சசி 2.0
கடந்த வாரம் புதன்கிழமை.
உறங்கும் முன் யதேச்சையாக அந்த மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு அப்படியொரு
ஷாக். உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்ச subject line-இல் “சசி” என்று
இருந்த அந்த ஒற்றை வார்த்தை போதுமானதாக இருந்தது.
கோலி, கில்லி, பம்பரம், கிரிக்கெட் போன்ற சென்னையின்
(அக்கால) அத்தியாவசிய விளையாட்டுகளுடன் தொடங்கியது என் பால்யம்.
அக்கம்பக்கத்து வாண்டுகள் அடங்கிய தனி ‘ஜமா’வுடன் தேசியத் தெரு
விளையாட்டுகளை நான் பயின்று வந்த நேரத்தில், எங்கிருத்து, எப்பொழுது
சசியுடன் அறிமுகம் ஏற்பட்டது என்பது நினைவில்லை. ஆனால் அதன்பின் சசி
என்னுள் இட்டதெல்லாம் அழியாத கோலங்கள்.
சசியின்
வீடு அடுத்தத் தெருவில். தினமும் மாலையில் சந்தித்துவிடுவோம். பெரும்பாலும்
எங்கள் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்து, நான் தெரு விளையாட்டுகளை
முடித்துவிட்டு வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பான். பிறகு பேசுவான். வாய்
பிளக்காத குறையாகக் கேட்பேன்.
குமுதம்
பத்திரிகையைப் புரட்டுவதும் தினத்தந்தி கன்னித்தீவு போன்றவைதாம் அச்சமயம்
எனது வாசிப்பு விசாலம். ஆனால் சசிதரனோ அந்த வயதிலேயே சிறுவர்
பத்திரிகைகளில் எழுதும் அளவிற்குக் கில்லாடி. முயல் தெரியுமா, அணில்
படிச்சிருக்கியா என்று சிறுவர் பத்திரிகைக்கு என்னை அறிமுகப்படுத்தி,
பொன்னி, வாசு காமிக்ஸ்லாம் அடாசு, முத்து காமிக்ஸ் படி என்று அறிவுறுத்தி,
அவனது சங்காத்தம் அளித்த உத்வேகத்தில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது
நானும் முயல் பத்திரிகைக்குக் கதை எழுதி அனுப்பி அது பிரசுரமும்
ஆகிவிட்டது.
‘நைலான்
கயிறு படிச்சிருக்கியா?’ என்று சுஜாதாவை அறிமுகப்படுத்தினான். விபரீதக்
கோட்பாடு நாவலை அவன் விவரித்த விவரிப்பில் அசந்துபோய், உடனே வாங்கிப்
படித்து அங்கு ஆரம்பித்தது சுஜாதா எழுத்துடன் என் தொடர்பு. அகிலன் என்பான்,
கல்கி படி, ஜெயகாந்தன் தெரியுமா, தேவன், துப்பறியும் சாம்பு என தினமும்
எழுத்தும் வாசிப்பும் பேசும் அவனுடன் பழகிப் பழகி, நடுத்தெருவில்
புத்தகத்தை வாசித்துக்கொண்டே நடக்கும் அளவிற்கு என் நிலை மாறிப்போனது.
வாங்கிச் சேர்த்த புத்தகங்களைக் கொண்டு வீட்டிற்குள் வாடகை நூல் நிலையம்
தொடங்கிய கூத்தெல்லாம் தனிக் கதை. வார இதழ்களில் வெளியாகும் சுஜாதாவின்
தொடர்கதைகளை, புத்தகத்தின் ஸ்டேபில் பின்னை நீக்கி பத்திரமாகக் கிழித்து,
பைண்டிங் செய்து நூலாக்கி மீண்டும் மீண்டும் வாசித்த அந்தக் காலத்தை
இப்பொழுது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி.
எந்தப்
பத்திரிகை என்று நினைவில்லை, ஏதோ ஒரு போட்டி. அதில் கலந்துகொள்ள, சில
நுண்ணியத் தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க என் தந்தையின் புத்தக
அலமாரியிலிருந்த பல பாக தமிழ் லெக்ஸிகன் அகராதியைப் புரட்டிக்
கொண்டிருப்போம். அந்தக் காலத்திலேயே இருநூறு பக்க நோட் புக்கில் அவன்
இரண்டு துப்பறியும் நாவல்களை எழுதி முடித்து, அதைப் பார்த்து நானும் நாவல்
முயன்றதெல்லாம் குறைப் பிரசவ வரலாறு. சசி சித்திரம் வரைவதிலும் திறமைசாலி.
