் வசதியெல்லாம் இல்ல. நாலு மைல் தாண்டி பண்ணையார் வீடு இருக்கு. என் சைக்கிள்ல டபுல்ஸ் போலாம். ஒரு மணி நேரம் ஆகும் சார். அதுவரத் தாங்குமா” என்று கேட்டிருக்கிறான். ஆடிப்போயிருக்கிறார் அதிகாரி. பாவம், வேறு வழியில்லாமல் ஒரு க்ளீன் ஸ்பாட் சந்திரன் ஏற்பாடு செய்து தர, அவன் காவலுடன் வாழ்வில் முதல்முறையாக வானம் பார்க்க தன் ஜோலியை முடித்தார். 

Representational Image


“என்னம்மா.. ஆய்வு செய்ய வந்த அதிகாரிய ஆய் போக வெச்சிட்டீங்களே” என்று சொல்லியபடி அவருக்கு மூன்றுமுறை சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஓடினான் சந்திரன். 

“நல்ல்வேளை, ஊர் சனங்களுக்கு தெரிஞ்சிருந்தா உயர் அதிகாரியோட நேரடியா லோன் விஷயம் பேசலாம்னு ஸ்பாட்டுல குவிஞ்சிருப்பாங்க” என்று கதிரவன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.

“இதனால அவருக்கு உங்க மேல கோபம் ஏதாவது.”. ராமசுப்பு கேட்க, 

“இதுல எங்க தப்பு என்ன இருக்கு? கோபம் இருந்தா, போகும்போது சந்திரனுக்கு அம்பது ரூபா கொடுப்பாரா என்ன..”

“வாட்டர் சர்விஸ் சார்ஜ்” என்றான் கதிரவன். 

“அப்புறமா ப்ராஞ்சுக்கு ஏதாவது மெமோ வந்திருக்குமே..”

“ம்ம்.. வந்தது.. மெமோ இல்ல. டாய்லட் கட்ட சாங்ஷன் லெட்டர்” என்று அங்கயற்கண்ணி கதையை முடிக்க. 

“எல்லாம் சரி. அந்த லஞ்ச் பிளான் யாரோடது? கண்சிமிட்டியபடி மாலா கேட்டதற்கு பதில் கூறாமல் சிரித்தாள் அங்கயற்கண்ணி.

மாலை அலுவல் முடிந்தபின் அங்கயற்கண்ணியிடம் “நான் ரெண்டு நாள் லீவு. ஆபிஸ் வரமாட்டேன்..” என்றதும் 

“சார். நான் வேணும்னா நம்ம பாத்ரூம், சோப்பு சீப்பு கண்ணாடி விஷயமா மானேஜர் கிட்ட பேசவா” 

“தாராளமா பேசுங்க. ஆனா அது சோப்பு சீப்பு கண்ணாடியில்ல..  சோப்பு, டைல்ஸ், கண்ணாடி” என்றேன் சிரித்தபடி. 

இரண்டு நாட்கள் லீவுக்குப் பிறகு பணிக்கு திரும்பிய அன்று பாத்ரூமுக்குள் சென்றபோது அங்கு புது கண்ணாடி, ஷெல்ஃபில் டெட்டால் சோப்பு.. தரையில் உடைந்திருந்த டைல்ஸ் அடையாளமேயில்லை.

ஆனால் எங்கள் சங்கத்துக்குக் கிடைத்த, மனித நேயம், ஆளுமை, செயல்திறன், மதிநுட்பம் அனைத்தும் பெற்ற இளம் பிரதிநிதியின் அடையாளம் தெரிந்தது. 

எங்கள் வீட்டு பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பேரன் கிரீஷ் தபதபவென்று உள்ளே ஓடினான். நான் ஈசிசேரில் மீண்டும் சாய்ந்தேன்.

Friday, March 17, 2023

இரட்டைக்கோபுரம்

இரட்டைக்கோபுரம் - சிறுகதை             சசி  

சிறுகதை

நியூ டெல்லி மயூர் விஹாரிலிருந்து உபரில் இந்திரா காந்தி ஏர்போர்ட். அங்கிருந்து காலை ஏழரை மணி விஸ்டாரா ப்ளைட்டில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஏர்போர்ட். டெல்லியிலிருந்து ஹைதராபாத் வந்து சேர்ந்தபோது மணி பத்து. `சட்டென்று மாறுது வானிலை' என்று பாட முடியாத அளவுக்கு, லேசான சில்லென்ற செப்டம்பர் மாத வெயில் கிட்டத்தட்ட இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரியே இருந்தது.

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் கார்த்திக் சுந்தரம் என்ற என் பெயர் எழுதிய பலகையைத் தாங்கி நின்றுகொண்டிருந்தான் அனுமந்து, என் நண்பர் பிரகாஷ் ராவ்காரு அனுப்பி வைத்த டிரைவர். ஊன்றுகோல் கட்டையின் உதவியுடன் வரும் என்னைப் பார்த்ததும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவன் அவசர அவசரமாக என்னிடம் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டான்.

இரட்டைக்கோபுரம் - சிறுகதை

எனக்கு நடப்பதற்குச் சிரமம் என்று உணர்ந்தது போல் ``இங்கேதான், பக்கத்தில்தான்’’ என்று சொல்லிக்கொண்டே அவன் கொண்டு வந்திருந்த பழுப்பு நிற மாருதி செலரியோ காருக்குள் என்னை அமர்த்தினான். பிரகாஷ் ராவ் எனக்காக ஹிமாயத் நகர் தாஜ்மஹால் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்கெனவே ரூம் புக் செய்திருந்தார். என்னுடைய திட்டம் முதலில் அன்றைய தினம் இரவு பஞ்சாரா ஹில்ஸில் ஷர்மாவின் பார்ட்டியில் கலந்துகொள்வது. அதற்கு அடுத்த நாள் லும்பினி பார்க், சார்மினார். நேரமிருந்தால் ராமோஜி பிலிம் சிட்டி பார்க்கச் செல்வது. அப்புறம் முக்கியமாக பாவார்ச்சியில் பிரியாணி. ஹிமாயத் நகரில் அறை எடுத்துக்கொண்டால் லும்பினி பார்க்கும் சார்மினாரும் மிக அருகில் என்பதால் ஆட்டோ அல்லது உபர் பிடித்துச் சென்றுவிடலாம் என்று பிரகாஷ் ராவ் சொல்லியிருந்தார்.

வந்து சேர்ந்த அன்று காரை ஹோட்டலிலேயே டிரைவர் அனுமந்து விட்டுச் செல்வான் என்றும், அன்று மாலை அவனது குடும்ப நிகழ்ச்சி ஒன்று இருப்பதால் அவனால் வரமுடியாது, மறுநாள் என்னை மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வருவான் என்றும் பிரகாஷ் ராவ் உறுதியளித்தார். ``மாருதி செலரியோ ஆட்டோமேட்டிக் மாடல் என்பதால் ஓட்ட சிரமம் இருக்காதல்லவா?’’ என்று போனில் கேட்டபோது ``கிளட்ச் பெடல் இல்லாத கார் ஓட்டுவது சுலபமே’’ என்றேன். ``அப்படியானால் பஞ்சாரா ஹில்ஸுக்கு கூகுள் மேப் உதவியுடன் காரில் விரைவாகச் சென்று விடமுடியும்’’ என்று நம்பிக்கையளித்தார். 

டெல்லிக்கும் ஹைதராபாத்துக்கும் இரண்டு முக்கியமான ஒற்றுமைகளைப் பட்டென்று கூறிவிடலாம். முதலாவது, ஏற்கெனவே சொன்னதுபோல் வானிலை. இரண்டாவது, வாகன ஓட்டிகளின் மனநிலை. அசிரத்தை மற்றும் விதிமீறல் விளைவான அதீதமான டிராபிக். இரண்டு இடங்களிலும் சிக்னல்களையும் சாலைவிதிகளையும் பின்பற்றுபவர்கள் சொற்பம். மூன்றாவதாக, ஹைதராபாத்தில் குப்பை கொட்ட தெலுங்கு தேவையில்லை. டெல்லி இந்தியே தாராளம். 

முக்கியமான வேற்றுமை என்ன என்று அன்று மாலை ஓட்டலிலிருந்து கிளம்பி பஞ்சாரா ஹில்ஸுக்கு காரில் கூகுள் மேப் உதவியுடன் செல்லும்போது புரிந்தது. பரப்பளவு. டெல்லியில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கு குறைந்தபட்ச தூரம் இருபது கிலோ மீட்டராவது இருக்கும். ஹைதராபாத்தில் அதிகபட்சமே பத்து கிலோமீட்டர்தான் போல. 

சிரமமின்றி அரை மணி நேரத்துக்குள் பஞ்சாரா ஹில்ஸ் வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் ஷர்மாவின் வீட்டைக் கண்டுபிடிக்க இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே இங்கே என்று சுற்றி அலைந்து கடைசியில் ஒரு பான் கடைக்காரனிடம் வழி கேட்கவேண்டி காரிலிருந்து இறங்கி ஊன்றுகோல் கட்டையை எடுக்க, பட்டென்று அவன் ‘நானே உங்களுக்கு வழி காட்டுகிறேன்’ என்று காரில் ஏறிக்கொண்டான். ஷர்மா வீட்டருகே வந்ததும் அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று பர்ஸை எடுத்தபோது ஆச்சரியமாக ``நை சாப்’’ என்று மறுத்து விலகினான். ஊன்றுகோல் கட்டையின் பலன்.

வானளாவிய இரும்பு கிரில் கேட் திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தபோது அந்த வீட்டின் முன்புறம் இருந்த விசாலமான பார்க்கிங் ஏரியா பிரமிப்பூட்டியது. இரண்டு விலையுயர்ந்த சொகுசுக் கார்களின் நடுவில் இருந்த இடைவெளியில் நான் ஓட்டி வந்த குட்டி மாருதியைக் கூச்சத்துடன் நிறுத்தினேன்.

நான் இன்று இங்கு சந்திக்க வந்த ஷர்மா அவ்வளவு எளிதாக யாரும் அணுக முடியாத, அமெரிக்க டெக் கம்பெனிகளின் புராஜெக்ட் பவர் சென்டரில் `விக்ஸ்' என்று அழைக்கப்படும் வினய் குமார் ஷர்மா. புராஜெக்ட் என்ற வார்த்தைக்குப் பக்கத்தில் எந்த ஆங்கில வார்த்தை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். கோஆர்டினேட்டர், கன்சல்டன்ட், டிசைனர், பிளானர், எக்ஸ்பர்ட் என்று. எல்லாமே தாராளமாகப் பொருந்தும் அவனுக்கு. 

டெல்லியில் முன்பு என்னிடம் பணிபுரிந்த கவிதா ரெட்டி இப்போது அவனுடைய எச்ஆர் டீமில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறாள். இன்று நடக்கவிருக்கும் பார்ட்டி முடிந்த பிறகு ஷர்மாவின் பத்து நிமிட அப்பாயின்மென்ட் வாங்கித் தருவதாக உறுதி அளித்ததோடு, ஷர்மாவுக்கு என்னுடைய சுயவிவர நகல் ஒன்றைக் கொடுத்திருப்பதாகவும் கூறினாள். பார்ட்டிக்கு என் பெயரில் ஒரு அழைப்பிதழையும் இ-மெயிலில் ஏற்கெனவே அனுப்பியிருந்தாள். ஷர்மாவிடம் பேசி அவனை எப்படியாவது இம்ப்ரஸ் செய்துவிட்டால் அடுத்த இரண்டு வருடத்திற்கு அமெரிக்காவில் ஒன்றிரண்டு புராஜக்ட் கான்ட்ராக்ட்ஸ் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்தேன். 

டி.எஃப்.சி என்று அழைக்கப்படும் என் நிறுவனத்தில் நாங்கள் பிரதானமாகச் செய்வது புதிதாக அமைக்கப்படும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு மென்பொருள், வன்பொருள், நெட்வொர்க்கிங் சம்பந்தமான மூன்றடுக்கு ஆலோசனை வழங்குதல்.

