வதந்தி
என்ற வார்த்தை எப்படி வந்தது என்று ஒரு சின்ன ஆராய்ச்சி. இதில் உள்ள தந்தி
என்ற வார்த்தை அவசரத்தை உணர்த்துகிறது என்பது சரி. அப்ப, ‘வ’ என்னது?
வம்பு என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் ஒரு ரகசியத்தைப் பெண்களிடம்
சொன்னால் மறுநாள் அது செய்தியாகி விடும் என்பார்கள். இப்போது அந்த வேலையை
வாட்ஸ் அப் செய்கிறது. நேரில் சந்தித்து அளவளாவிய பிறகு “அப்புறம்...”
என்று இழுத்து “வேறென்ன விசேஷம்” என்று யாரேனும் ஆரம்பித்தால் அவர்கள்
வம்பு பேச ரெடி என்று அர்த்தம். வாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளச் செயலி
What's up என்ற (என்னா நடக்குது?) ஆங்கில வார்த்தையிலிருந்து தான்
தோன்றியது. இதை “என்னாடா நடக்குது இங்க?” என்று சுருதிஹாசன் குரலில் கேட்க
வைத்து விட்டார்கள் நம் மக்கள்.
இந்த வாட்ஸ் அப் என்னும் அற்புதமான சமூக
வலைத்தளச் செயலி நம்மால் எப்படி படுமோசமான விதத்தில் துஷ்பிரயோகம்(abuse)
செய்யப்படுகிறது என்று என் அனுபவத்தில் இருந்து சில.
நான் இருக்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப்
அதிகாலை மூன்று மணிக்கே கல்லா கட்டி விடும். வயதான தூக்கம் வராத இரண்டு
பெருசுகள் அதிகாலை (சில சமயம் 2 மணிக்கே) எழுந்து மற்றவர்கள் தூக்கத்தை
கெடுப்பது என்று ஒரு முடிவெடுத்து குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புவார்கள்.
ஒருவர் அனுப்பியதை மீண்டும் இன்னொருவர் பார்வேர்ட் செய்வார். இப்படியாகத்
தொடங்கும் இவர்களது அதிகாலைநேர வீரவிளையாட்டில் என் செல்போன் போடும்
‘டொங்க் டொங்க்’ சத்தத்தில் என் தூக்கம் மற்றும் குடும்பத்தார் தூக்கம்
காலி. காலையில் எழுந்து கொள்ள எங்களுக்கு அலாரமே தேவையில்லை.
ஐந்து வருடங்களாக என்னை ஒரு முறை கூட
பார்க்காத, ஒரு தடவை கூட போன் செய்து பேசாத ஒரு பால்ய நண்பன் தினமும்
காலையில் இரண்டு மூன்று முறை குட் மார்னிங் மற்றும் படங்கள், ஒளிப்படங்கள்
அனுப்புகிறான். இதற்கு நான் “சூப்பர்” “அருமை” என்று பதில் வேறு தர
வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இல்லாவிட்டால் கோபித்துக்கொள்கிறான்.
நண்பனிடம் ஒருமுறை நான் சொன்ன செய்தியை
அவன் ஒரு மணி நேரம் மறுத்து என்னிடம் விவாதித்தான். அடுத்த வாரமே அதே
செய்தியை எனக்கு பார்வேர்ட் செய்து ஏதோ எனக்கு அவன் ஒரு புதிய விஷயம்
சொன்னது போலவும் அதை மேலும் பலருக்கு ஷேர் பண்ணவும் கைகூப்பி வேண்டுகிறான்.
இன்னொரு பிரகஸ்பதி தான் அனுப்பிய வீடியோ படத்துக்கு தானே “ரொம்ப நல்ல
மெஸ்ஸேஜ். உபயோகமாக இருந்தது” என்று கட்டை விரல் உயர்த்திக்காட்டி கீழே
பதிலும் தருகிறார். வேறென்ன? இரண்டுமே பார்வேர்ட் மெசேஜ் தான். ஒருவர்
போட்ட “ஹாப்பி மதர்ஸ் டே” வாழ்த்திற்கு இன்னொருவர் “சேம் டு யூ” என்று
பதில் தருகிறார்.
