Saturday, May 25, 2024

பூனையும் கோமதிசங்கரும்








பூனையும் கோமதிசங்கரும்    -



சமையலறையில் ப்ரூ காபியை கலந்து டம்ளருடன் முன் அறையில் சேரில் அமரும் சமயம் “ஹலோ! சங்கர்ஜி” என்று குரல் கேட்டு கோமதிசங்கர் சட்டென்று நிமிர்ந்ததில் கொஞ்சம் காபி தரையில் சிந்தியது. வாசல் கதவை லேசாகத் திறந்து பார்த்தான். வெளியே யாரும் இல்லை. ஒருவேளை ஏதாவது அழைப்பு வந்திருக்குமோ என்று அனிச்சையாக செல்போனைப் பார்த்தான். அப்புறம்தான் தோன்றியது போன் கால் என்றால் முதலில் ரிங் தானே வரும் என்று.  

பேச்சிலர்களுக்கென்று கட்டப்பட்ட, கோமதிசங்கர் தனியாக வசிக்கும் முதல்மாடி போர்ஷனில்  தெற்குபக்கமாக ஜன்னல் அமைந்த காற்றோட்டமான, விசாலமான ஒரு அறை. அதைத்தவிர சமையலறை. பின்பக்கம் ஒரு சின்ன பாத்ரூம். முன் அறையின் ஜன்னலுக்கு குறுக்கு வாட்டில் காற்று வசதிவேண்டி அதிகமான இடைவெளியுடன் கம்பிகள் பொருத்தி இருந்தது.

எப்போதும் ஜன்னல் வெளிப்பக்கம் உள்ள திண்டில் அமரும் அந்த வெள்ளை நிறப்பூனை இன்று கம்பி இடைவெளி வழியாக உள்ளே நுழைந்து ஜன்னல் ஓரமாக இருந்த மேசையின் மீது அமர்ந்து கொண்டிருந்தது. 

மேசையில் சாண்டில்யனின் கடல் புறா, சா கந்தசாமியின் சாயாவனம், பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பு போன்ற கலவையான புத்தகங்கள். புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகத்தின் மீது பூனை இரண்டு கால்களை வைத்தபடி கோமதிசங்கரை உற்று நோக்கியபடி இருந்தது.

“திருட்டுப் பூனை.. உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்று சொல்லியபடி மீண்டும் கதவைத் திறந்து வெளியே யார் என்று பார்க்கச் சென்றான் கோமதிசங்கர்.

உள்ளே திரும்பி வந்தவனைப் பார்த்து இப்போது பூனை மீண்டும் சொன்னது. “சங்கர்ஜி, பேசுறது நான் தான்” 

கோமதிசங்கர் கொஞ்சம் அச்சமும் வியப்பும் கலந்த நிலையில் கதைகளில் நான் காண்பது கனவா அல்லது நிஜமா என்று தெரிந்துகொள்ள வேண்டி கதாபாத்திரம் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்வார்களே, அதைப்போல் தன் தொடையில் கிள்ளிப் பார்த்தான். சுரீர் என்று வலித்தது. 

“கிளி பேசிப் பார்த்திருக்கிறேன்.  பூனை பேசுமா.. அது எப்படி சாத்தியம்?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“சங்கர்ஜி, சந்தேகமே வேண்டாம். நானே தான்” என்றது மறுபடியும் பூனை.

“நிஜமாகவே, நீயா பேசுற? இந்தக் குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்”

“செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி” என்றது பூனை.

“கரெக்ட், நீ ஏன் அந்த குரல்ல பேசுற.”

“உன் அப்பா பலமுறை உன்னிடம் சொல்லியிருந்த, பின் கூகுளில் தேடிப்பார்த்துக் கேட்டு மனசுல கம்பீரமா, நம்பகத்தன்மை கொண்டதாக நீ நினைக்கிற குரல் அது, ஒரு வேளை உன் உள்மனசுல பதிஞ்சிருக்கிற உன்னோட மனசாட்சியின் குரல் அதுவா கூட இருக்கலாம். அதனால தான்.  நீ நினைச்சிருந்தா நான் ஷ்ரேயா கோஷல் குரல்ல கூட பேசியிருப்பேன்”

“இப்பவும் இது உண்மையான்னு என்னால நம்ப முடியல. ஒருவேளை நான் மென்டல் ஆயிட்டேனா.. இல்ல எனக்கு ஏதாவது பிரமையா” என்று குழம்பினான் கோமதிசங்கர்.

