Saturday, August 7, 2021

முறுக்கு சுற்றலாம் வாங்க..

 

 

Published:

ஒவ்வொரு தீபாவளிக்கும் இது பரணிலிருந்து கீழே இறங்கிடும்! - `முறுக்கு’ வரலாறுDiwali snacks


 

முறுக்கு பற்றி கட்டுரை எழுத தொடங்கியபின் தகவல்கள் ரொம்ப குறைவாக இருக்கிறதே என்று கூகுளில் 'சங்க இலக்கியத்தில் முறுக்கு' என்று தேடினால் சங்கம் ஹோட்டலில் செய்த முறுக்கு என்று 'பெப்பே' காட்டுகிறது. 'தமிழ் திரைப்படங்களில் முறுக்கு' என்று தேடினால் ஆதி நடித்த 'மீசைய முறுக்கு' படம் தொடர்பான போஸ்டர்கள் வந்து விழுகிறது.

மணப்பாறை முறுக்கு

முறுக்கு வகைகள் தோராயமாக; கைமுறுக்கு, நெய் முறுக்கு, முள்ளு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, தேன் குழல் முறுக்கு, அச்சு முறுக்கு, கல்யாண சீர் முறுக்கு, அப்புறம் முக்கியமாக மணப்பாறை முறுக்கு. 'மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி' என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் நான் நினைப்பது, மணப்பாறை என்றாலே முறுக்கு தானே நமக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. கவிஞர் மருதகாசிக்கு மட்டும் ஏன் மாடு நினைவுக்கு வந்தது என்பதே. ஆனால் அதன் விளைவால் காலத்தால் அழியாத ஒரு திரைப்பாடல் நமக்கு கிடைத்தது என்பது வேறு விஷயம்.

முறுக்கு செய்ய அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு பொருட்கள் தான் தேவை. உளுந்து மாவு, அரிசி மாவு, எண்ணெய்(மற்றும் வெண்ணெய்), சீரகம், பெருங்காயம், கருப்பு எள்ளு. சில வகை முறுக்குகளில் ஓமம் சேர்க்கப்படும். அப்ப, உப்பு வேண்டாமா? என்று கேட்டு வெறுப்பேத்தாதீங்க. உப்பு, தண்ணீர் இதெல்லாம் சமையலுக்கு தேவையான பொருள்கள் லிஸ்டில் எப்பவும் வராது. அப்புறம் முறுக்கு செய்ய முக்கியமான, லிஸ்டடில் இல்லாத ஒன்று: பொறுமை.

முறுக்கு எங்கிருந்து தோன்றியது என்ற கேள்விக்கு தமிழ்நாடு என்று பட்டென்று உடனே பதில் சொல்லிவிடலாம். முறுக்கு தமிழகத்தில் இருந்துதான் வந்து இருக்கும் என்பதற்கு அதன் பெயரே ஒரு சான்று. முறுக்கிக் கொண்டு இருப்பதால் அது முறுக்கு. வட இந்தியாவில் இதை சக்லி என்று சொல்கிறார்கள் அங்கு சக்கிலி என்றால் சக்கரம் என்று அர்த்தம். எப்போதும் போல் தெலுங்கில் எக்ஸ்ட்ராவாக ஒரு லு சேர்த்து முறுக்குலு என்கிறார்கள்.

எப்போது முறுக்கு தோன்றியது என்ற தகவல் எதுவும் இல்லை. ஒரு வேளை தமிழகத்தில் தீபாவளி கொண்டாட தொடங்கிய காலத்திலிருந்து இருக்கலாம். பட்டாசு இல்லாத கொரோனா தீபாவளி கூட பார்க்கலாம். ஆனால் தீபாவளிக்கு முறுக்கு செய்யாத வீடுகள் இருக்காது. 'பனி இல்லாத மார்கழியா' பாடல் வரிசையில் கவிஞர் சொல்ல மறந்துபோன ஒரு வரி 'முறுக்கு இல்லாத தீபாவளியா?'

