Wednesday, July 14, 2021

வடை வடையாம்.. காரணாமாம்!

 

 Published: July 12th, 2021 #MyVikatan

வடையை தடை செய்வோருக்கு நான் சொல்வது ஒன்று மட்டுமே! - எமோஷனல் `வடை’ பிரியர்

#MyVikatan

 வடை

 

என்னதான் நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் கால் வைத்து விட்டாலும் நமக்கெல்லாம் குழந்தையில் மம்மு ஊட்டி விடும் போது அம்மா நிலாவை காட்டி 'அதா பாரு பாட்டி வடை சுடறாங்க' என்று சொல்லியே வளர்த்ததால் இப்போது கூட நிலாவை எவ்வளவுதான் கண்ணை சுருக்கி, இறுக்கிப் பார்த்தாலும் அதில் என்னவோ மங்கலாக பாட்டி வடை சுடற மாதிரிதான் தெரிகிறது.

துவரை சோள வடை

அப்புறம் நமக்கு தெரிந்த முதல் கதையே 'ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்துதாம். அதை ஒரு காக்கா திருடிட்டு போச்சாம்..' என்பதுதான். ஏன் அந்தக் காலத்தில் வடை சுடுவது எல்லாம் பாட்டிகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயம். யாரையும் சாராமல் வாழ வேண்டும் என்று எண்ணமுடைய வைராக்கியமான முதிர் வயது பெண்களுக்கு வாழ்வாதாரம் ஈட்டும் எளிய வழிமுறையாக ஒரு வேளை இந்த வடை சுட்டு விற்பது இருந்திருக்கலாம்.

இப்படி குழந்தைக் காலம் முதல் நாம் வடையின் வாடையோடு வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிறோம். அப்போதும் சரி, இப்போதும் சரி, ஒரு பேச்சுக்கு பெரிய விருந்து என்று சொல்வதாயிருந்தால் கூட வடை பாயசத்துடன் சாப்பாடு என்றுதான் சொல்வார்கள். கல்யாணத்துக்கும் வடை. பண்டிகைக்கும் வடை. திவச சாப்பாடானாலும் வடை தான்.

தமிழர்களின் மற்ற உணவு வகைகள் எல்லாம் சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்றால் வடை என்னவோ வேத காலத்திலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆச்சரியமாக வடை மட்டும் இந்தியாவெங்கும் பல்வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில் வடா, படா, பட்டாட்டா, சாபுதானா வடா என்றெல்லாம் உருண்டு உலா வருகிறது.

இதெல்லாம் விடுங்கள், எலியைப் பிடிக்க பொறியில் தொன்று தொட்டு நாம் வைப்பது திக்கெட்டும் மணம் பரப்பும் மசால் வடை தான். ஏனென்றால் எலிக்கு கூட அதன் மணம், திடம், ருசியின் அருமை தெரியும். பஜ்ஜியோ, சமோசாவோ வைத்தால் எலி கண்டிப்பாக அந்தப்பக்கம் வாக்கிங் போகக்கூட வராது. எனக்கென்னவோ எலி, பொறிக்குள் போனால் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தே சாகுமுன் அந்த வடையை சாப்பிட்டு விடுவோம் என்று 'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே' என்று ஹம்மிங்கோடு வருவதாகத்தான் தோன்றுகிறது.

Representational image

பொதுவாக வடையை இரண்டு வகைகளாக பிடித்துவிடலாம். ஒன்று மெதுவடை. மற்றது மசால்வடை. மெதுவடையில் கண்டிப்பாக ஓட்டை இருக்க வேண்டும். (மெதுவடையில் ஏன், எதற்காக ஓட்டை வந்தது என்று கூகுளில், ஐன்ஸ்டீன் நியூட்டன் இவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவு எக்கச்சக்க பௌதீக விஞ்ஞான ஆராய்ச்சிகள், சர்ச்சைகளை வடைப்பிரியர்கள் நடத்திக் கொண்டிருக்கிருக்கிறார்கள்). மெது வடையின் கீழ் வருவது வெங்காய வடை, கீரை வடை என்பன மட்டுமே. வாழைப்பூ வடை, பருப்பு வடை, மீண்டும் கீரை வடை மற்றும் ஆமை வடை போன்ற அனைத்து வடை வகைகளும் மசால் வடை ஒன்றியத்தின் கீழ் வரும். ரொம்ப காலம் சிறு வயதில் ஆமை வடை என்பது ஏதோ அசைவ உணவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கேன் ஆமை வடை என்று பெயர் வந்தது என்ற காரணம் பின்னர் புரிந்தது. அதன் வடிவம் கொஞ்சம் குவிந்து கெட்டியாக ஆமை ஓடு போல் இருப்பதால்தான் என்று.