“உனக்கு நம்பிக்கை வரணும்னா, இதை ஒரு அமானுஷ்யமான விஷயமாவோ இல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷனா நினைச்சுக்கோ. நல்லா இன்னொரு முறை என்னைப் பார்.”

இப்போது அவன் மீண்டும் பூனையைப் பார்த்தபோது அதன் தலைப்பகுதியைச் சுற்றி கொஞசம் மங்கலான ஊதா நிற ஒளிவட்டம் போல, ஜன்னல் இடுக்கு வழியே வெளிச்சம் வரும்போது, அதில் தூசி துகள் எல்லாம் தெரியுமே, அப்படி இருந்தது.

“அமானுஷ்யம்னா சரி.. சயின்ஸ் எப்படி?”

“அந்த காலத்து அமானுஷ்யம் தான் இந்தக் காலத்து சயின்ஸ்.. இந்தக் காலத்து அமானுஷ்யம் வருங்காலத்துல சயின்ஸ்”

“எப்படி?”

“விஞ்ஞானம் என்பது தற்போதைய உண்மை. சயின்ஸ் பிக்‌ஷன் வருங்காலத்தில் உண்மையாகக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்ட இப்போதைய அமானுஷ்யப் புனைவு.”

“யார் சொன்னது இது, ஜெயமோகனா?”

“ஐசக் அசிமோவ்.  அந்தக் காலத்துல கதையில வர்ற மந்திரவாதி ஒரு கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு ‘ஏ.. மாயக் கண்ணாடியே..உலகத்திலேயே அழகான பெண்ணைக் காட்டு’ன்னு சொல்ல அந்த கண்ணாடியும் ஒரு இளவரசியைக் காட்டும். இப்ப நீ ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி நின்னு ‘ஹே..அலெக்ஸா..’ ன்னு அதே கேள்வியைக் கேட்டா அது ஒருவேளை பழைய ஐஸ்வர்யா ராயையோ இல்ல இந்த வருஷ மிஸ் வோர்ல்டையோ காட்டாதா என்ன..”

“அது சரி.. இப்ப நீ பேசுறது எப்படி சயின்ஸ் ஆக முடியும்?”

“உனக்கு ஏதோ பிரமையா இல்ல பைத்தியமான்னு கேட்டியே. அதுவும் கூட உளவியல் விஞ்ஞானத்தில் தான் வரும்.“

“பைத்தியமும் அதற்கான வைத்தியமும் சயின்ஸில் வரலாம். ஆனால் மன நோயாளி எப்படி?

“பூனையோடு பேச முடிந்த மன நோயாளி சயின்ஸ் பிக்‌ஷனில் தாராளமாக வரலாம். ஏன், ஒருவேளை நான் எதிர்காலத்திலிருந்து வந்த ஒரு ரோபோவா இருக்கக் கூடாதா.. இல்ல ஒரு ஏலியன்?”

“ஏலியனா? என்ன விளையாடுறியா? நீ எலியைப் பிடிக்கிறதால எலியன்னு வேணும்னா சொல்லிக்கோ”

“பூனைகளை ஏலியன்னு நம்புறவங்க நிறைய பேர் இன்னும் கூட அமெரிக்காவில் இருக்காங்க தெரியுமா?” 

அதெல்லாம் சரி.. ஆனா நீ என்னோட என் மொழியில பேசுறியே?

“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையைப் படிச்சுட்டு உன் நண்பன் கிட்ட ரொம்ப சிலாகித்துப் பேசுனியே. கடவுள் வந்து பேசினார்னு மட்டும் எப்படி நம்பினே.” 

“உனக்கு தமிழ் படிக்கத் தெரியுமா? நீ எப்படி அந்தக் கதையைப் படிச்ச” என்று கேட்டான் மேசை மீது திறந்திருந்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகத்தைப் பார்த்தபடியே.

“உனக்கு ஹிந்தி தெரியுமா?” பூனை கேட்டது.