முறுக்கு

தீபாவளி என்றாலே இனிப்புக்கு அதிரசம் சுடுவது இவற்றோடு சில சமயம் லட்டு. முறுக்கு கண்டிப்பான ஒரு சேவரி ஐட்டம். கிருஷ்ணஜெயந்திக்கு செய்வது கிருஷ்ணருக்கு (குறிப்பாக நமக்கும்) ரொம்ப பிடித்த முறுக்கு மற்றும் சீடை.

தமிழில் சமையல் செய்யும் ஒவ்வொரு உணவுக்கும் தாய்மார்கள் வினைச்சொல்லாக கையாளும் அடைமொழி மிகவும் அலாதியானது. இட்லி ஊற்றுவார்கள். தோசை வார்ப்பார்கள். வடையை சுடுவார்கள். கொழுக்கட்டை பிடிப்பார்கள். அடை தட்டுவார்கள். லட்டு உருட்டுவது. உப்புமா கிண்டுவது. முறுக்கு மட்டும் தான் சுற்றுவார்கள். ஆங்கிலத்தில் எல்லாமே 'வாட் இஸ் குக்கிங்' தான்.

முறுக்கு சுற்றல் மற்றும் அதிரசம் சுட தேவையான முன்னேற்பாடுகள் வீடுகளில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே தடபுடலாக தொடங்கிவிடும். முதல் கட்டமாக பரணிலிருந்து எடுப்பது முறுக்கு செய்ய தேவையான பெரிய வாணலி. இதை தீபாவளி வாணலி என்று சில வீடுகளில் சொல்வார்கள். வருடத்திற்கு ஒரு முறை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல தீவளிக்கு தீவளி இது பரணிலிருந்து கீழே இறங்கும். அப்புறம் பெரிய ராட்சத ஜல்லிக் கரண்டி, முறுக்கு சுட்டபின் ஸ்டோர் செய்ய தேவையான அலுமினிய டின், இவற்றை எல்லாம் பையன்கள் உதவியுடன் அம்மாக்கள் கீழே இறக்குவார்கள். தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்கள் முன் தான் முறுக்கு சுடும் படலம் ஆரம்பமாகும். முறுக்கு சுடும் போதே அவ்வப்போது தெருவில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் ஒரு முறுக்கு எடுத்துக்கொண்டு அம்மா திட்டுவதை பொருட்படுத்தாமல் குழந்தைகளும் சிறுவர்களும் மீண்டும் வெளியே ஓடுவார்கள். பல வீடுகளில் தீபாவளி சமயங்களில் காதில் விழும் சில ஸ்டாண்டர்ட் உரையாடல்கள்.

மகிழம்பூ முறுக்கு

"என்னம்மா, போன தீபாவளிக்கு பண்ண முறுக்கு கொஞ்சம் டார்க் ப்ரவுன் கலர்ல இருந்தது. அது கொஞ்சம் டேஸ்ட் ஆகவும் இருந்தாப் போல.. "

"அது ஒண்ணும் இல்ல, அந்த சமயத்துல நான் கொஞ்சம் கோபமா இருந்ததால சரியா கவனிக்காம எண்ணெயில கொஞ்சம் அதிகமா காய்ஞ்சுடுச்சு. அதான்!"

"கோவமா? யார் மேல, அப்பாவா.. வேணும்னா இப்ப அவர வந்து கொஞ்சம் திட்ட சொல்லட்டுமா? முறுக்கு நல்லா டேஸ்டா வருமில்ல.."

"ஏம்மா, இப்படி முறுக்கு சுட்டுத் தள்ளுர! ஏதாவது கடை போட போறியா! (ஆனால் மூன்றே நாட்களில் முறுக்கு டின் காலியாகி விடும்)

முறுக்கு அதிரசம் சுட்டு 'சன் டேன்' ஆகி கொஞ்சம் கறுத்துப்போன அம்மா 'என்னால முடியலடா சாமி, அடுத்த தீபாவளிக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம்' என்று சொல்வார்களே தவிர குடும்பத்தினர் முறுக்கு 'சூப்பர்' என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டாலே போதும், சரண்டர் ஆகி விடுவார்கள். அடுத்த தீபாவளிக்கும் எப்போதும் போல வாணலி பரணிலிருந்து டாண் என்று கீழிறங்கும்.

