Published: #MyVikatan
அண்ணா லஸ்ஸி முதல் டவுசர் கடை சுக்கா வரை..!
என் நினைவுக்கு தெரிந்து அண்ணா சிலைக்கு எதிராக சுரங்கப்பாதையை ஒட்டி இருந்த பிரிஜிபாசி கடையில் லஸ்ஸி போடும் நேர்த்தி சொல்லி மாளாது...
சென்னை உணவு பற்றிய எனது நாஸ்டால்ஜிக் நினைவுகளை இங்கே பகிர்கிறேன். என்னுடைய இந்த கட்டுரை 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களுக்கு உணவை பற்றிய பல பசுமையான நினைவுகளை நியாபகப்படுத்தும்.
அந்த காலங்களில் ஃபிரிட்ஜ் வசதி இல்லாத வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் பெரிய கடைகளில் ஐஸ் கட்டிகளும் சில சில்லறைக் கடைகளில் ஐஸ் துகள்களும் கிடைக்கும். இதை லீவு நாளில் வாங்கி வந்து ரஸ்னா பொடி கலக்கி ஜூஸ் தயாரிப்பது குடும்பத்தில் ஒருவருக்கு பொறுப்பு. பொதுவாக குடும்பத்தலைவர் அல்லது மூத்த மகன். இந்த கலக்கப்பட்ட ரஸ்னா ஜூஸ் ஆரஞ்சு நிறத்தில், குடித்ததும் ஜில்லென்று நாக்கு நுனியிலிருந்து அடி வயிறு வரை சென்று இனிக்கும். ரஸ்னா பாக்கெட்டில் இரண்டு விதமான கலர் பொடிகளும் ஓரு குப்பியில் கொஞ்சம் திரவமும் இருக்கும். இதை சிறு வயதில் மருத்துவர் சிவராமன் குடித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இதை விற்றால் கண்டிப்பாக விற்பவர்களை தூக்கில் கூட போட சொல்வார். காரணம் அதன் மூலப்பொருட்கள் முழுக்க முழுக்க ரசாயன வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் அடங்கியது.
கோடை காலத்தில் பருக லஸ்ஸி என்ற பானம் எப்படி எப்போது ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் என் நினைவுக்கு தெரிந்து அண்ணா சிலைக்கு எதிராக சுரங்கப்பாதையை ஒட்டி இருந்த பிரிஜிபாசி கடையில் லஸ்ஸி போடும் நேர்த்தி சொல்லி மாளாது. ஒரு கூட்டம் டோக்கன் பெற்று லஸ்ஸிக்காக காத்திருக்க இன்னொரு கூட்டம் ஆன்ந்தமாக குடித்துக் கொண்டு இருக்கும். மற்றொரு கும்பல் டோக்கன் வாங்க பரிதவிப்புடன் காத்திருக்கும். டோக்கன் வாங்கி காத்திருப்பவர்கள் ஆவலோடு லஸ்ஸி போடுவதை வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு அலுமினிய ட்ரேயிலிருந்து கட்டி தயிரை எடுத்து ஒரு பெரிய குவளையில் சர்க்கரை, ஐஸ் தூள் சேர்த்து ஒரு கயிற்றில் இணைக்கப்பட்ட மின் மோட்டாரில் சுழலும் அடிப்பான் கொண்டு லஸ்ஸி இரக்கமின்றி அடிக்கப்படும். பின்னர் இன்னொரு ட்ரேயில் உள்ள வரிசையாக கண்ணாடி டம்ளர்களில் ஊற்றப்பட்டு கொஞ்சம் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கடைசியாக பால் ஏடு போட்டு தருவார்கள். அடிக்கிற வெயிலுக்கு தேவாமிர்தமாக இருக்கும்.
