நேர்காணல் -சசி
சொல்வனம்- ஜனவரி 12, 2025
“கூகுள்ல லொகேஷன் சர்விஸ்னு ஒன்னு இருக்கும். அதில நாம கடைசியா எங்கெல்லாம் இருந்தோம்னு பார்க்க முடியும்.”
“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார். ஆனா அது நம்ம ப்ரைவஸிக்கு பாதுகாப்பானது இல்லைன்றதால அதை நான் என் போன் செட்டிங்ஸ்ல ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன்”
நானாக வலியச் சென்று இந்த சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு விட்டேனோ என்று தோன்றியது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்று இருந்தேன். என் முன்னே இருந்த அந்த இளைஞன் நான் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கும் முகபாவனையில் இருந்தான்.
தனியாக இருக்கும் எல்லா ஞாயிற்றுக்கிழமை போல இன்றும் சாவகாசமாக கண்விழித்து தி நகர் இண்டியன் காபி ஹவுஸில் காலை டிபன் சாப்பிட ஆஜரானேன். இன்று மதிய உணவு என் மாமியார் வீட்டில், வேளச்சேரியில். டிபனுக்கு பின் காபியைக் குடித்து விட்டு பஸ் நிலையத்திலிருந்து 5B பஸ்ஸை பிடித்துச் செல்ல வேண்டியதுதான். ஏற்கனவே நேற்று முன்தினம் என் மனைவி குழந்தை மீனாவுடன் வேளச்சேரி சென்று இருந்தாள். வெளியே வந்து தம் பற்ற வைத்தபோது, 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் தயக்கத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே மெதுவாக நெருங்குவதை உணரமுடிந்தது. அவன் ஏதாவது இடத்திற்கு வழி கேட்கப் போகிறானா என்று யோசித்த நொடியில் அவன் கையில் பெட்டியோ பையோ ஏதும் இல்லாததை கவனித்தேன். கண்டிப்பாக ஏதாவது பொய் சொல்லி உதவி கேட்டு நூதன வழிப்பறி செய்யும் ஒரு ஆசாமியாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.
“எக்ஸ்க்யூஸ் மி சார், ஒரு நிமிஷம்”
ஊருக்கு வந்த இடத்தில் பணம் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த இளைஞன் சொன்ன கதை முற்றிலும் வினோதமாக இருந்தது. ஆங்காங்கு நான் கேட்ட எதிர் கேள்விகளை எல்லாம் வெகு சுலபமாக உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான்.
“சார், என் பேரு பிரேம் குமார், இங்க கோடம்பாக்கத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில திங்கட்கிழமை எனக்கு இண்டர்வியு. அதுக்காக காலைல கோவையிலிருந்து எக்ஸ்பிரஸ்ல சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தேன். சென்னை எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லாததால ஆட்டோக்காரர் கிட்டயே இன்டர்வியூ நடக்கிற இடத்தை சொல்லி அதுக்குப் பக்கமா ஏதாவது ஒரு நல்ல லாட்ஜுக்கு கூட்டிட்டு போகச் சொன்னேன்.”
“ம்ம்?”
“கோடம்பாக்கத்தில் இண்டர்வியு நடக்கிற ஆபீஸ் பக்கம் சரியான லாட்ஜ் ஏதும் இல்லாததால் அதற்கும் தி நகருக்கும் இடைபட்ட இடத்தில ஒரு லாட்ஜில் விடுவதாகவும் மேலும் அங்கிருந்து சுளுவா தி நகருக்கு ஆட்டோவில் சாப்பிட வரலாம்னு ஆட்டோ டிரைவர் சொன்னார்”.
“சரி?”
