மதுக்கூடம் - சசி
வடசென்னையின் பிரதானசாலையின் தொடர்ச்சியில் அமைந்திருந்த அந்த பரபரப்பான ஜங்ஷன் சிக்னலைக் கடந்த சிறிது தூரத்தில் என் யமஹா பைக்கை ஓரங்கட்டி யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது இடதுபக்க தெருமுக்கு பங்க் கடையில் செந்தில் தம் பற்றவைத்துக் கொண்டிருந்தான். எனக்கு முன்னரே கடையருகே வந்து சேர்ந்திருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் மூர்த்தி வந்துவிடுவான். எந்தக் கடை என்று கேட்டால் கூகுள் இதனை மதுக்கூடம் என்று மொழி பெயர்க்கிறது. திரையரங்கம் போல குடியரங்கம் என்றும் சொல்லலாமோ? இன்னும் உங்களுக்குப் புரியும்படியாக நல்ல தமிழில் சொன்னால் ‘டாஸ்மாக் பார்’
தமிழ் நாட்டு சாமான்ய ஆண்களின் ஊதியத்தையும் பெண்களின் நேரத்தையும் கபளீகரம் செய்யும் டாப் டென் லிஸ்டில் முதல் இரண்டு இடங்கள் பெறுவது முறையே டாஸ்மாக் மற்றும் டிவி சீரியல். இவை இரண்டுமே கிட்டத்தட்ட தமிழ் வார்த்தைகளாகவே மாறிவிட்டபடியால் இவற்றைத் தாராளமாகத் தமிழகராதியில் சேர்க்கப் பரிந்துரைக்கலாம் என்று ட்விட்டரில் அடியேன் பதிவு செய்திருக்கிறேன் என்பது ஒரு கூடுதல் தகவல்.
மாதம் ஒருமுறை நாங்கள் இப்படி ஒன்றாகக் கூடி பார்ட்டி செய்வதுண்டு. வழக்கமாக தர்மா தான் கடைசியாகக் கடைக்கு வந்து சேருவான். இன்றைய பார்ட்டி வரும் வெள்ளிக்கிழமையன்று அவன் பெண் குழந்தைக்கு காது குத்தல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அவன் செலவில் தான் நடக்கிறது. மாலை ஐந்தரை மணியைக் கடந்தும் சுள்ளென்ற சென்னை வெயில் இன்று இன்னும் இறங்கியபாடில்லை.
இந்தப்பகுதி டாஸ்மாக் கடையை ஒட்டியிருக்கும் இந்த பாரில் பெரும்பான்மையான திறந்தவெளிப் பகுதியில் தான் அதிகமான மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். சுற்றிலும் உள்ள இடம் ப வடிவில் ஆங்காங்கே சிதிலமான சிமெண்டு தூண்கள் தாங்கிப் பிடித்தபடி ஒரு செட்டிநாடு வீட்டுத் தாழ்வாரம் போல மேற்கூரையுடன் காட்சியளிக்கும். அங்கும் கொஞ்சம் மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இந்த பார் அரசு உரிமம் பெற்றதா என்பது யாருக்கும் பதில் தெரியாத ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
மையத்தில் உள்ள விசாலமான திறந்தவெளித் தரை மேடுபள்ளமாக சிமெண்டு கலவையால் அவசரகதியில் மொழுகியதைப்போல், கிட்டத்தட்ட கீழடி அகழ்வாராய்ச்சி நிலம் சாயலில் இருக்கும். வெயில் தணிந்தபின் காற்றோட்டமான இந்தப் பகுதியில் நாற்காலி மேசை ஆடாத வசதியான ஒரு இடத்தை பிடித்துக்கொள்வது உசிதம். பஸ்ஸிலோ, ரயிலிலோ, டாஸ்மாக் பாரிலோ, இப்படியெல்லாம் டிசைன் டிசைனாக யோசித்து தடாலடியாக சரியான இடம் பிடிப்பதில் செந்தில் தான் எக்ஸ்பர்ட். எனவே முன்பதிவில்லாத பிரயாணம் அல்லது தண்ணி பார்ட்டி என்றால் எங்கள் அனைவரது வேண்டுகோளின்படி எப்போதும் அவன் தான் முதலில் ஸ்பாட்டுக்கு ஆஜராவான்.