ஒரு பள்ளிக்கூட பேருந்து
விபத்துக்குள்ளாகி பல மாணவர்களின் உயிர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் உடனே பல
பாட்டில்கள் ரத்தம் தேவை என்ற அவசர செய்தி இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து
இன்றளவும் அடிக்கடி என் செல் போனில் வாட்ஸ் அப் செய்தியாக உலா வருகிறது.
இந்தப்படத்தை உடனடியாக ஏழு பேருக்கு
அனுப்ப உங்களுக்கு 24 மணி நேரத்தில் ஒரு நல்ல செய்தி வரும். தவறினால்….
என்பது போன்ற மிரட்டல்களும் கேன்சருக்கு உத்திரவாதமான மருந்து கிடைக்கும்
கர்நாடகா செல்லும் வழியில் உள்ள வைத்தியர் குறித்த தகவல்கள்... தண்ணீரை
எப்படிக் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் செய்திகள். இப்படி
வரும் எல்லாவற்றையும் உடனடியாக எதுக்கு வம்பு. காசா பணமா, ஃப்ரீ தானே எனறு
பயந்தும் பரிதாபப்பட்டும் தங்கள் கருணா மனோபாவத்தை வெளிப்படுத்தவும் தங்கள்
மேதாவிலாசத்தை சபையோர்க்குக் காட்டிக்கொள்ளவும் சகட்டுமேனிக்கு
ஃபார்வார்டு செய்கிறார்கள் நம் மக்கள்.
கலைவாணர் சொன்ன ‘ஒரு பட்டன தட்டிவிட்டா
தட்டுல ரெண்டு இட்டிலியும் தொட்டுக்கொள்ள சட்டினியும்’ கிடைக்கும் வசதி
இன்னும் நமக்கு வரவில்லை. ஆனால் ஒரு ஃபார்வார்டு பட்டனை கட்டைவிரலால்
தொட்டாலே நம் செல்போன் குப்பைகளை ஓர் ஆயிரம் பேர் செல்போன்களுக்கு அடுத்த
நொடியில் அனுப்ப முடிகிறது. ஏதோ நம்மால் முடிந்த சமூக சேவை.
வாட்ஸப் செயலியில் ஏன் இப்படிப்பட்ட
செய்திகளும் வதந்திகளும் பேயாட்டம் போடுகிறது? ஒரே முக்கிய காரணம் இது
இன்னும் இலவசம் என்பதே. நாம் பெறும் வாட்ஸப் செய்திகளில் 99 விழுக்காடு
ஃபார்வார்டு மெசேஜ்கள் என்பது தான் உண்மை. சொந்தமாக தட்டச்சி செய்திகளை
உருவாக்கி அனுப்பும் பயனாளிகள் மிகமிகக் குறைவே. இப்படிப்பட்ட ஃபார்வார்டு
செய்யப்படும் குட் மார்னிங் மற்றும் இதர மெசேஜ்களுக்கு கட்டணமாகக் குறைந்த
பட்சம் பத்து பைசா என்று நிர்ணயித்தாலே போதும். இந்த வாட்ஸ் அப்
விசில்அடிச்சான் குஞ்சுகள் பவ்யமாக ஓரமாக ஒதுங்கி விடுவார்கள். வாட்ஸ் அப்
என்ற இந்த அற்புதமான சமூக வலைத்தள தொடர்பு செயலியைப் பீடித்த வதந்திகள்
மற்றும் சங்கடங்கள் ஒழிய இதைத்தவிர அரசாங்கத்தால் மற்றும் அந்த செயலி
சார்ந்த நிறுவனங்களால் எடுக்கப்படும் பல்வேறு சட்ட பூர்வமான வழிமுறைகள்
பலன் தரும் என்று தோன்றவில்லை..
- சசி
No comments:
Post a Comment