Published: #MyVikatan
டாலர் பிஸ்கட் நினைவிருக்கா 70ஸ் கிட்ஸ்? - சென்னைவாசியின் ஃபிளாஷ்பேக்
நாஸ்டால்ஜிக் என்பதை கூகுள் தமிழில் 'ஏக்கம்' என்று மொழி பெயர்த்து சொல்கிறது. ஒருவிதத்தில் இது சரியே. சிறு வயது கால நினைவுகளின் ஏக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
‘வாங்க மக்கா, மதுரையில் என்னவெல்லாம் சாப்பிடலாம், எங்கேயெல்லாம் கிடைக்கும்’ என்று நிதர்சன் பட்டியலிட்டதை ஜொள்ளு விட்டபடி படித்த போது கூட தோன்றவில்லை. கமெண்ட் பகுதியில் ‘யாராவது சென்னையை பற்றி சொல்லுங்களேன்’ என்று ஒருவர் கெஞ்சி இருந்தார். அப்போதும் கொஞ்சமும் நான் கவலைப்படவில்லை. ஆனால் இன்னொருவர் ‘சென்னை ஷேம் ஷேம்..கிட்டத்தட்ட பப்பி ஷேம்’ போல் நக்கலடித்து எழுதியது எனக்குள் இருந்த மிருகத்தை... சாரி, குழந்தையைத் தட்டி எழுப்பி விட்டது.
ஆனால் குழப்பம் என்னவென்றால் மதுரையை போல் சென்னை சாப்பாட்டுக் கடைகளை ஒரு கட்டுரையில் அடக்க முடியாது. மெட்டி ஒலி சீரியல் போல பெருசாக நீண்டு விடும். ஏன் என்றால் நாட்டில் உள்ள அத்தனை விதமான உணவு வகைகளும் சென்னையில் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் தெருவுக்கு மூன்று பிரியாணி கடைகளும் ஏரியாவுக்கு பத்து பதினைந்து பிரபல உணவகங்களும் இங்கு உண்டு. உதாரணமாக எனக்கு திருவல்லிக்கேணி மற்றும் அதை சுற்றி அமைந்த பகுதிகளில் அதிக பரிச்சயம் உண்டென்பதால் அதைப் பற்றி மட்டும் எழுதினால் மண்ணடி மற்றும் சௌகார்பேட் வாசிகளும் வண்ணாரப்பேட்டை தோழர்களும் அடிக்க வருவார்கள். சூளைமேடு அண்ணாநகர் வாசிகள் 'இவனை துரத்தி துரத்தி வெளுக்கத் தோணுது' என்பார்கள். எனவே இப்போது உள்ள கடைகள், உணவகங்கள் பற்றி மட்டுமே சொல்லாமல் பொதுவாக சென்னை உணவு குறித்த எனது நாஸ்டால்ஜிக் அனுபவங்களை மட்டும் சொல்ல விழைகிறேன்.
நாஸ்டால்ஜிக் என்பதை கூகுள் தமிழில் 'ஏக்கம்' என்று மொழி பெயர்த்து சொல்கிறது. ஒருவிதத்தில் இது சரியே. சிறு வயது கால நினைவுகளின் ஏக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். என்னுடைய இந்த நாஸ்டால்ஜிக் நினைவுகள் சென்னை வாசிகளான 90 கிட்ஸ்களுக்கு பொருந்தாது. 70ஸ் மற்றும் கொஞ்சம் 80ஸ் கிட்ஸ்களுக்கு பொருந்தி வரும்.
இதில் 70ஸ் குழந்தைகளின் ஆரம்ப பள்ளி பருவ நினைவில் நிற்கும், கடைகளில் வாங்கி சாப்பிடும் படியான தின்பண்டங்கள் மிகக் குறைவு. தேநீர் கடைகளில் கிடைக்கும் பொறை பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் மற்றும் பட்டர் பிஸ்கட் தவிர வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. எல்லா உயிர்களும் சமம் என்று பாவித்து நாங்கள் சாப்பிட்ட அதே பொறை மற்றும் பட்டர் பிஸ்கட்டுகளை தெரு நாய்களுக்கும் சிறிது ஈந்தோம். அதிகப்படியான எங்களது விருப்ப தின்பண்டம் டீக்கடை மற்றும் பேக்கரிகளில் கிடைக்கும் பன் பட்டர் ஜாம் தான். இதில் மிக பிரசித்தி பெற்ற ஒரு உணவகம் குறித்து பின்னால் பேசுவோம்.