சமீப காலமாக யூடியூபில் அவல் வடை, பழைய சாத வடை, புளிச்ச தோசை மாவு வடை என்று விதவிதமான வடை வகைகள் மலிந்து கிடக்கிறது. தாய்மார்களே, இதையெல்லாம் செய்யப் போய் உங்கள் பொன்னான நேரம் மற்றும் எண்ணெயை வீணாக்க வேண்டாம். இதெல்லாம் பாட்டி கிட்ட காக்கா திருடிட்டு போன டுபாக்கூர் வடை என்ற வகையின் கீழ் தான் வரும்.

இப்போதும் யாரேனும் வாக்குறுதிகளை அள்ளி விட்டால் 'அவரு வாயில வடை சுடுகிறார்' என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம் வடை சுடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. வடைக்கு ஏற்ப தேவையான உளுந்து அல்லது பிற பருப்பு வகைகளை முன்னமே ஊற வைக்க வேண்டும். பிறகு அதை பதமாக அரைத்து தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் நேர்த்தியாக பொரித்தெடுக்க வேண்டும். மசால் வடையில் மிளகு தவிர்க்கப்பட்டு பூண்டு சேரும். இதில் மெது வடை சுடுவது ஒரு பெரிய கலை. வலது கையில் பாத்திரத்திலிருந்து பதமான மாவை அளவாக எடுத்து கட்டைவிரலால் அப்படியே அதே கையில் உள்ள மாவில் ஒரு ஓட்டை செய்து நிதானமாக கொதிக்கும் எண்ணெயில் தள்ளிவிட வேண்டும். கொஞ்சம் வேகமாய் விழுந்தாலும் எண்ணெய் தெறித்து கை வெந்துவிடும். பிறகு பக்குவமாக பொன்னிறமாய் வந்ததும் கம்பி அல்லது சட்டுகத்தால் எடுக்க வேண்டும்.

Representational image

இன்றளவும் ஓட்டல்களுக்கு செல்லும் தமிழ் மக்கள் அங்கு அதிகம் சொன்ன வார்த்தைகள் "ரெண்டு இட்லி ஒரு வடை". தான். 'வடை இல்லை' என்று சொன்னால் முகம் சுருங்கிப் போகும் வடைப் பிரியர்களை அனுதினமும் எல்லா உணவகங்களிலும் காணலாம்.

கார்டன் ராம்சே உலகின் மிகப்பிரபலமான அமெரிக்க செஃப். இவருக்கு பம்பாய்க்காரர் ஒருவர் ட்விட்டரில் ஒரு தட்டில் இரண்டு வடை, சட்னி சாம்பார் உள்ள புகைப்படத்தை அனுப்ப அதற்கு அவர் கிண்டலாக 'சிறைச்சாலையிலிருந்து ட்வீட் செய்யலாம் என்று எனக்கு இதுவரை தெரியாது' என்று கமெண்ட் செய்தார். பொங்கி எழுந்தார்கள் உலகெங்கும் இருந்து வடை பிரியர்கள். உங்களுக்கு தெரியாத அல்லது புரியாத உணவு என்றால் அது சிறைச்சாலை உணவா என்று அவரை புரட்டி எடுக்க 'இல்லை, கோவிச்சுக்காதீங்க, சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன்' என்று ஜகா வாங்கினார்.

மெது வடைக்கு அமெரிக்காவின் டோனட் போன்ற தோற்றம் இருந்ததால் அவருக்கு ஏற்பட்ட குழப்பம் அது என்றும் சிலர் சால்ஜாப்பு சொன்னார்கள். டோனட் என்பது கிட்டத்தட்ட பார்க்க மெதுவடை போல் பெரிய சைஸில் இருக்கும். ஆனால் அதற்கும் மெதுவடைக்கும் ஜென்மப் பிராப்தி கூட கிடையாது. நம்ம ஊர் டீக்கடை பன் நடுவில் ஒரு ஓட்டைப் போட்டு எண்ணெயில் வறுத்தெடுத்து குலோப் ஜாமுன் ஜீராவில் முக்கி எடுத்தது போல தித்திப்பாக இருக்கும்.

பலவகை வடைகளில் வாழைப்பூ வடையை ருசியிலும் கெட்டித் தன்மையிலும் கிட்டத்தட்ட அசைவ கோலா உருண்டையின் ஒரு வெஜிடேரியன் வெர்ஷன் என்று சொல்லலாம்.

Representational image

இன்னொரு விஷயம் நம் சாப்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் மும்மூர்த்திகளான சாம்பார், ரசம், தயிர் இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு புத்தம் புது வடிவம் பெறும் ஒரே சிற்றுண்டி வடை தான். சாம்பார் வடை உச்சுக் கொட்ட வைக்கும் என்றால் ரசவடை ஆனந்தத்தை தரும். தயிர் வடையோ, தானே.. தன்னா...னே என்று பாட வைக்கும்.