இரட்டைக்கோபுரம் - சிறுகதை

பார்ட்டி நடக்கும் ஹாலுக்குச் செல்லுமுன் இ-மெயில் அழைப்பிதழ் ஸ்கேன் செய்யப்பட்டது. ஓகே என்றதும் ஊன்றுகோல் கட்டையுடன் லிப்டை நெருங்கிய என்னை ஒரு பணியாள் லிப்ட்டில் மூன்றாவது தளம் அழைத்துச்சென்று பார்ட்டி ஹாலின் கதவருகே விட்டான். கதவு திறந்தபோது நான் கண்டது முற்றிலும் வேறு ஒரு உலகம். அந்த ஓவல் வடிவ ஹால் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒரு ஐந்து நட்சத்திர விருந்து மண்டபம்போல ஜொலித்தது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆடம்பரம். யாராவது தெரிந்த நபர்கள் இருக்கிறார்களா என்று கண்கள் பதைபதைப்புடன் தேடியது. யாரும் தென்படாத அந்தத் திகைப்பு நொடிகளில், மின்னல் கீற்றாய் கவிதா ரெட்டி கண்ணில்படவே, நின்றிருந்த என் இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. கவிதா சம்பிரதாயமாக என்னை ஷர்மாவிடம் அறிமுகப்படுத்தினாள். ``ஹாய் ஷர்மாஜி, இது கார்த்திக், ப்ரம் டி.எஃப்.சி... ஏற்கெனவே சொல்லியிருந்தேனே...’’

``யா... ஐ ரிமம்பர்’’ என்று சொல்லிவிட்டு, ``கேரி ஆன் கைஸ்’’ என்று கட்டைவிரலை உயர்த்திக்காட்டி நகர்ந்தான் ஷர்மா.

பார்ட்டி ஹாலில் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி, வெளிநாட்டு ரம் போன்ற விலையுயர்ந்த சரக்குகள் சரிந்து கண்ணாடிக் கோப்பைகளில் வழிந்துகொண்டிருந்தன. ஆங்காங்கே சீருடை சிப்பந்திகள் ட்ரேக்களுடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ட்ரேக்களில் தந்தூரில் பொரித்த கோழிக்கால்கள், குச்சிகளில் கோக்கப்பட்ட சில்லி, ஹரியாலி இறைச்சித்துண்டுகள், கபாப் செய்த பனீர்க் கட்டிகள், நெய்யில் வறுத்து மிளகுப்பொடி தூவிய முந்திரி போன்ற ஸ்டார்டர்ஸ் வகைகள் மற்றும் காய்கறி சாலட். ஹாலின் மறுபுறம் வரிசையாக மேசைகளில் பரத்தி வைக்கப்பட்ட விதவிதமான உணவு வகைகள்.

எங்கு நோக்கினும் இந்தியில் கியா கியா என்று செருமல்களும், ஹை ஹை என்ற கணைப்புகளும் நிறைந்திருந்தது.

சர்தார்ஜிகளும், வட இந்தியர்களும், கொஞ்சமாக ஆந்திராக்காரர்களும் என்று நூற்றுக்கும் மேலான விருந்தினர்கள் ஹால் முழுக்க நிறைந்திருந்தார்கள். மருந்துக்கென்று தமிழ் பேசும் நல்லுலகிலிருந்து சிலர். 

பெரும்பாலான விருந்தினர்கள் அமெரிக்கக் கனவில் மிதந்தபடி கோப்பைகளுடன் தள்ளாடிக்கொண்டிருக்கும் முப்பது வயதிற்குட்பட்ட டெக்னாலஜி உலகைச் சேர்ந்த யுவன், யுவதிகள். இவர்களது இன்றைய உரையாடல்கள் பெரும்பாலும் தாங்கள் விரும்பும் மதுவகைகளைப் பற்றிய அறிவாற்றலை வெளிப்படுத்திக்கொண்டும் அமெரிக்காவைச் சென்றடையத் துடிக்கும் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதாகவுமே அமைந்திருந்தது.

``தோஸ்த், மைனே ஜாக் டேனியல் ஸ்காட்ச் லியா... பகோத் கூப்.’’ 

``ஹரே... தேரா யு.எஸ் விசா தயார் ஓகயா க்யா...’’

``பீரு லேதா...’’ ``சாலா அண்டு பாட்டுலோ உண்ணாயி... அக்கட பார் கவுன்டர்லோ அடுக்கண்டி...’’ 

``மங்கி ஷோல்டர் விஸ்கி இஸ் ஆசம் மேன்...’’  

``கைஸ்... க்ளின்பிடிச் 18 அவைலபில் இன் பார் கவுன்டர். ஆஸ்க் ஃபார் இட்... யூ மஸ்ட் ட்ரை இட் ஆன் த ராக்ஸ்.’’

``நெக்ஸ்ட் வீக் ஐயாம் லீவிங் ஃபார் கலிஃபோர்னியா மேன்.’’

கவிதா ரெட்டி ஒரு சிப்பந்தியை அழைத்து ஸ்காட்ச் கொண்ட ஒரு கண்ணாடிக் கோப்பையைப் பெற்றுத் தர, மறுத்தேன். ``வேண்டாம் கவிதா, இங்கு நான் செல்ஃப் டிரைவிங்கில் வந்தேன்.’’ ``ஒரே ஒரு ஸ்மால்’’ என்று மீண்டும் அவள் வற்புறுத்த ``கவிதா, உனக்குத்தான் தெரியுமே, என்னால் ஒரு ஸ்மாலுடன் நிறுத்த முடியாது என்று. அப்புறம் பழக்கம் இல்லாத ஊரில், ஹோட்டல் திரும்பிப்போய்ச் சேர்வது கஷ்டமாகிவிடும்’’ என்றேன். 

``ஓகே, பட் பி கம்பர்ட்டபிள்’’ என்று சிரித்தபடி நகர்ந்தாள்.

இப்படிப்பட்ட பார்ட்டிகளில் யாராவது குடிக்கும் பழக்கம் இல்லை என்று அடம் பிடித்தால் `ஜஸ்ட் லிட்டில்’ என்று தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் `நான் ஒரு மொடாக் குடியன். குறிப்பிட்ட ஏதோ காரணத்திற்காக இன்று குடிக்கவில்லை' என்று சொன்னால் ஜென்டிலாக விலகிவிடுவார்கள். 

திடீரென்று மேடையில் நின்றபடி ஷர்மா ``கைஸ், ப்ளீஸ் அசெம்பிள் ஹியர்’’ என்றழைக்க, மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் எல்லோரும் குடிப்பதை, சாப்பிடுவதை, அரட்டையடிப்பதை நிறுத்திவிட்டு அங்கு ஒரே நிமிடத்தில் கூடினார்கள். அங்கு இருந்த அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் ஷர்மாவின் தயவை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று புரிந்தது, நான் உட்பட. 

போக்கஸ் லைட் ஷர்மாவை கவர் செய்ய, அவன் தலையைச் சுற்றி இப்போது ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. பின்னணி இசை அதிகரிக்க, மேடையில் சீருடையணிந்த சிப்பந்திகள் ஒரு துணியால் மூடப்பட்ட ட்ராலி ஒன்றை இழுத்து வந்தனர். ட்ராலியின் துணி விலக்கப்பட்டதும் ``ஓ மை குட்னஸ்... மார்வலஸ், பியூட்டிபுல்’’ என்ற பிரமிப்பைப் பிரதிபலிக்கும் வார்த்தைகள் ஹால் முழுவதும் ஒலித்தன. 

இரட்டைக்கோபுரம் - சிறுகதை

தத்ரூபமாக ஆறடி உயரத்தில் ட்வின் டவர்ஸ் வடிவில் கேக். சின்ன சைஸில் ஒரிஜினல் நியூயார்க் இரட்டைக்கோபுர கேக் அனைவரையும் மிரள வைத்தது. 

``சரி, இன்று இங்கு இந்த இரட்டைக்கோபுர கேக் ஏன்? பதில் சொல்பவர் போகும்போது ஒரு ஜானிவாக்கர் புளூ லேபிள் எடுத்துச் செல்லலாம்’’ என்றான் ஷர்மா. குசுகுசுவென்ற பேச்சுக்களுக்கிடையே ஒரு சர்தார்ஜி இளைஞன் ``இன்று செப்டம்பர் பத்து... நாளைக்குப் பதினொன்று. இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடந்து நாளையோடு இருபது வருடங்கள்.’’

ஷர்மா கடகடவென்று சிரித்து, ``இங்கு இது ஏன் என்று கேட்டேன். எனிவே, கிட்டத்தட்ட உன் பதில் பாதி சரி... உனக்கு ஜானிவாக்கர் பிளாக் லேபிள் கிடைக்கும்’’ என்றான். எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

``ஓகே, ஐ கெஸ் நோ அதர் டேக்கர்ஸ்’’ என்று சொல்லி சில விநாடிகள் நிறுத்தியபின் ``நானே சொல்கிறேன்’’ என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் அமெரிக்க உச்சரிப்பில் ஆரம்பித்தான். 

``சரியாக இருபது வருடங்களுக்கு முன். நியூயார்க் ட்வின் டவர்ஸ் எதிர்வசமாக இருந்த ஒரு கட்டடத்தில் என் அலுவலகம். இளவயதிலேயே டெக்னிக்கல் அட்வைசர் பதவி என்பதால் ஒன்பதாவது தளத்தில் தனியறை. வலதுபுறம் முழுக்கக் கண்ணாடியாலான சுவர். அங்கிருந்து அருகில் தெரியும் இரட்டைக் கோபுரங்கள் என் அறையை ஒரு வால் பேப்பர் போல் அலங்கரிக்கும். அன்று என் பிறந்த தினம். எப்படிக் கொண்டாடுவது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தபோது அது நடந்தது. 

திடீரென்று முதல் டவரின் மத்தியில் தீப்பிழம்பு. ஏதோ விபரீதம் என்று பிறகுதான் புரிந்தது. சினிமாவில்கூடப் பார்க்க முடியாத காட்சிகள் வெளியே தொடர்ந்துகொண்டிருந்தன. அத்தனையும் என் அறையில் அமர்ந்தபடியே காண முடிந்தது. சிறிது நேரத்தில் இரண்டாவது டவர் மீது விமானம் மோதும் காட்சி... பிறகு இரண்டு டவர்களும் சீட்டுக்கட்டுகள்போல இடிந்து விழுந்த நிமிடங்கள். இரண்டுமணி நேரம் விறுவிறுப்பான ஒரு ஆங்கிலத் திரைப்படத்துக்கு நிகரான சம்பவங்கள். இதையெல்லாம் பலர் டெலிவிஷனில் பிறகு பார்த்திருப்பார்கள். அன்று எனக்குக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு. 

ஓ மை காட்... அதற்குப் பிறகு நான் எத்தனையோ பிறந்த நாள்களை பயர் ஒர்க்ஸ் எல்லாம் நடத்திக் கொண்டாடியிருக்கிறேன். ஆனால் அன்று என் பிறந்தநாளில் நடந்த அந்த வாண வேடிக்கையை என்னால் என்றும் மறக்க முடியாது’’ என்று சொல்லி இந்தச் சமயத்தில் ஷர்மா ட்வின் டவர்ஸ் கேக்கின் கீழிருந்த ஸ்விட்ச் ஒன்றைத் தட்டினான். ஹால் விளக்குகள் அணைந்து இரட்டைக்கோபுர கேக் மையப்பகுதியில் தீப்பிழம்பு போல் ஜொலித்தபடி மெதுவாகச் சரிந்து விழுந்தது. 