மணப்பாறை முறுக்கு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். முதன்முதலாக மணப்பாறை முறுக்கை சுதந்திரம் பெரும் முன்பே ரயில்வே கேண்டீன் மூலமாக இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது மணப்பாறையை சேர்ந்த மணி ஐயர். இன்றைக்கும் மணி ஐயரின் அதே செய்முறையில் விலை குறைவாகவும் அலாதியான சுவையும் கொண்ட மணப்பாறை முறுக்கு செய்வதை முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு தொழிலாக கொண்டுள்ளார்கள்.

முறுக்கு

டபுள் ஃப்ரை முறையில் செய்யப்படும் இந்த முறுக்கில் ஓமம், சீரகம் மற்றும் கருப்பு எள்ளு சேர்க்கப்படுகிறது. இதன் ருசிக்கு மணப்பாறை பகுதியில் கிடைக்கும் இயல்பான உப்புத் தன்மை கொண்ட தண்ணீரும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் உள்ளூரில் இந்த முறுக்கு இரண்டு ரூபாய்க்கு கிடைக்கிறது. இதற்கான புவிசார் குறியீடு இன்னமும் விண்ணப்பிக்கப்பட்ட நிலையிலலேயே தான் உள்ளது. இன்றளவில் முறுக்கு செய்யும் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயராத நிலையில் இதில் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் மட்டுமே என்று கூறுகிறார்கள்.

கல்யாணம் முடிந்த பிறகு பெண் வீட்டார் தரும் சீர் வரிசையில் உள்ள ஐட்டங்களில் முக்கியமாக அலசப்படுவது கல்யாண சீர் முறுக்கு. அதில் எத்தனை சுற்று இருக்கிறது என்று எண்ணிப் பார்த்து பெண்கள் பெருமிதம் கொள்வார்கள். பதினோரு சுற்று இருந்தால் ரொம்ப கெத்து என்று சொல்வதுண்டு. உலகிலேயே பற்களுக்கு சவால் விடும் கடினமான தின்பண்டங்களின் பட்டியலில் முறுக்கு கண்டிப்பாக இடம் பெறும். ஆனால் கைகளினால் சுற்றப்படும் இந்த சீர் முறுக்கு வெண்ணெய் அதிகமாக சேர்ப்பதால் தரமாகவும் விலை உயர்ந்ததாகவும் அதேசமயம் மிருதுவாக, சுவை அள்ளும்படியாகவும் இருக்கும்.

முறுக்கு

தமிழில் நக்கல் மிகுந்த பழமொழிகளில் ஒன்று: 'பல்லில்லாத கிழவனுக்கு முறுக்கு கேட்குதாம்'. ஆனால் இன்றைக்கும் தாத்தா பாட்டிகளுக்கு வெற்றிலைப் பாக்கு இடிக்கும் குட்டி உரலில் முறுக்கு பொடித்துக் கொடுக்கும் பாசக்கார பேரன் பேத்திகளை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். முறுக்கு சம்பந்தமாக என் பங்களிப்பாக

ஒரு கவிதை: இளமையில் முறுக்கு தின்ன கையில் காசில்லை. முதுமையில் கைநிறைய காசு. வாயில் பல் இல்லை. ஆசை மட்டுமே என்றும் நிரந்தரமாய்...

ஒரு ஆலோசனை: நான் சொல்வதெல்லாம் “காற்றுள்ள போதே தூற்றிக்கொள். பல்லுள்ள போதே சாப்பிட்டுக் கொள்'” என்பதுதான்.

ஒரு தத்துவம்: நூலுல விழுந்த சிக்கானா பிரிச்சி தீர்க்கலாம். வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனா முறுக்குல விழுந்த சிக்கலை உடைச்சு அதை சாப்பிட்டு தான் தீர்க்கணும்.

