சுகமான
தூக்கத்திலிருந்து என்னை அலறியடித்தபடி எழுந்திட வைத்தது அலாரம் மணி என்று
நினைத்தேன். எழுந்த பின் தான் தெரிந்தது அது டெலிபோன் மணி என்று. முன்பெல்லாம் தந்தி தரும் பயத்தை இப்போதெல்லாம்
அகால நேரத்தில் அடிக்கும் டெலிபோன் அல்லது செல் போன் மணி தருகிறது. நினைத்ததை போலவே கெட்ட செய்தி தான். செய்தியை
சொன்னவர் மணிபிரகாசம். கதிரேசன் மாரடைப்பால் இறந்து விட்டார். செய்தியை கேட்டு உறைந்து விட்டதால்
அந்த செய்திக்கு பதில் கூற தெரியாமல் ‘அடப்பாவமே.. அடக்கஷ்டமே’ என்று தோராயமாக டெலிபோனில்
மணியிடம் புலம்பினேன். கதிரேசன் என்னுடைய பால்ய நண்பர். ஏ. ஜி. எஸ்ஸில் அக்கவுண்டன்டாக
பணி புரிந்தார். 55 வயது. ஒரு மகன். ஒரு மகள். மகன் பிளானியில் இன்ஜினியரிங்
படிக்கிறான். மகள் பிளஸ் டூ படிக்கிறாள். கதிரேசன் இறந்த சோகத்தில் இருந்து சரியாக மீள்வதற்குள்
அடுத்த சோகம் வந்து பற்றிக் கொண்டது.
ஆபிஸுக்கு
லீவு போட வேண்டி வருமே! அட்லீஸ்ட் இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட வேண்டியிருக்கும். கடைசியாக கதிரேசனை பார்த்தது ஒரு
வருடத்திர்க்கு முன் அவர் வீட்டு கிரகபிரவேசத்தில் தான். நங்கநல்லூரில் வீடு. அதை கண்டுபிடிக்கப்பட்ட பாட்டை
நினைவு கூர்ந்த போது சோகம் மேலும் அதிகமானது. டெலிபோன் மணி கேட்டு சோம்பல் முறித்தபடியே
வந்த என் மனைவி விவரத்தை கேட்டதும் வருத்ததுடன் “அய்யய்யோ..அப்படின்னா நீங்க லீவு
தான் போட வேண்டியிருக்கும். பர்மிஷன் போட்டா
நங்கநல்லூருக்கு போயிட்டு திரும்ப வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, சாப்பிட்டு
ஆபிஸுக்கு போக மணி ஒண்ணாயிடும்” என்றாள். அவள் கூறியது சரி
தான். லீவு தான் போட வேண்டியிருக்கும். அவளிடமே
பத்து மணிக்கு மேல் ஆபிஸுக்கு போன் செய்யச் சொல்லி மேனேஜர் சீத்தாராமனிடம் சொல்லச்
சொல்ல வேண்டும். நாளை சீத்தாரமனை
பார்க்கும் போது வாங்கப்போகும் டோசை நினைத்து பயத்தில் தொண்டை அடைத்தது. லேசாக
சின்னச்சின்ன கவலைகள் வந்து சேர்ந்து கதிரேசனின் மரணம் தந்த கவலையை மூழ்கடிப்பது
போல தோன்றியது
ஒரு
வழியாக பஸ் பிடித்து நங்கநல்லூர் வந்து அந்த குடியிருப்பில் ஆறாவது தெருவை கண்டு
பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. தெருவிற்குள் நுழைந்ததும் வீட்டு
வாசலில் இருந்த கூட்டத்தினால் வீட்டை சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது. வீட்டை
நெருங்க நெருங்க துக்கத்தை விட பயம் தான் ஏற்பட்டது. கதிரேசனின் வீட்டை நெருங்க எடுத்துக்
கொண்ட ஐந்து நிமிசத்திற்குள் கதிரேசனை பற்றிய பல நினைவுகளை கஷ்ட்டபட்டு
நினைத்துக்கொள்ள கொஞ்சம் கவலை முகத்திலும் லேசான ஈரம் கண்களிலும் துளிர்த்தது.
உள்ளே சில கவலை தோய்ந்த முகங்களும் வெளியே சில மணி நேரத்திற்கு முன்பாகவே வந்ததால்
செட்டில் ஆனவர்களின் குசுகுசுப்பேச்சுக்களும் முரண்பாடாக தோன்றியது. பிரீசர்
பாக்ஸுக்குள் வைக்கபட்டிருந்த கதிரேசனின் உடல் மிகவும் அன்னியமாகப்பட்டது. பிரீசர் பாக்ஸுக்கு
மேலே சில பூ மாலைகள். அதை பார்த்ததும் அடடே! நாமும் ஒரு மாலை வாங்கி
வந்திருக்கலாமோ என்று தோன்றியது.