வடை சாம்பாருக்கும் சாம்பார் வடைக்கும் என்ன வித்தியாசம்? வடை சாம்பார் என்று கேட்டால் சர்வர் உங்களுக்கு தருவது ஒரு பிளேட்டில் வடை, கிண்ணத்தில் சாம்பார், கொஞ்சம் போனால் போகிறது என்று சட்னி. இதே சாம்பார் வடை என்றால் கிடைப்பது சாம்பார் கடலில் மூழ்கி ஊறிய இரண்டு டைட்டானிக் மெது வடைகள்.

இன்றைக்கும் சென்னையில் பிஸியான தெருக்களின் முக்கில் இருக்கும் தள்ளு வண்டிக் கடைகளில் என்றாவது சுண்டல் வடை சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் கூச்சப்படாமல் ஒருமுறை ட்ரை பண்ணுங்க பாஸ். குழைவான சுண்டலில் ஓரிரண்டு முறுகல் மசால் வடைகளை நொறுக்கிப் போட்டு ஒரு கைப்பிடி நறுக்கிய வெங்காயத்தை அதன் மீது தூவி, ஒரு ஸ்பூன் வைத்து தருவார்கள். ஒருமுறை சாப்பிட்டு விட்டால் பிறகு உங்களை அடிக்கடி அந்த தெரு முக்கில் பார்க்க முடியும். இந்த சுண்டல் சுவைக்கு மசால் வடையின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணம்.

முன்பெல்லாம் மீந்துபோன வடைகளில் செய்யப்பட்ட ஒரு ஐட்டம் தான் வடகறி. ஆனால் இப்போது இது சென்னைக்கு புவிசார் குறியீடு கேட்டு நிற்கக்கூடிய அளவுக்கு மிகக் கடினமான செய்முறை கொண்ட அலாதியான ருசி கொண்ட ஒரு ஸ்பெஷல் சைட் டிஷ்.

கலோரி, கொலஸ்ட்ரால், எண்ணெய், கொழுப்பு என்றெல்லாம் காரணம் சொல்லி வடையை தடை செய்வோருக்கெல்லாம் நான் சொல்வது ஒன்று மட்டுமே. மக்களே, வடைக்காக பொறிக்குள் நுழைந்து உயிர் விடும் அந்த எலியின் தியாகத்துக்கு முன் இதெல்லாம் ஜுஜுபி…


-சசி

 விகடன் கட்டுரை லிங்க் :

வடையை தடை செய்வோருக்கு நான் சொல்வது ஒன்று மட்டுமே! - எமோஷனல் `வடை’ பிரியர்

'ரசா'னுபவம்

 

Published: #MyVikatan

லோ பட்ஜெட் அமிர்தம்..! - ரசக் காதலர் சொல்லும் வரலாறு #MyVikatan

 

 Representational Image

 

ரசம் எத்தனை வகைப்படும்? சிலர் அங்கிருந்து ஒன்பது வகை; நவரசம் என்று கிண்டலாக சொல்வது கேட்கிறது. நான் கேட்டது குடிக்கிற ரசம், நடிக்கிற ரசம் அல்ல. நமக்குத் தெரிந்த ரச வகைகளை வரிசைப்படுத்தினால் முதலில் இருப்பது தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம், பருப்பு ரசம் அடுத்து வருவது இஞ்சி ரசம், எலுமிச்சை ரசம், மங்களூர் ரசம் அப்புறம் மைசூர் ரசம்...

சில நட்சத்திர ஓட்டல்களில் மிளகு ரசத்தை அழகான பீங்கான் கோப்பையில் தந்து மொளகு தண்ணி சூப்பு என்று பரிமாறுகிறார்கள். விலை அதிகமில்லை, ஜென்டில்மேன், வரிகள் போக வெறும் இருநூறு ரூபாய் தான். சிலர் சூப்பை ரசம் என்று தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறார்கள். ரொம்ப தப்பு. சூப்பு வேறு. ரசம் வேறு. சூப்பை ஒரு டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம். ரசத்தையும் குடிக்கலாம். ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்து ரசம் சாதமாக சாப்பிடலாம். ஆனால் சூப்பை அப்படிச் சாப்பிட முடியுமா? உவ்வேக்..

Representational Image

சுவாரஸ்யமான நிகழ்வுகளை ரசமான சம்பவம் என்று சொல்கிறார்கள். ரசானுபவம் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். யாரும் சாம்பார் அனுபவம் அல்லது தயிரானுபவம் என்று சொல்வதில்லை. இலக்கிய விற்பன்னர்கள் கம்பனின் கவிநயத்தை கம்பரசம் என்று சிலாகிக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு தோன்றிய சில ரசப் பெருமைகள். அவ்வளவுதான். என்னுடன் ரச வாதத்துக்கு வரவேண்டாம். ரசாபாசமாகி விடும். எனவே சமரசமாகப் போய் விடுவோம். சுருக்கமாக 'ரச'னை உள்ளவர்கள் கண்டுபிடித்ததுதான் ரசம்.

ரசம் என்ற சொல் எப்படி வந்தது? சமஸ்கிரதத்தில் ரஸ் என்றால் சாறு என்று பொருள். தமிழ் வைஷ்ணவர்கள் ரசத்தை சாத்தமுது என்று அழகாக சொல்கிறார்கள். ரசத்துக்கு என்ன ஒரு இனிமையான தமிழ்ச்சொல்.

