இது ஒரு "பற்காலம்" ---சசி
"இதுல வேதமும் விக்ஞ்ஞானமும் சேர்ந்து இருக்குறது. அதனால டபுள் பெனிஃபிட் இருக்கிறதா எனக்குத் தெரிஞ்சது" (கிட்டத்தட்ட ஜக்கி வாசுதேவ் ஸ்டைலில்).
மேலே உள்ள விமர்சனம் தொலைக்காட்சி
விளம்பரத்தில் ஒரு இல்லத்தரசி கூறுவது. இது எதைப்பற்றி இருக்கும் என்று
கொஞ்சம் யோசியுங்கள். புதிய கல்வித் திட்டம் குறித்தா? இல்லை. புத்தகம்
அல்லது ஏதேனும் சித்தா மருந்து? கிடையாது. ஒரு வேளை புதிய இசைக்கருவி
ஏதாவது...தப்பான விடை.. சரியான பதில்.. கோல்கேட் பற்பசை பற்றி..
உலகத்து மொத்த பற்பசை வியாபாரமும் இரண்டு
மூன்று நிறுவனங்கள் கையில் தான். அதில் முதன்மையாக உள்ளது கோல்கேட் தான்.
மனிதவர்க்கம் முழுக்கக் காலையில் செய்யும் முதல் வேலை (வாட்ஸ் அப் மற்றும்
முகநூல் ஸ்டேட்டஸ் பார்ப்பது தவிர்த்து) பல் துலக்குவது. இப்போது நீங்களே
யூகித்து கொள்ளுங்கள் இந்த வர்த்தகத்தில் புரளும் டாலர்களின்
மதிப்பைப்பற்றி.
திடீரென ஒரு நாள் உலக மக்கள் அனைவரும் இனி
மேல் நாங்கள் பல் துலக்குவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன நடக்கும்?
பயப்படாதீர்கள். நீங்கள் அப்படி ஒரு முடிவெடுக்காமல் இருக்க வேண்டிய
அனைத்து விளம்பர உத்திகளையும் இந்த நிறுவனங்கள் செய்யும். பற்பசையில்
நீங்கள் விரும்பும் அனைத்தும் வரும். கரிப்பொடி, கிராம்பு, வேம்பு, உப்பு,
தேன், கற்பூரம், ஆம்லா மற்ற கரம் மசாலா பொருட்கள் அத்தனையும் ஏற்கனவே
உள்ளது. வேண்டுமென்றால் நீங்கள் விரும்பும் சாம்பார், ரசம் கூட இதில்
கொண்டு வருவார்கள்.
இன்னொரு பெண்மணி கோல்கேட் விளம்பரத்தில் கூறுவது போல்
"இது நல்லா இருக்கு. ஏன்னா டேஸ்ட் பாலன்ஸ் பண்ணியிருக்காங்க." கூடிய
விரைவில் காஜல் அகர்வால் மைக்குடன் உங்கள் முன் தொபுக்கடீரென்று குதித்து
"உங்க பேஸ்டுல சாம்பார் இருக்கா?" என்று கேட்டால் ஆச்சரியமில்லை. ஆகையால்
நீங்கள் பல துலக்குவதை மட்டும் ஒருக்காலும் நிறுத்த முடியாது. நிறுத்தவும்
விட மாட்டார்கள். ஒரு வேளை பல் துலக்குவதற்கு பதில் பற்பசையை 'மவுத் வாஷ்'
போன்ற திரவமாக வாயில் ஊற்றிக்கொண்டு கொப்பளித்துத் துப்புவீர்கள். அதையும்
கண்டிப்பாக இவர்களிடம் தான் வாங்குவீர்கள்.
ஆலும் வேலும் தொடங்கி கோல்கேட் பற்பசை
வந்த பரிணாம வளர்ச்சியை கொஞ்சம் நினைவு கூர்வோம். ஆலங்குச்சி மற்றும்
வேலங்குச்சி போன்றவற்றை எப்போதாவது கிராமங்களில் வயக்காட்டில் பெருசுகள்
கடித்தபடியே இருப்பதை நான் பார்த்ததுண்டு. ஆனால் அது எப்போதும் எனக்கு பல்
துலக்கும் செயலாகத் தெரிந்ததில்லை. நினைவு தெரிந்து, முதலில் உப்பு கலந்த
உமிக்கரிப்பொடி கொண்டு நாம் பல் விளக்கிய கால கட்டம் தான் ஞாபகம் வருகிறது.
ஆள் காட்டி விரலில் இரண்டு சிட்டிகை எடுத்து ரைட் லெப்ட் என்று 'கர கர'
என்று ஒரு ஆறு இழுப்பு இழுத்து விட்டால் வேலை முடிந்தது. வாயெல்லாம்
கருப்பு நிற திரவம் ஊறியபடி ஓடிச்சென்று அதைத் துப்பி விட்டு வந்தால்
காப்பி ரெடி. அந்தக் காலத்தில் நாமெல்லாம் பல் துலக்கியதே காப்பி
குடிக்கத்தான் என்று தோன்றுகிறது. பல் சுத்தம் என்பதெல்லாம் மூன்றாம்
பட்சம் தான். இரண்டாம் பட்சம் என்ன என்று கேட்கிறீர்களா ? வேறென்ன, அப்பா
அம்மா மற்றும் தாத்தாக்களின் கட்டாயத்தினால் தான்.