நோட்புக்கில் காமிக்ஸ் கதை எழுதும் முயற்சியெல்லாம் நடந்தது. அவன் வரைவதை
படிக்கட்டில் அமர்ந்து வியப்புடன் பார்த்தது இன்றும் நினைவில் பசுமை.
என்னைவிடச்
சில வயது மூத்தவன் என்பதால் நான் கல்லூரியை முடிக்கும்முன் அவன்
பச்சையப்பாவில் பட்டம் பெற்று வங்கியிலும் பணிக்குச் சேர்ந்துவிட்டான்.
கல்லூரிப் பருவத்திலும் அவன் அளிக்கும் அறிமுகம் தொடர்ந்தது. Irving
Wallace-இன் Second Lady படித்துப்பார் என்றான். Sydney Sheldon நாவலின்
மொழிபெயர்ப்பு குமுதத்தில் வருகிறது, நான் அதை மூல மொழியில்
வாசித்திருக்கிறேன், பிரமாதம், தவறவிடாதே என்று அவன் சொல்லக் கேட்டு
அதையும் தொட்டிருக்கிறேன். அவன் அறிமுகப்படுத்திய எதுவுமே என் ரசனைக்கு
ஒத்துப்போகாமல் இருந்ததில்லை என்பது ஆச்சரியம். வாசிப்பில் இருவருக்கும்
ஒரே அலைவரிசை இருந்தது. ஆனால்
சினிமாவில்தான் எனக்கு சிவாஜி என்றால் அவனுக்கு எம்.ஜி.ஆர். தொடர்ந்து
வாத்தியார் படத்தைக் கவனித்துப்பார் அதில் ஆண்மைத்தனம் இருக்கும்.
ஹீரோயிஸம் இழையோடுவதைக் கவனிக்கலாம் என்றெல்லாம் அவன் பரிந்துரைத்தும்
எனக்கென்னவோ சிவாஜிக்கு அடுத்துத்தான் எம்.ஜி.ஆர் என்ற கருத்து மாறவில்லை.
ஜாகையின்
ஏரியா மாறியது. குடும்பஸ்தர்கள் ஆனோம். நாடு கடந்தேன். அவன் பணிமாற்றலாகி
புதுடெல்லிக்குச் சென்றுவிடத் தொடர்பு குறைந்து கடிதப் போக்குவரத்து ஓரளவு
நிகழ்ந்தது. பிறகு அதுவும் மெல்ல மெல்லக் குறைந்து, விலாசமும் தொலைபேசி
எண்ணும் தவறிப்போய், தொடர்பு முற்றிலுமாய் அறுபட்டு, ஏறத்தாழ இருபது
ஆண்டுகள் ஓடிவிட்டன.
கடந்த
சில மாதங்களாகத் திடீரென்று அவனது நினைவு அதிகம் ஏற்பட்டு, ஃபேஸ்புக்,
கூகுள், LinkedIn என்று தேடினால் ஏகப்பட்ட சசி. வைக்கோல் போரில்
தேடிக்கொண்டேயிருந்தேன். அகப்படவில்லை. இனி அடுத்த விடுமுறையில்
செல்லும்போது சென்னையில் நேரில் ஏதாவது முயன்று பார்க்க வேண்டும் என்று
நினைத்திருந்த சமயத்தில்தான்-
‘அன்பு
நண்பன் என்பதா, பால்ய நண்பன் என்று விளிப்பதா’ என்ற தயக்க அறிமுகத்துடன்,
இரவில் அந்த மின்மடல். சுருக்கமாய் மூன்று பத்திகளில், மளமளவென்று விடுபட்ட
காலத்தின் சுருக்கம். இன்றும் நிறையப் படித்துக்கொண்டிருப்பவன் இணையத்தில்
என் “அவ்வப்போது” நூல் தொகுப்பில் இடறி, அங்கிருந்து நூல் பிடித்து
என்னைக் கண்டுபிடித்துவிட்டான். தொடர்பு விடுபட்ட நாளாய் அவனும் என்னை
மறக்காமல், தேடல் இருந்திருக்கிறது. எனக்கு ஏற்பட்ட வியப்பில், என்ன
ஆரம்பித்து எங்கிருந்து எழுதுவது என்று தெரியவில்லை. எழுதியும் மாளாது
என்பதால், முதலில் தொலைபேசி எண்ணைத் தா என்று வாங்கிக் கொண்டேன். இரண்டு,
மூன்று நாள்கள் மூச்சிழுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினேன்.