குழந்தையாய் இருக்கும்போது அம்மா ஊட்டிய ரசம் மம்மு இப்போதும் நினைவில் இருக்கிறது. ஆனால் தயிர் சாதம் சாப்பிட்ட ஞாபகம் வரவில்லை. காரணம் ரசத்தில் உள்ள நிறம், மணம், சுவை, தயிர் சாதத்தில் கிடையாது. சிலர் தயிர் சாதத்தை தத்தியோன்னம் என்றும் அழைக்கிறார்கள்., ஏன் என்று தெரியவில்லை. மந்தமாக இருப்பவர்களை தத்தி என்று ஏன் சொல்கிறார்கள். அதுவும் சத்தியமாகத் தெரியாது.

Representational Image

தென்னிந்தியா முழுக்க தங்கு தடையின்றி ஊடுருவிய ரசம் ஏன் வடக்கு பக்கம் செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம் சப்பாத்தியில் ரசத்தை ஊற்றினால் அமேசான் காடுகளில் உள்ள சதுப்பு நிலம் போல ஆகிவிடும். சாதத்தை தவிர வேறு எதுவும் ரசத்துடன் சேராது என்பது நிதர்சனம்.

ஏன் தயிர் வடை அளவுக்கு ரசவடை பிரபலமாகவில்லை. காரணம் தயிர் எதனுடனும் எளிதில் ஜெல் ஆகாது. அப்படியே அம்மாஞ்சியாக 'தனியே தன்னந்தனியே, நான் காத்து காத்து நின்றேன்' என்று உட்கார்ந்து கொண்டிருக்கும். ஆனால் ரசமோ ஊணுக்குள் நுழைந்து உயிருக்குள் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகிவிடும். அதன் காரணமாக ரசம் ஊற்றிய வடை மனது இளகி சொதசொதவென்று ஆகி விடும். அப்புறம் இன்னொரு விஷயம். ரசமலாய் என்ற ஒரு இனிப்புக்கும் நம்ம ரசத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதை மண்டையில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அடிச்சக்கை என்ற வார்த்தை எப்படி வந்தது என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பாராட்டும் விதமாக சொல்லும் இந்த வார்த்தையில் ரசத்தின் அடிசக்கையை பற்றிய தத்துவார்த்தமான விளக்கம் ஏதேனும் பொதிந்துள்ளதா தெரியவில்லை. ஏனென்றால் எல்லோரும் தெளிரசம் எடுத்த பின் கடைசியில் மிஞ்சுவது ஒதுக்கப்பட்டு விடும் அடிச்சக்கை தான்.

கொஞ்சம் தூக்கலாக சீரகமும் மிளகும் சேர்த்த ரசம் தான் தற்போதைய கபசுர குடிநீருக்கெல்லாம் கொள்ளுத் தாத்தா. கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள மூன்று பிரபல மருத்துவமனைகளில் உணவுடன் தரப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நம்புங்கள், ஜீரகம், பூண்டு, மஞ்சள், மிளகு சேர்த்த ரசம் தான். மிகுந்த வரவேற்பு பெற்ற இந்த மருந்தை சப்ளை செய்தவர் நம்ம ஊர் அமெரிக்க அஞ்சப்பர் செஃப் அருண் ராஜ துரை.

ரசம்!

இப்போதும் சுரமும் வயிற்றுக் கோளாறும் ஏற்பட்டால் மருத்துவர் மற்றும் பாட்டி சொல்வது "நைட்ல டையட்டுக்கு லைட்டா வெல் குக்குட் ரசம் ரைஸ் எடுத்துக்கோங்க." (பீஸ் ஐநூறு ரூபாய்) "தாஙக்ஸ் டாக்டர்"


"கண்ணு, ராத்திரிக்கு குழைவா ரசம் சாதம் சாப்பிட்டு படுத்துக்கோப்பா."

"சும்மா கிடந்து கத்தாத பாட்டி.."

ரசம் எப்போதும் நம் இலையில், தட்டில் சாதத்துக்கு சேர்த்துக்கொள்ள இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக பரிமாறப்படும் ஐட்டம் தான். இதைசாம்பார் போல அரக்கப்பரக்க சூடாக ஊற்றி பிசைந்து சாப்பிடக் கூடாது. சாதத்தை லேசாக விரவி முதலில் கொஞ்சமாக ஒரு கரண்டி ரசத்தை குவிந்த கையில் வாங்கி "'மைக் டெஸ்டிங்' என்று குடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் இன்னும் என்று சிறிது சிறிதாக சாதத்தில் சேர்க்க வேண்டும். சிமெண்ட் கலவை செய்யும் ஒரு கொத்தனார் நேர்த்தியுடன் அது ஒரு பதத்துக்கு வந்தவுடன் (தளதள என்று ததும்பி நிற்கும்) லேசாக சூடான ரசத்தை மீண்டும் ஒரு காட்டு காட்டிய பிறகு சாப்பிட வேண்டும்.