ஹாலில் கைத்தட்டல்கள், `ஹேப்பி பர்த்டே' ஆரவாரம் ஒலிக்க, பலரும் ஷர்மாஜி ``யு ஆர் சோ லக்கி’’ என்று கூவினர். ``காணக் கிடைக்காத அரிதான நிகழ்ச்சியை சினிமாபோல் பார்த்திருக்கிறீர்கள், அதுவும் உங்கள் பிறந்த நாள் அன்று...’’ என்று ஒரு அரும்பு மீசை சொன்னான். இந்த ஜென் இசட் பையன்கள் பொதுவாக வயதானவர்களைக் கண்டால் அலுப்புடன் ``திஸ் கை இஸ் எ இரிட்டேட்டிங் பூமர்’’ என்பார்கள். அவரே பவர் சென்டரிலோ, பெரிய பதவியிலோ இருந்தால் ``ஹீ இஸ் ஆஸம்... அன்பிலிவபில்.’’

பழைய பூமர் ஜெனரேஷன் தொடங்கி இன்றைய ஜென் இசட் வரை சம்ச்சா, பட்டரிங் என்று வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படும் ஜால்ரா போடுவது கார்ப்பரேட் உலகின் ஒரு தவிர்க்க முடியாத தகுதியாகி விட்டதே நிதர்சனம். 

மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்திருந்தேன் நான். மூன்றாயிரம் பேர்களை பலி வாங்கிய ஒரு துயரமான தீவிரவாத சம்பவத்தை நேரில் காண நேர்ந்ததை ஒரு பாக்கியமாக நினைவுகூரும் ஷர்மாவின் வக்கிர புத்தி என்னை பயமுறுத்தியது. என்ன ஒரு மனநிலை கொண்டவன் இவன். இப்படிக்கூட யாராவது குரூரமாக யோசிக்க முடியுமா? இவனிடமா உதவி எதிர்பார்த்து வந்தோம். இந்த நிலையை, இலக்கை அடைய இவன் எத்தனை பேரை வேண்டுமானாலும் காவு வாங்கியிருப்பான். சட்டென்று ``மிஸ்டர் கார்த்திக்’’ என்ற சத்தம் கேட்டு யோசனையிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தேன். பேசியது ஷர்மாதான். 

``என் யூகம் சரியென்றால் உங்கள் ப்ரொபைல் டைம்லைன் படி அந்தச் சமயத்தில் நீங்களும் நியூயார்க்கில்தான் இருந்தீர்கள், சரியா?’’

``ஆமாம்.’’

``இரட்டைக்கோபுரங்கள் விழுந்த காட்சியை நீங்கள் பார்த்தீர்களா?’’ 

``பார்க்க சந்தர்ப்பம் நேரவில்லை.’’

``ஓ, வாட் ஏ பிட்டி’’ என்று ஷர்மா சொல்ல, சில இளைஞர்கள் `ஊ... ஊ’ என்று கேலியாக சத்தமிட்டனர்.

``மிஸ்டர் ஷர்மா, உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்தச் சம்பவம் தொடர்பாக எனக்குத் தெரிந்த கதை ஒன்று சொல்லட்டுமா?’’ என்று அனுமதி கேட்டேன். 

``கண்டிப்பாக, ஈஸ் இட் ஏ பிக்‌ஷன்?’’

``இல்லை, இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.’’

``கமான், யூ ஆர் வெல்கம், த புளோர் இஸ் யுவர்ஸ்’’ என்றான் ஷர்மா. ஹாலில் எல்லோரும் என் பக்கம் திரும்ப, ஷர்மா சைகை மூலம் அனுமதித்ததும் போக்கஸ் லைட் இப்போது என்னை நோக்கித் திரும்பியது. 

இரட்டைக்கோபுரம் - சிறுகதை

நான் சன்னமான குரலில் பேசத் தொடங்கினேன். ``நீங்கள் சொன்ன செப்டம்பர் பதினொன்று... காலை எட்டு மணிக்கு ஏராளமான கம்ப்யூட்டர் கனவுகளுடன் இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்காக இரட்டைக்கோபுரத்தின் நார்த் டவரின் 22வது தளத்தில் அமர்ந்திருந்தான் ஒரு இருபத்தைந்து வயது இளைஞன். திடீரென்று தடதடவென பலர் ஓடுவதையும் `ரன் ஃபார் யுவர் லைஃப்' என்ற அலறல்களும் புகை மண்டலமும் அவனைக் கனவு வேலையைப் புறக்கணித்துப் படிக்கட்டுகளை நோக்கி மற்றவர்களுடன் ஓட வைத்தது. சிறிது நேரம் கூட்ட நெரிசலில் சிக்கியபின் கதறல்கள், அழுகுரல்கள், மரண ஓலம் இவற்றையெல்லாம் கேட்டபடி ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கும்போது தான் அவனுக்குப் புரிந்தது, இது உயிரைக் காப்பாற்ற வேண்டி ஓடும் ஓட்டம் என்று. படிக்கட்டுகளில் மூட்டைகளாய் அடைபட்ட, நகர முடியாத ஜனத்திரள். போதும் இந்த ஓட்டம், செத்தாலும் பரவாயில்லை என்று ஓட முடியாமல் களைத்துப்போய் அவன் கடைசியாக நின்றது மூன்றாவது தளம். அங்கு ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம். அதன் வாசலில் விளம்பரப் பதாகையின் வாசகங்கள். `உங்கள் வாழ்க்கைக்கு எங்கள் பாதுகாப்பு. உஙகள் உயிருக்கு எங்கள் உத்திரவாதம்.’ அதைப் பார்த்து ஏதோ சட்டென்று தோன்றிய விபரீத முடிவா அல்லது வேறு வழி எதுவும் இல்லையென்பதாலா என்று தெரியாது. அந்தத் தளத்தின் உடைந்திருந்த ஒரு கண்ணாடி ஜன்னல் வழியாக அந்த இளைஞன் கீழே குதித்தான். முதல் தளத்தின் திறந்திருந்த ஜன்னல் ப்ரேம் மீது பட்டுக் கீழே விழுந்ததால் தாக்கம் குறைந்து உயிர் தப்பினான். பெயர் முகம் தெரியாத தீயணைப்பு வீரர் ஒருவர் நினைவிழந்த அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்.’’

``த்ரில்லிங் ஸ்டோரி’’ என்று யாரோ சொல்ல, சிலர் கைதட்டினார்கள். 

``ஹலோ, இது கதையல்ல... உண்மைச் சம்பவம் என்று அவர் ஆரம்பத்திலேயே சொன்னார். ஆனால் அந்த இளைஞன் இந்தியனா?’’ பீர் பாட்டிலை உயர்த்தியபடி சந்தேகம் எழுப்பினான் ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்த ஒரு ஜென் எக்ஸ். 

``ஒன் மினிட் கைஸ்’’ இப்போது இடைமறித்தான் ஷர்மா. ``ஆனால் நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. நியூ யார்க்கில் இருந்தும் நீங்கள் ட்வின் டவர்ஸ் விழுந்ததைப் பார்க்கவில்லை என்றால்... அசந்து தூங்கிவிட்டீர்கள், அப்படித்தானே’’ என்று சிரித்தபடி கிண்டலாகக் கேட்டான்.

``மிஸ்டர் ஷர்மா, நீங்கள் சொன்னது சரிதான். சீட்டுக்கட்டுகளைப் போல ட்வின் டவர்ஸ் தகர்ந்து நொறுங்கி விழுவதைக் காணும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் நான் அதன் உள்ளே இருந்தேன். நார்த் டவரின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்த அந்த இளைஞன் நான் தான். அதிர்ஷ்டவசமாக அன்று உயிர் பிழைத்தேன். ஆனால் என் இடது காலை இழந்தேன்.’’ மொத்த ஹாலும் அதிர்ச்சியால் நிசப்தமானது.

``மை காட்! அவர் தப்பித்தது மூன்றாவது ப்ளோரில் இருந்து. அதனால்தான் அவர் கம்பெனிக்குப் பெயர் டி.எஃப்.சியா?’’ என்று யாரோ முணுமுணுத்தார்கள்.

``கரெக்ட், தேர்டு ப்ளோர் கன்சல்டன்சி...’’ 

யாரிடமும் எந்தவித அனுதாபமும் பச்சாதாபமும் தோன்றுவதற்கு முன் இங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தனை பேர் கண்களும் என்மீது குத்திட்டு அதிர்ச்சி, பரிதாபம், ஆச்சரியம், பயம் கலந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதை என்னால் உணரமுடிந்தது. ஷர்மாவின் முகத்தைத் தவிர்த்து, சுவரோரமாக இருந்த என் ஊன்றுகோலைப் பொருத்திக்கொண்டு வாசல் நோக்கிச் செல்லும்போது மென்மையாகக் கையுயர்த்தி விடை தந்த கவிதாரெட்டியின் கண்களில் கொஞ்சம் ஈரம். 

இந்த மூன்றாவது தளத்திலிருந்தும் நான் தப்பிக்க வேண்டும். உயிர் பயம் கிடையாது. ஆனாலும், மனித நேயத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டி ஷர்மா போன்ற மனிதர்களிடமிருந்தும் தப்பித்தாக வேண்டும். லிப்ட் வசதி இருப்பதால் இன்று நான் கீழே குதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.


இரட்டைக்கோபுரம்


நாடி

நாடி - சிறுகதை                                        சசி

நாடி - சிறுகதை

ஒருவருடைய வாழ்க்கையை நாவலாகச் சொல்லலாம். ஆனால் ஒரு சிறுகதையாகச் சுருக்கி எழுத முடியுமா? சிரமம் என்கிறீர்களா? இரண்டு இன்ச் அகலமுள்ள ஒரு ஓலைச் சுவடியில் அகத்தியர் உங்கள் வாழ்க்கையைப் பன்னிரண்டு காண்டங்களில் எழுதி வைத்துள்ளார் என்று சொல்லி நாற்பது பக்க நோட்டில் ஒரு பாட்டை ஒருவர் எழுதித் தர, பவ்யமாக மூவாயிரம் ரூபாய் வரை தட்சணை தந்தவர் நீங்கள் என்றால், இதையும் நம்பித்தான் ஆக வேண்டும். 

சரி, இப்போது நாம் முதலில் ராம்குமாரின் வாழ்க்கையின் முதல் இருபத்தேழு வருடங்களை கீழே ஒரே பேராவில் சொல்ல முயற்சிசெய்யலாம்.

அப்பா சுகவனம் தொடக்கப்பள்ளி ஆசிரியர். ஐந்து வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். அம்மா புனிதவதி, ஒரே மகன் ராம்குமாருடன் வசிப்பது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். ராம்குமார் படித்தது வணிகவியல். வேலையோ வாகன உதிரி பாகங்களைத் தமிழ்நாடு முழுக்க விற்க முற்படும் சென்னை சார்ந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. மாத சம்பளம் பிடித்தம் போக ரூபாய் முப்பதாயிரம். 

ராம்குமாரின் வாழ்க்கைச் சிறுகதை சுவாரஸ்யமாக ஆரம்பிப்பது இன்றைக்கு சுமார் ஐந்து வருடம் முன்னர் சீர்காழியில் புதிதாக ஆரம்பமான செந்தில்நாதன் ஆட்டோமொபைல்ஸ் வாசலில். “ஓகே சார், அப்ப அடுத்த மாசம் டூர்ல உங்கள மீட் பண்றேன்” என்று விடைபெறுமுன் மணிபர்ஸிலிருந்து தன் விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து, கடை ஓனரிடம் கொடுத்தான். மணி பிற்பகல் மூன்றைக் கடந்திருந்தது. இங்கிருந்து வைத்தீஸ்வரன் கோயில் ஒரு ஏழு அல்லது எட்டுக் கிலோமீட்டர்தான். பஸ்ஸில் போனால் அரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். நாலரைக்குக் கோயில் திறப்பார்கள். இப்போதே கிளம்பினால் முதல் தரிசனம் முடித்து சென்னைக்கு ஆறரை மணி பஸ் பிடித்துவிடலாம்.