மேலும் அவ்வப்போது தள்ளுவண்டியில் வரும் கமர்கட், தேங்காய் பர்பி மற்றும் ரீட்டா ஐஸ் வழங்கிய குச்சி ஐஸ் வகைகள். பெரும்பாலும் ஆரஞ்சு, பால் ஐஸ். அப்புறம் எனக்கு மிகவும் பிடித்த சேமியா ஐஸ். எப்போதாவது மெரினா பீச்சுக்குப் போனால் அங்கு கிடைக்கும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல், மிளகாய் பஜ்ஜி. இதைத் தவிர மூன்றாம் பிறையாய் பல்லிளித்து வாங்கச் சொல்லி கூப்பிடும் மிளகாய் தூள் உப்பு தூவிய புளிப்பில்லாத மாங்காய் பத்தைகள்.
பிஸ்கட் வகைகளில் இன்றும் நினைவில் நிற்பது குட்டி குட்டியாக வட்ட வடிவில் அம்பது பைசா காசுகள் போல டாலர் முத்திரை பதித்த பிரிட்டாணியா டாலர் பிஸ்கட். கொஞ்சம் கரகரப்பு மற்றும் புகை மணத்துடன் (பயப்படாதீங்க. ஸ்மோக்கி ஃப்லேவர் தான்) இருக்கும். பிறகு பட்டாம்பூச்சி, நாய், பூனை என்று பல உருவங்களில் வந்த பொம்மை பிஸ்கட். சாப்பிட மனமில்லாமல் அதை வைத்து விளையாடிக் கொண்டிருப்போம். ஒரு வழியாக கடைசியில் கரக் முரக் தான். ஆரஞ்சு கிரீம் பிஸ்கட் பணக்கார பையன்கள் வீடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய ஒன்று. மிக அழகான பேக்கில் வரும். நாங்கள் அதையெல்லாம் வெறுமனே பார்த்ததோடு சரி.
எப்போதாவது ஹோட்டல்களுக்கு சென்றால் இட்லி தவிர்த்து ஆசையுடன் நாங்கள் சாப்பிட்ட டிபன் வகைகள் மசாலா தோசை, பூரி கிழங்கு மற்றும் போண்டா. அவ்வளவு தான். காபி பெரியவர்களுக்கு மட்டுமேயான பானம். அதற்கு மாறாக எங்களுக்கு ரோஸ் மில்க், ராகி மால்ட் அல்லது கிரேப் ஜூஸ் கிடைத்தால் அன்று ஜென்ம சாபல்யம்.
அந்த காலத்தில் நாங்கள் சிறு வயதில் நடந்ததை விட ஓடியதே அதிகம். காலையில் பள்ளி செல்ல தாமதமானால் ஓடுவோம். பள்ளி மதிய இடைவேளையில் வெளியே ஓடுவோம். பள்ளி விட்டதும் வீட்டுக்கு ஓடுவோம். கடைகளில் பொருள் வாங்கி வர ஓடுவோம்.
திருவல்லிக்கேணியில் அமைந்த ஒரு உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் மதிய உணவு இடைவேளை போது சிட்டாக வெளியே ஓடி வந்து பக்கத்தில் இருக்கும் வறுகடலை கடையில் கையில் உள்ள காசுக்கு ஏற்ப பட்டாணி அல்லது வறுகடலை வாங்கி கொரிப்போம். அப்புறம், ஒரு ஓரம் மடித்த பெரிய அலுமினியத் தட்டில் வெல்லப்பாகுடன் வேர்க்கடலை கலந்து இறுகிய இனிப்பு பண்டம் ஒன்று விற்பார்கள். அது கமர்கட் போலவோ கடலை மிட்டாய் போலவோ இருக்காது. மிகவும் கடுமையாக, பற்களுக்கு சவால் விடும் கெட்டித்தன்மை கொண்டிருக்கும்.