“தெரியாது” 

“உனக்கு தமிழ் தெரியும். எனக்கும் தெரியும். நீ கடவுளும் கந்தசாமியும் படிச்சிருக்க. அப்ப நானும் அதைப் படிச்சிருக்கேன்.. உனக்கு ஹிந்தி தெரியாது. அதனால எனக்கும் தெரியாது. அவ்வளவுதான்! நீ கான்டேகர் படிச்சிருக்கியா.” 

“கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படிச்சது இல்ல.”

“அதனால எனக்கும் காண்டேகர் எழுதினது எதுவும் தெரியாது. இப்போ உன்கிட்ட பேசுறது நானா இருந்தாலும் கிட்டத்தட்ட அது நீயே தான்.”

“அப்படின்னா, இது நானே பினாத்திக்கிற மாதிரி, அதானே..”

“வெளியே இருந்து யாராவது பார்த்தா அப்படித்தான் இருக்கும்.” 

“அய்யய்யோ, இரு, கதவ மூடிட்டு வர்றேன்”  ஓடிச்சென்று வெளிக்கதவை தாழிட்டு வந்தான். 

அவன் திரும்பி வரக் காத்திருந்து “உண்மையில் அது இல்ல..இப்ப நீ உன் உள்மனசோட தான் பேசுற.. நான் அதை உள்வாங்கி உனக்கு டேப்ரிக்கார்டர் போல பிரதிபலிக்கிறேன்” என்று விளக்கம் சொன்னது பூனை.  

“எனக்கு நானே பேசிக்கிறதுக்கும் உள்மனசு கூட பேசறதுக்கு என்ன வித்தியாசம்?” என்று கேட்டான் கோமதிசங்கர். 

“உன்னோட உள்மனசு உன்னை விட ஆயிரம் மடங்கு புத்திசாலி. அதுதான் வித்தியாசம். நீங்க எல்லாம் மூளையில் தொண்ணூறு சதவீதம் உபயோகப்படுத்தவில்லைன்னு தெரியுமா? நான் பேசுறதெல்லாம் உன் மூளையில் பதிந்து இருக்கிற விஷயங்களை அலசி ஆராய்ந்து உன் உள்ளுணர்வு சொல்றத தான். இது உனக்கு மேலோட்டமாகத் தெரிந்ததை விட மிகமிக அதிகமா இருக்கும். ஆனா உன்னால் உன் உள்மனசோட பேச முடியாது. அதுக்கு நான் ஒரு மீடியம். அவ்வளவு தான்.”

மீடியமா? ஆவிகள் கிட்ட பேசுற மாதிரியா?

பூனை சிரித்தபடி “அதெல்லாம் கிடையாது. இப்போதைக்கு இது உனக்குப் புரியாத அறிவியல்”

“எனக்கு தெரிந்ததைக் குறித்து, என்னோட உள்மனசு மூலமா உனக்கு என்னைவிட அதிகம் தெரியும். அதானே?”

“அதே” 

“அப்படின்னா பூனைகளைப் பற்றி உனக்கு, அதாவது என் உள்மனசுக்கு என்ன தெரியும்னு சொல்லு பாக்கலாம்.” கேட்டான் கோமதிசங்கர்.

“பூனை வாலை நேராக மேல் பக்கமா உயர்த்தி வச்சிருந்தா, எதிர்ல இருக்கிறவர் கிட்ட பாசத்தைக் காட்டுதுன்னு அர்த்தம். அப்புறம் வாலை சுருட்டிக் கீழே வைத்திருந்தால் கோபமா இருக்குன்னு..”

ப்ச்.. அப்புறம்?

பூனை தான் போட்ட குட்டிகளை ஏழு இடம் மாற்றுமாம்”

“இது எல்லாம் எனக்கும் தெரியும். வேற ஏதாவது சுவாரசியமா, ஒரிஜினலா சொல்லு”

“கொம்பு போட்டு இருக்கும் பழைய னைல பூனைன்னு எழுதினால் இரண்டாவது எழுத்து வாலை சுருட்டிய பூனை போல பார்க்க அழகாக இருக்கும். சின்னக் குழந்தை கூட அதை ஈசியா படிச்சிடும்.” 

“இந்த விஷயத்தை நானும் கூட ஒருமுறை யோசிச்சிருக்கேன்.” 