“ஆட்டோவை லாட்ஜுக்கு உள்பக்க வராண்டால நிறுத்திட்டு அப்படியே பத்து நிமிஷத்தில வந்தீங்கன்னா டிபனுக்கு ட்ராப் பண்றேன்னு ஆட்டோ டிரைவர் சொல்ல.. நானும் உள்ளே போய் ரிசப்ஷன்ல வாடகையை கூகுள்பே பண்ணிட்டு சாவியோட ரூமுக்கு ஓடினேன். அவசர அவசரமாக கீழே ஓடி வந்து மறுபடியும் ஆட்டோல ஏறி உட்கார்ந்தேன். தி நகர் சரவண பவன் முன்னாடி இறக்கிவிட்டு டிரைவர் கிளம்பினார். சாப்பாடு டோக்கன் வாங்க பர்ஸை தேடின போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது“
“என்ன ஆச்சு. பர்ஸ் காணாம போயிடுச்சா.. இல்ல, திருட்டு போயிடுச்சா?”
“ரெண்டும் இல்ல சார். ரூம்ல முகம் அலம்ப பாத்ரூமுக்கு போகும் போது டேபிள் மேல பர்ஸையும் மொபைலையும் வெளியே எடுத்து வெச்சிருந்தேன். அதை எடுத்துட்டு வர மறந்துட்டேன்.”
“பர்ஸ் உங்க கிட்ட இல்லன்னா ஆட்டோ டிரைவருக்கு எப்படி பணம் கொடுத்தீங்க?”
“ஷர்ட் பாக்கெட்ல 200 ரூபா சில்லறை இருந்தது.”
“ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுத்தீங்க”
“மொத்தம் 170 ரூபாய்?”
வசமாக மாட்டிக் கொண்டு விட்டான். “சரி, அப்போ உங்க பாக்கெட்டுக்குள் இப்ப மிச்சம் 30 ரூபாய் இருக்குமா?”
மேல் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு சரியாக 30 ரூபாய் சில்லறை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞன். பக்காவாக பிளான் செய்து வந்திருக்கிறானோ?
சரவண பவனில் 11 மணிக்கு மேல் தான் சாப்பாடு ஆரம்பம் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. ஆட்டோ டிரைவர் இவனை டிபனுக்கு விடுவதாகத் தானே சொன்னார். “நீங்க சரவண பவன் போய் சேர்ந்தப்ப மணி என்ன?”
“பதினோரு மணிக்கு மேல ஆயிடுத்து. இன்னைக்கு நான் வந்த ரயில் அரை மணி நேரம் லேட்டு. நீங்க நான் சொல்றது உண்மையான்னு டெஸ்ட் பண்ணுறீங்கன்னு தெரியுது. பரவாயில்ல. ஆனா நான் சொல்றது எல்லாமே உண்மை தான் சார்.”
“இபபவும் ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா லாட்ஜுக்கு போயிடுங்க. ரூமுக்கு போய் பர்ஸை எடுத்துட்டு வந்து ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிடலாம். அவ்வளவு தானே?.”
“சிக்கலே அங்க தான் சார். நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் அதை சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க.”
“ஏன், என்ன ஆச்சு?”
“உண்மையிலேயே அந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆட்டோ அங்க என்னை உள்ளுக்குள்ளார விட்டதால வெளியே லாட்ஜ் பெயரை நான் கவனிக்கவும் இல்லை. ரிசப்ஷன்ல இருந்தவரை ஞாபகம் இருக்கு. ஆனா அங்கயும் நேம் போர்ட் ஏதும் இல்லை. நிஜமாகவே எனக்கு இப்ப மறுபடியும் அங்க எப்படிப் போய் சேருவது என்று புரியவில்லை. அந்த லாட்ஜை கண்டுபிடிக்க நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும் சார். நாளைக்கு இண்டர்வியுக்கு தேவையான சர்டிபிகேட் பைல் எல்லாம் அங்க தான் இருக்கு. முக்கியமா என்னோட மொபைல் போன்..”
