பொன்னியின் செல்வன் நாவலின் முதல் காட்சியில் நாம் காண்பது வந்தியத்தேவனின் புரவி செல்லும் வழியெங்கும் உற்சாகம் பொங்க மக்கள் கொண்டாடும் நாளான ஆடி பதினெட்டு என்றழைக்கப்படும் ஆடிப்பெருக்கு.
பலகாலமாக தமிழ் மக்கள் மேலும் வளம்
செழிக்கச் செல்வம் தழைக்கக் செய்யும் நாளாக ஆடிப்பெருக்கைக் கொண்டாடி
வந்தார்கள். ஆடிப்பெருக்கு அன்று வாகனங்கள், துணிமணிகள், அணிகலன்கள்
வாங்குவது மற்றும் சுபகாரியங்கள் செய்வது போன்ற நம்பிக்கைகளைத்
தொன்றுதொட்டு செய்து கொண்டிருந்தார்கள்.
எப்படி எங்கிருந்து திடீரென்று இந்த அட்சய
திருதியை தோன்றி ஆடிப்பெருக்கை பின்னுக்குத் தள்ளியது? இது கண்டிப்பாகத்
தங்கம் வாங்க வேண்டிய ஒரு தினம் என்று ஒவ்வொரு வருடமும் மக்களைத்
தெருத்தெருவாக அலைய வைப்பது யார்? இந்தக் கேள்விகளுக்குச் சுருக்கமான ஒரே
விடை தங்க நகைகள் விற்கும் வணிகர்களின் சூட்சுமம் அல்லது கூட்டு சதி என்றே
தோன்றுகிறது.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால்
மேலும் தங்கம் சேரும் என்ற ஓர் அதீத நம்பிக்கையில் பீடிக்கப்பட்டு மக்கள்
அன்று நகைக்கடைகளைக் கூட்டம் கூட்டமாக மொய்ப்பதும் வலியச் சென்று
ஏமாறுவதும் கொஞ்சம் வருடங்களாக அமோகமாக நடந்து கொண்டு வருகிறது. சட்டியில்
இருந்தால் தானே அகப்பையில் வரும்? அட்சய திருதியைக்கு நகை வாங்கினால்
மேலும் நகை எப்படி மற்ற நாளில் சேரும். கையில் உங்களிடம் அவ்வளவு பணம்
இருந்தால் தானே மீண்டும் நகை வாங்க முடியும்? கல்யாணம் செய்து கொண்டு
வரதட்சிணையாக நகைகள் பெற்றாலொழிய இது சாத்தியமில்லை என்று யாரும் புரிந்து
கொள்ள மறுப்பது வினோதம்.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு அட்சய
திருதியைக்கு ஓரிரு தினங்களுக்கு முன், என் நண்பர் ஒருவர் அட்சய திருதியை
அன்று பல்லியைப் பார்த்தால் நன்மை வரும். ஆனால் அன்று பல்லிகள் நம் கண்ணில்
தென்படுவது மிக அபூர்வம் என்றும் ஒரு கதையைச் சொல்ல நானும் அதை என்
மனைவியிடம் எதேச்சையாகச் சொன்னேன். எப்படியோ இந்த ரகசியம் சமூக
வலைத்தளங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே வெளியே வைரலாகப் பரவி விட்டது.
அந்த அட்சய திருதியை நாளில் குறைந்தபட்சம் ஒரு பல்லியை எப்படியாவது
பார்த்து விட்டுத் தான் மறுவேலை என்று எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலரின்
வீடுகளில் பெண்கள் மூலைமுடுக்கெல்லாம் தேடத் தொடங்கினார்கள். ஆச்சரியமாக
எங்குப் பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும் பல்லிகள் அன்று மட்டும் ஏனோ
வாலைச் சுருட்டிக்கொண்டு வெளியே வர மறுத்து அடம் பிடிக்கச் சம்பந்தப்பட்ட
வீட்டில் உள்ள கணவர்கள் அனைவரும் ‘அப்பாடா... நகை வாங்க தெருத்தெருவாகச்
சுற்றும் வேலை மிச்சம்’ என்று அக்கடாவென ஓய்வெடுத்தார்கள்.
விதி லேசில் விடுமா என்ன? “ஏங்க! பல்லி
ஒண்ணையும் காணும்.. எல்லாத்துக்கும் பொறாமை... கண்ணுல படாம
ஒளிஞ்சிடுச்சிங்க. (இவள் என்ன நிஜமாகவே பல்லியைத்தான் சொல்கிறாளா?)
வாங்க.. போய் சின்னதா ஒரு கம்மல் வாங்கிட்டு வந்திடலாம்” .என்பது போன்ற
டயலாக்குகள் எல்லார் வீட்டிலேயும் பரவலாக ஒலிக்கத்தொடங்கி விட்டன. வெளியே
கிளம்பும்போது என் கண்ணில் ஒரு குட்டி பல்லி ஒன்று தென்படச் சந்தோஷத்தில்
துள்ளிக் குதித்து “ஆ, இதோ ஒரு பல்லி.. என் முன்னாலே... நான் ஒரே ஒரு
புன்னகையில் கண்டேனே!” என்று பாடத்தொடங்க என் மனைவியோ “பரவாயில்லங்க!