நாங்கள் இருவரும் உள்ளே சென்று நடுவிலோ ஓரமாகவோ இல்லாத ஒரு மேசையில் நான்கு ஆடாத நாற்காலிகளை செட் செய்து அமர்ந்த சில நிமிடங்களில் மூர்த்தி ‘ஹாய் டூட்ஸ்’ என்று சிரித்தபடி வந்தான். இவன் எப்பவும் தண்ணி பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன்னமே இப்படி ஒரு மார்க்கமாகப் பேசத்தொட்ங்கி விடுவான். என்னைப்பார்த்து “ஹாய் சீனு! வை லாங் டைம் நோ ஸீ” சொல்லிவிட்டு பதிலை எதிபார்க்காமல் பொத்தாம்பொதுவாக “என்ன ப்ரோ, தர்மா வந்தப்புறம் பொறுமையா ஆர்டர் பண்ணலாமா?” என்றான்.
கொஞ்சநேரத்தில் அரக்கப் பரக்க கைகுட்டையால் வியர்வையைத் துடைத்தபடி தர்மா வந்தமர்ந்ததும் ஒரு அரை டிரவுசர் பையன் வந்து நின்று “உங்க டேபிள் ஆர்டர் சொல்லுங்க சார்” என்றான். திரும்பிப் பார்த்தேன். அவனுக்கு வயது பதிமூன்றிலிருந்து பதினைந்துக்குள் தான் இருக்கும். என்ணெய் வைத்துப் படிய வாரிய தலை. ஒடுங்கிய கன்னம். ஒடிசலான உருவம். கட்டம் போட்ட கருநீல சட்டை. காக்கி அரைக்கால் டிரவுசர். தோளில் ஒரு அரைத்துண்டு டர்க்கி டவல். காதில் சொறுகியிருந்த பேனாவை எடுத்து ஹோட்டல் சர்வர் போன்ற தொனியில் பேசினான். “நீ யாருப்பா? தங்கராஜ் எங்க?” என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தர்மா கேட்டான்.
தங்கராஜ் தான் எங்கள் ஆஸ்தான டாஸ்மாக் பார் உதவியாளர். எங்கள் குறிப்பறிந்து சேவை செய்வதில் அவரை அடிச்சுக்க ஆள் கிடையாது. யாருக்காவது தள்ளாட்டம் அதிகமாகி விட்டால் அவர்களது இரு சக்கர வாகனங்களையும் அங்கேயே பாதுகாப்பாக ஒருநாள் வைத்துக்கொள்வார். ஜோலி முடிந்து கிளம்பும் போது அவரை வெயிட்டாக கவனிக்கவும் நாங்கள் எப்போதும் தவறுவதில்லை. எனவே எங்கிருந்தாலும் எங்களைப் பார்த்தநேரத்தில் துள்ளிக் குதித்து எங்கள் மேசைக்கு ஆர்டர் எடுக்க வந்துவிடுவார்.
“அவரு ஊருக்கு போயிட்டார் சார். ரெண்டுநாள் லீவு. இன்னைக்கு நாந்தான் இந்த லைனுக்கு”
“உன் பேரு?” என்ற தர்மாவின் கேள்விக்கு பட்டென்று பதிலளித்தான் அவன். “துரைக்கண்ணு சார்”
“இவ்வளவு சின்னப் பசங்கள வேலைக்கு வெச்சிக்கலாமா? அதுவும் பார்ல..” என்று என் எண்ணத்தைப் பிரதிபலித்த கேள்வியை முணுமுணுத்தான் செந்தில். இதைக் கேட்டதும் துரைகண்ணு சுற்றும்முற்றும் பார்த்தபடி “என் வேலைக்கு ஆப்பு வெச்சிடாதீங்க சார். நான் கிச்சன்ல ஹெல்ப்பர்., அப்புறம் தட்டு கிளாஸ் கழுவுறது, டேபிள் கிளீனிங். எப்பியாச்சும் யாராவது லீவு, இல்லன்னா கூட்டம் குறைச்சலா இருந்தாக்கா மட்டும் தான் எங்கள லைன்ல விடுவாங்க. நாங்களும் டிப்ஸ்ல கொஞ்சம் காசு பாப்போம். ப்ளீஸ், கண்டுக்காதீங்க சார்.” என்று கெஞ்சினான் .