நாடி - சிறுகதை

புதன்கிழமை என்பதால் கோயில் வார இறுதி நாள்கள்போல் கூட்டம் அதிகம் இல்லாமலிருந்தது. விரைவில் தரிசனத்தை முடித்துவிட்டுக் கோயிலின் வெளிப்பிராகாரம் வழியே தெருவுக்கு வந்தவுடன், தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வரும் அந்த நபரை ராம்குமார் கவனித்துவிட்டான். வெள்ளை வேட்டியும் அரைக்கை நீல நிறச் சட்டையும் அணிந்தபடி ஒரு கையில் மஞ்சள் பையுமாக. கண்டிப்பாக இது ஒரு நாடி ஜோதிட ஏஜென்ட் என்பதில் ராம்குமாருக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுப்பகுதிகளில் திரிபவர்கள், ஒன்று கோயிலில் சாமி தரிசனம் வேண்டி வந்தவர்கள் அல்லது தரிசனம் முடிந்து நூற்றுக்கணக்கான நாடி ஜோதிட நிலையங்களில் எங்கு போவது என்று திக்குத் தெரியாமல் அலைபவர்கள். மற்றவர்கள் நாடி ஜோதிட மையங்களின் ஏஜென்டுகள். ராம்குமாரின் நோக்கம் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள தேநீர்க்கடையில் டீ சாப்பிட்டு உடன் பஸ் பிடித்துச் சென்னை திரும்புவது. 

ஏற்கெனவே ஒரு முறை நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் ராம்குமாருக்கு உண்டு. முதல்முறையாக வைத்தீஸ்வரன் கோயில் வந்தபோது அம்மாவின் வற்புறுத்தலால் நாடி ஜோதிடம் பார்த்தான். அப்போதே அவனுக்கு அந்த சூட்சுமம் புரிந்தது. 

ஒரு சுவடிக்கட்டில் உள்ள சுவடிகளை ஒவ்வொன்றாகத் தள்ளியபடி நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆம், இல்லை என்ற பதில் பெற்று நம் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர் இவற்றின் ஒவ்வொரு எழுத்தாகத் தகவல் திரட்டி கடைசியில் அவர்கள் கண்டுபிடித்த ஒரு குறிப்பிட்ட சுவடியில் இதெல்லாம் உள்ளதாகக் கூறுவார்கள். ராம்குமாரின் நம்பிக்கையின்மைக்கு இந்த ஒரு சுவடி அனுபவமே போதுமானதாக இருந்தது.

தேநீர்க்கடையை ராம்குமார் நெருங்க, திடீரென்று பின்னால் வந்து அந்த நபர் மூச்சு வாங்க, “சார், உங்களைத்தான் கோயில் வாசல்ல இருந்து துரத்திக்கிட்டு வரேன். செத்த நில்லுங்கோ.”

“சார், என்னை ஆளை விடுங்க. எனக்கு நாடி ஜோசியத்தில நம்பிக்கை இல்லை.”

“அட, சார் அதான் எஸ்கேப் ஆகப் பார்த்தேளா. நான் நாடி ஜோசியம் பார்க்கிற ஆள் கிடையாது. பாருங்க, என் பைக்குள்ள சுவடிகள் ஒண்ணும் இல்ல” என்று சிரித்தபடி மஞ்சப்பையைத் திறந்து காட்டினான் அந்த நபர். அப்போதுதான் அவனை ராம்குமார் சரியாக கவனித்தான். சின்ன வயதாக முப்பது முப்பத்தைந்துக்குள்தான் இருந்தான். அடர்த்தியான தலைமுடி. குடுமி இல்லாத என்னவோ ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைல்.

“சாருக்கு நாடி ஜோசியம்னா நம்பிக்கை இல்லைபோல. அப்ப ஏதோ அனுபவம் இருக்கணும்.”

“என்னோட வாழ்க்கை ஒரு சுவடியில் இருக்குன்னு சொல்றதே அபத்தம்.”

“உங்க கோபம் புரியுது. சுவடி ஜோதிஷம் சரியா, தப்பா, அந்த சர்ச்சைக்குள்ள நான் வரலை. சாருக்கு நன்னா தெரிஞ்சிருக்கும். இங்க வரவாள் பாதிப் பேர் ஸ்வாமி தரிசனத்துக்கும் மீதம் சுவடி பாக்கவும்தான். சுவடி பாக்க வரவாளும் ஸ்வாமிய கண்டிப்பா தரிசனம் செய்யறா. அதனால ஈஸ்வரன் அருள், எல்லோருக்கும் கிடைக்குறது இல்லையா?”

ராம்குமாருக்கு அவனது ‘கறை நல்லது’ லாஜிக் பிடிபடவில்லை. ஏதோ நன்றாக மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் புரிந்தது. மணி பார்த்தபடி “நான் ஆறு மணிக்குள்ள சென்னைக்கு பஸ் பிடிக்கணும். உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்க?”

“சார், நானும் சந்தியைக்குள்ள ஜோலி முடிச்சிட்டு சீர்காழி போகணும். நான் சுவடி பாக்குற ஜோசியன் கிடையாது. உங்கள நாடி வந்த ஜோசியனாக்கும். நாடின்னா பல அர்த்தங்கள் உண்டு தெரியுமோன்னோ. சப்த நாடி அடங்கிடுச்சுன்னு சொல்றா. அது மூச்சு. ரெட்டைநாடி சரீரம்னு சொன்னா உடம்புன்னு அர்த்தம்.”

“சரி, இதெல்லாம் எதுக்கு...” பேச முற்பட்ட ராம்குமாரை இடைமறித்து மேலும் தொடர்ந்தான்.

“கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ. நான் ராமபத்ரன்... நீங்க வாகனம் சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கேள் போல. அதான் பரபரன்னு ஸ்பீடா யோசிக்கிறீர். என்னைப் போல உங்க பேரிலேயும் ராம நாமம் இருக்கு. சரியா?” 

இந்தத் திடீர் தாக்குதலில் அதிர்ச்சியானாலும் சுதாரித்த அவனுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. `சீர்காழியில் செந்தில்நாதன் ஓனரிடம் விசிட்டிங் கார்டு தரும்போது பர்ஸிலிருந்து வேறு ஒரு அட்டையைக் கீழே தவற விட்டு, ஒருவேளை அது இவன் கையில் கிடைத்து’ என்று பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்ததை ராமபத்ரன் கவனித்துவிட்டான்.

பர்ஸுக்குள் கொடுத்த ஒன்று போக மீதம் நாலு விசிட்டிங் கார்டுகள் பத்திரமாக இருந்தன.

“சார், கன்ஃபார்ம் பண்ணிட்டேளா? பிராடு பண்றவன் நோக்கம் பணம் பறிக்கிறதாதானே இருக்கும். இப்பவே சொல்லிடறேன். பணம் எதுவும் எனக்கு வேண்டாம். நீங்க ஒரு ஒத்த ரூபா மட்டும் தட்சணையா தாங்கோ. ஏன்னா தட்சணை தராத பிரசன்னம் பலிக்காது.” 

“பிரசன்னமா, எதுக்கு?”

“சொல்றேன், எல்லாம் தெய்வ நிமித்தம்தான். நீங்க நினைக்கிற மாதிரி நான் முழு நேர ஜோதிஷன் கிடையாது. சி.ஏ முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியில அக்கவுண்டன்டா இருக்கேன். தோப்பனார் முன்னம் இந்தப் பக்கத்துல புரோகிதர். இப்ப ஜீவனோடில்லை. அவர் காலத்துக்கப்புறம் நானும் புரோகிதம் பண்ணணும்னு ஆசைப்பட்டார். எனக்குக் கணக்கு நல்லா வரவே, படிப்புல பிடிப்பு வந்து அவரோட ஆசை நிறைவேறல. அவர் புரோகிதம் தவிர அப்பப்போ தேடி வரவாளுக்கு மட்டும் குறி சொல்றதும் உண்டு. அந்த ஸித்தி எனக்கும் கொஞ்சமா வாச்சிருக்கு. அவரோட விருப்பத்த பூர்த்தி செய்யாமப் போனதுக்கு பிராயச்சித்தமா மாசத்துக்கு ஒரு நாள் இங்க வந்து ஒருத்தருக்கு மட்டும் காசு வாங்காமக் குறி சொல்றது வழக்கம்.”

மூச்சு விடாமல் பேசிய ராமபத்ரனை நம்பலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ஆனால ஏதோ ஆர்வம் ராம்குமாரை அடுத்த கட்டத்துக்கு உந்தியது.

“சரி, இதுக்கு நான் எப்படி செலக்ட் ஆனேன்?”

“தரிசனம் முடிஞ்சு கோயில் வெளிவாசல் வழியா வரவாள்ல என் கண்ணுக்குப் படற முதல் நபருக்கு பிரசன்னம் பாக்கணும்ன்றது என்னோட சங்கல்பம். இன்னைக்கு நீங்க என்பது தெய்வ நிமித்தம்.”

அதற்குள் இருவரும் தேநீர்க்கடையை நெருங்கி விட்டார்கள். ராம்குமாருக்கு எப்படியும் பணம் போகாது என்கிற நம்பிக்கை வர, பயம் தெளிந்தது. ஆனால், இந்தப் பிரசன்னம், குறி இதில் ஒன்றும் பெரிய ஆர்வம் வரவில்லை. ஆனால், எப்படி நம் பெயர், வேலை விவர தகவல் அவரிடம் தோராயமாகச் சென்று அடைந்தது என்ற ஆச்சரியம் மட்டும் இன்னும் விலகவில்லை.

“சரி, இப்ப நான் என்ன செய்யணும்,”

“ஒரு பத்து நிமிஷம்தான்” டீக்கடை பெஞ்சை காட்டி, “செத்த இங்கே அமைதியா உக்காருங்கோ. சார் பேரென்ன, சொல்லலையே!”

“நீங்கதான் பாதி கண்டு புடிச்சிடீங்களே. ராம நாமம் பாதி, ராம்குமார்.”

ராமபத்ரன் ‘ஹ ஹா’ என்று வெள்ளந்தியாகச் சிரித்தபடி ராம்குமாரின் வலது கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்துகொண்டான். ராம்குமாருக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. சுற்றும் முற்றும் யாரும் பெரிதாக இவர்களை சட்டை செய்யவில்லை.

கண்களைத் திறக்காமல் ராமபத்ரன் உதடுகள் துடிக்கப் பேசினான். “உங்க பழைய விஷயங்கள் எதுவும் நான் சொல்லப்போறதில்லை. உங்க எதிர்காலத்தை மாற்றும் முக்கியமான மூணு விஷயங்களை மட்டும் சொல்றேன், கேளுங்கோ. உங்களுக்கு மூணாவதா பாக்குற பொண்ணுதான் வரனா அமையும். பொண்ணோட பூர்வீகம் கும்பகோணம். பேரு ஒரு விருட்சம்.”

விருட்சமா, மரம்? ராம்குமாருக்கு பகீரென்றது... மா, பலா, வாழை, அரசு, ஆலமரம், உணர்ச்சி வசப்பட்டுக் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். “ஆங்... வேலமரம்... வேலம்மா, இல்லைன்னா வேம்பு...”

ராமபத்ரன் கண் திறந்து லேசாகச் சிரித்தான்.

“அப்புறம் உங்களுக்கு சூட்டிகையா ஒரே ஒரு பொண் குழந்தை, பேர்ல ஒரு மதுரமான வஸ்து...”

ராம்குமாருக்கு இந்த விளையாட்டு இப்போது ஜாலியாக இருந்தது. “மதுரமான வஸ்துவா! தித்திப்பான பொருள்... சான்ஸே இல்லை. என் பொண்ணுக்கு நான் கண்டிப்பா பூந்தி, ஜாங்கிரி, ஜிலேபின்னு பேரு வைக்க மாட்டேன்” என்று சந்தானம் வாய்ஸில் சொல்ல, ராமபத்ரன் கொஞ்சம் பலமாகவே சிரித்தான். “சார், நல்ல ஜோக்கான ஆசாமிதான்போல.”