-சசி

 விகடன் கட்டுரை லிங்க் : 

 ஒவ்வொரு தீபாவளிக்கும் இது பரணிலிருந்து கீழே இறங்கிடும்! - `முறுக்கு’ வரலாறு

 

 

பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டும் அப்பா கையெழுத்தும்

 

Published:

ஜெகஜால கில்லாடி பையன்களின் கையெழுத்து போர்ஜரி! - பிராக்ரஸ் கார்டு கதை

 Representational Image


 

சிறுவயதில் உங்கள் வீட்டு பரணையில் தட்டுமுட்டு சாமான்களை எடுக்கும்போது அல்லது புத்தகங்களை அடுக்கும்போது உங்களை குட்டித் தேள் கொட்டிய அனுபவம் உண்டா? குறைந்தபட்சம் பள்ளிக்குச் செல்லும் வழியில் உங்களை ஏதாவது தெரு நாய் துரத்திக் கடித்திருக்கிறதா?

மண்டையிலோ, கால் கையிலோ அடிபட்டு ரத்தம் கொட்டும் போது பஞ்சு வைத்து துடைத்து டிங்சர் வைக்கும்போது 'ஐயோ! இதற்கு அடிப்பட்ட வலியே பரவாயில்லை' என்று அலறியதுண்டா?

சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டப் பழகும் போது எதிரே வந்த தயிர்க்காரப் பாட்டி அல்லது ஓரமாக சிவனே என்று புகையிலை போட்டபடி அமர்ந்திருந்த தாத்தாவையோ நோக்கி காந்தம் போல் ஈர்க்கப்பட்ட சைக்கிள் மோதி செமத்தியாக வசவோ அடியோ வாங்கின அனுபவம் உண்டா?

Representational Image

சிறு வயதில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய், இரவானதும் பதுங்கியபடி வீட்டுக்கு வந்து கதவை தட்ட அம்மா கதவைத் திறந்ததுண்டா?

மதிப்பெண் அட்டை வந்ததும் அதில் கையெழுத்து வாங்க பயந்து, அப்பா கையெழுத்தை நீங்களே போட்டு மாட்டிக்கொண்டது அல்லது தப்பித்துக் கொண்டது உண்டா?

பள்ளிக்கு கட் அடித்து சுற்றி விட்டு அப்பாவை அழைத்து வந்தால்தான் வகுப்புக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டை அனுபவித்தது உண்டா?

மேற்கூறிய கேள்விகள் அனைத்துக்கும் நீங்கள் இல்லை என்று சொல்லியிருந்தாலோ அல்லது 'தேளா அது என்ன? நான் பார்த்ததே இல்லையே' என்பது போல் ஆச்சரியப்பட்டாலோ நீங்கள் கண்டிப்பாக 2000 கிட்ஸ். ஓரிரண்டு கேள்விகளுக்கு மட்டுமே ஆம் என்று சொல்லியிருந்தால் ஒருவேளை நீங்கள் 90ஸ் கிட்ஸ். மூன்றுக்கு மேல் ஆம் என்று சொல்லியிருந்தால் நீங்கள் சத்தியமாக நம்ம செட். 70ஸ் அல்லது 80ஸ் காலத்து வடிகட்டிய செல்லங்கள். வாருங்கள். இப்போது நாம் கேள்விப் பட்டியலில் இருந்த கடைசி இரண்டு விஷயங்களை மட்டும் மனமென்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று கொஞ்சம் ரீ-ப்ளே செய்வோம்.

அரசு பள்ளி

எங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்ததால் சினிமாவில் எம்ஜிஆருடன் சண்டைபோடும் வில்லன் நடிகர் 'ஜஸ்டின்' பெயரால் மாணவர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு ஆறுகால பிரம்படி பூஜையின் முதல் பூஜையை பள்ளி காலை பிரார்த்தனை நேரம் முடிந்த பிறகு இவரே தொடங்கி வைப்பார்.

தாமதமாக வந்த மாணவர்கள் வரிசையில் ஒவ்வொருவராக கையை நீட்ட, மெல்லிய வார்னிஷ் பூசப்பட்ட நீளமான பிரம்பால் அவர் தரும் பிரசாதம், நம்மை அந்த ஒரு வருடம் முழுவதும் பள்ளிக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டி வீட்டிலிருந்தே ஓட வைக்கும்.