“சரி சரி” என்று சொல்லிவிட்டு செந்தில் படபடவென்று ஆர்டரை ஒப்பிக்க, துரைக்கண்ணு கையிலிருந்த சிகரெட் அட்டையில் பேனாவால் வேகமாகக் குறித்துக்கொண்டான். “சில்லி சிக்கன் ஒரு ப்ளேட். ஆப் பாயில் ரெண்டு. பெப்பர் தூக்கலா ஒரு டபுள் ஆம்லெட். வாட்டர் பாட்டில் ரெண்டு. மசாலா வேர்க்கடலை பேக்கெட் ரெண்டு. கொண்டக்கடல சுண்டல் ரெண்டு ப்ளேட்..”
“மச்சி, எனக்கு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ் ஒரு பாக்கெட். அப்புறம் மறந்துடாம வத்திப்பொட்டி வாங்கு.” என்று சொன்னது தர்மா.
ஒவ்வொருவர் தேவைக்கேற்ப அளவாக சரக்கு ஆர்டர் சொல்வதிலும் வல்லவன் செந்தில் தான்.
“அப்புறம் லெஹர் சோடா ரெண்டு. கோக் ஒண்ணு, விஎஸ்ஒபி குவார்ட்டர். கிங் ஃபிஷர் பீர் ப்ரிமியம் ரெண்டு. அப்புறம் ராயல் சாலஞ்ச் விஸ்கி ஆஃப்.”
“அப்புறம் முக்கியமா க்ளீனா கழுவின க்ளாஸ் டம்ளர் நாலு…” இது நான்.
கடையிலிருந்து சரக்கு பாட்டில்களும் டம்ளரையும் முதலில் எடுத்து வந்த துரைக்கண்ணு பத்துப் பதினைந்து நிமிடத்தில் மற்ற அனைத்தையும் கொண்டு வந்து மேசையில் வரிசையாகப் பரத்தி வைத்தான். கொஞ்சநேரம் கழித்து அவனிடமிருந்து மிச்சப் பணத்தை வாங்கியபின் மேசையிலிருந்தவற்றைப் பார்த்தபடி கடகடவென்று மனக்கணக்கு போட்ட தர்மா “டேய், தம்பி. அம்பது ரூவா குறையுது” என்றான்.
“கணக்கு எல்லாம் சரியாத்தான் இருக்கும். மறுக்காப் பாருங்க.” என்றான் துரைக்கண்ணு.
“என்னடா, பணத்தை ஆட்டையப் போட்டுட்டு சொல்லச்சொல்ல குறுக்கால பொய் பேசுற” என்று கையை ஓங்கியபடி கோபமாகக் தர்மா கத்த, பதில் சொல்லாமல் விறைப்பாக நின்றபடி ஏதோ முணுமுணுத்தான் துரைக்கண்ணு.