சுற்றிலும்
கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்த பெண்களை பார்த்தபோது மிகவும் சங்கடமாக இருந்தது. சற்று நேரம் அங்கிருந்த போது ஏனோ போன வருஷம் இறந்து போன பாட்டி ஞாபகம் வரவே கண்களில் கொஞ்சம் நீர் துளிர்த்தது உடனே யாரிடமாவது
துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சட்டென்று
அங்கிருந்து வெளியில் வருவது எப்படி என்று தயங்கிய போது வேறு இருவர் உள்ளே நுழையவே அந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவசரமாக வெளியேறினேன்.
வெளியே கதிரேசனின் தம்பியிடம் இது எப்படி நிகழ்ந்தது என்று சிலர் விசாரித்து கொண்டிருந்தனர். காலையிலிருந்து இதை அவர் பலரிடம் விவரித்திருப்பார் போலிருந்தது. இப்போது விவரிக்கும் போது சற்று அலுப்பு தெரிந்தது அவரிடம். சுற்றும் பலர் கதிரேசனை கடைசியாக அவரவர் பார்த்தது எப்போது என்று விவாதித்து கொண்டிருந்தனர். போன மாசம் தான் தி நகர் ரங்கநாதன் தெருவில் அவரைப் பார்த்ததாக ஒருவரும் போன வாரம் வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாப்பில் பார்த்ததாக இன்னொருவரும், ஏதோ கடைசியாக அவரைப் பார்த்து பேசியது யார் என்று அங்கே ஒரு போட்டி நடப்பது போல் இருந்தது. இதற்கிடையில் நேற்று ராத்திரி அவருடன் பேசிக்கொண்டிருந்ததை பக்கத்து வீட்டுக்காரர் விவரிக்கவே அவருக்கே வெற்றி கோப்பை வழங்கப்பட்டது போல ஒரு பெருமிதம் அவர் முகத்தில் நிலவியது. வந்த போது இருந்த சோகம் இப்போது குறைந்து சுத்தமாக நழுவியதாக உணர்ந்தேன்.
வெளியே கதிரேசனின் தம்பியிடம் இது எப்படி நிகழ்ந்தது என்று சிலர் விசாரித்து கொண்டிருந்தனர். காலையிலிருந்து இதை அவர் பலரிடம் விவரித்திருப்பார் போலிருந்தது. இப்போது விவரிக்கும் போது சற்று அலுப்பு தெரிந்தது அவரிடம். சுற்றும் பலர் கதிரேசனை கடைசியாக அவரவர் பார்த்தது எப்போது என்று விவாதித்து கொண்டிருந்தனர். போன மாசம் தான் தி நகர் ரங்கநாதன் தெருவில் அவரைப் பார்த்ததாக ஒருவரும் போன வாரம் வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாப்பில் பார்த்ததாக இன்னொருவரும், ஏதோ கடைசியாக அவரைப் பார்த்து பேசியது யார் என்று அங்கே ஒரு போட்டி நடப்பது போல் இருந்தது. இதற்கிடையில் நேற்று ராத்திரி அவருடன் பேசிக்கொண்டிருந்ததை பக்கத்து வீட்டுக்காரர் விவரிக்கவே அவருக்கே வெற்றி கோப்பை வழங்கப்பட்டது போல ஒரு பெருமிதம் அவர் முகத்தில் நிலவியது. வந்த போது இருந்த சோகம் இப்போது குறைந்து சுத்தமாக நழுவியதாக உணர்ந்தேன்.
சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம்
தெரிகிறதா என்று தேட கண்ணில் பட்டான் தங்கராஜ். எத்தனை வருடங்களாயிற்று அவனை
பார்த்து. என்னை பார்த்து சிரிப்பதா வேண்டாமா என்று அவன் தயங்குவது தெரிந்தது. இந்த
சந்தர்ப்பத்தில் இந்த இடத்தில் ஒருவரை பார்த்து சிரிக்கலாமா என்ற தயக்கம்
இருவருக்கும் ஏற்படவே முகத்தை இறுக்கமாக வைத்தபடி ஒருவரை ஒருவர் நெருங்கினோம்.
பொதுவாக ‘இப்படி ஆயிடுச்சே’ என்று நான்
சொல்ல அவனும் ஆமோதித்தான். சில நிமிடஙகள் மௌனத்திற்க்கு பிறகு தங்கராஜூ கதிரேசனை
கடைசியாக பார்த்த சம்பவத்தை நினைவு கூற நான் அவரை கிரகபிரவேசத்தில் பார்த்ததை
சொன்னேன். பின்னர் அவரவர் குடும்ப மற்றும் அலுவலக விஷயங்களை பற்றி பேசத்
தொடங்கினோம். ஒரு மணியளவில் “இப்போதைக்கு பையன் பிளானியில் இருந்து வந்து சேர
சாயந்திரம் ஆகுமாம். அப்புறம் தான் பாடியை எடுப்பாங்களாம்’”என்று
தங்கராஜ் எச்சரிக்கைப்படுத்தினான். “இல்லை தங்கராஜ் எப்படியும் கடைசி வரை இருந்து போகலாம்னு
முடிவு செய்துட்டேன்” என்று கூறவே தங்கராஜும் அதற்கு சம்மதித்தான். “எப்படியும் சாயந்திரம்
ஐந்து ஆறு மணியாகி விடும். வேண்டுமானால் ஏதாவது லைட்டாக சாப்பிட்டு வரலாம்” என்று தங்கராஜ்
கூற அது எனக்கும் சரியாகப்பட்டது. ஏற்கனவே எனக்கு லேசாக அல்சர் ப்ராப்ளம் வேற.