அப்போதெல்லாம் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டு என்று சொல்லப்படும் மதிப்பெண் அட்டையில் அப்பாவின் கையெழுத்து வாங்குவது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம். குறித்த காலத்தில் கையெழுத்தான பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை சமர்ப்பிக்கத் தவறினால் குறைந்த பட்ச தண்டனை இரண்டு உள்ளங்கை பிரம்படி. அந்தக் காலங்களில் பிரம்படிக்கு டேக்கா கொடுத்து பள்ளிகளில் பெஞ்சுகள் மேல் தாவி ஏறி ஓடும் மாணவர்கள்; அவர்களை பிடிக்க பிரம்புடன் துரத்தும் ஆசிரியர்கள். இத்தகைய காட்சிகள் அப்போதெல்லாம் மிகவும் சகஜமப்பா.

அடிக்கு பயந்து பல குறைந்த மதிப்பெண் பெற்ற பையன்கள் அவரவர் அப்பாவின் கையெழுத்தை பிரதி எடுத்து அவர்களே போட்டு விடுவார்கள். இப்படி கையெழுத்து போர்ஜரி செய்வதில் ஜெகஜால கில்லாடி பையன்கள் சிலர் பள்ளிகளில் இருப்பார்கள். இவர்கள் மற்ற மாணவர்களுக்கும் இந்த சேவையை இலவசமாக செய்து காலரை தூக்கி விட்டபடி ஹீரோக்களாக வலம் வந்தார்கள். இந்த விஷயத்தில் எங்கள் வீட்டில் நிலைமை ரொம்ப மோசம்.

ஏனென்றால் எங்க அப்பாவின் கையெழுத்து வளைந்து வளைந்து, ஒரு அலாதியான வடிவில் இருக்கும். அதை நகல் செய்ய மேற்சொன்ன பலே கில்லாடிகளுக்கே மிகச் சிரமமான ஒன்று. பள்ளியில் ஆசிரியர்களே அதைப் பார்த்து ஆஹா ஓகோவென சிலாகிப்பார்கள் என்றால் பாருங்களேன். ஆனால் உண்மையில் அந்தக் கையெழுத்தில் அவருடைய பெயரின் ஒரு எழுத்து கூட நம்மால் பார்க்க முடியாது. அதே சமயம் அதை காப்பியடிப்பது என்பது மோனாலிசா ஓவியத்தை டூப்ளிகேட் செய்வது போன்றது.

Representational Image

அதனால் வேறு வழியில்லாமல் அவரிடம் ஒரிஜினல் கையெழுத்து வாங்க நான் ஒரு டெக்னிக்கை பயன்படுத்துவேன். அதாவது காலையில் அவர் வேலைக்கு போக கிளம்பி தெருவில் பாதி தூரம் சென்றபின் துரத்திச் சென்று மார்க் சீட்டை நீட்டுவேன். நடுத்தெரு என்பதால் பஞ்சாயத்தைத் தவிர்த்து கோபத்துடன் 'சாயந்திரம் வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கிறேன்' என்று சொல்லி கையெழுத்து போட்டு விடுவார். அதே சமயம் ஈஸியான கையெழுத்துள்ள அப்பாவின் பையன்கள் எல்லாம் சிரித்தபடி பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை வகுப்பு ஆசிரியரிடம் அசால்ட்டாக சமர்ப்பிப்பார்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்வதுபோல் போர்ஜரி கையெழுத்து போட்ட சில மாணவர்கள் மாட்டிக்கொள்ள அப்பாவை பள்ளிக்கு அழைத்து வந்தால்தான் உண்டு என்று வகுப்பாசிரியர்கள் சிலர் கூறிவிடுவதுண்டு. இந்நிலையில் தங்கப்பதக்கம் சிவாஜி போல கண்டிப்பான அப்பாக்கள் உள்ள பசங்க கதி அதோ கதிதான்.

அருகாமையில் இருந்த வேறு ஒரு உயர்நிலைப் பள்ளியில் அப்படி மாட்டிக் கொண்ட ஒரு பையனுக்கு ஒரு விபரீத யோசனை வந்தது. அவனும் சக நண்பர்களும் சேர்ந்து ஒரு செயல்திட்டக் குழு அமைத்தார்கள். நீண்ட யோசனைக்குப்பின், பட்ஜெட் மற்றும் செலவு கருத்தில் கொண்டு அப்பாவாக யாராவது ஒருவரை மலிவான வாடகைக்கு செட்டப் பண்ணி பள்ளிக்கு அழைத்து வருவது என்று முடிவானது.