ரசம் நன்றாக இருந்துவிட்டால் பந்தியை விட்டு எழுந்து கொள்ளுமுன் கூச்சப்படாமல் ஒரு டம்ளரில் கேட்டு வாங்கிக் குடிக்க வேண்டும். (இல்லைன்னா, பின்னாடி வருத்தப்படுவீங்க) ருசிக்காக மட்டுமல்ல, ஜீரணத்துக்கும் இது உதவும். ரசப் பட்டியலில் தினம் தினம் டெல்டா, டெல்டா பிளஸ் போல புதிது புதிதாக சேர்க்கை உண்டாகி இப்போது இருநூறுக்கும் மேல் பட்டியலில் இருக்கிறது. பைனாப்பிள் ரசம், முருங்கைக்காய் ரசம், புதினா ரசம், முருங்கைக்கீரை ரசம் என்று. இதைத் தவிர ஏற்கனவே உள்ள பட்டியலில் வேப்பம்பூ ரசம் மற்றும் கொள்ளு ரசம் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளு ரசம் ஆந்திராவில் மிகப் பிரபலம். அங்கு இதை உலவச் சாறு என்பார்கள்.

நம் பாட்டிகள் காலத்தில் வத்தக்குழம்பை கல்சட்டியிலும் ரசத்தை ஈய சொம்பிலும் தான் செய்தார்கள். ஈய சொம்பில் செய்யும் ரசம் அவ்வளவு அபார ருசியாக இருக்குமாம். ஈயமும் புளியும் சேர்ந்து லேசாக கொதிக்கும்போது ஏற்படும் ஒரு சின்ன ரசாயன மாற்றம் தான் இந்த ருசிக்கு காரணம் என்று சொல்வார்கள். நாளடைவில் ஈயம் உடம்புக்கு மிக கெடுதி என்று பரவலாக பேசப்பட்டதால் ஈய சொம்பு வழக்கொழிந்தது.


ரசத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்ற சர்ச்சைக்கு இன்றளவில் சரியான பதில் இல்லை. சில ஆராய்ச்சிகள் மதுரையில் தான் பதினாறாம் நூற்றாண்டில் முதலில் ரசம் உருவானது என்கிறது. ஆனால் இன்றைக்கும் மங்களூர்காரர்களின் பந்தியில் ரசத்துக்கு தான் முதல் மரியாதை. அங்கு பந்தியில் சாதத்துக்கு முதலில் பரிமாறப்படுவது ரசம் தான். அதனால் ரசத்துக்கு புவிசார் குறியீடு தருவதாக இருந்தால் என் ஓட்டு அவர்களுக்குத்தான். ஆனால் மங்களூர் ரசத்தில் வெல்லம் சேர்ப்பதால் காரசாரம் குறைந்து ஒரு அசட்டுத் தித்திப்புடன் இருக்கும். முதல் முறையாக ஒரு மங்களூர் கல்யாணப் பந்தியில் இப்படி முதலிலேயே சாப்பாட்டுக்கு ரசம் ஊற்றிவிட, (பரிமாறுபவர் ஒருவர் வேறு என்னைப் பார்த்து 'பேக்கா, பேக்கா' என்று கேட்டுக் கொண்டே இருந்தார், நான் பேக்கு இல்ல என்று சொன்னதும் அவருக்கும் புரியவில்லை) அவ்வளவுதான் சாப்பாடு முடிந்தது என்று நினைத்து எழுந்துகொண்ட ஒரு அனுபவம் எனக்கு உண்டு. பேக்கா என்றால் கன்னடத்தில் வேணுமா என்று அப்புறம் தான் எனக்கு தெரிந்தது.

ரசம்

இன்றளவில் வெறும் ரசம் சாதம் மட்டும் அப்பளத்துடன் சாப்பிடும் ஏழை எளியவர்களுக்கு ரசம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் என்ன சந்தேகம். "வயிறு சரியில்லை. இன்னைக்கு எனக்கு சாதத்துக்கு வெறும் மிளகு ரசம் போதும். தொட்டுக்க ஏதாவது துவையல் பண்ணிடு" என்பது எல்லோரும் வீட்டில் அடிக்கடி சொல்லும் டயலாக் தான்.

ஒரு பந்தியில் நூறு வகை பதார்த்தங்கள் பரிமாறினாலும் நல்ல ருசியான ரசம் இல்லை என்றால் அது முழுமை அடையாது ரசம் நன்றாக இருந்துவிட்டால் ரசம் சூப்பர் என்ற குரல்களை பந்தியில் அங்கங்கே கேட்கலாம். ஒன்றும் வேண்டாம். சாப்பிட்டபின் கூச்சப்படாமல் தலைமை சமையல்காரரிடம் போய் 'இன்றைக்கு ரசம் அருமை' என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். அவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாவதைக் காணலாம்.