அன்பும்
அன்னியோன்யமும் மாறாத அதே சசி. திருவிழாவில் தொலைத்த குழந்தையை மீட்ட
மகிழ்வைப்போல் என்னைக் கண்டுபிடித்துவிட்ட செய்தியை அவன் மனைவியிடமும்
அமெரிக்காவில் இருக்கும் மகனிடம் விடியோ சாட்டிலும் பேசி அவன்
குதூகலித்ததைக் கேட்டு நெகிழ்ந்து விட்டேன்.
‘உன்னுடைய
அனைத்து படைப்புக்களையும் இன்னும் கொஞ்ச கால அவகாசத்தில் படித்து விடுவேன்
என்று நினைக்கிறேன். அதன் பிறகு கருத்திடுவேன்’ என்று கூறியிருக்கிறான்.
தாட்சண்யமின்றி வரப்போகிறது நிறை, குறை. பாஸ் மார்க் வாங்கித் தேறிவிடுவேன்
என்று நினைக்கிறேன்.
-நூருத்தீன்
👇
http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/1024-sasi.html
மீண்டும் நூருத்தீன்
அன்பு நூருத்தீன்,
சசி 2.0 என்ற உன் கட்டுரையைப் படித்தவுடன் சடுதியில் தோன்றிய எண்ணங்களை எழுதி அனுப்பியுள்ளேன். முதலில் இதைப் பதிவு செய்த பின் மற்றவற்றைத் தொடர்வேன்.
சசி 2.0 என்ற உன் கட்டுரையைப் படித்தவுடன் சடுதியில் தோன்றிய எண்ணங்களை எழுதி அனுப்பியுள்ளேன். முதலில் இதைப் பதிவு செய்த பின் மற்றவற்றைத் தொடர்வேன்.
“என் பால்ய காலத்தை மீண்டும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி. குட்டியாக ஒரு time travel செய்த அனுபவம் நேர்ந்தது. விடுபட்ட சில துல்லியமான நினைவுகளை உன் பதிவு மூலம் மீட்கப் பெற்றேன் என்றால் அது மிகையாகாது.”
சசி 2.0 என்ற பதிவுக்கு என்னுடைய பதில் பதிவின் சரியான தலைப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். “மீண்டும் நூருத்தீன்”. அந்தக் கட்டுரை என் நினைவுகளை என் பள்ளி பருவத்தின் நாட்களுக்குக் கடத்திச் சென்று விட்டது என்பதுதான் உண்மை. என்னை முதலில் எப்போது சந்தித்தோம் என்ற கேள்வி உனக்குத் தொக்கி நிற்பதைப் போல எனக்கு உன்னுடனான நட்பு எப்படி எப்போது தடம் மாறியது என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இழையோடுவதுண்டு.
நம் நட்பு வளர்ந்தது உன் வீட்டின் மாடிக்குச் செல்லும் குறுகலான படிக்கட்டுகளில். தோளோடு தோள் இடித்து அமர்ந்தபடி, யாரேனும் வரும் போதெல்லாம் எழுந்து வழி விட்டு, மணிக்கணக்கில் தொடரும் நம் சம்பாஷணைகள், விவாதங்கள், விமர்சனங்கள்... பிரமிப்புகள் அவை. வீட்டிற்க்கு விரைந்து செல்ல அவசியம் அற்ற, தொலைக்காட்சி இல்லாத அந்தக் கால கட்டத்தின் பலனாக, அந்தப் படிக்கட்டுகளில் நமது நட்பும் இலக்கியப் பயணமும் தொடர்ந்தது.