அப்போது தான் நான் கவனித்தேன். அவன் வாங்கி வந்த கோக் பெட் பாட்டில் மேசையிலிருந்து உருண்டு கீழே விழுந்து செந்தில் காலடியில் கிடந்தது. இதைப் பார்த்து நான் செந்திலுக்கு கண்ணால் சைகை செய்ததை அவன் கவனிக்கவில்லை. ஆனால் துரைக்கண்ணு பார்த்துவிட்டான். மேசைக்கு அடியே குனிந்து நுழைந்து கோக் பாட்டிலையெடுத்து தர்மாவிடம் கொடுத்து “இப்ப கணக்கு சரியாப் போச்சு பாருங்க சார்” என்றான். “பொய்யெல்லாம் சொல்லமாட்டேன் சார். ஆத்தா சொல்லியிருக்கு, பொய் சொல்லக் கூடாது.. திருடக் கூடாதுன்னு”
தர்மாவுக்கு எல்லார் முன்னிலையில் கொஞ்சம் அசிங்கமாகிவிட்டதால் நிலைமையை சமாளிக்கவேண்டி ஜோக் அடிப்பதாக நினைத்துக்கொண்டு துரைக்கண்னுவைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான்.
“அப்ப கொலை செய்வியாடா?”
“தெரியாது சார்..”
“என்னது? கொலை செய்யத் தெரியாதா?
“இல்ல, கொல செய்வேனான்னு தெரியல..”
“ஏண்டா?”
“ஆத்தா கொலை செய்றதப் பத்தி ஒண்ணும் சொல்லலையே”
“போய் கேட்டுட்டு வாடா” என்றான் தர்மா சலிப்புடன்.
“முடியாது. ஆத்தா ரெண்டு வருஷம் மின்ன செத்துப் போச்சு” என்று சொல்லி தலை குனிந்தான் துரைக்கண்னு.
ஒரு கையில் பியர் நிரம்பிய கண்ணாடி டம்ளருடன் மசாலா வேர்க்கடலையை கொறித்துக்கொண்டிருந்த நான் சட்டென்று தலை நிமிர்ந்தேன். ஏனோ பொட்டிலடித்ததுபோல் இருந்தது. தர்மாவை சைகை காட்டிப் பேச்சை நிறுத்தச்சொல்லி நானும் மூர்த்தியும் துரைகண்ணுவை அருகில் அழைத்துச் சமாதானப்படுத்தினோம். தர்மாவை அவனிடம் சாரி சொல்ல வைத்ததும் பையன் முகத்தில் லேசாக நமட்டு சிரிப்பு தெரிந்தது.
மாதக்கடைசி என்பதால் டாஸ்மாக் கடையிலும் பாரிலும் கூட்டம் குறைவாக இருந்தது. அவனுடைய லைனில் வேறு யாருமில்லாததால் துரைக்கண்ணு பெரும்பாலும் எங்கள் மேசை அருகேயே தான் நின்றிருந்தான். நானும் மூர்த்தியும் தொடர்ந்து இடையிடையே அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தோம். இதை கவனித்த தர்மா என்னைப் பார்த்து சிரித்தபடி “என்னைய வெச்சு நீங்க ரெண்டு பேரும் காமெடி கீமடி பண்ணலியே. அதுன்னாலும் பரவாயில்ல. என்னைக் கெட்டவனாக் காட்டி கதை எதுவும் எழுதிடாதடா” என்றான்.
எங்களது இந்த பார்ட்டி நடந்து சில வாரங்கள் கழித்து அதே வழியாக பைக்கில் செல்லும் பொழுது வழக்கமான அந்த டாஸ்மாக் பார் அருகில் இருக்கும் பங்க் கடையில் தங்கராஜ். அவரைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தினேன். கடையில் வாங்கிய சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் வாட்டர் பாக்கெட்டுகளை கைகளில் அள்ளியபடி என்னைப் பார்த்து “சார், சௌக்கியமா?” என்றவர் “கஸ்டமரப் பாத்து எங்க ரொம்ப நாளா காணோம்னு நாங்களோ இல்ல, டாக்டரோ கேட்க கூடாதுல்ல..” என்று சொல்லி பலமாக சிரித்தார். பேச்சுவாக்கில் துரைக்கண்ணு எப்படி இருக்கான் என்று அவரிடம் விசாரித்தேன்.
