அரை நூற்றாண்டு! இந்தச் சிறுகதைத் தொகுப்பின் எழுத்தாளர் நூருத்தீன் அவர்களது எழுத்துலகப் பயணமும் எனக்கும் அவருக்குமான தோழமையின் வயதும்.
பள்ளிகளில் சிறுவர்கள் எம்ஜிஆர் கட்சி, சிவாஜி கட்சி என்று இரு பிரிவாகப் பிரிந்து மதிய உணவு இடைவேளையில் தர்க்கம் செய்து சண்டையிட்ட காலங்கள் மெதுவாக மாறி, முன் எழுபதுகளின் சினிமாவில் கமல்-ரஜினி தாக்கம் தொடங்கிய கால கட்டம். புதிய சீசன் தொடக்கம். இந்த சீசனில் கல்லூரிகளில் யுவன் யுவதிகள் பரஸ்பர அறிமுகம் செய்து கொள்ள 'உங்க பேர் என்ன?' என்ற முதல் கேள்விக்குப் பின்னர் அதிகம் கேட்டது, 'உங்களுக்குக் கமல் பிடிக்குமா ரஜினி பிடிக்குமா?' என்பதே.
அப்போதைய பள்ளிச் சிறுவர்களான நாங்கள் எம்ஜிஆர்-சிவாஜியைப் புறம் தள்ளி, கமல்-ரஜினியை ஒதுக்கி விட்டு, சுஜாதா, சாண்டில்யன், கல்கி என்று தடிமனான புத்தகங்களைப் பட்டியலிட்டுப் படித்தும் சுமந்தும் திரிந்தோம். வயதுக்கு மீறிய செயலாக மற்றவர்களால் கருதப்பட்டதைப் பொருட்படுத்தாமல் அடுத்தக் கட்டமாகச் சிறுவர் பத்திரிகைகளில் எழுத முற்பட்டோம். நூருத்தீன் கதை ஒன்று எழுதி, அது பிரசுரம் ஆன போது அவரது வயது வெறும் பத்து என்பது ஆச்சரியமான உண்மை.
மீண்டும் நண்பன் நூருத்தீனுடன் என் தொடர்பு நேர்ந்தது மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்பொழுது தல-தளபதி ரசிகர்கள் இடையே ட்விட்டரில் சண்டை தீவிரமாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு காலைப் பொழுதில் நேர்ந்தது. எங்கள் தளிர் நட்பு மீண்டும் துளிர் விட்டுத் தொடர்கிறது.
இந்தத் தொகுப்பில் நான் முதலில் வாசித்திருந்த சிறுகதை மிஸ் ஸ்நேகா. ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன் சென்னையில் மிகவும் எதேச்சையாக நூருத்தீனை சந்தித்தபோது. படித்து முடித்ததும் புன்முறுவலுடன் எனக்குள்ளேயே நான் சொன்னது, "ஹை.. சுஜாதா..". கிட்டத்தட்ட சுஜாதாவின் எழுத்து நடை, வார்த்தை பிரயோகம் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான ஆச்சரியமூட்டும் தமிழ்ப் பதங்கள். சிறுகதைகளில் படாரென்று பொட்டில் அடிக்கும் இறுதி வரிகள். அனைத்தும் இன்று நூருத்தீன் கைவசம்.
தளிர்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களத்தில் அசைந்து, வெவ்வேறு உணர்வுகளை வழங்கி வருடி, நம்மை நோக்கிப் புதிதாகத் தலையசைக்கின்றன.
முதுமை, ஏழ்மை, ஏமாற்றம், நெகிழ்ச்சி, மனிதம், அதிர்ச்சி என்று பற்பல நிறங்களை, வடிவங்களைக் காட்டும் கெலிடோஸ்கோப் இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
அணிந்துரை அளிக்க எதற்காக நான் என்ற ஆராய்ச்சிக்கு முன், அணிந்துரை என்றால் என்ன என்று கொஞ்சம் யோசித்தேன். சபைகளில் நட்சத்திரப் பேச்சாளர் பேசி முடித்ததும் அவருக்கு சால்வை அணிவிக்கும் வாய்ப்பு சிலசமயம் அங்கு ஓர் ஓரமாக நின்றிருக்கும் ஒருவருக்குக் கிடைக்கும். அப்படித்தான் இந்த 'ஜாக்பாட் டமாக்கா' எனக்குக் கிடைத்தது என்ற மனமகிழ்வுடன் இத்தருணம் உங்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் இருந்து நகர்கிறேன்.
தளிர் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கும்போது அது ஓர் ஓங்கி வளர்ந்த விருட்சமாக நமக்குள் விஸ்வரூபம் எடுக்கும். அம்மாய வித்தை அனுபவத்தை எதிர்கொள்ள உங்களை வரவேற்கிறேன்.
-சசி
அமேஸான் கிண்டிலில் இந்நூல் வெளியாகியுள்ளது.