என்னையும் அறியாமல் “அடப்பாவி!” என்று கத்தினேன். அவன் உண்மையைத் தான் சொல்கிறானா இல்லை என்னை ஏமாற்றி பணம் வாங்க ஏதாவது முயற்சி செய்கிறானா என்று புரியவில்லை. ஆனால் ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அவனுடைய லாட்ஜை எப்படி கண்டுபிடிப்பது என்பது எனக்கும் ஒரு சவாலாகத் தோன்றியது.
“லாட்ஜ் ரூம் சாவி எங்க?”
“வரும்போது அதை ரிசப்ஷன்ல கொடுத்திட்டேன். எப்படியும் அதுல பேர் எதுவும் இல்ல சார்.”
“இன்னொரு யோசனை, இண்டர்வியு நடத்துற கம்பனிக்கே போய் விவரத்தைச் சொல்லி உதவி கேட்கலாமே.”
“சார், இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அதுவுமில்லாம என் கதையை கேட்ட பிறகு எவனாவது எனக்கு வேலை குடுப்பானா?”
“அதுவும் சரிதான், உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. முதல்ல அதுக்கு ரிங் பண்ணி பார்ப்போம்.”
“ரூமுக்குள்ள இருக்கிற மொபைல் சத்தம் வெளியே கேட்க சான்ஸ் இல்ல. இருந்தாலும் நம்பர் சொல்றேன். ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”
அவன் தந்த மொபைல் நம்பருக்கு போன் செய்தேன். எடுக்கப்படாமல் ரிங் போய்க்கொண்டிருந்தது. அவன் சொல்வது ஒருவேளை நிஜம் என்றால் அவன் லாட்ஜை எப்படிக் கண்டு பிடிப்பது?
“சரி, லாட்ஜிலிருந்து இங்க ஆட்டோல வர எவ்வளவு நேரம் ஆச்சு?”
“கிட்டத்தட்ட அரை மணி நேரமிருக்கும்”
“இன்னைக்கு சண்டே. டிராபிக் குறைவு. கோடம்பாக்கத்துக்கும் திநகருக்கும் இடையிலன்னா..மேற்கு மாம்பலம், பாண்டிபஜார்..ரங்கராஜபுரம்.. எது வேணாலும் இருக்கலாம். ஒரு ஆட்டோ எடுத்து ரவுண்ட் அடிக்கலாம். ஆனா அப்படி கண்டுபுடிக்க முடியுமான்னு தெரியல, ஒருவேளை போலிஸ் கிட்ட போனா..”
“சார், என்ன சொல்றீங்க, ஏதாவது தொலைஞ்சு போச்சு இல்ல திருட்டு போச்சுன்னா, அவங்க கிட்ட போய் சொல்லலாம். என் கதைய போய் அவங்க கிட்ட சொன்னா சிரிப்பாங்க.”
“சரி, லாட்ஜுக்கு எவ்வளவு வாடகை குடுத்தீங்க”
“ஆயிரத்து நானூறு ரூபா”
“இண்டர்நெட்ல இங்க அக்கம்பக்கத்தில அந்த வாடகை ரேஞ்ச் இருக்கிற லாட்ஜுக்கு எல்லாம் போன் போட்டு பாக்கலாம். அதுவும் சரிப்படுமான்னு தெரியல. சரி, உங்களுக்கு என்ன வழி தோணுது?”
“நான் யோசிச்சு ஒரு வழி தான் இருக்கு சார். என்னோட போன் இருந்தா போதும். லாட்ஜுக்கு ஜிபே பண்ணி இருக்கேன். அந்த போன் நம்பருக்கு பேசினா லாட்ஜை கண்டுபிடித்து விடலாம்.”
“போன் தான் இல்லையே. லாட்ஜுல மாட்டிக்கிச்சே”
“கரெக்ட், ஆனா ஒரு ஆதார் காப்பி இருந்தா போன் சிம் டூப்ளிகேட் வாங்கிடலாம். அப்புறம் ஒரு பேசிக் மாடல் மொபைல் போன் ஒன்னு வாங்கிட்டா.. அதுல கூகுள் பே பதிவிறக்கம் பண்ணி அதிலிருந்து லாட்ஜ் போன் நம்பரை புடிச்சிடலாம்.”