“சார், உங்களுக்கு விஷயம் தெரியாதா? ரெண்டு நாள் முன்னாடி கடையில நடந்த ஒரு சண்டையில அந்த கவுன்சிலர் பையனும் அவனோட கூட்டாளிங்களும் சேர்ந்து தொரக்கண்ணு தலையில பீர் பாட்டிலால அடிச்சிட்டாங்க. மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டுச்சு. ஓனர் உடனே அவன பக்கத்துல இருக்குற நர்சிங் ஹோமில சேத்துட்டார். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரின்னா கேஸ் ஆயிடும்ல. மைனர் பசங்கள பார்ல வேலைக்கு எப்படி வெச்சேன்னு கவுன்சிலர் கொடுத்த பிரஷர்னால செலவும் அவரே பாத்துக்கிறார்.” பதைபதைப்புடன் தங்கராஜிடம் நர்சிங் ஹோம் முகவரி கேட்டு அங்கே விரைந்தேன்.
‘முத்துக்குமரன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்’ ஆளரவமில்லாத ஒரு குறுக்கு சந்தில் இருந்தது. அதன் இரண்டாம் தளத்தில் பொது வார்டில் தலையில் பெரிய பேண்டேஜுடன் மெலிசான மெத்தை விரித்த இரும்புக் கட்டில் ஒன்றில் படுத்திருந்தான் துரைக்கண்ணு. என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு “அண்ணே, நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? என்று கேட்டான். ‘உன்னப் பார்க்கத்தான்’ என்றதும் நம்பமுடியாமல் ‘நிசமாவா’ என்று மறுபடியும் கேட்டான். அந்தப்பக்கம் வந்த ஒரு மலையாள நர்ஸ் “நீங்க இதுக்கு ரிலேஷனா? இந்த மருந்தெல்லாம் டிஸ்பென்சரில வாங்கி வந்துடுங்க. சார் பயப்படண்டா. ரெண்டு நாள்ல இதுக்கு டிஸ்சார்ஜ் ஆயிடும்” என்று சொல்லி சீட்டு ஒன்றைத் தந்தாள்.
அதற்குப்பின் வந்த இரண்டு நாட்களில் துரைக்கண்ணுவைப் பற்றி சுத்தமாக மறந்து விட்டேன். மூன்றாம் நாள் மதியம் ஆபிஸ் வேலையில் மூழ்கியிருந்தபோது மூர்த்தியின் போன். “சீனு, உனக்கு மேட்டர் தெரியுமா? நம்ம டாஸ்மாக் கடை கிட்டக்க இன்னைக்கு காலைல பெருசா ஏதோ தகராறாம். கவுன்சிலர் பையனை ரெண்டு பொடிப்பசங்க அரிவாளால போட்டுப் பொளந்துட்டாங்களாம். பொழைக்கிறதே கஷ்டம்னாங்க. ரொம்ப சீரியஸா இருக்கானாம்.” அதற்குப் பிறகு அவன் சொன்னது எதுவுமே என் காதில் விழவில்லை. அடப்பாவிகளா? ஒருவேளை சினிமாவில் வருவதுபோல் துரைக்கண்ணு தான் அவன் சகாவைத் துணைக்கு வைத்துக்கொண்டு கவுன்சிலர் பையனைப் பழி தீர்க்க அரிவாள் எடுத்து.. நினைக்கவே பகீரென்றது.
ஆபிஸிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி எங்கே செல்வது, என்ன செய்வதென்று புரியாமல் பைக்கை எடுத்து நேராக துரைக்கண்ணு இருந்த நர்சிங் ஹோமுக்கு விட்டேன். வண்டியை ஓட்டினேன் என்பதைத் தாண்டி வழியெல்லாம் சாலைகள் எதுவும் தெரியவில்லை. ஏதேதோ எண்ணங்களும் துரைக்கண்ணுவிடம் போனமுறை பேசியதும் கண்முன் பிளாஷ்பேக் சித்திரங்களாக வந்துபோனது.