“நீ மட்டும் தான் யோசிச்ச..” என்று சொல்லி பூனை தலையை சரிவாக சாய்த்தபடி ‘ஹா ஹா!’ என்று பலமாக சிரித்தது. இதுவரை யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் கோமதிசங்கருக்கு அப்போது கிடைத்தது. சரோஜ் நாராயண் ஸ்வாமியின் தெய்வீக சிரிப்பு.  சிரித்து முடிந்த பிறகு பூனை சொன்னது, “அப்புறம் பெரிய பூனைகளுக்கு பால் மிகவும் அலர்ஜி”

“அப்ப எதுக்கு தினமும் உள்ளே புகுந்து பால் பாத்திரத்தைத் தட்டிவிட்டுப் பாலைக் குடிச்சிட்டு ஓடற.”

“ஓ! அதனால தான் என்னை நீ திருட்டுப்பூனைன்னு கூப்பிடுறயா?”

“அது வந்து.. உன்னை பூனைன்னு கூப்பிடாமல் வேறு எப்படி கூப்பிடுறது.. கோபத்துல திருட்டுப்..”

“சரிசரி! அப்ப நீ செஞ்ச திருட்டுத்தனத்தை எல்லாம் விவரிக்கட்டுமா? அதையெல்லாம் தெரிஞ்ச நான் உன்னை திருட்டு மனுஷன்னா கூப்பிட்டேன். எவ்வளவு மரியாதையா சங்கர்ஜின்னு..” 

கோமதிசங்கர் பதில் சொல்ல முடியாமல் முழித்து, “ஆனா நான் தினமும் உனக்கு சாப்பாட்டு போட்டேனே.” என்று சமாளித்தான்.

“பழைய சோறு வெச்சியே. நல்ல பேரு வெச்சியா..”

“என்ன நீ விவேக் டயலாக்க அப்படியே  உல்டா பண்ணி சொல்றே.” 

“சோறா முக்கியம். பேருதான் முக்கியம்.. சங்கர்ஜி, உன்ன கோமுன்னு கூப்பிட்டா உனக்கு பிடிக்குமா? போன வாரம் உனக்கும் நட்ராஜுக்கும் இடையே நடந்த உரையாடலை கொஞ்சம் நினைச்சுப் பாரு” என்றது பூனை.

கோமதிசங்கருக்கு தூக்கிவாரிப்போட்டது. பெரும்பாலானோர் இவனை கோமதி என்று அழைப்பார்கள். சிலர் முழுப்பெயரை சொல்வார்கள். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஷர்மிளா உள்ளிட்ட மிக சொற்பமான சிலரே சங்கர் என்று அழைப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அவனது உயிர்த்தோழன் நட்ராஜ் அவனை கோமு என்று தான் அழைப்பான். இவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வரும். பூனை குறிப்பிட்ட அந்த உரையாடல் போன வாரம் அவனது அறையில் தான் நடந்தது. 

“நட்டி, தயவு செய்து இனிமேல் என்னை கோமுன்னு கூப்பிடாத.”

“ஏன், நீ என்னை நட்ராஜ்னா கூப்பிடற! நட்டின்னு தானே கூப்பிடற.”

“அப்ப நீ வேணும்னா சங்கருக்கு பதிலா என்னை சங்கு, இல்ல சங்கினு கூட கூப்பிடு, பரவாயில்ல.” 

“சங்கின்னா?” ஆச்சரியத்துடன் கேட்டான் நட்ராஜ்.

“புரிஞ்சுக்கோ நட்ராஜ். டார்ச்சர் தாங்க முடியலடா. ரெண்டு நாள் முன்ன பேங்க்ல பணம் எடுக்க போனா கேஷியர் ‘நீங்க சைன் பண்ணக் கூடாது. மேடம் தான் சைன் பண்ணனும்’னு சொல்றார்.. ‘ஹலோ, இது என்னோட அக்கவுண்ட்’னு சொன்னா, ‘புரிஞ்சிக்கங்க, சங்கர் சார், உங்க வைஃப் கோமதி தான் பணம் எடுக்க முடியும்’னு அடம் பிடிக்கிறார். ‘எனக்கு கல்யாணமே ஆகலை’ன்னு சொல்றேன். ‘அப்படீன்னா கோமதி யாரு’ன்னு கேக்கிறார்.” 