-சசி

  விகடன் கட்டுரை லிங்க்:

 லோ பட்ஜெட் அமிர்தம்..! - ரசக் காதலர் சொல்லும் வரலாறு

 

உப்புமா மகாத்மியம்

 

Published:  #MyVikatan
 
தேவையில்லாம முந்திரியெல்லாம் தூவி விடாதீங்கப்பா..! - இப்படிக்கு உப்புமா காதலர்

 #MyVikatan

 உப்புமா


 

 

ஏங்க, கால டிபன் என்ன பண்ண? ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்க"


"இட்லி, இல்ல தோசை"


"இது ஒரு ஐடியாவா.. அப்புறம் கிரைண்டர்ல வேற நேத்து மாவு போடல."


"பூரி சப்பாத்தி?"


"வேண்டாங்க, சைடு டிஷ் செய்ய மெனக்கெடனும்."


"பொங்கல்?"


"குக்கர் ஏத்தனும், ஆபீசுக்கு டைம் ஆயிடுமே"


"அப்ப இடியாப்பம் குருமா?"


"இந்த கிண்டல் தானே வேண்டாம்கிறது"


"எதுக்கு தேவையில்லாம பில்டப் போடற!. எப்பவும் நீ பண்ற அந்த மொக்கையே செஞ்சி தொலை."

(இது நம்மில் பாதி பேர் வீட்டில் காலையில் ஆபிஸ் அவசரத்தில் கேட்கும் பொதுவான டயலாக்ஸ்.)

இங்கு மொக்கை என்ற அடைமொழி பெற்றது நம்ம சாட்சாத் உப்புமான்னு உங்க எல்லாருக்கும் முதலிலேயே புரிந்திருக்கும்.

பலர் பொது வெளியில் உப்புமாவை தொடர்ந்து கரித்துக் கொட்டியும் கிண்டலடித்தும் ஜோக் போட்டபடியும் இருக்கிறார்கள். ஆனால் நான் சத்தியமாக ஒன்று சொல்லுவேன். இவர்கள் அத்தனை பேரும் வாரத்துக்கு மூன்று நாள் அரக்கப் பரக்க உப்புமாவை சாப்பிட்டு விட்டு ஆபிசுக்கு ஓடுபவர்கள் தான்.


இவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி தர விஷயம் ஒன்றைக் கூகுள் காட்டுகிறது. ப்ளாய்ட் கார்டோஸ் இந்தியாவில் பிறந்த அமெரிக்கர். இவர் ‘டாப் செஃப்’ போட்டியில் 2011ல் கலந்துகொண்டு பைனல்ஸ் சென்று அப்போதைய மதிப்பில் ஐம்பது லட்சம் ரூபாய் ஜெயித்தார். இறுதிப் போட்டியில் அவர் செய்த டிஷ்,.. நம்புங்க, நமது உப்புமா தான்.

உப்புமாவுக்கு ஏன் உப்புமா என்று பேர் வந்தது, உப்பு போட்ட மாவா? இல்ல வெந்து உப்பி வருவதாலா? என்ற ஆராய்ச்சி எல்லாம் நான் செய்யப் போவதுக் கிடையாது. ஆனால் உப்புமாவைப் பற்றிய சில தகவல்களை மட்டும் கிண்டலாம் வாங்க.

புள்ளி விவரம் தெளிவாக சொல்லுகிறது. இன்றைய தேதிக்கு நமது ஒட்டு மொத்த உலக வாழ் தமிழர்கள் அதிகமாக சாப்பிடும் காலை உணவு இட்லியோ தோசையோ கிடையாது, உப்புமா தான். எப்படி இந்த உப்புமா தென் இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்'கம்' போல பச்சக் என்று ஒட்டிக் கொண்டது?. மேலும் உப்புமா உடம்புக்கு நல்லதா?.. கெட்டதா?.. போன்ற கேள்விக்கெல்லாம்.. பதில் நிஜமா தெரியலப்பா.. .

உப்புமாவுக்கென்று நிறைய தனித்தன்மை உண்டு. இட்லியை எடுத்துக் கொண்டால் அதில் பல வகைகள் உண்டு, ரவா இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி காஞ்சிபுரம் இட்லி அப்புறம் குஷ்பு இட்லி.. அப்படி இப்படி என்று. அதே போல தோசையில்.. மசாலா தோசை, ரவா தோசை,.. இப்படி எதை வேண்டுமானால் தோசைக்கு அடைமொழியாக சேர்த்துக் கொள்ளலாம். அத்தனை வகை உண்டு. ஆனால் உப்பு என்றால் ரவா உப்புமா மட்டும்தாங்க. அரிசி உப்புமா, கோதுமை உப்புமா, ப்ரெட் உப்புமா இதெல்லாம் என்னவென்று நீங்கள் கேள்வியெழுப்பலாம். அவையெல்லாம் உப்புமா வகையேக் கிடையாது. வீணாக கோவத்தை கிண்டாதீங்க. அந்த உணவுகளின் பெயரில் அனாவசியமாக உப்புமா சேர்ந்திருக்கு, அவ்வளவு தான். தவிர அவற்றை செய்யவதற்கு ரொம்ப மெனக்கெட வேண்டும்.