சாப்பிட்டு
திரும்பி வந்து இருவரும் வெளியே வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபோது
ரிலாக்ஸாக இருந்தது. வந்தபோது இருந்த துக்கம், பயம், படபடப்பு, கவலையெல்லாம் சுத்தமாக சரியாகி இருந்தது எல்லோருக்குமே
அப்படித்தானோ என்று பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக
பேச்சு தண்ணீர் பிரச்னையை பற்றி தாவியது .தங்கராஜுக்கு கொஞ்சம் கூட தண்ணீர் பிரச்னை
இல்லையாம். அண்ணாநகரில் அவனது பிளாட்டில் இருபத்து
நான்கு மணி நேரமும் தண்ணீர் கொட்டுமாம். ஆச்சர்யமாக இருந்தது. அந்த அதிசயத்தை அவன்
விவரிக்க சுற்றியிருந்தவர்கள் எல்லாம் வாய் பிளக்க பார்த்துக் கொண்டிருந்தனர். இதனிடையில்
வீட்டைச்சுற்றி நெடுகிலும் போர் எடுத்து, போர் எடுத்து நொந்து
போன என் கதையை இடையிடையே எடுத்து விட்டேன். அங்கே இருந்த அத்தனை பேரும் இந்த தண்ணீர்
பிரச்னை, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட்,
ஆதார் கார்ட் மற்றும் தேர்தல் கூட்டணி போன்ற டாபிக்கைத்தான் அலசி கொண்டிருந்தனர்.
யாருக்கும் கதிரேசன் நினைவு இருந்ததாகவே தெரியவில்லை, ஒரு சிலரை தவிர. அவர்கள் கதிரேசனின் மிக நெருங்கிய உறவினர்கள். ஈமக்கிரியைக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக பல சிரமங்களுக்கு நடுவே கதிரேசனின் மகன் பிளைட்டை பிடித்து வந்து சேரவே ஈமக்கிரியையின் கடைசி கட்ட ஆயத்தங்கள் ஆரம்பமாயின. கதிரேசனின் உடலை வெளியே கொண்டு வரவே பெண்கள் பிள்ளைகளின் கதறல்கள் அந்த சூழ்நிலையை இப்போது மிகவும் சோகமாக்கியது.
யாருக்கும் கதிரேசன் நினைவு இருந்ததாகவே தெரியவில்லை, ஒரு சிலரை தவிர. அவர்கள் கதிரேசனின் மிக நெருங்கிய உறவினர்கள். ஈமக்கிரியைக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக பல சிரமங்களுக்கு நடுவே கதிரேசனின் மகன் பிளைட்டை பிடித்து வந்து சேரவே ஈமக்கிரியையின் கடைசி கட்ட ஆயத்தங்கள் ஆரம்பமாயின. கதிரேசனின் உடலை வெளியே கொண்டு வரவே பெண்கள் பிள்ளைகளின் கதறல்கள் அந்த சூழ்நிலையை இப்போது மிகவும் சோகமாக்கியது.
மணியைப்
பார்த்தபோது ஆறே கால்.. சாவு வீட்டுக்கு வந்தால் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பவேண்டும்
என்ற சம்பிரதாயம் பலருக்கு மிகவும் வசதியாக
இருந்தது போலும். பாதி பேருக்கு மேல் நழுவி இருந்தனர், தங்கராஜ்
உட்பட. நாம் வீட்டுக்குப் போய் சேரும்போது மணி எட்டு அல்லது ஒன்பது ஆகி விடும். இந்த
நினைப்பு மீண்டும் வரவே கதிரேசனின் உடலை எடுத்துக் கொண்டு போகும் காட்சி அத்தனை துயரத்தை
தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த
ஊர்வலத்திற்கு பின்னாலேயே சிறிது தூரம் போய் அப்படியே சட்டென்று விலகி மெயின் ரோடு
பஸ் ஸ்டாப்பிற்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டபடி வாசலில் விட்டிருந்த செருப்பை
தேடினேன். இல்லவே இல்லை. போன மாதம் பாட்டாவில் வாங்கியது. முன்னூற்று தொண்ணூற்றி ஒன்பது
ரூபா தொன்னூற்று ஐந்து பைசா. கிடைத்து விடும் என்ற நம்பிக்கயில் மீண்டும் மீண்டும்
தேட கிடைக்கவேயில்லை. அதற்குள் இறுதி ஊர்வலம் தெரு முனைக்கு சென்று விட்டது. செருப்பை
தேடும் முயற்சியை கை விட்டு வெறுங்காலுடன் சிறிது ஓட்டமும் நடையுமாக ஊர்வலத்தை நெருங்கினேன்.
இப்போது தான் முதல் முறையாக தொண்டைக்குழியை
அடைத்துக்கொண்டு துக்கம் பீரிட்டு வெளியே வருவதை உணர்ந்தேன்.