“என்ன யோசனையில மூழ்கிட்ட” என்று பூனை கேட்க கோமதிசங்கர் பிளாஷ்பேக்கிலிருந்து மீண்டான்.

“உன் உள்மனதுக்கு உன்ன விட அதிகமாக தெரியும்னு சொன்னேனே..”

“ஆமா.. புரியுது” என்றான்.

“உதாரணமாக ஷர்மிளா உன்னை காதலிக்கிறதா நீ நெனச்சிட்டு இருக்கிற.”

“கண்டிப்பா! அதுல என்ன சந்தேகம்?”

“கிடையாது. அவ உன்னை காதலிக்கலன்னு உன்னோட மூளையில் பதிவான தகவல்கள் மூலமா உன் உள்மனசுக்கு கண்டிப்பாகத் தெரியும். ஆனா உனக்குத் தெரியாது.”

“எனக்கு உன்னோட இந்த உளவியல் விஞ்ஞானம் ஒரு மண்ணும் புரியல.” 

“உன் காதுல விழுந்த, நீ அலட்சியப்படுத்தின உரையாடல்கள், நீ கண்ணால் பார்த்து மனதில் பதிவு செய்யாத காட்சிகள், அலசிப் பார்க்காத சம்பவங்கள் இப்படி ஏராளமாக இருக்கும் உன் மூளையோட பதிவில். உன் மூளையில் கடந்த காலங்களில் பதிஞ்சிருக்கிற, ஆனால் நீ கவனம் செலுத்தாமல் இருந்த சில பதிவுகளை மறுபடி ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும். 

உதாரணமா பத்து நாட்கள் முன் மொபைலில் ஷர்மிளா யாரிடமோ: ‘ச்சீ, உதை வாங்குவ. அதெல்லாம் போன்ல தர முடியாது.’

ஷர்மிளா மூன்று நாட்களுக்கு முன்பு சுகந்தியிடம்:  ‘இந்த வளையலா.. இது போன வாரம் ஃபாரம் மால்ல வாங்கினது..என் ப்ரெண்ட் என்னோட பர்த்டேக்கு கிஃப்ட் பண்ணது. க்யூட்டா இருக்கு இல்ல.’

டெஸ்பேச் கிளார்க்  பாஸ்கரிடம் ஒரு நாள்: ‘ஜகமே தந்திரமா..மொக்க படம்பா. ஃபாரம் மால்ல ரெண்டு நாள் முன்ன பாத்தேன்.’

போன வாரம் புதன் கிழமை உன் டேபிள் கிட்ட நின்றபடி, போனில்: ‘சரியா அஞ்சு, அஞ்சரை மணிக்கு வடபழனி பஸ் ஸ்டாண்ட் கிட்ட வெயிட் பண்றேன்..நீ அங்க வந்து என்ன பிக்கப் பண்ணிடு. சரியா.’

போன வாரம் செவ்வாய்கிழமை உன்னிடம்: ‘சங்கர், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா. நாளைக்கு சாயந்தரம் கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பணும். என்னோட டார்கெட் எக்செல் சீட்டை மட்டும் நாளைக்கு மதியம் கம்பளீட் பண்ணிக் கொடுத்துடறயா. ப்ளீஸ்’

அதிர்ச்சியில் அலறினான் கோமதிசங்கர். “அடிப்பாவி, இவ்வளவு நாளா அவ என்ன நம்ப வெச்சு ஏமாத்திட்டு இருந்திருக்கா.”

“சங்கர்ஜி.. தப்பு.. அவ உன்னை ஏமாத்தல.. உன்னை நீயே ஏமாத்திட்டு இருந்திருக்க.. சிம்பிளா, ஷர்மிளா அவளோட பெண்டிங் வேலைகளை முடிக்க மட்டும் உன்னை யூஸ் பண்ணிக்கிறா. அதான் உண்மை. நீ தான் தேவையில்லாதக் கனவோட..” 