“அப்புறம் சார், உங்க குழந்தை பேர்ல தொழில் தொடங்குவேள், அதுல கொழுத்த பணம் பார்ப்பீர்.”

இப்போது சிரித்தது ராம்குமார். “மத்ததெல்லாம் கூட சாதாரணமான தமாஷ்னு எடுத்துக்கலாம். இது ஹைட் ஆப் தி ஜோக். என்ன தொழில், அதையும் சொல்லிடுங்க...” என்றான் கிண்டலாக.

நாடி - சிறுகதை

ராமபத்ரனின் முகம் இப்போது கொஞ்சம் இறுக்கமாகவும் கைகள் சூடாகவும் இருந்தன. சடாரென்று கைகளை விடுவித்து “நாடி பார்க்கிற பிசினஸ்” என்றான்.

“என்னது, உளறாதீங்க... நான் நாடி ஜோசியம் பார்க்கிற பிசினஸ் பண்ணுவேனா, அதுக்கு...” கோபத்தில் ராம்குமாருக்கு உடம்பு அதிர்ந்தது.

“மன்னிக்கணும், பிரசன்னத்த சொல்றது மட்டுமே என்னோட ஜோலி, அதுக்கு மேலே விஸ்தரிக்க முடியாது. ஒத்த ரூபாய் தட்சணை குடுத்தா சட்டுனு கிளம்பிடுவேன்.”

ராம்குமாருக்கு தான் அதிகமாக ரியாக்ட் செய்துவிட்டோம் என்பது புரிந்து அமைதியானான். நாம் நம்பாத விஷயங்களுக்கு ஏன் அனாவசியமாக உணர்ச்சி வசப்பட வேண்டும். நிலைமையைச் சரி செய்ய வேண்டி, “ராமபத்ரன், உங்களுக்கு லேசா ஜுரம் இருக்கு போல, கையெல்லாம் சூடா இருக்கு.”

“அதொண்ணும் பிரச்னை இல்ல. என் தோப்பனார் குறி சொல்லி முடிச்சப்புறம் ஒரு வாளி ஜலம் தலையில் விடுவார். கீழ விழற ஜலம் கொதிக்கும்னா பாருங்கோ.”

“உங்களுக்கு டீ, காபி ஏதாவது...” எனக் கேட்டதற்கு, “ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணின பிறகு தான் ஜலம் தொண்டையில இறங்கும். அப்ப தட்சிணை...” என்று இழுத்தான் ராமபத்ரன்.

பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்துத் தர, இரு கைகளையும் விரித்துத் தலை குனிந்து பவ்யமாக வாங்கிய ராமபத்ரன் “பிரசன்னம் பலிக்கும்போதெல்லாம் இந்த க்ஷணத்தை நினைச்சுக்கோங்க. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.” 

“சார், உங்களுக்கு டீயா, காபியா?” கடைப்பையன் கேட்ட ஒரு நிமிடம் திரும்பிப் பார்ப்பதற்குள் ராமபத்ரன் எதிரில் இருந்த ஒரு தெருவில் வேகமாக நுழைந்து மறைந்தான்.

ராம்குமாருக்குப் பார்த்த முதல் பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ‘அந்தப் பொண்ணு காபி டம்ளரை டொக்குன்னு வெச்சிட்டுப் போறது ஏதோ நமக்குச் சொல்ற மாதிரி இருந்தது’ என்று காரணம் சொன்னாள். இரண்டு மாதங்கள் கழித்து ஒரு பெண் பார்க்க வளசரவாக்கம் போனார்கள். சின்னக் குடும்பம். பெண்ணுக்கு ஏ.ஜி.எஸ் ஆபீஸில் வேலை. அழகாகவும் இருந்தாள். எல்லோருக்கும் பிடித்து, ‘உடனே வர்ற ஒரு நல்ல முகூர்த்த தேதி பார்த்துச் சொல்லுங்க’ என்று கூறிக் கிளம்பினார்கள். பிறகு பதில் ஏதும் இல்லை. புரோக்கர் தங்கதுரைதான் சொன்னார். அவர்கள் பெண் பார்த்த அன்று இரவு பொண்ணோட சித்தப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாராம். பிழைத்துவிட்டார் என்றாலும் அபசகுனம் என்று பெண் வீட்டில் நினைத்ததால் வரன் முடங்கியது. 

ஜி.பி ரோட்டில் உள்ள ஒரு கடை ஓனர் வீட்டுக்கு பேமென்ட் விஷயமாக ராம்குமார் அடிக்கடி சென்று வருவான். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு பழைய வீடு. நல்ல மனிதர். எப்போது சென்றாலும் தன் மகளிடம் காபி கொண்டு வரச் சொல்வார்.

காபி கொண்டு வந்து தரும்போதெல்லாம் மிகவும் அடக்கமாக புடவைத் தலைப்பில் தம்ளரைப் பிடித்தபடி கொஞ்சமும் அதிராமல் டேபிளில் வைத்துவிட்டு லேசான புன்முறுவல் உதிர்த்துச் செல்வாள். அழகான, அமைதியான பெண் என்பதற்கு மேல் சரியாக ஒரு முறைகூட ராம்குமார் அவளைப் பார்த்தது கிடையாது. முதலில் பார்த்த பெண் காபி வைத்துவிட்டுச் செல்லும் காட்சி குறித்து அம்மா சொன்னது இப்போது புரிந்தது. இன்று ராம்குமார் ஒரு தீர்மானம் செய்தான்.

பெரியவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். பிறகு “தம்பி... காதல், அது இதுன்னு இறங்காமல் நேரடியாக என்னிடம் கேட்டதற்கு சந்தோஷம். ஆனா அதற்கு முன்னாடி சில விஷயங்கள் சொல்லணும்” என்றார். வெறும் “உம்” கொட்டினான் ராம்குமார்.

“இவ உண்மையில என்னோட வளர்ப்பு மகள். இவளோட அப்பா என்னோட பால்ய சிநேகிதன். இவளோட சின்ன வயசிலேயே அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஒரு விபத்தில இறந்துட்டாங்க. அன்னயிலிருந்து எங்க பொண்ணாவே இருக்கா. அவளோட மாமா பெங்களூர்ல இருக்கிறார். எங்களோட சம்மதம் கிடச்ச பிறகு அவருக்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது. இப்ப சொல்லுங்க தம்பி.’’ 

“ஐயா, உங்க பொண்ணு பேரு…”

“அட பொண்ணு பேருகூடத் தெரியாமலேயே சம்பந்தம் பேச வந்துட்டீங்களே...” கடகடவென்று சிரித்தபடி “கற்பகம்” என்றார். 

“கற்பகமா... விருட்சம்...”

“தம்பி என்ன சொன்னீங்க?”

“ஒண்ணும் இல்ல... கற்பகத்தோட அப்பாவுக்குப் பூர்வீகம் எந்த ஊர்?’’ 

“கும்பகோணம் பக்கத்துல இஞ்சிக்கொல்லைன்னு ஒரு கிராமம்.”

ராமபத்ரன் ‘சார்...’ என்று நக்கலாகச் சிரிப்பது போல் இருந்தது. பரவாயில்லை. ‘ராமபத்ரன் சொன்னது பலிக்கக் கூடாது’ என்ற வீம்புக்காகக் கற்பகத்தை இழக்க ராம்குமார் தயாராக இல்லை. இதெல்லாம் ஒரு தற்செயலான நிகழ்வுகளே என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

அடுத்த முகூர்த்தத்தில் ராம்குமார் - கற்பகம் திருமணம் வடபழனி கோயிலில் எளிமையாக நடைபெற்றது. மதிய சாப்பாட்டுக்கு சரவணபவன் ஹோட்டலில் டோக்கன் கொடுத்தார்கள்.

கற்பகத்துக்கு வளைகாப்பு முடிந்த பிறகு ஒரு நாள் பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ராம்குமார் கேட்டபோது அது உங்கள் இஷ்டம் என்றாள். 

“அப்போ பையனா இருந்தா நிகில்... பொண்ணுன்னா நிவேதா... ஓகேவா?” என்றான். கற்பகம் வெறுமனே மையமாகச் சிரித்தாள். நிவேதா என்ற பெயரில் ஏதாவது இனிப்பு இருக்கிறதா என்று கூகுளில் தேடினான். நல்ல வேளை, ஒன்றுமில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் கற்பகத்துக்கு வலி ஏற்பட்டது. உடனே ஒரு உபர் பிடித்து கற்பகத்துடன் மருத்துவமனைக்குக் கிளம்பினான். டாக்ஸியில் ராம்குமார் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கற்பகம் சொன்னாள். “ஏங்க, நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க.”

“உம்... சொல்லு”

“நமக்குப் பெண் குழந்தை பிறந்தா எங்க பாட்டி பேரதான் வைக்கணும், பையன் பிறந்தா, நீங்க சொன்னீங்களே, நிகிலோ முகிலோ வெச்சுக்கலாம்.” 

மனதுக்குள் கற்பகத்தின் பாட்டி பெயர் என்னவாக இருக்கும்? மீனாட்சி, சீதாலட்சுமி என்றெல்லாம் கற்பனை ஓடியது. “சரி, பாட்டி பேர் என்ன?” 

“தேன்குழலிங்க.”

“என்னது இது? ஏதோ லாலா கடையில வாங்குற காராசேவ் போல இருக்கே.”

“தேன்குழல் இல்லைங்க. தேன்குழலி, வண்டார்குழலிபோல. நாம தேன்னு கூப்பிடலாம், ஷார்ட்டா... ஸ்வீட்டா...”

“மதுரமான வஸ்து...”

“என்னங்க உளறுறீங்க...” 

“ஒண்ணும் இல்ல. அது என்னோட பிரச்னை.” ராமபத்ரன் வெள்ளந்தியாகச் சிரித்தபோது தெரிந்த காவிக் கறை ஏறிய பற்கள் ராம்குமாருக்கு நினைவுக்கு வந்தது. 

மறுநாள் விடியலுக்கு முன்பாகவே தேன்குழலி பிறந்தாள். “அவிட்ட நட்சத்திரம்டா. தவிட்டுப் பானையில தங்கம்” என்று சந்தோஷமானாள் ராம்குமாரின் அம்மா. அவன் மனசு மட்டும் படபட என்றது. அடேய்! ராமபத்ரா, எங்க இருக்க நீ?

அதற்குப் பிறகு ஓரிரண்டு முறை சீர்காழி சென்ற ராம்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பக்கம் விசிட் செய்தான். அங்கு எங்காவது ராமபத்ரன் தென்படுகிறானா என்று கண்கள் அலைபாய்ந்தன. அங்குள்ள நாடி ஜோதிட நிலையங்களின் பெயர்ப் பலகைகளைப் பார்க்கும் போதெல்லாம் ராம்குமாருக்கு ‘தேன்குழலி நாடி ஜோதிட நிலையம்’ என்ற கற்பனை வேறு வந்து பயமுறுத்தியது. ஆனால் எது எப்படியானாலும் ராம்குமாரின் பௌதீக மனசு ‘நடந்தவை எல்லாம் அதிசய நிகழ்வுகள்’ என்று நம்ப மறுத்தது. கோஇன்ஸிடன்ஸ் தியரி, புரொபபிலிட்டி தியரி மற்றும் ஃபிளிப் காய்ன் தியரி என்றெல்லாம் உருட்டிப் புரட்டியது.

நாள்கள் வேகமாக நகர்ந்தன. ராம்குமார் வேலை செய்த கம்பெனி விற்பனை வெகுவாக பாதிப்படைந்து அவனுக்கு அடுத்த புரமோஷன் கிடைக்காமல்போனது. 

இந்நிலையில் ஒருநாள் கற்பகத்தின் மாமா அவனை செல்போனில் அழைத்தார். “மாப்பிள்ளை, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” “சொல்லுங்க மாமா” என்றான்.

“கற்பகம் பேர்ல ஊரில எட்டு ஏக்கர் நஞ்சை நிலம் லீஸ்ல இருக்கு. பெருசா ஒண்ணும் வருமானமில்லை. பார்த்துக்கவும் ஆள் இல்ல. அதனால அதை வித்துட்டு வேற ஏதாவது...”

“மாமா, நீங்களும் கற்பகமும் முடிவெடுக்கலாம்... நான் இதுல...”

“பெங்களூரில் ரெண்டு ஜெர்மன் மெஷினரிஸோட ஒரு மெடிக்கல் எக்யுப்மென்ட் யூனிட் விலைக்கு வந்திருக்கு... அதை வாங்கலாமான்னு கற்பகத்த கேட்டேன்.”

நாடி - சிறுகதை

“சரி...”

“அவ எதை வாங்கினாலும் உங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா. இந்த வாரம் டாக்குமெண்ட்ஸ் அனுப்பி வைக்கிறேன். சைன் பண்ணி அனுப்புங்க. அப்புறம் கற்பகம் கம்பெனி பெயரை மட்டும் பொண்ணு பேர்ல வைக்கச் சொல்லுறா.”

“மாமா, தேன்குழலின்னா...”

“கொஞ்சம் இங்கிலீஷ்ல யோசியுங்களேன்.”

“ராம்குமாருக்கு சட்டென்று அன்று குழப்பிய ராமபத்ரன் தலைமுடி ஸ்டைல் இப்போது ஞாபகத்துக்கு வந்து “தேன்கூடு தலை...” என்று முணுமுணுத்தான். 

“சரியான பேர், ஹனிகோம்ப் மெடிக்கல் எக்யுப்மென்ட்ஸ், சூப்பர்...” என்றார் மாமா.

தேன்குழலிக்கு ஒன்றரை வயது ஆகும்போது கொரோனா முதல் அலை ஆரம்பம். ராம்குமாரின் கம்பெனி நலிந்து அவன் சம்பளம் பாதியானது. தேன்குழலி ரொம்ப சூட்டிகையாகத்தான் இருந்தாள். ‘தேன்... தேன்...’ என்று எல்லோரும் கொஞ்சினார்கள். ஆனால் ராம்குமாரோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான். 

திடீரென்று ஒரு நாள் மாமா பெங்களூரில் இருந்து வீடியோ காலில் பேசினார்.

“மாப்பிள்ளை... நாம வாங்கின பெங்களூர் யூனிட்டில் இருக்கிற ரெண்டு ஜெர்மன் மிஷின்ஸ் ஒரு மெடிக்கல் எக்யுப்மென்ட் பண்ற லைசன்சோட இருந்தது, இல்லையா? அதுக்கு இப்போ வேலை வந்துடுச்சு. கொரோனா அடுத்த அலை வரும்போது உபயோகப்படும் உபகரணம் தான் இந்த கம்பெனில நாம செய்யப் போறோம். ஒரு நாலு மாசத்துக்கு டிமாண்ட் இருக்கும்னு சொல்றாங்க. முப்பதாயிரம் யூனிட்டுக்கான ஆர்டர் கைவசம் இருக்கு. ஒரு யூனிட்டுக்கு லாபம் நானூறு ரூபாய் நிக்கும்.’’

எல்லோரும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“நாம அங்க என்ன செய்யப்போறோம்” ராம்குமார் கேட்டான்.

“நுரையீரலுக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ஆக்சிஜன் லெவலைக் காட்டுற ஃபிங்கர்டிப்ஸ் பல்ஸ் ஆக்சிமீட்டர்.”

“என்னது மாமா அது... ரொம்பப் பெருசா இருக்குமா?” என்று கற்பகம் கேட்டாள். 

“இல்லம்மா, துணி காயப் போடுற கிளிப்பு போல கொஞ்சம் பெருசா இருக்கும்.”

“அது எதுக்கு மாமா?’’ 

“பொதுவா அத பல்ஸ் பார்க்கிற மெஷின்னு சொல்லுவாங்க” என்று சொல்லி கொஞ்சம் கழித்து “நாடி பார்க்கிறது” என்றார் மாமா. 

அதிர்ச்சியில் உறைந்த ராம்குமாருக்கு ‘பிரசன்னம் பலிக்கும்போது இந்த க்ஷணத்தை நினைச்சுக்கோங்க’ எனறு சொன்ன ராமபத்ரனின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. இப்போது நினைவில் வந்தது பவ்யமாகத் தலைகுனிந்து தட்சிணை வாங்கிய ராமபத்திரனின் குவிந்த வலது உள்ளங்கை முடிவில் தொடங்கி முழங்கையில் புடைத்து ஓடிய பச்சை நரம்பு நாடி.


நாடி

பொது எதிரி

பொது எதிரி - சிறுகதை                                           சசி

28 Oct 2021 6 AM  ஆனந்த விகடன்

சிறுகதை

ஒட்டுமொத்த மனித குலத்தின் பொது எதிரி எது என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? உங்கள் நூற்றாண்டில் இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள் கிடைத்திருக்கும்.

தீவிரவாதம், போர், மதக்கலவரம், கேன்சர், கொரோனா, புவி வெப்பமயமாதல், பசி, பஞ்சம், இயற்கைச் சீற்றம் என்று உங்கள் லிஸ்ட் நீள்கிறது. மனித குலத்தின் பொது எதிரி தேர்வுப் பட்டியலில் எங்கள் நூற்றாண்டில் நாங்கள் எல்லோரும் முதலிடம் பெறும் என்று நம்பியிருந்தது பிளிசன்ட் (Bliss-end) என்ற மீளா நித்திரைக்குக் கொண்டு செல்லும் அதிபயங்கர போதை வஸ்து.

‘நொடிகளாகும் யுகம்... சாகும்போதும் சுகம்...’ முதல் வரியை மீண்டும் படியுங்கள். ஆச்சரியமாக இது நொடிகள் யுகமாகும் என்றும் யுகம் நொடிகள் ஆகும் என்றும் இரண்டு விதத்திலும் பொருள் தரும்படி இருக்கும். பிளிசன்ட் போதை மருந்து பற்றிய இந்தப் பிரபலமான இரண்டு வரி தமிழ்க் கவிதையை எழுதிய கவிதாவிலாசன் இளைஞர்களை போதை மாத்திரை வழி செல்லத் தூண்டிய வழக்கில் பல காலம் தேடப்பட்டு, பிறகு நிரந்தரமாகக் காணாமல் போனார். சிலர் அவர் அந்த மருந்தை உட்கொண்டு சாகும் முன் எழுதிய கடைசிக் கவிதை இது என்றும் சொல்கிறார்கள். அரசின் கடுமையான சட்டதிட்டங்கள் மற்றும் மரணதண்டனை காரணமாக இதன் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, இது இப்போது ஓடி ஒளிந்து இருண்ட இணையவெளியில் செயல்படுகிறது என்கிறார்கள். ‘உங்கள் மேலான கவனத்திற்கு மற்றும் பாதுகாப்பு கருதி ஒரு எச்சரிக்கை...’ மேற்சொன்ன கவிதையைப் பகிர்வதோ அதுகுறித்துப் பேசுவதோ எங்கள் நூற்றாண்டில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் ஆச்சரியமாக நாங்கள் வடிவமைத்த தேர்வுப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது கொசு. பல நூற்றாண்டுகளாக ஒழிக்கப்படாத ஒரு எதிரியாகக் கொசு இப்போதும் இருக்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத அளவு பலமடங்கு பெருகிய கொசு இனத்தால் உண்டாகும் பல்வேறு வியாதிகளை நாங்கள் முற்றிலும் ஒழித்து விட்டாலும், தாங்கமுடியாத கொசுக்கடி, கொசுவின் ரீங்காரம் போன்ற தொந்தரவுகளை மனிதகுலம் சகித்துக்கொள்ள வேண்டியதாக ஆகிவிட்டது. முழுமையாகக் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க வழியில்லை என்றாகிவிட்டதே நிதர்சனம். 

பொது எதிரி - சிறுகதை

நான் ரித்திகேஸ்வரன். இந்த 25-ம் நூற்றாண்டின், கொசு இனத்தை ஒழிக்கப் பாடுபடும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளில் முதன்மையான ஒரு தமிழ் பேசும் மரபணு விஞ்ஞானி. கொசுக்களை ஒழிக்க மனிதகுலம் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் தரவுகள் அனைத்தும் 15-ம் நூற்றாண்டிலிருந்து என்னிடம் உள்ளன. ஆரம்பத்தில் எண்ணெய்ப் பூச்சு, புகை இடுதல், ரசாயனம் தடவிய கொசு விரட்டி அட்டைகள், உடலில் தடவும் ரசாயனப் பூச்சு மற்றும் சிறு கொசு ஒழிப்பான் உபகரணங்கள். இருபத்திரண்டாம் நூற்றாண்டில் உருவான ஒரு உபகரணம் மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் என்னை மிகவும் கவர்ந்த வடிவமைப்பு கொண்டது. 

பொதுவாக முட்டையிடத் தேவையான புரதம் வேண்டி நம்மைக் கடித்து ரத்தம் உறிஞ்சுவது பெண் கொசுக்களே... இந்தக் குறிப்பிட்ட கொசு ஒழிப்பான், பாலூட்டிகளின் இயல்பான ஈரப்பதம், கார்பன் டை ஆக்சைடு வெளித் தள்ளும் மூச்சுக் காற்று, வெப்பம் அனைத்தையும் போலியாகப் பிரதிபலித்துக் கொசுக்களை ஈர்த்துக் கொன்று விடும். 

கடைசியாக இருபத்து நான்காம் நூற்றாண்டு ஆரம்பத்தில் உருவான கொசு அழிப்பான்தான் இன்றுவரை உபயோகத்தில் இருக்கும் ஒரு பிரபலமான, வெற்றிகரமான சாதனம். கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய லேசர் கற்றைகளை அறை முழுவதும் வெளியிட்டு குறிப்பிட்ட அளவு எடை மற்றும் பரிமாணத்துக்கும் குறைவான பூச்சிகள், கொசுக்களைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்திவிடும். 

சூரியன் வெளியிடும் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாகி பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் திரை மிகவும் மோசமான பாதிப்பை அடைந்ததால் செயற்கை ஓசோன் திரைகளை உலகம் முழுவதும் வானில் ஆங்காங்கே அமைத்தது ஒன்றிணைந்த உலக அரசு. ஓசோன் திரைகள் வானில் தோன்றும் இரவுகளில் அதன் முழுமையான பயன் பெற வேண்டி குறைவான ஆடைகளுடன் திறந்த வெளிகளில் உறங்குவது மக்களின் வழக்கமானது. ஆனால் இது கொசுக்களுக்கு நல்ல வேட்டை என்றாகிவிட்டது. கொசுக்களால் பரவி வந்த மலேரியா, டெங்கு, ஜிக்கா, சிக்குன்குன்யா மற்றும் 24-ம் நூற்றாண்டில் தோன்றிய கொடிய அரேமிடா... இவற்றை எல்லாம்கூட ஒழித்தாகிவிட்டது. ஆனால், இந்தக் கொசுக்கடி மற்றும் அவற்றின் காதுகளைத் துளைக்கும் பாட்டு... இதைத் தாங்க முடியாத மக்களின் கோப வெளிப்பாடுதான் கொசுக்களுக்குக் கிடைத்த இந்தப் பொது எதிரிப் பட்டம். ஆச்சரியமாக கொசு இனம் காலங்களைக் கடந்து தங்கள் எதிர்ப்புத் திறன் மற்றும் இயைந்து வாழும் இயல்பு மூலம் இன்று வரை அபரிமிதமான பரிணாம வளர்ச்சியைப் பெற்று நம்மைத் திணறடிக்கிறது. 

நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த என்னுடைய ஆராய்ச்சியில் ஒரு நாள் திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டது. பழைய நூற்றாண்டு இலக்கியங்களில் விருப்பம் கொண்ட நான் ஒரு நாள் படித்த ஒரு கதையில், ஜெர்மனியில் ஒரு நகரில் எலித்தொல்லை அதிகமாகி விடவே, அதை ஒழிக்கிறேன் என்று ஒரு குழலூதும் நாடோடி சொல்கிறான். சொன்னதுபோலவே குழல் ஊதிக்கொண்டே அத்தனை எலிகளையும் வரவைத்து ஒன்றிணைத்துக் கொண்டுபோய் மலை முகட்டிலிருந்து கீழே தள்ளிவிடுகிறான். பைடு பைப்பர் ஆஃப் ஹாமலின் எனும் இந்தக் கதை என் ஆராய்ச்சியை வேறு ஒரு பாதையில் மாற்றியது. அதன் விளைவாக கொசுக்கள் இனப்பெருக்க நேரத்தில் வெளியிடும் துல்லியமான ரீங்காரம் மற்றும் இறக்கைகளின் படபடப்பு போன்ற நுண்ணிய பல விஷயங்களை ஆராய்ந்து அவற்றை இணைத்து ஒலிக்கற்றையாக உருமாற்றும் திட்டத்தில் எனக்குக் கிட்டத்தட்ட வெற்றியும் கிடைத்தது. இந்த ஒன்றிணைந்த ஒலிக்கற்றைகளை ஒரு உபகரணம் மூலமாக வெளியிட்டு மில்லியன் கணக்கில் கொசுக்களை ஒரே இடத்திற்கு ஈர்த்துக் கொல்ல முடியும் என்பதே இந்த ஆராய்ச்சியின் மையக் கருத்து. 

ஆராய்ச்சிகள் நடப்பது மிகவும் ரகசியமாக என் வீட்டில் உள்ள சோதனைச்சாலையில். இங்கு என்னைத் தவிர, என்னுடைய உதவியாளனாக ஒரு ஜப்பானிய கணினி விற்பன்னன் அகிரா தகசாகி மட்டுமே. அவனை நியமிக்க முக்கிய காரணங்கள்: அவனுக்கு விஞ்ஞானம் பிடிபடாது, ஜப்பானிய மொழியைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாது, கணினி வடிவமைப்பில் திறமைசாலி, நேரம் பார்க்காத உழைப்பாளி. எந்த விதத்திலும் என்னுடைய சோதனைகளில் குறுக்கிட மாட்டான். என் சோதனைச்சாலையில் வெளியாகும் ஆராய்ச்சி மாதிரி முடிவுகளைப் பழங்கால முறையில் தட்டச்சு செய்து கணினியில் ஏற்றுவதற்காக எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் வராத தனித்தியங்கும் ஒரு கணினி அவனால் வடிவமைக்கப்பட்டது. அதை இயக்கும் 28 இலக்க கடவுச்சொல் இருப்பது என் மண்டைக்குள் மட்டுமே. மேலும், எந்தவித மின்னணுத் தொடர்புகளும் தொலைபேசி சாதனங்களும் இல்லாத ஒரு கட்டமைப்பை என் சோதனைச்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவன் உருவாக்கியிருந்தான். பாதுகாப்பு மற்றும் ரகசியம் கருதி, கண்காணிப்புக் கேமராக்கள்கூட அமைக்கப்பட வில்லை. சுற்றிலும் எலக்ட்ரானிக் அல்லாத வெறும் உலோகங்களால் ஆன பாதுகாப்பு வளையம் மட்டுமே. காரணம், நான் மேற்கொண்ட இந்தச் சோதனைகள் குறித்த விவரங்கள் நானே வெளியிடும் முன் வெளியுலகுக்குக் கசியுமானால் கடும் விளைவுகள் நேரிடலாம்.

இன்று மாலை நான் மேற்கொண்ட சோதனை ஓட்டங்களில் ஒன்றின் ஒலிக்கற்றைகளின் வீச்சு, என் அதிகபட்ச இலக்கான ஐந்நூறு மைல்களைத் தாண்டி இருந்தது. இதயம் படபடக்க உதவியாளன் அகிராவை இன்றும் நாளையும் அவசர விடுப்பு எடுக்கச் சொல்லி அவனது தங்கும் விடுதிக்குத் திரும்புமாறு கட்டளையிட்டேன். அவன் சென்றதும் உடனடியாக அந்தச் சோதனை ஓட்டத்தின் தரவுகளைக் கணினியைத் திறந்து நடுங்கும் கைகளால் பதிவு செய்தேன். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவில் சமர்ப்பிப்பது குறித்து மனதிற்குள் ஒரு சிறிய திட்ட வரைவு ஒன்று உருவாக்கினேன். என் கண் முன்னே ‘உலகம் போற்றும் மாந்தர்’ விருது பெறும் காட்சி விர்ச்சுவல் திரைபோலக் கற்பனையில் விரிந்தது. 

நீண்ட காலம் கழித்து முதன்முறையாக சோதனைச்சாலையில் ஓரத்திலிருந்த அலமாரி ஒன்றைத் திறந்து அதிலிருந்து அல்டிமேட்டா 38 எனும் பழைமையான விலையுயர்ந்த ஸ்காட்ச் விஸ்கியை வெளியே எடுத்தேன். 

இரவு உணவை முடித்தபோது கிட்டத்தட்ட 11 மணி என்று நினைக்கிறேன். வாயிலின் வெளியே உள்ள வரவேற்பறையில் ஏதோ அரவம் கேட்டது. அகிரா வெளியே சென்றதும் கண்டிப்பாக வெளியே உள்ள பாதுகாப்புக் கதவுகளை மூடியிருப்பான். கண்டிப்பாக ஒரு சிறு பூச்சிகூட உள்ளே வரமுடியாது. என்ன சத்தம் இது என்று வெளியே வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர், நரைத்த தலையும் தாடியுமாக ஒரு வினோதமான கருநீலநிற உடை அணிந்துகொண்டு வரவேற்பறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தார். 

“யார் நீங்கள், எப்படி உள்ளே நுழைந்தீர்கள்?”

வந்திருந்த அந்த நபர் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து ஒரு மிடறு தண்ணீரைக் குடித்துவிட்டு, தமிழில் பேசினார். “அகிரா தகசாகி வெளியே போகும்போது பதற்றத்தில் வெளிப்புற வாயில்களின் மூடும் விசைகளை முடுக்க மறந்துவிட்டான் போலும்.”

அதிர்ச்சியிலிருந்து மீளாத நான் “அகிரா... உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்?” என்று வினவினேன்.

“அதை விடுங்கள். உடனே உங்கள் ஆராய்ச்சித் தரவுகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள்” என்றார் அந்த அந்நியர்.

“என்ன உளறுகிறீர்கள், என்ன ஆராய்ச்சி, உங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும் அது குறித்து?”

“கொசுக்களை முற்றிலும் அழிக்கக் கூடிய உங்கள் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி அனைத்தும் எனக்குத் தெரியும்.”

ஆராய்ச்சி மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் கடைசியாக என்னுடைய சோதனை முடிவில் வந்த உபகரண அலைவரிசையின் வீச்சு அளவு குறித்த விவரங்களைப் படபடவென்று துல்லியமாகக் கூறினார் அந்நியர்.

“உங்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் எப்படித் தெரியும்?” ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் கேட்டேன்.

“அது இப்போது தேவையில்லாத ஒரு விஷயம். நான் வேண்டிக் கொள்வதெல்லாம், இந்த ஆராய்ச்சி முடிவுகளை இப்போதே உடனடியாக அழித்துவிடுங்கள் என்பதே.”

“மன்னிக்கவும். நீங்கள் சொல்வது புரியவில்லை.”

“நான் மன்னிப்பது இருக்கட்டும். இந்த ஆராய்ச்சி முடிவை நீங்கள் வெளியிட்டால் ஒட்டுமொத்த மனிதகுலம் முன்பு நீங்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது என்பதே நிதர்சனம். நான் சொல்லப்போவதைப் பொறுமையாகவும் கொஞ்சம் நம்பிக்கையுடனும் கேட்டால் உங்களுக்கு எல்லாம் விளங்கும்.”

“பொறுமையாக வேண்டு மானாலும் கேட்கிறேன். ஆனால் அதை நான் நம்புவேன் என்பது நிச்சயம் நடக்காது. உண்மையில் நீங்கள் யார்? கொசுக்களுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? நீங்கள் என்ன, முன்பிறவியில் கொசுவாக இருந்தீர்களா? கொசு மனித குல பொது எதிரியாகத் தெரிவு செய்யப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரியாதா?” என்று கோபமாகக் கேட்டேன்.

“கொசுக்களினால் உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு ஏற்கெனவே இருக்கிறது அல்லவா? பிறகு கொசுக்கடி மற்றும் அதன் ரீங்காரம் போன்ற சின்ன சிரமங்கள்... இவற்றுக்கும் வித விதமான உபகரணங்கள் உண்டே! 

மேலும், என்னுடைய முற்பிறவிகள் குறித்து இப்போது பேச நேரமில்லை. இந்த ஆராய்ச்சியின் காரணமாக இந்த நூற்றாண்டில் நீங்கள் கொசுக்களை முற்றிலும் அழித்துவிடலாம். ஆனால் அதன் எதிர்விளைவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? எதிர்காலத்தில் மனித குலத்தை நிரந்தரமாக அழிக்கப்போகிறது உங்கள் ஆராய்ச்சி.”

“கொசுக்களை அழித்தால் மனிதகுலம் மறைந்துவிடுமா... இது என்ன புதுக் கதை?” என்றேன் கிண்டலாக.

பொது எதிரி - சிறுகதை

“கதையல்ல. நடக்கப்போகும் உண்மை நிகழ்வுகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள். இன்றைக்கு சுமார் 400 வருடங்கள் கழித்து நடைபெறும் ஒரு போரில் ஒரு நாடு தவறுதலாக எய்த ஒரு ஏவுகணையின் விளைவாக ஒட்டுமொத்த மனித குலம் பூண்டோடு அழியப் போகிறது. அது அணு ஆயுதம் அல்ல. அதைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தது. உங்களுக்கு இப்போது சொன்னால் விளங்காத ஒரு புதிய தொழில்நுட்பம். இதனால் விலங்குகள், தாவரங்கள், மற்ற ஜீவராசிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே ஒரு அதிசயம். அதிர்ஷ்டவசமாக தொழில்நுட்பம் முன்னேறி விண்வெளியில் மிகப்பெரிய சாதனை நடந்துகொண்டிருந்த கால கட்டம் அது. செவ்வாய்க் கிரகத்தில் முன்னரே குடியேறிய நம் அறிவார்ந்த சமூகம் அங்கு ஏற்பட்ட தட்பவெப்பநிலை நெருக்கடியால் மீண்டும் பூமிக்குத் திரும்ப வருகிறார்கள். இங்கு மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அழிந்ததை அறிந்து மனம் உடைந்துபோய் உலகை மீண்டும் புனரமைக்க முயற்சி செய்கிறார்கள். காலம் கழிந்து அவர்களுக்கு ஒன்று புரிகிறது. ஏவுகணை வீச்சில் காற்றில் ஏற்பட்ட ஒரு வேதிநிலை மாற்றம் காரணமாக செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பூமியில் மீண்டும் குடியேறிய மனிதர்களின் உடலில் இனப்பெருக்கத்திறன் முற்றிலும் தடையானது என்று. இப்போதைக்கு காற்றில் உண்டான வேதிவினையைச் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதுவரை புதிய மனிதம் தழைக்கப்போவதில்லை. இப்போது மீதம் உள்ள மனித இனமும் அழிந்துவிட வேண்டியதுதான். இதற்கு ஒரே வழி, ஏவுகணைத் தாக்குதலுக்கு முன் இருந்த குறிப்பிட்ட குரோமோசோம் கொண்ட மனித ரத்தம் தேவை. இந்தக் காலகட்டத்தில் ஒரு இளம் இந்திய மரபணு விஞ்ஞானிக்குத் திடீரென்று ஏற்பட்ட ஒரு யோசனையின் பலனாக அவன் ஒரு சிறிய குழுவுடன் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் முன்பு வசித்துவந்த சைபீரிய வனப்பகுதிக்குச் செல்கிறான். உலக அழிவுக்கு முன் கொசுக்கள் அதிகமாகத் தேங்கி இருந்த அந்தப் பகுதிகளில் பல நாள்கள் வசித்து, கடும் சிரமத்திற்குப் பின் உறைபனியில் சிக்கி உறைந்திருந்த பெண் கொசுக்களை மீட்டெடுத்து, அவற்றின் உடலில் இருந்த மனித ரத்தத்திலிருந்து இனப்பெருக்க ஜீன்களை வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கிறான்.”