'கட்டித் தயிரை வெட்டி எடுத்து, ஐஸ் சர்க்கரை எஸ்ஸென்ஸ் சேர்த்து சுற்றி சுற்றி மிக்ஸியில் அடித்த லஸ்ஸியடா. இது தளதள வென்று டம்ளரில் மிதக்கும் பானமடா.' என்று பாடாத குறை தான். இப்போதும் இந்த கடை அதே இடத்தில் அண்ணா லஸ்ஸிஎன்ற பெயரில் இயங்குகிறது. ஆனால் அந்த பழைய கூட்டம் மற்றும் ஆர்வம் டோட்டலி மிஸ்ஸிங்.
அப்படியே தேவி தியேட்டர் முன் பக்க வாயில் நுழைந்து அதன் பின் பக்க கேட் வழியாக வெளிப்பக்கம் வந்தால் அங்கே பாம்பே லஸ்ஸி என்று ஒரு கடை தென்படும்.. இங்கு சுடச்சுட சமோசா பேமஸ். எப்போதும் அங்கே ரேஷன் கடைகளில் கொரோனா நிதி வாங்க வந்தது போல் ஒரு கூட்டம் டிராபிக் ஜாம் செய்தபடி இருக்கும். சமோசா தீரும் போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் அவர்களது சமோசா தொழிற்சாலையில் இருந்து ஒரு பையன் பெரிய ட்ரே ஒன்றில் சுடச்சுட கொண்டு வந்தபடி இருப்பான். சூடான சமோசாவை ஒரு சிறிய மந்தார இலையில் வைத்து அதன் மேல் கொஞ்சம் புதினா சட்னியும் வெல்லம் சேர்த்த புளித்தண்ணீர் சட்னியுடன் நம் கையில் வந்ததும் கீழே கை தவறி விழு முன் நகர வேண்டும்.
ஒரு வில்லல் ஆவி பறக்கும் சமோசா சாப்பிட்டதும் உள்ளே இருக்கும் உருளை மசாலாவின் சூட்டினால் நாக்கு நுனி லேசாக வெந்தது போல் இருக்கும். அத்துடன் காரம் புளிப்பு இனிப்பு எல்லாம் சேர்ந்து சொல்ல முடியாத ஒரு சுவை அனுபவம். ஆங்கிலத்தில் காரத்துக்கும் ஹாட் என்பார்கள். சூட்டிற்கும் ஹாட் தான். இந்த சமோசாவை விவரிக்க இதுவே சரியான வார்த்தை. சமோசா சாப்பிட்டு முடித்ததும் இந்தக் காரத்துக்கு மாற்று மருந்து அங்கேயே கிடைக்கும். சுடச்சுட தித்திக்கும் ஜிலேபி. ஆடி கார் லோகோ போல இணைந்த வட்டங்களாக எண்ணையில் சுட்டு ஜீராவில் முக்கி எடுத்த ஜிலேபி ஒரு ஐம்பது கிராம் வாங்கி போட்டால் எல்லாம் சரியாகி விடும். இந்தக் கடை இன்றும் அதே இடத்தில் தான் உள்ளது. விலை அதிகமாகி பழைய ஹாட் மற்றும் சுவைகாரணி குறைந்து போகவே மவுசும் குறைந்து போனது.
அண்ணாசாலையில் தேவி தியேட்டர் எதிர்புறம் ரிச்சி ஸ்ட்ரீட் முனையில் இருக்கும் கீதா கேப் காபி அப்போது மிக பிரசித்தி. புகாரி பக்கத்தில் சங்கம் ஹோட்டல். அங்கு காசு போட்டால் பாட்டு போடும் ஜூக் பாக்ஸ் இருந்ததால் இளைஞர்கள் மத்தியில் அப்போது பிரபலம். அண்ணா சிலைக்கு பின்புறம் இருந்த தர்பார் ஹோட்டல் புகாரி ஹோட்டலின் ஒரு மலிவுப்பதிப்பு. இங்கு பேய் உறங்கும் நள்ளிரவில் கூட இடியாப்பம் பாயா கிடைக்கும். இப்போது இந்த ஹோட்டல் அங்கு இல்லை. அன்றைய தர்பார் ஹோட்டலின் எதிர்புறமாக கொஞ்சம் தள்ளி வாலாஜா சாலையில் இருந்தது அன்னபூரணா. சரவணபவன், சங்கீதா ஆதிக்கம் இல்லாத அந்த கால கட்டத்தில் மிக மலிவான விலையில் டிபன் ஐட்டங்கள் இங்கு பரிமாறினார்கள். யார் கண் பட்டதோ அதுவும் வியாபாரம் நொடித்து போய் மூடப்பட்டது.