“அப்பவே நட்டி சொன்னான், ஓவரா மேக்கப் பண்ணுறா. கலர் கலரா லிப்ஸ்டிக் போடறா. ஏற்கனவே யாரோடயோ ரிலேஷன்ஸ்ல இருக்கா. அவளை நம்பாதேன்னு. நான் தான் அவன் பேச்சைக் கேட்கலை” 

“யாரு உன் உயிர்த்தோழன் நட்ராஜா? அவனைப் பத்தின ஒரு அதிர்ச்சித் தகவல் உனக்கு சொல்லட்டுமா?”

இந்த சமயத்தில் வெளியே ஏதோ சத்தம் கேட்க, “ஒரு நிமிஷம் என்னன்னு பாத்துட்டு வந்திடறேன். இங்கேயே இரு. போயிடாத” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து கதவை சாத்திவிட்டு வாசலில் வந்து பார்த்தான். பப்புள் வாட்டர் கேன் சப்ளை செய்யும் ராஜேந்திரன் தோளுக்கு மேல் வளர்ந்த வாட்டர் கேனோடு நின்று கொண்டிருந்தான். “சார், சமையல் ரூமுக்கு உள்ளார வெச்சிடவா?” என்று கேட்டான். “பரவாயில்லப்பா. இங்க வாசலிலே வெச்சிட்டு போ. நான் எடுத்துக்கிறேன். காலி கேன், அப்புறம் பணம் நாளைக்கு தர்றேன்.” என்று சொல்ல, அவன் வாசலிலே வாட்டர் கேனை வைத்து விட்டு ஓகே சார் சொல்லி நகர்ந்தான்.

கோமதிசங்கர் உள்ளே வந்ததும் “ராஜேந்திரன் கிட்ட கேன் பணம் நாளைக்கு தரேன்னு நீ சொன்னபோது என்ன பதில் சொன்னான்” என்று கேட்டது பூனை.

“சரி என்பது போல தலையை ஆட்டினான். ஏன்?”

“ஏமாற்றுப் பேர்வழி! உண்மையிலே அவன் தான் உனக்கு 200 ரூபா தரணும்”

“எப்படி?” என்று ஆச்சரியத்துடன் வினவினான் கோமதிசங்கர்.

“போன தடவை கேன் போட்டபோது நீ ஐநூறு ரூபா கொடுத்தப்ப அதை வாங்கிட்டு சில்லறையில்லை. கணக்குல வெச்சிக்கறேன்னு சொன்னான். நீ அதை மறந்துட்டே. பழைய பாக்கி 240 ரூபாய். அத்தோடு இப்போ போட்ட கேனுக்கு அறுபது ரூபா.” 

“அடப்பாவி, இவனுமா என்னை ஏமாத்துறான்”

“இதுக்கே இப்படி அதிர்ச்சி ஆயிட்டியே. உன் உயிர்த்தோழன் உன்ன ஏமாத்துறான்னு தெரிஞ்சா..”

“யாரு, நட்டியா?” 

“ஆமா, பிரஷ் ஒர்க்ஸ்ல டிஜிடல் மார்கெட்டிங் அசிஸ்டண்ட்  போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணலாம்னு நீ சொன்ன போது அவன் என்ன சொன்னான்? யோசிச்சுப் பார்” 

அந்த விவாதம் நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு. கோமதிசங்கர் தான் நட்ராஜிடம் இது குறித்து சொன்னான். ‘பிரஷ்ஒர்க்ஸ்ல இந்த போஸ்ட் கால் ஃபார் பண்ணியிருக்காங்க. நம்ம இரண்டு பேர் ப்ரொபைல்க்கும் சான்ஸ் அதிகம்’ என்றும் பரிந்துரைத்தான். அதற்கு நட்ராஜ் ‘அது சரிப்பட்டு வராது. அந்த நிறுவனத்தில் வேலைப்பளு அதிகம் மற்றும் வேலை கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு’ என்றெல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“ஏன், இப்ப என்ன அதுக்கு?” பூனையிடம் கோமதிசங்கர் கேட்டான்.

“அந்த பொசிஷனுக்கு நடராஜ் அப்ளை பண்ணியிருந்தான். அது உனக்குத் தெரியுமா?”

“என்ன சொல்ற நீ? நிஜமாகவா?”

“அப்ளை பண்ணது மட்டுமல்ல. அதுக்கப்புறம் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி போன வாரம் செலக்ஷன் கூட ஆகிவிட்டான்.”

“துரோகி..என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே”

“இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் இங்க வருவான். அப்போ நீ அவன் கிட்டயே இதைக் கேளு” 

“அவன் இப்ப வருவான்னு உனக்கு எப்படித் தெரியும்?  ஓகே..ஓகே..புரியுது. அவன் எப்பவும் இங்க வருகிற பேட்டர்ன் என் மூளையிலே பதிவாகியிருக்கும்.. அதை வெச்சு.. அதானே?”

பூனை சொல்லி முடித்த சில வினாடிகளில் வெளியே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. 

“அவன் தான் வரான். தயவு செய்து இதை எல்லாம் பூனை சொன்னதா அவன்கிட்ட சொல்லாதே. அதுக்குப் பிறகு சயின்ஸ் எல்லாம் காலி ஆயிடும். நீ முதல்ல ஆரம்பிக்கும்போது கேட்டியே. மெண்டல் ஆயிட்டேனான்னு..  அப்படித்தான் அவனும் உன்னை நினைச்சுக்குவான்.. ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை செய்தது பூனை.

கோமதிசங்கர் கதவை திறந்து பார்த்தால் வெளியே நடராஜ் நின்று கொண்டிருந்தான்.

“கோமு, என்னடா பண்ற..” என்று ஆரம்பித்துவிட்டு நாக்கைக் கடித்தபடி “சாரி சங்கர்” என்று சமாளித்தான். 

“அதெல்லாம் விடு.. முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. பிரஷ்ஒர்க்ஸ் மார்க்கெட்டிங் பொசிஷனுக்கு நீ அப்ளை பண்ணியா?” என்று கேட்டான் கோமதிசங்கர்.

“அது வந்து சங்கர்..” என்று இழுத்தான் நடராஜ்.

“இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி செலக்ஷன் கூட ஆயிட்டியாமே?”

“ஆனா இன்னும் எனக்கு கன்ஃபார்மா அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரல. வந்த பிறகு உனக்கு சர்ப்ரைஸா சொல்லலாம்னு.. உனக்கு யார் சொன்னது, மாதவனா?”

“அப்படின்னா நீ மாதவனுக்கு கூட சொல்லிட்டே. ஆனா எனக்கு சொல்லல. அப்படித்தானே? நேத்து நைட் டின்னருக்கு உப்புமா சாப்பிட்டத கூட உனக்கு போன் பண்ணி சொன்னேனேடா.. நீ எல்லாம் ஒரு ஃப்ரண்டா?” என்று கொந்தளித்தான் கோமதிசங்கர்.

“சாரிடா மச்சி. நீ ஏற்கனவே ஒரு நல்ல வேலையில் தானே இருக்க.. அதனால தான் உன்னை இதுக்கு என்கரேஜ் பண்ணல”

“நல்லவேளை, இந்த பூனை சொன்னதால, எனக்கு உன் தகிடுதித்தம் எல்லாமே தெரிஞ்சிடுச்சு” என்று உணர்ச்சிவசப்பட்டு பூனையை கைகாட்டி சொன்னான் கோமதிசங்கர்.

“என்னது பூனையா?” என்று கண்களை சுருக்கி கிண்டலாக கேட்டான் நட்ராஜ்.

“ஆமாண்டா. என் உள்மனச ஆராய்ந்து பார்த்து இந்த ரோபோட்டிக் ஏலியன் பூனை விவரமா எல்லாத்தையும் சொல்லிடுச்சு.”

“ஒரு நிமிஷம் இரு” என்று நடராஜ் அவன் நெற்றியில் கையை வைத்துப் பார்த்து “ஜூரம் ஏதும் இல்லையே.. ஏன் என்னமோ மாதிரி பேசற.. டாக்டரைப் போய் பார்க்கலாமா?” என்று நிஜமாகவே கரிசனத்துடன் கேட்டான். மேசை மீது அமர்ந்திருந்த பூனையை முற்றிலுமாக அலட்சியம் செய்தான். அவனுக்கு கோமதிசங்கரைப் பார்த்துத்தான் கொஞ்சம் பயமாக இருந்தது.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். உனக்கு என் நண்பனா இருக்கத் தகுதி இல்லை. இங்கிருந்து கிளம்பு” என்று நட்டியை கழுத்தைப் பிடித்து  வெளியே தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு ஆவேசமாக கதவை தாழிட்டு உள்ளே வந்து படபடப்புடன் சேரில் அமர்ந்தான் கோமதிசங்கர். அதுவரை சாதுவாக மேசையின் ஓரத்தில் அமர்ந்திருந்த பூனை மெதுவாக தலையை சரித்துப் பார்த்தது. இப்போது கோமதிசங்கர் கொஞ்சம் கோபமாகக் குரலை உயர்த்திப் பூனையைப் பார்த்துப் பேசினான்.