நாம் தரும் காசுக்கு ஏற்ப அதை விற்பவர் ஒரு சிறிய உளி சுத்தியல் கொண்டு உடைத்து தருவார். அதை அவர் உடைக்கும் ‘லொடக் லொடக்’ என்ற சத்தம் பள்ளிக்குள்ளேயே கேட்டு அவர் வந்து விட்டார் என்று கட்டியம் சொல்லும். அந்த தின்பண்டம் வினை பெயராகவே லொடக்கு என்று எங்களால் அன்புடன் அழைக்கப்பட்டது. இன்னொரு புறம் ஒருவர் வெண்ணெய் போல் மிருதுவான பால் கடம்பு வெட்டி விற்றுக் கொண்டிருப்பார்.
பாய் வீட்டுக் கல்யாணங்களில் பரிமாறப்படுவது தவிர முதலில் சென்னையில் பிரியாணி எங்கு கடைகளில் விற்பனையானது என்ற விவரம் தெரியவில்லை. எனக்கு தெரிந்து மவுண்ட் ரோடு புகாரி மற்றும் அதற்கு எதிர்புறம் இருந்த பிலால் ஹோட்டலில் கிடைத்தது. ஒரு வேளை இங்கு தான் பிரியாணி விற்பனை ஆரம்பமானதோ என்னவோ. இதில் புகாரி பிரியாணி மிக பிரபலம். அதை விட அங்கு விற்கப்பட்ட குட்டி மட்டன் சமோசாக்கள் பிரபலம். அதைவிட மிக பிரபலம் அவர்களது பன் பட்டர் ஜாம். இதையெல்லாம் சாப்பிட நிதர்சன் சொல்வது போல நம் சொத்தையே எழுதி கொடுத்து விடலாம் என்று தோன்றும். அவ்வளவு ருசி. இப்பவும் அதே இடத்தில் புகாரி கொஞ்சம் புதுமையாக உருமாறி காட்சி அளிக்கிறது. அந்த பழைய ருசி நிச்சயம் இப்போது இல்லை. ஆனாலும் அதையெல்லாம் இப்போது இங்கு குடும்பத்துடன் சாப்பிட கிட்டத்தட்ட உங்கள் சொத்தையே விற்க வேண்டியிருக்கும்.
எதிர்பக்கம் உள்ள பிலால் ஹோட்டல் பிரியாணி அவ்வளவு விசேஷமில்லை. ஆனால் அங்கு ஒரு விஷயம் மிக பிரபலம். என்ன என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். டீ. ஆமாம். தேநீர் தான் இங்கு மிக அதிகம் விற்கும் விஷயம். மாலையில் மூன்று மணி தொடங்கி ஏழு மணி வரை அனைத்து டேபிளும் தேநீர் கோப்பைகளால் நிரம்பி வழியும். அக்கம்பக்கம் உள்ள தொழிற்சாலைகள், டிவிஎஸ், சிம்சன், அடிசன் மற்றும் மின்சார வாரியம் இவற்றில் பணி புரியும் ஊழியர்கள் ஷிப்ட் முறையில் இங்கு டாண் என்று தினமும் ஆஜர் ஆகி விடுவார்கள். ஒருமுறை இங்கு நீங்கள் அந்த ஈரானியன் ‘தம் சாய்’ சாப்பிட்டு விட்டால் பின்னர் ஜென்மத்துக்கு அடிமை தான். இங்கு மக்களை மீண்டும் மீண்டும் வர வைக்க தேநீரில் லேசாக அபின் சேர்ப்பதாகவும் ஒரு வதந்தி அக்காலத்தில் உலவியது.என்றால் யோசித்து பாருங்கள், டீயின் சுவை எப்படி இருந்திருக்கும் என்று. இப்போது பிலால் ஹோட்டல் மிஸ்ஸிங். (தொடரும்)
- சசி
விகடன் கட்டுரை லிங்க்:
டாலர் பிஸ்கட் நினைவிருக்கா 70ஸ் கிட்ஸ்?
No comments:
Post a Comment