இப்போது எனக்கு விளங்கி விட்டது. ஒரு பேசிக் மாடல் போன். அத்தோடு ஒரு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கத் தேவையான பணம். அதற்குத் தான் இவன் என்னிடம் அடிபோடுகிறான் அல்லது இந்த சம்பவத்தைக் கட்டமைத்து என்னிடம் பணம் பறிக்கத் திட்டமிடுகிறான். வித்தியாசமாக இருந்த இந்தக் கதையை நம்புவதா வேண்டாமா? என் புத்திசாலித்தனத்தின் மீதான நம்பிக்கையில் அவன் ஏதாவது ஒரு இடத்தில் இடறுவான், தடுமாறுவான் என்று நினைத்தேன். அவனோ எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருந்தான். கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று பதிலும் சொன்னான்.
“இப்ப ஒரு நாலாயிரம் ரூபா இருந்தா பிரச்னை தீர்ந்திடும் சார்.”
“சரி, இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்”
“நான் சொன்னத எல்லாம் நீங்க நம்புனா எனக்கு உதவி செய்யலாம். போன், புது சிம் கைக்கு வந்துட்டா பணத்தை உடனே திருப்பிக் கொடுத்திட முடியும். நாளைக்கு மட்டும் எனக்கு இண்டர்வியு இல்லன்னா கவலைப்பட மாட்டேன். இந்த ரோட்டோரமா கூட படுத்துட்டு எப்படியாவது திரும்பி வீடு போய் சேர்ந்திடுவேன்.”
இப்படிச் சொல்லிவிட்டு என் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று பொறி தட்டியது போல் தோன்றிய எனது கடைசி அஸ்திரத்தை இறக்கினேன். “எல்லாம் சரி. இப்போ உங்களுக்குத் தேவையானது பணம் தானே. நான் என்னுடைய போன் தரேன். அதுல உங்க வீட்டுல யாரையாவது கால் பண்ணி என் நம்பருக்கு ஜிபே பண்ண சொல்லுங்க. அதை நான் ஏடிஎம்ல இருந்து எடுத்துத் தந்திடறேன்.“
“நீங்க சொல்றது சரிதான் சார். எனக்கும் அது தோணுச்சு. என் அப்பா உயிரோட இல்லை. உண்மையிலேயே எனக்கு எங்க அம்மா நம்பரைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்துக்கு வரல. எல்லாமே போன்ல தான் இருக்கு. அம்மாவுக்கு போன் பண்ணி பிரயோஜனமே இல்லை. அவங்களுக்கு பணம் அனுப்பவும் தெரியாது. அதைத் தவிர இப்ப இதெல்லாம் தெரிஞ்சா அவங்க ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. ஹார்ட் பேஷண்ட் வேற.”
சொல்லும் கதையில் கொஞ்சம் சோகம் கொண்டு வருகிறானோ? ஒரு நொடி யோசித்துப் பார்த்தபோது அவன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. எனக்கும் என் மனைவி நம்பரைத் தவிர வேறு எந்த மொபைல் நம்பரும் ஞாபகத்துக்கு வருமா என்பது சந்தேகமே. நாம் எல்லோருமே மொபைல் போனுடன் ஆதார் எண்ணை மட்டுமல்ல. நம் மொத்த வாழ்க்கையையும் லிங்க் செய்து வைத்திருக்கிறோம். எல்லோருமே போனுக்கு அடிமைதான். கையில் மொபைல் இல்லை என்றால் நம் எல்லார் கதையும் கந்தல் தான்.
“என்னால இதை நம்ப முடியல, அவசரத்துக்கு உங்களோட ஒரு நண்பன் போன் நம்பர் கூட தெரியாதா?”
சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தது போல் “சார் ஒரு நிமிஷம் உங்க போனை குடுங்க” என்று வாங்கி சிறிது தொலைவில் சென்று கால் செய்து பேசிவிட்டுத் திரும்பி வந்தான்.
“ஒன்னும் பிரயோஜனம் இல்ல சார்”
“ஏன்? என்ன ஆச்சு, பேசிட்டு இருந்த மாதிரி கேட்டதே!”
“அவனெல்லாம் ஒரு நண்பனே இல்லை சார். நிலைமையை விளக்கிச் சொன்ன பிறகும் அஞ்சு பைசா இல்லைன்னு கைய விரிச்சுட்டான்”.
தொடர்ச்சியாக ஒருவரால் பொய் சொல்ல முடியாது என்ற எனது அதீத நம்பிக்கையை அவன் உடைத்து விட்டான் அல்லது தொடர்ந்து அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு விசாரணைக்குப் பிறகு அவன் கேட்ட உதவியை செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை ஏமாற்றுப் பேர்வழி என்றாலும் அவன் என்னைக் களத்தில் வென்று விட்டான். அதற்கான பரிசு அது.
ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்தபோது என் இரு கைகளைப் பற்றி நன்றி சொன்னான். என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு “போன் சிம் வாங்கினதும் உடனே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன் சார்” என்றான்.
வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே. எப்படியும் பணம் என் கையை விட்டு போனபின் இனி இதெல்லாம் இப்போது யோசித்துப் பயனில்லை.
காலையில் எழுந்ததும் மனைவி கேட்டாள். “என்னங்க ஆச்சு, ராத்திரி முழுக்கத் தூக்கத்துல லாட்ஜ் ஆட்டோன்னு பினாத்திட்டே இருந்தீங்களே?” விஷயத்தை சொன்னால் கட்டித் தொங்க விட்டு விடுவாள். ‘அஞ்சு ரூபாய்க்கு ஆயிரம் நொள்ளை கேள்வி கேப்பீங்க. எவனோ ப்ராடு ஒருத்தனுக்கு சுளையா நாலாயிரம் அழுதுட்டு வந்திருக்கீங்க’
திங்கட்கிழமை காலையிலிருந்தே அவன் நினைப்பாகவே இருந்தது. இதுவரை அவன் பணம் ஏதும் அனுப்பவில்லை. இன்று இண்டர்வியு என்றானே. கொஞ்சம் காத்திருப்போம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இருப்பு கொள்ளாமல் மதியம் மூன்று மணியளவில் போன் அழைப்புப் பதிவிலிருந்த அவன் நம்பருக்கு ரிங் செய்தேன். பதில் ஏதுமில்லை. இதற்கென்ன அர்த்தம்? பயனில் இல்லாத மொபைல் எண் ஒன்றை அவனுடையது என்று சொல்லியிருக்கிறான். நேற்று அழைப்புப் பதிவில் இருந்த இன்னொரு எண் அவனுடைய நண்பனை அழைத்ததாக அவன் சொன்னது. அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தேன். ஒரு நொடியில் யாரோ மறுமுனையில் எடுக்க. “ஹலோ யாரு பேசறது” என்று நான் கேட்டதற்கு பதில் வந்தது.
“சங்கர் பஞ்சர் கடை சார்”
“என்னது? பஞ்சர் கடையா, எங்க இருக்கு உங்க கடை?”
“தி நகர் பஸ் ஸ்டாண்ட் எதிர்பக்கம் சார்”
இப்போது எனக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் என்னிடம் நேற்று போனை வாங்கி அவன் நண்பனிடம் பேசுவது போல எதிர்புறம் இருக்கும் பஞ்சர் கடையின் போர்டில் இருந்த போன் நம்பருக்குப் பேசி இருக்கிறான் போல.
