கவர்னரும் தமிழும்!
சமீபத்தில்
ஒரு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று
தமிழில் கூறி விட்டு ஒரு சில வினாடிகள் இடைவெளி விடவே பார்வையாளர்களிடையே
பலத்த கரகோஷம்…மீண்டும் உரையைத் தொடங்கிய கவர்னர்
(ஆங்கிலத்தில் தான்) தமிழ் மக்களைக் கவர்ந்து விடுவதற்கு 'வணக்கம்' என்ற
இந்த ஒற்றைத்தமிழ் வார்த்தையை மட்டுமே சொன்னால் போதுமானது என்று கூறினார்.
சமீபத்தில் இதேபோல் ஒரு விழாவில் பிரதமர்
மோடி பேசத் தொடங்குமுன் தமிழில் தான் ஏற்கனவே மனப்பாடம் செய்த ஒரு சில
வாக்கியங்களைக் கடித்துக் குதறித் தட்டுத் தடுமாறி பேச அவருக்கும்
அரங்கத்தில் பலத்தக் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. அந்தக் கைதட்டல்கள்
வேண்டுமானால் அவருடைய மனப்பாடம் செய்யும் திறனுக்கு என்று கொள்ளலாமே தவிரக்
கண்டிப்பாக அவர் பேசிய தமிழுக்காக அல்ல என்பதே என் கருத்து.
வேற்று மாநிலத்தவரோ அல்லது வேற்று
மொழிக்காரர்களோ தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசினாலே தமிழ் மக்கள்
புளகாங்கிதம் அடைந்து விடும் உளவியல் நுட்பம் எனக்கு நிச்சயமாக இன்னும்
பிடிபடவில்லை. ஹிந்தி பேசும் தமிழர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வட
மாநிலத்தவரை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? உண்மையில் அவர்கள் நீங்கள்
பேசும் ஹிந்தியில் தவறு இருந்தால் அதைக் கேலி செய்து சுட்டிக்காட்டுவார்களே
தவிர ஒரு போதும் மகிழ்ச்சியோ ஆச்சரியமோ அடைவதில்லை.
அந்தக்கால மெஹ்மூத் படம் தொடங்கி
இந்தக்கால ஷாருக்கான் திரைப்படம் வரை தமிழர்களின் ஹிந்தி மற்றும் ஆங்கிலம்
பேசும் தொனியைக் கிண்டல் செய்து நக்கலடிப்பதே இவர்கள் வாடிக்கையும்
வேடிக்கையுமாகக் கொண்டுள்ளார்கள்.
ஒவ்வொரு மொழி சார்ந்த மாநிலத்தவர்க்கு
அவரவர்க்குரிய பேச்சுத்தொனி உண்டு என்பதை மறுக்க முடியாது. உதாரணத்திற்கு
மலையாளிகள் ஆட்டோவை ஓட்டோ என்றும் ஆபீஸ்க்கு ஓபிஸ் என்றும் கூறுவதைக்
கேட்டிருக்கலாம். சில வட மாநிலத்தவர்கள் ஈசி என்பதை ஈஜி என்றும் பீகார்
மாநிலத்தைச் சேர்ந்த பலர்five என்பதற்குphiveஎன்றும் சொல்லக்கேட்டதுண்டு.
இது உலகம் முழுக்க உள்ள இனம் மற்றும் மொழி சார்ந்த பழக்கத்தினால் ஏற்பட்ட
சரிப்படுத்தக்கூடிய ஒரு உரையாடல் சிக்கலே.
பல வருடங்களுக்கு முன் பணிமாற்றம்
காரணமாகத் தில்லிக்குச் சென்ற போது எனக்கு நேர்ந்த அனுபவங்களை இங்கு நினைவு
கூர விரும்புகிறேன். முதன்முதலில் அலுவலகத்திற்குச் சென்றதும் என்னிடம்
அவர்கள் ஆச்சரியப்பட்ட மற்றும் அதிசயப்பட்ட முக்கியமான விஷயம் "என்ன
உங்களுக்கு ஹிந்தி தெரியாதா?" என்பதே. ஓரிரு வாரங்களுக்குப் பின்னர்
அவர்கள் கேட்டது "என்ன நீங்கள் இன்னும் ஹிந்தி கற்றுக்கொள்ளவில்லையா?"
அவர்களைப் பொறுத்தவரை ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின்
பிறப்புரிமை மாதிரி ஒரு பிறப்புக் கடமை. ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள எவ்வளவு
அவகாசம் தேவைப்படும் என்பதெல்லாம் அவர்கள்கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
ஓரளவு சுமாராக ஹிந்தி பேசக் கற்றுக்
கொண்டதும் அவர்கள் செய்தது நான் பேசும் ஹிந்தியில் உள்ள குற்றம் குறைகளைக்
கண்டுபிடித்துத் தங்களுக்குள் கூடிப் பேசி கேலி செய்து சிரித்துக்கொள்வதே. சில காலம் கடந்த பின்னர் நான் ஹிந்தியில் சரளமாகப் பேசத்தொடங்கிய பின்னும்
அவர்கள் எந்த ஒரு ஆச்சரியமோ மகிழ்ச்சியோ காட்டிக்கொள்ளவில்லை. இப்போது
அவர்கள் நான் பேசுவதைக் கூர்ந்து கவனித்து அதில் தவறுகள் கண்டு பிடிப்பதில்
மிகுந்த சிரத்தைக் காட்டினார்கள். அப்போதெல்லாம் அவர்களிடம் நான்
சிரித்தபடி சொல்வது.. தொழில் நிமித்தம் வட இந்தியாவிலிருந்து வந்து
மாமாங்கமாகத் தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் கூட இன்னும் தமிழில் ‘நம்பள்கி
நிம்பள்கி’ லெவலை தாண்டவில்லை என்ற உண்மையைத்தான்.
இந்தப்பிரிவைச் சேர்ந்த வட இந்தியர்களில்
மொத்தத்தில் தொண்ணூறு சதவிகிதம் பேர் இன்னும் ஒரு வாக்கியம் கூட தமிழில்
பேசத்தெரியாதவர்களே. இங்கு அவர்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது
இல்லை. தமிழகம் புலம் பெயர்ந்த தமிழ் பேசத் தெரிந்த வட இந்தியர்களை விடத்
தமிழ் கற்றுத் தேர்ந்த ரஷியர்களும் ஜப்பானியர்களுமே அதிகம் என்பதே
நிதர்சனம்.
நான் முதலில் கூறிய நிகழ்ச்சியில் கவர்னர்
மேலும் பேசுகையில் தான் ஆசிரியர்களை வைத்து மும்முரமாகத் தமிழ்
கற்றுக்கொள்வதாகவும் கூடிய விரைவில் உங்களிடம் தமிழில் முழுமையாக
உரையாற்றுவேன் என்றும் சொன்னார். அவர் ஆற்றப் போகும் அந்தத் தமிழுரைக்காக
நானும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
-சசி
No comments:
Post a Comment