“இன்னிக்கு நாம இதுக்கு ஒரு முடிவு பண்ணிடலாம். எனக்கு ஒரு மூணு விஷயம் நடந்தாகணும். அதுக்கு நீ என் உள்மனசோட கலந்தாலோசித்து வரிசையா எனக்கு கொஞ்சம் ஐடியா  சொல்லு. இனிமேல் அந்த நட்டி சொன்னதெல்லாம் நான் நம்பப் போறதில்லை. ஷர்மிளா ஒரு வேளை வேற யாரையாவது காதலித்தாலும் பரவாயில்லை. அவளுக்கு என்னைப் போல ஒரு அன்பான புருஷன் கிடைக்க மாட்டான். அவ இப்போ தெரியாத்தனமா மாட்டிக்கிட்ட காதலில் இருந்து மீண்டு வரணும். அப்புறம் என்னோட உண்மையான காதலை அவ புரிஞ்சுக்கணும்.  இரண்டாவதா இந்த துரோகி, நட்டிப் பையன். அவனை எப்படியாவது பழி வாங்கணும்.

மூணாவதா, என்னோட பாஸ் பரமசிவம். அவர்கிட்ட ஏதாவது ஒரு வீக் பாயிண்ட் இருக்குமில்ல. அதை கண்டுபிடித்து லைட்டா பிளாக்மெயில் பண்ணி அவரை பயமுறுத்தி அடுத்த பிரமோஷன் உடனடியாக வாங்கிடணும்.

இப்போ இதையெல்லாம் ஒவ்வொண்ணா என் உள்மனசுல ஆராய்ந்து பார்த்து தீர்வு சொல்லு, பார்ப்போம்.” 

பூனை எதுவும் சொல்லாமல் அவனை ஒருமுறை தலையை உயர்த்தித் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு புத்தகங்களை எல்லாம் கலைத்து விட்டபடி மேசையின் மேல் ஒரு கேட்வாக் செய்தது.

“நான் சொல்றதெல்லாம் கேட்குதா.. இல்ல சரியாப் புரியலையா?”

இப்போது பூனை கொஞ்சம் மிரண்டபடி ஜன்னல் கம்பி இடைவெளியில் நுழைந்து வெளித்திண்டில் உட்கார்ந்து கொண்டது. இப்போது பூனயைச் சுற்றி முன்பு தெரிந்த ஊதா நிற ஒளிவட்டம் இல்லை. 

“திமிரா உனக்கு.. நீ வெறும் டம்மி பீஸ் தானே! என் உள்மனசு சொல்றத அப்படியே ஒப்பிக்கிற ரோபோ இல்லன்னா ஒரு ஏலியன். இப்போ பதில் சொல்றதுக்கு உனக்கு என்ன கேடு?” என்று வெறியுடன் கத்தினான் கோமதிசங்கர். எதிர்வீட்டு ஜன்னல் திறந்து யாரோ கலவரத்துடன் பார்த்தார்கள்.

பூனை இப்போது எழுந்து நின்று வாலை நேராக உயர்த்திப் பிடித்து சிநேகபாவத்துடன் கோமதிசங்கரை  பார்த்தது.

“திருட்டுப்பூனை” என்று திட்டினான் கோமதிசங்கர்.  “இது சயின்ஸோ அமானுஷ்யாமோ எல்லாம் கிடையாது. எனக்கு பிரமையுமில்லை. உனக்குத்தான் பைத்தியம்”

பூனை இன்று முதல் முறையாக அவனைப் பார்த்து மெல்ல வாயைத் திறந்து ‘மியாவ்’ என்றது



பூனையும் கோமதிசங்கரும்

No comments:

Post a Comment