மொத்தத்தில் என்னை சுத்தமாக ஏமாற்றி விட்டிருக்கிறான். நானும் வடிகட்டிய மடையனாக நாலாயிரம் ரூபாய் அவனுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறேன். பணம் விரயமென்றால் எள்ளு அல்லது காந்தி கணக்கு என்பார்கள். இதை எட்டு காந்தி கணக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஎம்மில் எடுத்த புத்தம் புதிய எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள்
மாலை ஒரு ஏழு மணி இருக்கும். மொபைல் போன் அடித்தது. “சார், நான் பிரேம்குமார் பேசுறேன்” சட்டென்று புரியவில்லை. பிறகு நினைவுக்கு வந்துவிட்டது. அவன் தான்.
“மதியம் போன் செய்தேன். எடுக்கவே இல்லையே” கோபத்துடன் கேட்டேன்.
“அது ஒரு பெரிய கதை சார்”
அடப்பாவி மறுபடியும் ஆரம்பித்து விட்டானா?
“நேத்து நீங்க போன பிறகு உடனடியாக ஒரு மொபைல் போன் அங்கேயே வாங்க முடிந்தது. ஆனால் சிம்கார்டு தான் பிரச்சனை ஆயிடுச்சு. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிம்கார்டு டூப்ளிகேட் வாங்க முடியல. திங்கட்கிழமை தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுன்னு புரியாம அங்கேயே பக்கத்துல ஒரு சின்ன லாட்ஜில் நைட்டு தங்கிட்டேன். காலையில முதல் வேலையா கடை திறந்ததும் டூப்ளிகேட் சிம் வாங்கிட்டு லாட்ஜை கண்டுபிடிச்சு போய் சேர்ந்துட்டேன். அதுக்கே பதினோரு மணி ஆயிடுச்சு. அதனால கம்பெனிக்கு போன் பண்ணி இண்டர்வியூவ மதியம் மாத்தி வைக்கச் சொல்லி கேட்டதால மூணு மணிக்கு தான் நடந்தது. அதனால் தான் உங்க போன் கால் அட்டென்ட் பண்ண முடியல..”
“அது சரி, நேற்று உங்க பிரண்டுக்கு போன் செஞ்சீங்களே. அது என்ன பஞ்சர் கடையா?”
“மன்னிச்சுக்கோங்க சார். அந்தக் கடைக்கு மேல ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் இருந்தது. அது மூடி இருந்ததால, ஆதார் கார்ட் காப்பி எடுக்க அது எப்ப திறக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். ஆனா என் ப்ரண்டு கிட்ட பேசினதா சொன்னது தப்புதான். எனக்கு வேற வழியும் தெரியல. எனக்கு அப்படி பணம் கொடுத்து உதவுகிற மாதிரி நண்பர்கள் யாரும் கிடையாது சார்.”
“சரி தான்”
“உங்களைத் தவிர அவ்வளவு பெரிய தொகையை வேற யாராவது கொடுத்து இருப்பாங்களான்னு எனக்கு தெரியல. நீங்க எனக்கு செய்த உதவி ரொம்ப பெருசு சார். சொல்லப்போனால் எனக்கு வேலையே அதனாலதான் கிடைச்சது.”
இப்போது என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. “அதெல்லாம் விடுங்க. இன்டர்வியூ எப்படி போச்சு.”
“சுலபமா தான் இருந்தது. உண்மையிலே நீங்க நேற்று எனக்கு எடுத்த இண்டர்வியு தான் கஷ்டமா இருந்தது.” இதைச் சொல்லும்போது அவனது நமட்டுச் சிரிப்பை போனில் உணரமுடிந்தது. “அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களை அதே இடத்தில் பார்த்து நேரடியா தேங்க்ஸ் சொல்லணும் சார்.” சிரித்துக் கொண்டே சரி என்றேன். போனை கட் செய்த ஓரிரு நிமிடத்தில் டொங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் 4000 வரவு வைக்கப்பட்டது’