பிராக்ரஸ் கார்டு

திருவல்லிக்கேணியில் அந்த கால கட்டத்தில் கல்யாண ஊர்வலம் போவதற்கான பெட்ரோமாக்ஸ் லைட் தூக்கி வரும் வாடகை ஆட்கள் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் ரோடு ஓரமாக நின்று கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவரை அப்பாவாக நடிக்க ஒரு மிக சல்லிசான 'புதுமுக நடிகர் சம்பளத்திற்கு' பேசி முடித்தார்கள். அந்த நபரும் ரொம்ப காலம் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சான்ஸ் கிடைக்காத ஆத்மா போலும். வெள்ளையும் சொள்ளையுமாக உடையணிந்து பள்ளிக்கு வந்த அவர் இந்தப் பையனை வகுப்பு வாசலுக்கு இழுத்து வந்து சரமாரியாக படார் படார் என்று நிஜமாகவே பின்னிப் பெடலெடுத்து விட்டு ஆசிரியரிடம் "சார் பையன் கண்ணை மட்டும் விட்டுட்டு மத்ததையெல்லாம் பிச்சி எடுத்துடுங்க" என்று கோபமாக வாங்கின காசுக்கு கொஞ்சம் ஓவராகவே நடிகர் திலகமே பொறாமைப்படும் ஆக்டிங் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அன்றைய தினம் முழுவதும் அந்தப் பையன் 'இதற்கு என் அப்பாவிடமே நான் அடி வாங்கியிருப்பேன். அது கூட இவ்வளவு மோசமாக இருந்திருக்காது' என்று புலம்பியபடி இருந்தானாம்.

இது நடந்து சில நாட்கள் கழித்து அந்த ஆசிரியர் துரதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு கல்யாணத்துக்கு சென்றபோது ஊர்வலம் முன்வரிசையில் பெட்ரோமாக்ஸ் விளக்கை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்த அந்த நபரை பார்த்து விட்டார். அவருக்கு சட்டென்று விஷயம் விளங்கிவிட்டது. மறுநாள் வகுப்புக்கு வந்து அந்த பையனை அழைத்து "ஏண்டா, உங்க அப்பா எங்க வேலை செய்கிறார்?" என்று கேட்க, விஷயம் தெரியாத அந்த பையனும் பெருமையாக "செக்ரடேரியட்ல"

"அப்படியா, நேத்து நான் அவர் கல்யாணத்துக்கு பெட்ரோமாக்ஸ் லைட் தூக்கிட்டு போறத பார்த்தேனே"

அப்புறம் என்ன நடந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிந்திருக்குமே. ஆமாம், பிரம்படி பட்ட அந்த பையனோட உள்ளங்கையில் ஒரு நெல்லிக்காய் அளவு வீக்கம்.

Representational Image

அந்த பெட்ரோமாக்ஸ் ஆசாமி ஒருவேளை பின்னாளில் கண்டிப்பாக நடிகராகியிருக்கக் கூடும் என்று நம்பிய அந்த வகுப்பு மாணவர்கள் பல காலம் தமிழ் படங்களில் வரும் துணை நடிகர் கூட்டத்தில் அவர் தென்படுகிறாரா என்று தேடிப் பார்த்ததாக கேள்வி.


காலம் மாறியதும் காட்சிகளும் மாறின. கல்யாண ஊர்வலங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கு அணிவகுப்பு வழக்கொழிந்தது. பள்ளிகளில் பிரம்புகள் காணாமல் போனது. பள்ளி மதிப்பெண் அட்டைகளில் இப்போதெல்லாம் தகப்பனார் கையெழுத்து தேவைப்படுவதில்லை. ஒருவேளை தேவைப்பட்டாலும் அதை அப்பாவிடம் இருந்து பெறுவதற்கு மகன்களுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை.

-சசி

 விகடன் கட்டுரை லிங்க் :

 ஜெகஜால கில்லாடி பையன்களின் கையெழுத்து போர்ஜரி! - பிராக்ரஸ் கார்டு கதை