Representational Image

ரவா உப்புமா செய்ய தண்ணி கொதிக்கும் ஐந்து நிமிஷம் போதும். மொத்தமே அஞ்சு மூலப்பொருள்கள் தான். ரவை (இத வறுக்கனுமா, வேணாமா? இந்த பஞ்சாயத்தை இன்னொரு நாள் வெச்சிக்கலாம்) நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய்,(பொடியா அரிந்த இஞ்சி உங்க விருப்பம்) கடுகு, (க.பருப்பு, உ.பருப்பு கையில் கிடைத்தால் கொஞ்சம் தெறிக்க விடுங்க) கருவேப்பிலை, எண்ணெய் அவ்வளவுதான். சிலர் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் கிள்ளி போடுவார்கள். சாலமன் பாப்பையா சொல்வதைப்போல அதுவும் நல்லாத்தான்யா இருக்கும். அடுப்புல ஒரு வாணலிய, அதான்பா, கடாய், அல்லது ஒரு பாத்திரத்தை ஏற்றி, ரவையைத் தவிர மற்ற ஐட்டங்களை தாளித்துவிட்டு, தண்ணியை ஊற்றி அது கொதித்ததும் ரவையைக் கொட்டி கை வலிக்காமல் கிண்டினால் சுடச் சுட உப்புமா ரெடி. இது தாங்க உலகத்திலேயே ரொம்ப சின்ன ரெசிப்பி. அப்புறம் முக்கியமாக உப்பு போட மறந்துடாதீங்க. பேருக்கே பங்கமாயிடும்.

உப்பில்லா உப்புமா குப்பையிலே. உப்புமாவை டேஸ்ட்டா செய்யுறேன் பேர்வழி என்று அதில் இந்த அஞ்சு விஷயம் தவிர வேறு எதை சேர்த்தாலும் அது உப்புமா கிடையாது, உருமாறிய உப்புமாவாக கூட இருக்காது. வேறு ஒரு சிற்றுண்டியாக மாறிவிடும். தக்காளியைப் போட்டு மஞ்சத்தூளை தட்டி விட்டால் அது கிச்சடி ஆகிவிடும். காய்கறி சேர்த்து செய்தால், பாத்துப்பா.. அது விஜிடபுள் பாத் ஆகிவிடும். முக்கியமாக தேவையில்லாமால் இந்த முந்திரியை தூவி விடுவது, திராட்சையை போடுவதென்று பந்தா காட்டுறது எல்லாம் உப்புமாவுக்கு செட் ஆகாது. பச்சக் குழந்தைக்கு பட்டு வேட்டி கட்டிவிட்டாப் போல இருக்கும்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். ஐந்து நிமிஷத்தில செய்யும் உப்புமாவை ஐந்தே நிமிசத்துக்குள் சுடச் சுட சாப்பிட வேண்டும். நேரம் கடந்து ஆறிப் போன உப்புமாவை சாப்பிடக் கூடாது. (வேற வழியில்லாம நாம சாப்பிடுவோம், அது நமக்குள்ள பெர்சனல் விஷயம். விவாதம் வேண்டாம்.)

இன்னொன்று, சொல்கிறேன்.. இதை சொல்ல கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. துக்கவீட்டில் சோகத்தில இருக்கும் அனைவரும் சாப்பிட இட்லி தோசையோ பொங்கலோ ஆக்கி போட முடியாது. வீட்டுக்குள் உலை ஏத்தவும் கூடாது, அதனால் வாசலில், அல்லது அக்கம் பக்கத்து வீட்டில் சட்டு புட்டென்று வேலையை முடிப்பதற்கு உப்புமா தான் அவசர கால 101 போல.

Representational Image

ஏதாவது ஹோட்டலுக்கு போனால் இங்கே தோசை சூப்பர், அங்கு வடகறி அட்டகாசம். சில இடங்களில் பூரி கிழங்கு செம டேஸ்ட் இப்படி பலர் அடையாளம் காட்டுவார்கள். ஆனால் ஏதாவது ஒரு ஹோட்டலில் யாராவது உப்புமா சூப்பர் என்று சொன்னால் அந்த ஹோட்டல் சமையற்காரர் கண்டிப்பாக நளமகராஜாவின் மறுபிறவியாகத்தான் இருக்க வேண்டும். அவரை கண்டிப்பாக தரிசனம் பண்ணிடுங்கோ. அப்படியே அவரின் உப்புமா செய்விதமும் தெரிஞ்சுக்கிட்டா ஜென்மத்துக்கும் உபயோகப்படும்.