இந்த இடத்தில் கதையைக் கொஞ்சம் நிறுத்தி, என் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார் அவர்.

எனக்கு அவர் சொன்னது ஏதோ பழங்கால ஹாலிவுட் படங்களில் வரும் கதைபோல் இருந்தது. ஏதோ ஒரு கதையில் கொசுக்களின் ரத்தத்திலிருந்து ஜீனைப் பிரித்தெடுத்து டைனோசர்களை உருவாக்குவார் ஒரு விஞ்ஞானி. கிட்டத்தட்ட அதே கதை. ஆனால் அவர் சொன்ன கதையில் இருந்த லாஜிக் என்னையே ஆச்சரியப்படுத்தியது என்பதுதான் உண்மை.

“இதனால் நீங்கள் சொல்ல வருவது, இப்போது கொசுக்களை ஒழித்துவிட்டால் எதிர்கால விஞ்ஞானிக்குப் புதிய மனிதனை உருவாக்கத் தேவையான ஜீன் கிடைக்காது என்கிறீர்கள், அது தானே?”

“அதுவே!”

“நீங்கள் சொல்வது கேட்க நல்ல கதையாக இருந்தாலும் நான் ஏன் அதை நம்ப வேண்டும். நீங்கள் என்ன முற்றும் உணர்ந்த ஞானியா? முக்காலம் அறிந்த தீர்க்கதரிசியா? இல்லை, ஏதேனும் ஜோதிடரா?”

அவர் தலையை மேலும் கீழுமாக அசைத்து அவரது கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த துணிப்பட்டையைத் தளர்த்தினார். இப்போதுதான் அவர் கழுத்திலிருந்து சட்டைக்கு நீளமாகத் தொங்கும் அந்தப் பழுப்புநிறத் துணிப்பட்டையைக் கவனித்தேன். இருபத்துமூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வழக்கொழிந்துபோன டை என்று அழைக்கப்படும் ஆண்களின் ஆடை அணிகலன் அது. அதை முழுவதுமாக அவிழ்த்துத் தன் இடது கையில் சுருட்டி வைத்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“நான் யாராக இருக்கக் கூடும் என்று நீங்கள் பின்னர் ஒருநாள் அறிவீர்கள். தற்சமயம் நான் சொல்வதை நீங்கள் கண்டிப்பாக நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. உங்களிடம் தெரிவுசெய்ய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, கொசுக்களை முற்றிலும் ஒழித்து ‘உலகம் போற்றும் மாந்தர்’ பரிசு பெறுவது. அல்லது, அதைக் கைவிட்டு, நான் சொன்னதுபோல் அழிந்த மனித குலம் மீண்டும் உருவாக ஒரு காரணமாக இருப்பது. தேர்வு உங்களிடமே.”

பதிலேதும் கூறாமல் குழப்பமாக நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு அந்த அந்நியர் சொன்னார்.

“இன்னொரு முக்கியமான விஷயம். மனித குலம் தழைக்க வேண்டி உறைபனிக் கொசுவில் இருந்து மனித இனப்பெருக்க ஜீனைப் பிரித்தெடுக்கும் எதிர்கால விஞ்ஞானியின் பெயர் ரத்னசாகரன்.”

“தமிழரா?” 

“ஆமாம். அதுமட்டுமல்ல, அவர் உங்கள் வழித்தோன்றல். ரத்த பந்தம். சரியாகச் சொல்வதானால், உங்களது மகா மகா கொள்ளுப் பேரன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது மீண்டும் திரும்பிப் பார்த்து,

“உலகம் அழியப்போகும் வருடம் 2937. அதைக் கொஞ்சம் நினைவுகொள்ளுங்கள்” என்றார்.

“அதனால் என்ன?”

“அப்புறம் என் வயது 158” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே வெளியேறினார். 

வாயில்களை மூடும் விசையைத் தட்டிவிட்டு உள்ளே நாற்காலியில் மீண்டும் அமர, குளிரூட்டப்பட்ட அறையிலும் என் முகத்தில் வியர்வை அரும்புவதை உணர்ந்தேன். உடனே கணினிக்குச் சென்று என்னுடைய தரவுகள் பத்திரமாக உள்ளதா என்று பார்க்கத் தோன்றியது. 

கணினியைத் தொடக்கத் தேவையான கடவுச்சொல்லான இருபத்தெட்டு இலக்க எண்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து பதிவிடத் தொடங்கினேன். 

2... 9... 3... 7... இந்த எண்களை எங்கேயோ கேட்டதுபோல்... ஆங்... இதுவல்லவா அந்த அந்நியர் சொன்ன உலகம் அழியப்போகும் வருடம். இதையா தொடக்க எண்களாக என் கடவுச்சொல்லில் வைத்திருக்கிறேன். மீதமுள்ள எண்களைப் பதிவிட்டுக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொரு அதிர்ச்சி கடைசியில் காத்திருந்தது. கடவுச்சொல்லின் கடைசி மூன்று இலக்கங்கள் 1... 5... 8... இதைத்தானேஅந்த நபர் தனது வயது என்று சொல்லிவிட்டுப் போனார். இப்போது என் இதயம் வேகமாகத் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. 

ஒருவேளை அந்த நபர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசியா? அவர் கூறுவது ஒருவேளை உண்மையாக இருந்தால் நான் மனித குலத்தைக் கெடுக்க வந்த ஒரு கோடாரிக்காம்பாக அல்லவா இருப்பேன். என்னை காலம் மன்னிக்குமா? கொசுக்களை ஒழிப்பதைவிட மனிதகுலத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் அல்லவா என்னுடைய பங்கு பெரிதாக இருந்துவிடும். என் வழி தோன்றிய ரத்னசாகரன் முயற்சி தோல்வியில் அல்லவா முடியும்?

இதற்குமேல் யோசிக்க எதுவும் இல்லை. கணினியில் அவசரம் என்று குறியிட்ட பகுதிக்குச் சென்றேன். அங்கு ‘அனைத்தையும் அழித்துவிடு’ என்ற கட்டளையின் மேல் கர்சரை வைத்துத் தேர்வினேன். ‘அனைத்தையும் அழித்துவிடவா?’ கணினி கேட்டது. ‘ஆம்’ என்று தட்டச்சு செய்தேன். கட்டளைக்கேற்ப கணினி அனைத்துத் தரவுகளையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், அதன் நினைவுப் பகுதிகள் மற்றும் சேமிப்புப் பகுதிகளிலுள்ள சிப்களை முற்றிலுமாக எரித்து விட, அதனால் உண்டான ஒரு புகை நெடியை உணர முடிந்தது. 

சோதனைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த அல்டிமா இன்னும் இரண்டு லார்ஜ் ஒரே மடக்கில் குடித்துவிட்டு உறங்கப் போனேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. வாயில்மணியின் ரீங்காரம் கேட்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஏழரை. வாசலில் அகிரா நின்றுகொண்டிருந்தான். அகிரா ஜப்பானிய மொழியில் “கொமேன், ஹைஉதே யோய் திஷ்கா” என்றான்.

நான் என் காதுகளில் மைக்ரோ ஹேர்பீஸ் செருகி விட “ஐயா, மன்னிக்கவும். நான் உள்ளே வரலாமா” என்று தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னது. 

“அகிரா, இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்... உன்னை இன்று வரவேண்டாம் என்று அல்லவா சொல்லியிருந்தேன்” என்று வினவினேன். கதவைத் திறந்து விட உள்ளே நுழைந்து மீண்டும் “மன்னிக்கவும்” என்றான். 

“சரி, என்ன விஷயம் சொல்!” 

“நேற்று இங்கு நான் அமர்ந்திருந்தபோது என்னிடமிருந்த ஒரு பழங்காலத்து ‘டை’ என்று சொல்லப்படும் அணிகலன் ஒன்றை மேஜையின் மீது விட்டுச் சென்றுவிட்டேன். அதை எடுத்துச் செல்ல வந்தேன்.” 

“என்ன?” 

“இதோ இங்கிருக்கிறது” என்று நாற்காலியின் மீது இருந்த அந்தப் பழுப்புநிற டையை அகிரா சுட்டிக்காட்டினான். ஒன்றும் பேச முடியாமல் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். 

பொது எதிரி - சிறுகதை

“என்ன சொல்கிறாய், இது உன்னுடையதா?” 

“ஆமாம். உங்களுக்குத்தான் தெரியுமே, எனக்குப் பழங்காலத்துப் பொருள்களைச் சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கு என்று. அப்படி கிடைக்கப்பெற்றதுதான் இது. இருபதாம் நூற்றாண்டின் ஒரு அரிய ஆடை அணிகலன் இது” என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்துக்கொண்டு “நன்றி, வேறு ஒன்றும் இல்லையே” என்று கேட்டுவிட்டுக் கிளம்பினான்.

என்ன நடக்கிறது? நேற்று இரவு நடந்ததெல்லாம் உண்மை இல்லையா? இந்த டை அகிரா கொண்டு வந்தது என்றால் நேற்று இதை அணிந்து வந்த நபர் உண்மையிலேயே இங்கு வரவில்லையா? இதெல்லாம் ஒருவேளை வெறும் பிரமையா அல்லது அல்டிமா ஸ்காட்ச் விளைவாக வந்த கனவா? இவ்வளவு துல்லியமாக பிரமையோ கனவோ இருக்க முடியுமா? 

கணினியின் அருகில் சென்று பார்த்தபோது திரையில் ‘அனைத்தும் அழிக்கப்பட்டது’ என்ற வார்த்தைகள் ஒளிர்ந்து மின்னிக்கொண்டிருந்தன. எது உண்மை? ஒன்றும் புரியவில்லை. நேற்றிரவு வந்தது யார்? அந்த அமானுஷ்யமான மனிதர் எதிர்காலத்திலிருந்து வந்தவரா, அல்லது இறந்த காலத்திலிருந்தா? ஒருவேளை கடவுளோ! கண்காணிப்புக் கேமராக்கள் ஒன்றும் இல்லாத நிலையில் என்னால் எதையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை. நேற்று அந்த அந்நியர் இங்கே இருந்ததை என்னால் நிரூபிக்க முடியுமா? 

ஒரு மனிதர் ஒரு இடத்தில் இருக்கும்போது அவரிடமிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, பேசிய வார்த்தைகளின் ஒலி அலைகள், தெறிக்கும் நுண்ணிய எச்சில் திவலைகளின் ஈரப்பதம், உடலிலிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான இறந்த செல்களின் தூசி அறையெங்கும் வியாபித்திருக்கும். இவற்றையெல்லாம் வைத்து குறிப்பிட்ட ஒருவர் ஒரு இடத்தில் இருந்திருக்க முடியும் என்று நிரூபிக்க முடியாதா? என்னுடைய இந்த எண்ண ஓட்டம் என்னைக் கூடிய விரைவில் அடுத்த ஆராய்ச்சிக்கு உந்தியது. அதன் விளைவாக நான் கண்டுபிடித்த ஒரு உபகரணம் தான் ‘அலிபியேட்டர்.’ இதன்மூலமாக தடய அறிவியல், அரசு மற்றும் காவல்துறையினர் வசம் தேங்கியிருந்த பலவித வழக்குகளின் மர்ம முடிச்சுகளை எளிதாக அவிழ்க்க முடிந்ததால் எனக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ‘உலகம் போற்றும் மாந்தர் விருது’ கிடைத்துவிட்டது என்பது வேறு ஒரு கதை.


பொது எதிரி