சாயந்தரம் ஆறுமணிக்குள்ள பல்லியப்பார்த்தா தான் நல்லதாம். இப்போ மணி ஏழரை.”
என் பர்ஸுக்கு அன்று ஏழரைச் சனி என்று புரிந்து நொந்து கொண்டு
கிளம்பினேன்.
இதற்கிடையில் இந்த அட்சய திருதியைப் பற்றி
மேலும் விளக்கம் தரும் விதமாகப் சமீபத்தில் புதிய விவரங்கள் சில முளைத்தன.
அதாவது அட்சய திருதியைக்கும் தங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஆனால் இதற்கும் வெள்ளை நிறத்திற்கும் மிகுந்த தொடர்புண்டு. அதனால் பசு,
பால், தயிர் வாங்குவது மற்றும் இவற்றைத் தானங்கள் செய்வதும் வெள்ளை நிற
ஆடைகளை அணிவதும் நலன் பயக்கும் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். (தானமோ
தருமமோ செய்வதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்ன?)
இது என்னடா வம்பு என்று அதிர்ச்சியுற்ற
நகைக்கடைக்காரர்கள் சுதாரித்துக்கொண்டு அதனால் என்ன? வெள்ளை நிறத்தில் உள்ள
வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளை எங்களிடம் வாங்கி வளமும் நலமும்
பெறுங்கள் என்று கூவ ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் நம் மக்களுக்கு
மஞ்சள் நிற உலோகத்தின் மீதுள்ள பிரியமும் ஆசையும் அலாதியானது. அதனால்
வெள்ளை நிறத்தை ‘ச்சீ’ என்று ஒதுக்கி விட்டு தங்கமே... உன்னைத்தான் தேடி
வந்தேன் நானே... என்று மீண்டும் கொஞ்சத் தொடங்கினார்கள். இதன் விளைவு
இப்போது மொத்த உலகத் தங்க இருப்பில் பத்துச் சதவிகிதம் இருப்பது நம்
நாட்டில் தான் என்பது ஒரு ஆதாரபூர்வமான புள்ளி விவரம். இந்தப் புள்ளி
விவரத்தில் வராத தங்கம் இன்னும் ஏராளம். அன்றாடம் குடிக்கக் கஞ்சிக்கு
வழியில்லாதவர்கள் வீட்டில் கூடக் குறைந்தபட்சம் ஒரு ஐந்து சவரன் தங்கமாவது
இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை.
நம் மக்களின் இந்தத் தங்க மோகத்தை
வெற்றிகரமாகத் தங்கள் வணிகத்திற்குச் சாதகமாக்கி கொள்ளும் நகை வியாபாரிகள்
அடிக்கும் கொள்ளை மிகவும் குரூரமானது. பத்துக்குப் பதினைந்து அடியில்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு நகைக்கடை நிறுவனம் எப்படி ஓராண்டிலேயே கோடிக்கணக்கில்
விளம்பரம் செய்ய முடிகிறது? அப்படியானால் அவர்களது லாப விழுக்காடு எந்த
அளவுக்கு இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
நகை வாங்கப் போகும் உங்களிடம் அவர்கள்
சொல்லும் விசித்திரமான கணக்கு ஒன்றுக்கு மண்டையை ஆட்டி விட்டு அவர்கள்
தரும் டூப்ளிகேட் கிரேப் ஜூஸையும் சந்தோஷமாகக் குடித்து விட்டு நீங்கள் நகை வாங்குவது
தான் அவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு முதல் அஸ்திவாரம். மொத்த தங்க விலையில்
சேதாரம் என்று கூறி குறைந்தபட்சம் பதினைந்திலிருந்து முப்பது சதவிகிதம் வரை கூட உங்களிடம் கூடுதலாக வசூலிப்பார்கள். நிஜமாகவே நகைகள் செய்யும் போது இத்தனை
சேதாரம் ஏற்படுமா என்ன? அந்தச் சேதாரமான தங்கம் என்ன ஆவியாகப் போய்
விடுமா? ஒரு காலத்தில் பொற்கொல்லர்கள் கைகளால் நகைகள் செய்யும் போது
கொஞ்சம் தங்கம் சேதாரம் நேர்ந்திருக்கலாம். ஆனால் இப்போது மிக நுண்ணியத்
தொழில்நுட்பத்தில் மேம்பட்ட இயந்திரங்களில் உருவாகும் நகைகளில் ஏற்படும்
சேதாரம் மிகமிகக் குறைவே. அப்படியே ஆகும் சிறிதளவு சேதாரத் தங்கமும்
நகைக்கடை வியாபாரிகளிடம் பத்திரமாக இருக்கும் என்பது தான் உண்மை.
இதை ஏன் நமது அரசாங்கமோ மற்ற சமூக
அமைப்புகளோ நீதிமன்றங்களோ ஏன் கண்டுகொள்வதில்லை என்பது நம் நாட்டுக்கே
உரித்தான பதிலின்றித் தொக்கி நிற்கும் எண்ணற்ற மில்லியன் டாலர் கேள்விகளில்
ஒன்று.
- சசி