இன்னொரு விஷயம், உப்புமா ஒன்று தான் சட்னி சாம்பார் என்று எந்த வித சைட் டிஷ்சும் இல்லாமல் ஸ்ட்ரெயிட்டாக பரிமாறக் கூடிய ஒரே டிபன் ஐட்டம். அதே சமயம் எதை வேண்டுமானாலும் சேர்த்தும் சாப்பிடலாம். சட்னி, சாம்பார், ஏன், சர்க்கரை, வாழைப்பழம், அவசரத்துக்கு ஊறுகாய் கூட உப்புமாவோடு சேரும். உப்புமாவுக்கு தோழனாக முறுகலான மசால் வடையை சேர்த்துக்கொண்டால் செம காம்போ. மெது வடை சரி வராது.

தனியாக வசிக்கும் பேச்சுலர் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது டீ போடுவதற்குதான். அடுத்தது கண்டிப்பாக ஆம்லெட் போடக் கற்றுக் கொள்ள வேண்டும். மூணாவதாக முக்கியமாக உப்புமா கிண்ட கற்றுக்கொண்டால் மிச்சக் காலத்தை ஈசியாக ஓட்டி விடலாம்.

நான் கேள்விப்பட்ட வரை சென்னை உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் இல் உப்புமா ரொம்ப பிரசித்தம். முன்பெல்லாம் எங்கள் வீட்டில் அப்பா செய்யும் உப்புமாவுக்கு அவருடைய பேரப்பிள்ளைகளிடம் கிராக்கி அதிகம். உப்புமா கொதித்து கிண்டி விடும் போது கொஞ்சம் பால் சேர்த்து அவர் செய்யும் குழைவான வெள்ளை வெளேர் உப்புமா ஒரு டைப். உப்புமாவை கிண்டி கிண்டி கொஞ்சம் தூக்கலாக எண்ணெய் சேர்த்து முட்டை பொடிமாஸ் போல ட்ரை உப்புமா ஒரு வகை என்று அசத்துவார். சின்ன வயதில் உப்புமா விரோதிகள் சங்கத்துக்கு தலைவராக வலம் வந்த எனக்கே இந்த ட்ரை உப்புமா பிடித்திருந்தது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

Representational Image

ஹைதராபாத்துக்கு வேலையில் டிரான்ஸ்பர் ஆனப் பிறகு சென்னையிலிருந்து காச்சிகுடா ரயிலில் போகும் போதெல்லாம் ரேணிகுண்டா ஸ்டேஷனில் ராத்திரி எட்டு மணி வாக்கில் ஒரு இருபது நிமிடம் ரயில் நிற்கும். ரயிலில் இருப்பவர்கள் முக்கால் வாசி பேர் ஏதோ கலவரம் வந்த மாதிரி வெளியே ஓடுவார்கள்.

வரும்போது ஒரு திறந்த காகித பொட்டலத்தை இரு கைகளால் ஏந்தியபடி சூசூ என்று உச்சு கொட்டி கொண்டு வருவார்கள். அப்புறம் ஒரு நாள் நானும் வாங்கி சாப்பிட்டேன். ஓரு நியூஸ் பேப்பர் காயிதத்துக்கு மேல் இலையை வைத்து, அதில் குழைவான உப்புமா ரெண்டு கரண்டி, ஒரு மசால் வடை; அப்புறம் கொஞ்சம் சிகப்பு கார சட்னி. இலையை மடித்து தரக் கூட கடைக்காரனுக்கு நேரம் இருக்காது.

Representational Image

அவ்வளவு கூட்டம் அலைமோதும். அப்படியே இரண்டு கையில் ஏந்திக்கிட்டு ட்ரெயினுக்கு திரும்பவேண்டும். அந்த ரவா உப்புமாவுல தாளித்தல் கூட சன்னமா தான் இருக்கும். ஆனால் உப்புமா கொதிக்கும் சூடுல இருக்கும். ஸ்பூன் எல்லாம் இல்லை. அந்த பொட்டலத்திலிருந்து நேராக கை விரல்களால் உஸ்..உஸ் என்று 'சால பாக உந்தி' என்று நமக்கு தெரிந்த மூன்று வார்த்தையில் பாராட்டிக்கொண்டே ஆவி பறக்க சாப்பிடவேண்டும்.. சூடு....அது தான் அந்த உப்புமாவின் சுவையின் ரகசியம். அதற்கப்புறம் ஒவ்வொருமுறையும் ரேணிகுண்டா வந்தால் நானும் கூட்டத்தோடு தலை தெறிக்க வெளியே ஓடுவேன்.

நாளைக்கு உங்கள் வீட்டில் என்ன டிபன்? உங்களில் பலருடைய பதில் ப்ராபபிலிட்டி தியரிபடி உப்புமா என்பதாகத் தான் இருக்கும். என்ஜாயி எஞ்சாமி...!


-சசி

 

 விகடன் கட்டுரை லிங்க்:  

தேவையில்லாம முந்திரியெல்லாம் தூவி விடாதீங்கப்பா..! - இப்படிக்கு உப்புமா காதலர்