“திண்ணாமல பக்கத்தில வேட்டவலம் எங்க ஊரு. அப்பாரு சின்ன வயசில செத்திடுச்சி. பாவம், ஆத்தா தான் கஷ்டப்பட்டு படிக்க வெச்சுது. இங்கிலீஷும் கணக்கு பாடமும் எனக்கு சரியா வரலே. ஒரு நா அல்ஜிபுரா புரியலன்னு சொல்ல கணக்கு வாத்தி தலைல கொட்டிச் சீழ் பிடிச்சுது. ஆத்தா ரொம்ப விசனப்பட்டு, அம்புட்டு பெரிய கணக்கெல்லாம் நமக்குத் தேவையில்லன்னு விரல மடக்கி கணக்கு போடச் சொல்லித் தந்து, நம்ப சம்பாதணைக்கும் பவிசுக்கும் இது போதும்னு சொல்லிச்சு. அப்புறம் ஆத்தாவும் செத்துப் போச்சா.. பிறவு ஸ்கூலு போக முடியல. உறவுக்காரு ஒர்த்தர் சொல்லி இங்கன சென்னைக்கு அழைச்சிட்டு வந்தார். கொஞ்ச நாள் வடபழனிலெ ஒரு டீக்கடைல வேல பாத்தேன். கிளாஸ் கழுவறது. கஸ்டமர்க்கு டீ சப்ளை.. அப்புறம் கடையைப் பெருக்கி சுத்தம் பண்றதுன்னு.. ஒரு நாள் என்னயும் கட முதலாளியயும் போலிஸ் புடிச்சிட்டுப் போச்சு. சின்னப் பசங்கள வேலைக்கு வெச்சிக்க கூடாதுன்னு முதலாளியத் திட்டுனாங்க. எனக்கு சாப்பிட பிரியாணி வாங்கித் தந்து ஸ்கூல் போய் படின்னாங்க. மறுபடியுமான்னு தலையத் தடவிப் பாத்துட்டே இங்கன வந்து சேந்திட்டேன்.”
“இங்க போலிஸ் தொந்திரவு செய்யாதா?”
“இங்க அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல. அதான் இங்கியே தங்கிட்டேன். சாப்பாடும் நல்லா கிடைக்கும். அப்பப்ப போலீசு வருவாங்க. ஓனர் கிட்டக்க சிரிச்சி பேசிட்டு போயிடுவாங்க. ரத்தினம் சார்னு போலீஸ்கார் ஒருத்தர் வருவாரு. ரொம்ப நல்ல மாதிரி. எப்ப வந்தாலும் டபுள் ஆம்லேட் கேட்டு வாங்கி சாப்பிடுவார். அப்புறம் சிரிச்சிட்டே என் முதுகில தட்டிக் குடுத்திட்டு போவார்.”
“துரை, உனக்குன்னு ஆசை ஏதாச்சும் இருக்குதா” என்று கேட்டதற்கு கொஞ்சம் யோசித்து “எனக்கு ஒரே ஒரு ஆச தான் அண்ணே.. ஒரே ஒரு நாளாச்சும் ஜில்லு தியேட்டர்ல உக்காந்துட்டு ரஜினி படம் பாக்கணும். அப்புறம் இண்ட்ரோல்ல கலர் கோலாவும் பாப்கானும் வாங்கி சாப்பிட்டு..”
“உனக்கு ரஜினி பிடிக்குமா?”
“ரொம்ப பிடிக்கும்ணே. அண்ணாமல படத்துல அவரோட ஆத்தா கிட்ட ரொம்ப பாசமா இருப்பாரு.”
குறுக்கே புகுந்த சைக்கிளுக்கு சடன் பிரேக் அடிக்க, “அப்ப கொலை செய்வியாடா? என்று தர்மா கேட்டதற்கு “கொல செய்வேனான்னு தெரியல..” என்று துரைக்கண்ணு சொன்ன டயலாக் சம்பந்தமில்லாமல் திடீரென்று நினைவுக்கு வந்தது. ரஜினியைப் பிடிக்கும்னு சொன்னானே. பாவிப்பய ஒருவேளை ஜெயிலர் படம் பார்த்துத் தொலைத்து விட்டானோ?