சிறுவர் பத்திரிக்கையான ‘முயல்’ படிக்க ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை வரும் பத்திரிக்கையை நான் சனிக்கிழமையே பத்திரிக்கையின் அச்சகம் சென்று வாங்கி வர, நீ ஆர்வம் அதிகமாகி மூன்று கால் பாய்ச்சலில் ஓடி வெள்ளிக்கிழமையே பதிப்பகம் சென்று ‘முயல்’ வாங்கி வந்து என்னிடம் காட்டிப் பெருமிதம் கொள்வாய். இப்படியாகத் தொடர்ந்த நம் புத்தக ஆர்வம் முயல் பத்திரிக்கையில் கதை எழுதும் அளவுக்கு மாறி விட்டது. அதற்குப் பின்னர் நாம் படிக்க ஆரம்பித்த புத்தகங்கள் எல்லாம் அந்தக் காலக் கட்டத்தில் நமது வயதுக்கு மீறியவை என்பதே நிஜம். சுஜாதா, சாண்டில்யன், அகிலன் என்று நம் வாசிப்பு ஆர்வம் பெருகி விசாலமானது.
இன்றும் என் மனதில் நெகிழ்ச்சியோடு நான் நினைவுறுவது உன் தந்தை தமிழ் சொற்கள் குறித்த சந்தேகங்களை மென்மையாக விளக்கும் பாங்கும் அவரது புன்முறுவல் தவழும் முகமும். பிறகு கல்லூரிக் காலத்தில் நான் வீடு மாறிச் சென்றபின் நம் நட்பில் இடைவெளி ஏற்பட்டதென்று தோன்றுகிறது. முக நூல், மின்னஞ்சல், கணினி, இணையம் போன்ற எதுவும் இல்லாமால் இருந்த காலத்தில் நமது நட்புக்கு இடையே இருந்த பாலம் நமது வாசிப்பு ஆர்வம் மட்டுமே.
அதே ஆர்வம் இன்றும் நம் இருவருக்கும் தொடர்கிறது என்ற அந்த ஒற்றை இழைக் காரணி, ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து நம்மை மீண்டும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. உன்னை நான் கண்டுபிடித்தது தற்செயலான சம்பவம் என்று தோன்றவில்லை. கண்டிப்பாக இல்லை. உள்ளார்ந்த எண்ண அலைகளுக்கு ஒரு வலிமை உண்டு என்ற சித்தாந்தம் உண்மை என்றே தோன்றுகிறது. அவ்வப்போது, நூருத்தீன் என்ற பெயரை நான் இணையம் மற்றும் முக நூலில் தேடுவது உண்டு. சமீபத்தில் ஓர் இரவில் இணையத்தில் எதேச்சையாக என் விரல்கள் இடறி கணினி திரையில் வந்து விழுந்த புத்தகத்தின் பெயர் "அவ்வப்போது நூருத்தீன் ". அது என் நூருத்தீன் தானா என்று உறுதி செய்ய மானசீகமாக அந்தத் தாடியை எடுத்து விட்டு யோசிக்க வேண்டியிருந்தது.. இன்னும் அந்தத் தாடிக்குள்ளே அதே குழந்தை முகம்.
இளம் பிராயத்தில் சுஜாதா நாவல்களை ரசித்து வாசித்த நூருத்தீனுக்கு அந்த எழுத்து நடை கை வந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை. "அவ்வப்போது" கட்டுரை தொகுப்பை வாசித்தேன். அவற்றில் எழுத்து நடை, பொருள், நேர்மை மூன்றும் (style, content and genuineness - தமிழாக்கம் சரி தானா?) சரியாகப் பொதிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உன் கட்டுரைகளின் முடிவில் சிறுகதைகளில் கொண்டு வரும் முடிவைப் போன்ற சுரீர் என்ற தாக்கம் ஏற்படுத்துவது நல்ல உத்தி அல்லது யுக்தி (punch என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகராக வேறொன்றும் எனக்கு உடன் பிடி படவில்லை).
உன் எழுத்துக்கு பாஸ் மார்க் கிடைக்குமா என்ற கவலைக்கு உன்னுடைய நண்பர் என்னிடமிருந்து ஃபர்ஸ்ட் கிளாசே கிடைக்கும் என்று பதில் தந்திருந்தார். அதற்கு மேல் distinction (தமிழில் என்ன?) என்று ஒரு வார்த்தை உண்டு என்று நினைவுப்படுத்துகிறேன்..
முகநூலில் தொடரும் ஆயிரக்கணக்கான நட்புகள் இருபது ஆண்டுகள் விட்டு மீண்டும் தொடரக்கூடுமா, சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் தோளோடு தோள் இணைத்து நடந்த... கைகள் கோர்த்தபடி ஓடிய... நட்புகள் நெஞ்சை விட்டு அகல்வதில்லை என்பதுதான் நிதர்சனம்.
அன்புடன்,
சசி
No comments:
Post a Comment