பின் எழுபதுகளில் தேவி தியேட்டர் முன் நுழை வாசல் இடது புறம் இருந்த யாத்கார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி வியாபாரம் சக்கை போடு போட்டது. தேவி தியேட்டரில் படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலோர் அங்கு கண்டிப்பாக சூடான முஸ்லிம் கல்யாண டைப் பிரியாணி சாப்பிட்டு செல்வார்கள். தேவியில் ஈவினிங் ஷோ படம் முடிந்து வெளியே யாத்கார் பிரியாணி ஆஃப் பிளேட் சாப்பிட்டு அங்கேயே ஒரு டீயும் குடித்தால் அன்றைய பொழுது சுபம்.
முதன் முதலாக தந்தூரி சிக்கன் சென்னைக்கு யார் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. மவுண்ட் ரோடு ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்டில் கேப்ரி ரெஸ்டாரன்ட் என்று ஓரு உணவகம் அப்போது இருந்தது. மாலையில் அவர்கள் ஹோட்டல் வாசலில் ஒரு வேனில் தந்தூரி சிக்கன் சிறு சிறு துண்டுகளாக விற்பார்கள். அந்த ஏரியா முழுவதும் தந்தூரி புகை மணம் வீசி அசைவப்பிரியர்களை சுண்டியிழுக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவும் விற்றுத் தீர்ந்து விடும். ஹோட்டல் வியாபாரத்தை விட இதில் அவர்கள் அதிகம் கல்லா கட்டினார்கள். இப்போது சென்னையில் தெருவுக்கு தெரு தந்தூரி சிக்கன் வந்து விட்டது. கேப்ரி உணவகம் இன்றும் அங்கு இருக்கிறது என்று கூகுள் மேப் சொல்கிறது.
அப்படியே வாலாஜா ரோடு தாண்டி வலது புறம் சேப்பாக்கம் வந்தால் நாயர் மெஸ். இங்கு தேங்காய் எண்ணெயில் வறுத்தெடுத்த வஞ்சர மீன், மட்டன் சுக்கா போன்ற அசைவ உணவுகளுக்கு இப்போதும் மிகுந்த கிராக்கி. அப்படியே கூகுள் மேப் போட்டு சேப்பாக்கம் மற்றும் அண்ணா சாலைக்கு இடையில் நுழைந்தால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் ரத்னா கேப் இட்லி சாம்பார் பற்றி தெரியாதவர்கள் சென்னைவாசி என்று சொல்லிக் கொண்டால் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு அதை தவிர ரசவடை, பாசந்தி எல்லோருக்கும் பிடித்தமானது. இவர்களது இட்லி சாம்பார் பற்றி தனியாக ஒரு எபிசோட் கண்டிப்பாக பண்ணலாம். ரத்னா கேப் கிட்டத்தட்ட அதே சுவையுடன் ஆனால் ரொம்ப காஸ்டலியாக இன்றும் அதே இடத்தில் இருக்கிறது.