கடந்தமுறை போகும்போது அவன் நர்சிங்ஹோமில் இருக்கக்கூடாது. டிஸ்சார்ஜ் ஆகிப்போயிருக்க வேண்டும் என்று உள்ளாற நினைத்தேன். இப்போது அவன் அங்கேயே கட்டிலில் படுத்துக் கிடக்கவேண்டும் என்று மனசு துடித்தது. கொலைக்குற்றம் செய்து ஜெயிலில் அவன் அடைந்து கிடப்பதற்கு உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதே மேல்.
காலியாக இருந்த கட்டிலைப் பார்த்து அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்த என்னைப்பார்த்ததும் அங்கே வந்த நர்ஸ் “டொரக்கண்ணு பாத்ரூம் போயிருக்கு சாரே. இப்ப வந்திடும்” என்று சொல்லி நகர்ந்தார். இப்போது ரிலாக்ஸாகி நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டேன்.
“அண்ணே நீங்களா?” என்று கேட்டபடி வந்து துவண்டு கட்டிலில் சரிந்தான் துரைக்கண்ணு.
“நீங்க போனமுறை வந்தப்ப எனக்காக காசு செலவு செஞ்சதா நர்ஸ் அக்கா சொல்லிச்சு. கடையில கணேசன் கிட்ட என் பையிருக்கு. அதுல நான் சேத்துவெச்ச காசு கொஞ்சமா இருக்கு. அவனாண்ட உங்களுக்குத் தரச் சொல்றேன், வாங்கிக்கிடுங்க.” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம் துரை.. சும்மா தான் உன்னய பார்க்க வந்தேன்.”
லேசாக சிரிக்க முயற்சி செய்தபடி “என் பேரு துரைக்கண்ணு தான், ஆனா ஆத்தா என்ன துரைன்னு சொல்லாது. எப்பவும் கண்ணுன்னு தான் கூப்பிடுவா.”
“நீ நினக்கிற மாதிரி உன் ஆத்தா உன்ன பேர சுருக்கிக் கூப்பிடல. எல்லா ஆத்தாவும் அவங்க பிள்ளைங்கள கண்ணுன்னு தான் செல்லமா கூப்பிடுவாங்க.”
“ஆமா இல்ல, இத்த நான் யோசிக்கவேயில்ல” என்று புன்னகைத்து “அண்ணே, நான் ஒரு விஷயம் சொன்னா, வைய மாட்டீங்களே”
“என்னது, சொல்லு”
“பாருக்கு வராதீங்க. குடிக்காதீங்கண்ணே. உடம்பும் கெட்டுப் போவும். மனசும் கெட்டுப் போவும். குடிச்சா ரொம்பக் கோவமும் வரும்”
“அப்ப உன்னப் பாக்கனும்னா எங்க வரது? ஒண்ணு செய். நீ அங்க வேல செய்யிறத விட்டு வேற எங்கனாச்சும் சேரு. நானும் பாருக்கு போறத விட்டுறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“அண்ணே, நான் வேலைய விட்டுட்டு எங்க போறது.. மறுபடியும் டீக்கடைக்கு போகமுடியாது.”
“படிக்கிறியா சொல்லு”
“அய்யோ அண்ணே, ஆளைய விடுங்க. மறுபடி டீக்கடைக்கு வேணுமின்னாலும் போயிடறேன்”
இவனைப் படிக்கவைக்க நினைத்துப் பள்ளிக்கு அனுப்புவதைவிட முக்கியம் இப்போதைக்கு அந்த டாஸ்மாக் பாரிலிருந்து காப்பாற்றுவது தான். இவன் வாழ்க்கை அங்கேயே சிதிலமடைந்து பாதை மாறிப் போக ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
“சரி துரை, உனக்கு வேற எதாச்சும் வேலை தெரியுமா?”
“தோட்டவேலை கொஞ்சம் தெரியும்ணே, ஊர்ல ரங்கையா முதலாளி வூட்டுல அவரு தோட்டத்தில வேல பாக்கிறப்ப ஒரு மாங்கன்னு நட்டேன். தினைக்கும் அதுக்கு மட்டும் ஸ்பெசலா தண்ணி ஊத்துவேன். அப்பவே என் இடுப்பளவு வந்திடுச்சு. இப்ப பெருசாயிருக்கும்ல. முடிஞ்சா ஒருக்கா போயி பாக்கணும்.”
இந்தத் தருணத்தில் எனக்குள்ளிருந்த மண்டையைக் குடையும் அந்தக் கேள்வியை அவனிடம் மெல்லக் கேட்டேன். “துரை, நிஜமாவே உனக்கு உன்னய அடிச்ச அந்த கவுன்சிலர் பையன் மேல கோவம் இல்லையா?”
“அதெல்லாம் சுத்தமா கிடையாதண்ணே. இத மாதிரி இங்க நிறைய நடந்திருக்கு. அன்னைக்கு உங்க கூட வந்த அண்ணா கூட என்னிய கோவிச்சுக்கிட்டார். என்ன, அவரு குடிக்கிறதுக்கு மின்ன சண்டை போட்டதால திட்டோட போயிடுச்சி. இந்த அண்ணன் குடிச்சதுக்கு அப்புறம் கோவிச்சுக்கிட்டதால பாட்டில எடுத்து மண்டையில அடிச்சிட்டார். அம்புட்டு தான் வித்தியாசம்.”
“சரி. என் சித்தப்பாவோட ஃபார்ம் ஹவுஸ் உத்தண்டி கிட்டக்க இருக்கு. அங்க கிருஷ்ணன்னு ஒருத்தர் ஏற்கனவே வேலையா இருக்கார். அவருக்கு உதவியா அங்க தோட்டவேலைக்குப் போறியா. இப்ப இங்க கடையில உனக்கு குடுக்கிற சம்பளத்த கண்டிப்பாத் தருவாங்க. சாப்பாடு பிரச்னையும் இருக்காது. என்ன சொல்ற?”
“அப்ப என் ப்ரண்டு கணேசனுக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்வீங்களாண்ணே”
“கண்டிப்பா செய்திடலாம்”
“நீங்க சொன்னா சரிண்ணே, டாங்க்ஸ்” என்று சொல்லி வெட்கப்பட்டான். கட்டிலில் சாய்ந்தபடி
“தூக்கம் வருது. படுத்துக்கிடறேன்” என்றான். அவனையுமறியாமல் அவன் கண்கள் சொருகியது.
தண்ணீர் ஊற்றி செடிகள் வளர்க்கிற கைகள் இவனது. மாங்கொட்டையை பூமியில் நட்டு அது பெரிதாய் வளர்வது கண்டு பூரிப்படையும் இவனால் சத்தியமாகக் கத்தியை வீசி அடுத்தவன் உயிரை எடுக்கமுடியாது. இது ஏன் எனக்குப் புரியாமல் போனது?
கதைகளில் வருவது போல் அவனைக் கட்டியணைத்து உச்சிமோந்து முத்தமிட மனசு சொன்னாலும் கூச்சம் முற்றிலுமாக அதைத் தடுத்தது. அரைமயக்கத் தூக்கத்தில் இருந்த அவனது வெளிறிப்போன மெலிந்த இடதுகையை எடுத்து என் இரு கைகளால் இறுகப் பற்றிக்கொண்டேன். அவன் உடல் லேசாக சிலிர்ப்பதை அவன் கைகளின் நடுக்கத்தில் உணரமுடிந்தது. என் அன்பை வெளிப்படுத்தவும் அதை அவன் புரிந்து கொள்ளவும் இதுவே போதுமானதாகத் தெரிந்தது
No comments:
Post a Comment