அதற்குப் பிறகு வந்தது அந்தக்கால
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஆபத்பாந்தவன் "கோபால் பல் பொடி"
இதைக்கொண்டு பல் விளக்கியபிறகு துப்பத் தேவையில்லை. அப்படியே சாப்பிட்டு
விடலாம். அவ்வளவு இனிப்பாக இருக்கும். (இப்போது கிடைக்கும் கோபால் பல்பொடி
அவ்வளவு இனிப்பு இல்லை என்று கேள்வி) ஆனால் இதே கால கட்டத்தில் மிருதுவான
வெள்ளை நிற கோல்கேட் பல்பொடி பிரமாதமான விளம்பரங்களுடன் குட்டி பாண்ட்ஸ்
பவுடர் டப்பா பாணியில், ஆனால் கொஞ்சம் காஸ்ட்லியாக வந்தது.
வசதியானவர்களுக்கான பல்பொடியான இதற்கு
மாற்றாக உள்ளூரில் மலிவான 'காலிகட்' என்று ஒரு சிறு வட்ட வடிவ தகர
டப்பாவில் கிட்டத்தட்ட ஆயுர்வேத வெளிர்மஞ்சள் நிறப் பல்பொடி ஒன்று வந்தது.
விலை மலிவு காரணமாக இதைத்தான் எங்கள் வீட்டில் வாங்குவார்கள். அதை வாயில்
தேய்த்தவுடன் கந்தக அமிலத்தை வாயில் ஊற்றியது போல் எரியும். ஏனோ பல
அப்பாக்கள் அந்தக் காலத்தில் கடுமையாக அல்லது காரமாக, கசப்பாக
இருப்பதெல்லாம் தான் உடம்புக்கு ஏன் பல்லுக்கு கூட நல்லது என்ற எண்ணம்
கொண்டிருந்தார்கள்.
எங்கள் அப்பா அந்த வகையைச் சார்ந்தவர். பல் துலக்கச்
சென்று ஒரே நிமிடத்தில் முடித்து விட்டு ஓடி வந்தால் மீண்டும் ஒரு டோஸ்
கந்தக காலிகட் பல்பொடி கிடைக்கும். .இப்படி பல் விளக்கிய பிறகு குடிக்கும்
காப்பி, சூட்டில் காரமாக ஒரு எரிச்சல் திரவமாக மாறி விடும்.
கோபால் பல்பொடி வாங்கும் வீடுகளையும் அந்த
வீட்டு அப்பாக்களையும் நாங்கள் பொறாமையுடன் பார்த்த காலமது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்த போது என் அலுவலக நண்பர் ஒருவர் ஏதோ பால்யகால நினைவுகளால்
பீடிக்கப்பட்டாரோ என்னவோ, என்னிடம் சென்னையிலிருந்து ‘கோபால் பல்பொடி’
வாங்கி வரச் சொல்ல நானும் கடைகடையாக ஏறி இறங்கி கடைசியில் கண்டு பிடித்து
கடைக்காரரிடம் இரண்டு டஜன் பாக்கெட் வாங்க அவர் என்னையும் என் பற்களையும்
ஒரு மாதிரி பார்த்தது போல் தோன்றியது எல்லாம் வேறு ஒரு கிளைக்கதை.
பல்பொடிகளுக்குப்
பிறகு வந்த பற்பசை உண்மையில் ஒரு மல்டி பில்லியன் டாலர் வர்த்தகத்தின் ஒரு
முன்னோடி என்று சொல்லலாம். பற்பசைக்கு விதவிதமான பிரஷ்கள், அவற்றை தொங்க
விட ஸ்டாண்டுகள் மற்றும் எப்படி பல் துலக்க வேண்டும் என்று சொல்லித் தர
டாக்டர்கள், பற்களை டிசைன் செய்ய பல் மருத்துவமனைகள் என்று கோடானுகோடிகள்
புரளும் வணிகம் இது.
எது எப்படியானாலும் இந்த பல் டாக்டர்களின் வட்ட
வடிவமாக பிரஷை சுழற்றி பல் துலக்கச் சொல்லித் தரும் முறை இன்று வரை எனக்கு
பிடிபடாத ஒன்று. இப்போதும் நமக்கு அது ரைட் லெப்ட், ரைட் லெப்ட் தான். என்ன
விரல்களுக்கு பதில் பிரஷ். உமிக்கரிக்கு பதில் பேஸ்ட்.
கடைசியில் இந்தக்கட்டுரையில் ஏதேனும்
மெஸ்சேஜ் எதிர்பார்த்தவர்களுக்கு நான் கூறி கொள்ள விரும்புவது எனக்குத்
தோன்றும் சில சந்தேகங்களே.
ஏன் ஆடு மாடு, சிங்கம் புலி போன்றவை
கோல்கேட் டூத் பேஸ்டினால் பல் துலக்காமலே பற்களை மிகவும் பலம் கொண்டதாக
வைத்திருக்க முடிகிறது? பெரிய கோயில் கட்டிய ராஜராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ
அல்லது இன்றும் வலிமையுடன் நிற்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனோ
தங்கள் பற்களை எப்படி பாதுகாத்திருப்பார்கள்? அவற்றைப் பற்றி ஏதேனும்
கல்வெட்டுகளோ இலக்கியக் குறிப்புகளோ இருக்கின்றனவா? இதை மேலும் ஆராய்ந்து
விளக்கம் தரும் பணியைத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்களிடமே விட்டு விடுகிறேன்.
- சசி