அங்கிருந்து தாண்டி கொஞ்சம் லஸ் பக்கம் போனால் முன்பிருந்த சாந்தி விஹாரை யாரும் மறந்து விட முடியாது. நான் முதலில் சென்னா பட்டுரா சாப்பிட்டது இங்கு தான். லஸ் ரோட்டை கிராஸ் செய்தால் எதிர்புறம் முருடீஸ் லாட்ஜ் கீழ் இருந்த பழைய முருடீஸ் கேப் மதிய உணவுக்கு மிக பிரசித்தம். பல நேரங்களில் இங்கு களை கட்டும் மதிய சாப்பாட்டு பந்தியில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் போன்ற பல பழைய திரை பிரபலங்கள் கண்ணில் பட்டதுண்டு. இங்கு அன்லிமிடெட் சாப்பாட்டுடன் தினமும் ஒரு ரசம் பரிமாறுவார்கள். முருங்கை ரசம், பைனாப்பிள் ரசம் இதெல்லாம் இவர்கள் ஆரம்பித்து வைத்தது தான். அதற்கு பக்கத்தில் சுக நிவாஸ். இங்கு டிபன் வகையறாக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். மினி இட்லி சாம்பார் முதலில்இங்கு தான் தொடங்கியது. கச்சேரி சாலையில் ராயர் மெஸ், மயிலை கற்பகாம்பாள் மெஸ் என்று இந்த ஏரியா லிஸ்ட் நீள்கிறது.
லஸ் ஏரியாவில் முதலில் அமைந்திருந்த அஞ்சப்பர் மெஸ் மற்றும் ராயப்பேட்டையில் ஆரம்ப காலத்து பொன்னுசாமி மெஸ் போன்ற உணவகங்களில் மெனு கார்டுக்கு மாற்றாக பெரிய தட்டில் எல்லா அசைவ பதார்த்தங்களும் கிண்ணத்தில் வைத்து ஒவ்வொரு மேஜைக்கும் விசிட் செய்து ஆர்டர் எடுப்பார்கள். தட்டில் உள்ள உணவு வகைகளை பார்த்த பிறகு ஒன்றிரண்டு ஐட்டங்கள் கண்டிப்பாக ஆர்டர் செய்து விடும் கட்டாயம் தவிர்க்க முடியாத ஒன்று.
இந்த அசைவ உணவகங்களுக்கெல்லாம் ராஜாவாக இருந்தது ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்த வேலு மிலிட்டரி ஹோட்டல். கடை திறந்த சில நிமிடங்களில் இங்கு மட்டன் கோலா உருண்டை தீர்ந்து விடும். கூட்டம் அலைமோதிய இவர்களது ஹோட்டல் ஸ்பெஷாலிட்டி மெல்லிசான மொறு மொறு வஞ்சரம் மீன் வறுவல். கோலா உருண்டையும் வஞ்சர வறுவலும் ஆர்டர் செய்து உங்களுக்கு கிடைத்து விட்டால் அன்றைய தினம் நீங்கள் பேரதிர்ஷ்டசாலி. அதை தவிர இங்கு கிடைக்கும் மணக்கும் மீன் குழம்பு, சுறா புட்டு, நாட்டுக்கோழி வறுவல், மட்டன் தலைக்கறி இவற்றின் ருசி அபாரம். இந்த புகழ்மிக்க வேலு மிலிட்டரி ஹோட்டல் எங்கே போனது என்று தெரியவில்லை. அஞ்சப்பர், பொன்னுசாமி மற்றும் தலப்பாகட்டி போன்ற பெரிய உணவகங்களின் கிளை விரிவாக்க விஸ்தீரணித்தில் வேலு அடிபட்டு போனது என்பதே உண்மை.
இப்போது நாம் மீண்டும் மயிலாப்பூர் தாண்டி மந்தைவெளி பக்கம் வந்தால். டவுசர் கடையில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் சுக்கா மற்றும்...
மக்களே. மன்னியுங்கள். இந்த சென்னை லிஸ்ட் அவ்வளவு எளிதில் முடிவதல்ல. லிஸ்ட்டில் விடுபட்ட உங்கள் நினைவில் இன்றும் நீங்காத பழைய உணவகங்கள் ஏதேனும் இருந்தால் வாசகர்கள் பட்டியலிடலாம். பதிவிடலாம். மற்ற ஏரியா அன்பர்களும் வாருங்கள். நம் சென்னை நாஸ்டால்ஜிக் நினைவுகளை கொஞ்சம் பிளாஷ்பேக் மூலம் கிளறி எடுத்து வாசகர்களுக்கு தாராளமாக பரிமாறலாம்.
- சசி
விகடன் கட்டுரை லிங்க்: